சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

இவர் கேமரா காதலர்!

ராஜேஷ் யாதவ்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேஷ் யாதவ்

பொக்கிஷம்

சென்னைச் சாலைகள் அழகானவை. அழியாத கோலங்கள்போலப் பலரின் நினைவுகளைத் தாங்கிக்கொண்டிருப்பவை. மனச்சுவரில் நிழற்படம்போலத் தொங்கிக்கொண்டிருப்பவை. வியாபாரிகளுக்கு சொர்க்கம். இலக்கியங்களில் சாலைகள் குறித்த விரிவான வர்ணனைகள் உண்டு. நெருக்கடி மிகுந்த, ஆளரவமற்ற, நேர்த்தியாக உருவாக்கப்பட்ட, மரங்களும் மலர்களும் அடர்ந்த என வெவ்வேறுவிதமான சாலைகளைச் சென்னையில் பார்க்கலாம்.

`எல்லீஸ் சாலை’... சென்னை அண்ணாசாலையும் வாலாஜாசாலையும் சந்திக்கும் இடத்திலிருக்கிறது. இந்தச் சாலைக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

ராஜேஷ் யாதவ்
ராஜேஷ் யாதவ்

1810-ம் ஆண்டில் சென்னை மாகாண ஆட்சியராக இருந்தவர் எல்லீஸ். முழுப்பெயர் `ஃபிரான்சிஸ் வைட் எல்லீஸ்’ (Francis Whyte Ellis). இவருடைய நினைவாகத்தான், `எல்லீஸ் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டது. 2017-ம் ஆண்டு, சென்னையில் ஆங்கிலப் பெயர்களில் இருக்கும் சாலைகளின் பெயர்களை மாற்ற மாநகராட்சி முடிவெடுத்து, நடவடிக்கைகளில் இறங்கியது. அதன்படி சில மாற்றப்பட்டாலும், எல்லீஸ் சாலை உள்ளிட்ட சில சாலைகளின் பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை. காரணம், எல்லீஸ் தமிழ்மீது பற்றுக்கொண்டவர். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியாகப் பணியாற்றியவர். தமிழ்மீதுள்ள ஈடுபாட்டால், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி!

இப்படிப் புகழ்பெற்றது எல்லீஸ் சாலை. தற்போது கேமரா மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளை விற்பனை செய்யும் கடைகள் அதிகம் நிரம்பிய தெருவாக இருக்கிறது.

`` ‘பொக்கிஷம்’ படத்தில் வேலை செய்யும்போதுதான் பழம்பெரும் பொருள்களின் அருமையையும், அவை பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதையும் உணர்ந்தேன்.''

ஆரம்பத்தில் இந்தத் தெருவில் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை பிரின்ட் செய்யும் லேப்கள், புகைப்படக் கருவிகள் மற்றும் அது சார்ந்த பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், கேமராக்களை சர்வீஸ் செய்யும் கடைகள் ஆகியவை அதிகமிருந்தன. கறுப்பு-வெள்ளையிலிருந்து கலருக்கு மாற வேண்டிய சூழல். இந்தச் சாலை அதற்கேற்ப தன்னை மறுபடியும் புதுப்பித்துக்கொண்டது. பிறகு இந்தத் தெருவை ஆட்டோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் ஆக்கிரமித்தன. தொடர்ந்து இந்தச் சாலை ஸ்க்ரீன் பிரின்டிங் பொருள்கள், கருவிகள் மற்றும் அது சார்ந்த வேலைகளைச் செய்யும் கடைகள் உருவாக ஆரம்பித்தன. இப்படி மூன்று தலைமுறைகளைத் தாண்டிய எல்லீஸ் சாலை தற்போது டிஜிட்டல் கேமராக்கள், போட்டோ ஃப்ரேம்ஸ், விளையாட்டுக் கேடயங்கள் போன்றவற்றுக்கான சந்தையாக மாறி நிற்கிறது. கேமராக் கலைஞர்கள் அதிகம் விரும்பும் இந்தத் தெருவுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.

camera
camera

இத்தனை மாற்றங்கள் ஏற்பட்டும் எல்லீஸ் சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கடை மட்டும் தன் பழைமையைத் தொலைக்காமல் நிற்கிறது. அது, `மெட்ரோ கேமரா சென்டர்.’ 1976-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி உருவான இந்தக் கடை கேமராக்களைப் பழுது பார்க்கும் வேலைகளைச் செய்துவந்தது. கடை உரிமையாளர் `நம்பி யாதவ்’ என அழைக்கப்படும் நாராயணசாமி யாதவ். தற்போது இங்கே கேமராக்களைப் பழுது பார்ப்பதில்லை என்றாலும், பல பழங்கால கேமராக்கள் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அவற்றைப் பாதுகாத்துவருபவர், நம்பி யாதவ்வின் மகனும் பிரபல ஒளிப்பதிவாளருமான ராஜேஷ் யாதவ்.

``இந்தக் கடையை ஆரம்பிக்கும்போது எனக்கு ஆறு வயது. என் தந்தை தி.மு.ககாரர். நாவலர் நெடுஞ்செழியன்தான் கடையைத் திறந்துவைத்தார். ஸ்டில்ஸ் ரவி, சித்ரா மணி தொடங்கி புகழ்பெற்ற பல புகைப்படக் கலைஞர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரள மாநிலங்களிலிருந்தும் கேமராவைப் பழுது பார்க்கப் பலர் வருவது உண்டு. அப்போதெல்லாம் கறுப்பு-வெள்ளைப் படங்கள்தான். அவற்றை கலர் புகைப் படங்களாக மாற்றும் வேலைகளும் இந்தத் தெருவில் நடந்து கொண்டிருந்தன.

ராஜேஷ் யாதவ்
ராஜேஷ் யாதவ்

பழைய கேமராக்களை அப்பாதான் சர்வீஸ் செய்வார். அவற்றில் சில கேமராக்கள் திரும்பப் பெறப்படாமல் கடையிலேயே தங்கிவிடும். அதேபோல செகண்ட் சேல்ஸுக்காகவும் பல வகையான கேமராக்களை வைத்திருந்தார். வயோதிகம் காரணமாக ஒரு கட்டத்துக்கு மேல் அப்பா இந்த வேலைகளை நிறுத்திக்கொண்டார். பிறகு அண்ணன்தான் கடையை நடத்தினார். மேனுவல் கேமராக்கள் எலெக்ட்ரானிக் கேமராக்களாக மாறின. அண்ணன் எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்து படித்தவர். அதனால், அவர் அந்த வகை கேமராக்களைப் பழுது நீக்கித் தந்துகொண்டிருந்தார். 10-ம் வகுப்புவரை அண்ணனுக்கு உதவியாக நானும் கடையில் வேலை செய்திருக்கிறேன். அப்படிப் பல எலெக்ட்ரானிக் கேமராக்கள் கடையில் சேர்ந்துவிட்டன. சிலவற்றை அண்ணனே வாங்கிவைத்திருந்தார். பிறகு, அண்ணனின் கவனம் மென்பொருள்துறைப் பக்கம் திரும்பியதால், அவரால் கடையை நடத்த முடியவில்லை. அதனால் கடையை மூடிவிட்டோம்.

சினிமாவில் ஒளிப்பதிவாளராக ஆனதால் என்னாலும் கடையை கவனித்துக்கொள்ள முடியவில்லை. இரண்டு வருடங்கள் கடை திறக்கப்படாமலேயே இருந்தது. அந்த நேரத்தில் இயக்குநர் சேரனின் ‘பொக்கிஷம்’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினேன். அந்தப் படத்தில் வேலை செய்யும்போதுதான் பழம்பெரும் பொருள்களின் அருமையையும், அவை பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதையும் உணர்ந்தேன். படப்பிடிப்பு முடிந்த பின்னர் கடையிலும் வீட்டிலும் நிறைந்திருந்த கேமராக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினேன். ஒவ்வொரு பட ஷூட்டிங் முடியும்போதும் பழைய கேமராக்களைச் சேகரித்துவருகிறேன். ஒருமுறை மூர் மார்க்கெட்டில் நண்பர்கள் மூலமாக `ஆரிஃபிளெக்ஸ்’ மூவி கேமராவை, ஒன்றரை லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். அதேபோல 80 ஆண்டுகள் பழைமையான `பெல்லோஸ்’ கேமராக்கள் என்னிடம் உண்டு.

இப்போது சினிமாவில் பயன்படுத்தப்பட்ட ‘2 சி’ கேமராவை வாங்கும் முயற்சியிலிருக்கிறேன். அதற்காக சில நண்பர்களிடம் பேசிவைத்திருக்கிறேன். அதை வாங்கி, அது சார்ந்த தகவல்களையும் பதிவுசெய்யத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் ராஜேஷ் யாதவ்.

தன் பழைய அனுபவங்களைப் பகிர்கிறார் நாராயணசாமி யாதவ்.

இவர் கேமரா காதலர்!

“எல்லீஸ் சாலையில் இருக்கும் பங்காரு நாயக்கன் தெருவில்தான் தி.மு.க-வின் நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போதெல்லாம் வாடகை சேர் கிடையாது. மேடை போட்டால், கட்சித் தலைவர்கள் அமருவதற்கு கேமரா சென்டரிலிருந்துதான் மர சோபாவை எடுத்துக்கொண்டு செல்வோம். பல தி.மு.க பிரமுகர்கள் இந்த சோபாவில் அமர்ந்திருக்கிறார்கள்.

இவர் கேமரா காதலர்!

தேர்தல் நேரங்களில் கடையை தி.மு.க-வின் தேர்தல் அலுவலகமாக மாற்றிவிடுவேன். தேர்தல் முடியும்வரை தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள் என, கடை திருவிழாப்போலக் காட்சி தரும்.”