ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விகடன் : டேக் 1

நாசர்
பிரீமியம் ஸ்டோரி
News
நாசர்

தொழில்முறையாய் கேமரா முன் நின்றது எனது குருக்களில் ஒருவரான R.S மணி மூலம் K.S சேதுமாதவன் அறிமுகமான ‘நிஜங்கள்’ என்ற படத்தில்.

சினிமா பிரபலங்கள் தங்கள் முதல்நாள் ஷூட்டிங் பற்றிப் பகிரும் பகுதி...

வேலைக்குச் சேர்ந்த நாளைப்பற்றிய உணர்வுப் பதிவுகள் யார் மனதில்தான் இல்லை. முதன்முதலாய் இதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், இத்தாம் பெரிய விமானத்தை முந்நூறு பேரோடு வானேற்றும் விமானி, மனிதர்கள் பிதுங்கி வழிய பல்லவன் பேருந்தைக் கிளப்பும் ஓட்டுநர், போர்க்களத்தில் முதல் துப்பாக்கிக்குண்டை எதிரியின் மீது பாய்ச்சும் போர் வீரர்... ஒரே மடக்கில் கால் குப்பியை காலி செய்து போதை தலைக்கேறும் முன் முதன்முதலாய் சாக்கடை ஆழ்துளை ஓட்டையில் இறங்கும் என் சக மனிதன்... யாருக்குத்தான் அந்த முதல் அனுபவம் மறக்க முடியும்?

நாசர்
நாசர்

உண்மையில் விமானப்படையில் நான் சேர்ந்த முதல் நாளும், தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் சேர்ந்த முதல் நாளும் என் முதல் நாள் படப்பிடிப்பை விட சுவாரஸ்யமாகவும் உணர்வு பூர்வமாகவும் இருந்தது. வண்டலூர் செம்பார்ம் தொழிற் சாலையில் காவலாளியாய் சேர்ந்த முதல் நாளன்றே நைட் ஷிப்ட். வடமேற்கு மூலையில் இருந்த மரத்தில் இருவர் தூக்குமாட்டிக் கொண்டதை அறிமுகப்படுத்திய அன்றைய இரவுக் காவல் பணி ஆரம்பித்தது.

நான் முதன்முதலில் கேமரா முன் நின்றது அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயிற்சிபெற்ற போதுதான். ‘மிஸான் சீன’ என்றொரு பயிற்சிக்காக. ஒரு காட்சிகூடத் துண்டாக்கப்படாமல் ஒரே நீளத்தில் எடுக்கப்படுவது. அதில்தான் என் பிம்பம் முதன்முதலில் பதிவானது. அன்று ஒரு சுகானுபவம் மெது மின்சாரமாய் முழுக்க ரத்த நாளங்களோடு பரவி சூடேற்றப்பட்டது.

நாசர்
நாசர்

தொழில்முறையாய் கேமரா முன் நின்றது எனது குருக்களில் ஒருவரான R.S மணி மூலம் K.S சேதுமாதவன் அறிமுகமான ‘நிஜங்கள்’ என்ற படத்தில். அதன் கதை ஒரு பஸ் பயணத்தின்போது நடப்பது... அந்த பஸ்ஸில் இருக்கும் ஒருவனாக என்னை நடிக்க வைத்தார்கள். உண்மையில் அதுதான் முதல் படம். அது சரியாய் ஓடவில்லை.

நாசர்
நாசர்

சினிமா ஒத்துவராது, நாடகமே எதிர்காலமென அங்குமிங்குமாய்அலைந்துகொண்டிருந்த போதுதான் என் ஆசிரியர், நண்பர், வழிகாட்டி அருண்மொழி மூலமாய் ‘கல்யாண அகதிகள்’ என்ற கே.பாலசந்தர் சாரின் படம். முதல் நாள் படப்பிடிப்பு. என்னோடு சரிதா, ஒய்.விஜயா போன்ற தேர்ந்த அனுபவமிக்க நடிகர்கள். பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் என் மனைவியை பலவந்தப்படுத்துவது போல் காட்சி. முழு நிகழ்வும் ஒரு ஷாட்டில் என வடிவமைத்தி ருந்ததால் இருநூறு அடியில் இரண்டு நிமிடங்களுக்கு வரும் தொடர் காட்சி. ஒத்திகைகள் நடந்தன. எனக்கு இன்று வரை புகைபிடிக்கும் பழக்கம் கிடையாது. அந்தக் காட்சியில் புகைத்துக்கொண்டே நடிக்க வேண்டி யிருந்தது. ஒரே டேக்கில் ஓகேவானது. பாலசந்தர் சார் கைதட்ட எல்லோரும் தொடர்ந்தனர். நான் அருகே சென்றதும் `‘குட், நல்லா வருவ’’ என்று வாழ்த்தினார்.

அட்டை கிராஃபிக்ஸ்: நிஜார் முகம்மது