கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

சினிமா விகடன்: TAKE 1 - ஆனந்த்ராஜ்

ஆனந்த்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த்ராஜ்

சினிமா பிரபலங்கள் தங்கள் முதல்நாள் ஷூட்டிங் பற்றிப் பகிரும் பகுதி...

“என்னுடைய முதல் படம் எதுன்னு கேட்டா கொஞ்சம் குழப்பமா இருக்கும். முழுமையா சொல்றேன். ‘சோலைக்குயில்’ படம்தான் நான் கமிட்டான முதல் படம். பல வருடங்களா நடிகன் ஆகும் கனவைச் சுமந்து, இந்தக் கதை ஆரம்பிச்சதுல இருந்து சில மாதங்கள் பயணிச்சேன். பட ஷூட்டிங்குக்காக எல்லோரும் ஊட்டிக்குப் போனோம். முதல் படத்துல நடிக்கப்போறோம்னு ரொம்ப சந்தோஷம்; அதே அளவுக்கு பயமும் இருந்துச்சு.

சினிமா விகடன்: TAKE 1 - ஆனந்த்ராஜ்

மேக்கப்பெல்லாம் போட்டுட்டு செட்ல போய் நின்னேன். அங்க பார்த்தா, வேறு ஒரு நடிகரும் என் கெட்டப்ல இருக்கார். எனக்கு ஒரே குழப்பம். படத்துடைய ஹீரோவுக்கு நான் பரிச்சயமில்லைன்னு அவருக்குத் தெரிந்தவரை கமிட் பண்ணிட்டார்னு அப்புறமாதான் தெரிய வந்தது. இயக்குநருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு. ஆனா, சொல்லத் தயங்கிட்டு சொல்லாமல் இருந்திருக்காங்க. அப்புறம், பொறுமையா உட்காரவெச்சு என்ன நடந்ததுன்னு சொன்னாங்க. ரொம்ப மனசு கஷ்டமாகிடுச்சு. ஆசை ஆசையா வந்து இப்படியாகிடுச்சேன்னு ரொம்ப வருத்தம். அங்க இருந்த பிள்ளையார் கோயிலுக்குப் போய் மனசுவிட்டு அழுது அன்னிக்கு நைட்டே கிளம்பி சென்னைக்கு வந்துட்டேன்.

சினிமா விகடன்: TAKE 1 - ஆனந்த்ராஜ்

அடுத்து இயக்குநர் சண்முகப்ரியன் இயக்கத்துல ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. மணப்பாடுல ஷூட்டிங். நான் ஹியூமரா பேசற ஜாலியான ஆள். ஆனா, என்னை அந்தப் படத்துல வில்லனாக்கிட்டாங்க. அப்போ வில்லன் ஆனவன்தான். இப்போதான் ஹியூமர் ரோல் நிறைய வருது. அந்தப் பட ஷூட்டிங்கிற்கு முதல் நாள் தூக்கமே வரலை. நடிக்கப்போறோம்ங்கிற பயமில்லை. வேற யாராவது என் கேரக்டருக்கு நடிக்க வந்து, இந்த வாய்ப்பும் போயிடுமோன்னு பயம். அந்த பயத்தோடவே மேக்கப் போட்டுக்கிட்டு ஸ்பாட்டுக்குப் போனேன். நேரம் நெருங்க நெருங்க பயம் அதிகமாகிட்டே இருந்தது. ‘ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்’ சொல்லி கிளாப் அடிக்கிற வரை யாராவது வர்றாங்களான்னு பயத்துல சுத்திமுத்தி பார்த்துக்கிட்டே இருந்தேன். பிரபு சார்கூட ஆக்‌ஷன் சீக்வென்ஸ்தான் முதல் நாள் எடுத்தாங்க. ஜூடோ ரத்னம் சார்தான் மாஸ்டர். பயங்கர திறமையான நபர். அவர் சொல்லிக்கொடுத்த ஸ்டன்ட்ஸை அப்படியே பண்ணினேன். இந்தப் படம் பார்த்துட்டு எனக்கு நிறைய வில்லன் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. படத்துடைய முதல் நாள் எல்லோரும் கேமராவைப் பார்ப்பாங்க. நான் வேற யாராவது கார்ல வந்து இறங்குறாங்களான்னு பார்த்துட்டு இருந்தேன். இப்போ நினைச்சா சிரிப்பா வருது. ஆனா, அந்தச் சமயத்துல அவ்ளோ பயமா இருந்தது.”