
சினிமா பிரபலங்கள் தங்கள் முதல்நாள் ஷூட்டிங் பற்றிப் பகிரும் பகுதி...
“என் முதல் நாள் ஷூட்டிங் ஜூன் 7-ம் தேதி, கமல் சார் வீட்ல நடந்தது. பாரதிராஜா சார் என்னை உள்ள இருக்கிற ரூமுக்கு வரச் சொல்லி என் கையில அந்தப் படத்துக்கான அட்வான்ஸ் 1,001 ரூபாய் கொடுத்தார். ஒரு நிமிஷம் கண் கலங்கிடுச்சு. ‘க்ளீன் ஷேவ் பண்ணிட்டு வந்திடுங்க’ன்னு சொன்னார் பாரதிராஜா சார். வெளியே வந்ததும் பக்கத்துல அம்புலி சலூன்னு ஒண்ணு இருந்தது. அங்க ஷேவ் பண்ணிட்டு அவர்கிட்ட போய் நின்னேன். மணிவண்ணன் சார்தான் எனக்கு டயலாக் சொல்லிக்கொடுத்தார். ‘அந்தப் பொண்ணு இருக்காளே... அவளைப் பார்த்ததும் என் படிப்பெல்லாம் மறந்துபோச்சு. அவ ஏன் என்னை அப்படிப் பார்த்தா?’ன்னு ரெண்டு மூணு டயலாக் கொடுத்தாங்க. முதல் டேக்லேயே ஓகே ஆகிடுச்சு.


எல்லோரும் கைதட்டினாங்க. எல்லாரும் முடிச்சபிறகும் ஒருத்தர் மட்டும் தட்டிக்கிட்டிருந்தார். யாருன்னு பார்த்தா, கமல்ஹாசன் சார். ‘சங்கர்லால்’ அப்படிங்கிற படத்துக்காக வயசான கெட்டப் போட்டு ஷூட்டிங்க்குக் கிளம்பும்போது அப்படியே இங்க பார்த்துட்டுப் போகலாம்னு வந்திருக்கார். அப்புறம், பாரதிராஜா சார் என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். அப்புறம், ‘ஜன்னலிலிருந்து கீழ பார்த்துக் கைதட்டி ‘ரெண்டு டீ’ன்னு சொல்லுங்க’ன்னு சொன்னார் பாரதிராஜா சார். நானும் சொன்னேன். அப்புறம் இப்படித் திரும்புங்க, அந்தப் பக்கம் பாருங்கன்னு அவர் சொல்றதையெல்லாம் எதுக்கு சொல்றார்னே தெரியாமல் பண்ணிக்கிட்டிருந்தேன். அதெல்லாம்தான் ‘பூங்கதவே தாழ்திறவாய்’ பாடலுக்கான மான்டேஜா வந்துச்சு. அந்த சீனும் இந்தப் பாடலுக்கான மான்டேஜும்தான் என் முதல் நாள் ஷூட்டிங்ல எடுத்தாங்க. என் வாழ்க்கையில அன்னிக்கு பயந்த அளவுக்கு நான் எப்போவும் பதற்றமானதில்லை. முதல் நாள் அவர் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை ரொம்ப வருஷம் பத்திரமா வெச்சிருந்தேன். அந்தப் பத்து நூறு ரூபாய் நோட்டுகளும் ரொம்பப் பழசானதனால இந்த டீமானிட்டைசேஷனின் போதுதான் மாத்தினேன்.”