சினிமாவைத் தனது ஒளிப்பதிவின் மூலம் உயிரோட்டமான கவிதைகளாக மாற்றி இந்தியத் திரையுலகை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிப்பவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
‘மீண்டும் ஒரு காதல் கதை', ‘மௌன ராகம்', ‘பூவே பூச்சூடவா’, 'நாயகன்', ‘திருடா திருடா’, ‘அலைபாயுதே’, `அபூர்வ சகோதரர்கள்', 'பா', ‘தேவர் மகன்’ எனப் பல படங்களில் தனித்துவமான ஒளிப்பதிவால் கவனம் ஈர்த்தவர். இன்றும் 'ஐ', 'ஓ காதல் கண்மணி’, 'ரெமோ' 'சைக்கோ' என இன்றைய இளம் தலைமுறைகளோடு அதே வேகத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறார். இவரது பிரேமில் எப்படியாவது நாம் தெரிந்துவிட வேண்டும், நம் கதைகள் அவரது கேமராவின் வழியே காட்சிகளாக வேண்டும் என்பது பல இளம் தலைமுறை கலைஞர்களின் கனவாக இருக்கிறது என்றால் அதுமிகையல்ல.
அந்தவகையில் இன்று தமிழ் திரையுலகில் மோஸ்ட் வான்டட் இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற விகடன் மாணவப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையில், `ரஜினி சார், அஜித் சாருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய மிகப் பெரிய ஆசை.
சின்ன வயதிலிருந்து இப்ப வரைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் சார் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருடன் சேர்ந்து பணியாற்ற ஆசையிருக்கு. அதேப்போல பி.சி.ஸ்ரீராம் சாரோட பணிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாய்ப்புக் கிடைத்தால் அவருடனும் சேர்ந்து பணியாற்ற ஆசை" என்று கூறியிருந்தார்.
லோகேஷின் இந்த பேட்டி சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வந்தன. இதைக் கவனித்த பி.சி.ஸ்ரீராம், லோகேஷ் பேசியதைப் பகிர்ந்து 'Waiting' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.