சினிமா
Published:Updated:

அஜித் கொடுத்த ஊக்கம், சூர்யா கொடுத்த பரிசு!

ஆர்.டி.ராஜசேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.டி.ராஜசேகர்

ஹாரிஸ் ஜெயராஜுக்கு இருக்கும் நண்பர்களில் நான் முக்கியமானவனா இருப்பேன். எனக்கும் அவர் அப்படித்தான்.

‘மின்னலே’ படத்தில் கரியரைத் தொடங்கிய ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், திரையுலகில் 20 வருடங்களை நிறைவு செய்யவிருக்கிறார்.

“பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சு முடிச்சவுடன் ராஜீவ் மேனன் சார்கிட்ட சேரலாம்னு தோணுச்சு. ரொம்ப கஷ்டப்பட்டு அவருடைய வீட்டு முகவரியைக் கண்டுபிடிச்சுட்டேன். காலையில போனா நல்ல மூடுல இருப்பார், உடனே சேர்த்துக்குவார்னு நினைச்சு காலையில 7.30 மணிக்குப் போய் அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவங்க அம்மா கதவைத் திறந்து ‘வாக்கிங் போயிருக்கார்’னு சொன்னாங்க. மறுநாள் 6 மணிக்குப் போனேன். அப்போவும் அதே பதில்தான். அடுத்த நாள் 5 மணிக்கே போய் அவரைப் பார்த்து, ‘உங்ககிட்ட அசிஸ்டென்ட்டா சேரணும்’னு சொன்னேன். தைரியமா வந்து அவர்கிட்ட சொன்னேன்னு சந்தோஷப்பட்டார். ‘விளம்பரங்கள், சினிமான்னு ரெண்டு விஷயங்கள் இருக்கு. எதுல வொர்க் பண்ணணும்?’னு கேட்டார். ‘உங்களோட விளம்பரங்களில் வேலை செய்யக் கத்துக்கணும். ஆனா, சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராகணும்’னு சொன்னேன். என்னை பிளாக் பேக் பாயா சேர்த்துக்கிட்டாங்க. அந்த பேக்லதான் எல்லா கேமரா பொருள்களும் இருக்கும். கடைசி அசிஸ்டென்ட்தான் அதுக்குப் பொறுப்பு. அவங்கதான் தூக்கணும். அடுத்த ஆறு மாசத்துல அந்த பிளாக் பேக் வேறொருத்தர்கிட்ட போயிடுச்சு. விளம்பரங்கள், சினிமான்னு அவர்கிட்ட எட்டு வருஷம் வேலை செஞ்சேன்.”

ஆர்.டி.ராஜசேகர்
ஆர்.டி.ராஜசேகர்

`` ‘மின்சாரக்கனவு’ ராஜீவ் மேனன் இயக்கிய முதல் படம். ஆனால், அதற்கு வேறு ஒளிப்பதிவாளர். யாரிடம் அப்போது வேலை செய்தீர்கள்?’’

“நிறைய விளம்பரங்கள் பண்ணிட்டிருந்தோம். ஒரு நாள் ‘நம்ம ஒரு படம் இயக்கப்போறோம். மூணு மாசத்துக்கு எந்த விளம்பரங்களும் பண்ணப்போறதில்லை’ன்னு சொன்னார். எனக்கு டைரக்‌ஷன் மேலதான் ஆர்வம். ஆனா, ஒளிப்பதிவு படிச்சா இயக்குநராகலாம். இயக்கம் படிச்சா ஒளிப்பதிவாளராக முடியாதுன்னு சொன்னாங்க. அதனாலதான், பிலிம் இன்ஸ்ட்யூட்ல ஒளிப்பதிவுத் துறையை எடுத்தேன். இவர் இப்போ படம் பண்ணப்போறதா சொன்னதனால எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்தப் படத்துல நான் உதவி இயக்குநரா வேலை செஞ்சேன். அப்போதான் கெளதம் மேனன் அசிஸ்டென்டா சேர்ந்தார். ஒருநாள் ‘மின்னலே’ படத்துடைய ஒன் லைன் சொன்னார். ரொம்ப நல்லாருந்தது. அடுத்த 15 நாள்களில் முழுமையா எழுதிட்டு வந்து கதையைச் சொல்லி முடிச்சுட்டு ‘இந்தப் படத்துக்கு நீங்களே ஒளிப்பதிவு பண்ணுங்க’ன்னார். அப்படித்தான் என் கரியர் தொடங்கியது.”

அஜித் கொடுத்த ஊக்கம், சூர்யா கொடுத்த பரிசு!

``ஹாரிஸ் ஜெயராஜை நீங்கள்தான் கெளதம் மேனனுக்கு அறிமுகப்படுத்தினீர்களாமே!’’

“ஹாரிஸ் ஜெயராஜுக்கு இருக்கும் நண்பர்களில் நான் முக்கியமானவனா இருப்பேன். எனக்கும் அவர் அப்படித்தான். ஏசி பிலிம்ஸ்ங்கிற விளம்பர ஏஜென்ஸி மூலமா ஹாரிஸ் எனக்கு அறிமுகமானார். ‘Crocodile’ ஜீன்ஸ் விளம்பரம். அதுக்கு செமயா மியூசிக் பண்ணியிருந்தார். இவரைப் பத்தி கெளதம்கிட்ட சொல்லிட்டு அந்த விளம்பரத்துக்கான மியூசிக்கைப் போட்டுக் காட்டினேன். அவருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. மறுநாள், ஹாரிஸ்கிட்ட ‘கெளதம்... ராஜீவ் சார் அசிஸ்டென்ட். சூப்பரான கதை வெச்சிருக்கார்’னு சொன்னேன். ‘சூப்பர். ‘மஜ்னு’ன்னு ஒரு படத்துக்கு மியூசிக் பண்ண என்னையும் கேட்டுட்டு இருக்காங்க’ன்னு சொன்னார். அப்புறம், ஹாரிஸ் - கெளதம் மீட் பண்ணி ரொம்ப நெருக்கமாகிட்டாங்க. முதல் படத்துலேயே எங்கேயோ போயிட்டார்.”

``உங்களை நினைத்துதான் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் கணேஷ் கேரக்டரை கெளதம் மேனன் எழுதினாராமே!’’

அஜித் கொடுத்த ஊக்கம், சூர்யா கொடுத்த பரிசு!

“ `விண்ணைத்தாண்டி வருவாயா’ ஷூட்டிங் போய்க்கிட்டு இருந்தபோது, நான் வேறொரு படத்துல இருந்தேன். ‘உங்களுக்கு இந்தப் படத்துல ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்’னு சொன்னார், கெளதம். படத்துல பிலிம் மேக்கிங் பத்தி கொஞ்சம் போர்ஷன் இருக்குன்னு தெரியும். ஆனா, என்னை ஒரு கேரக்டரா எழுதுவார்னு நினைக்கலை. படம் பார்க்கும்போது ரொம்ப சர்ப்ரைஸா இருந்தது. ‘நீ என்னையே நடிக்க வெச்சிருக்கலாமே’ன்னுகூட கெளதம்கிட்ட சொன்னேன். என்னை மனசுல நினைச்சு ஒரு கேரக்டர் எழுதியிருக்கார்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.”

`` ‘ரெட்’, ‘பில்லா 2’ன்னு இரண்டு படங்கள் அஜித்துடன் வேலை செய்த அனுபவம்?’’

“எனக்கு அவரை பர்சனலா ரொம்பப் பிடிக்கும். ‘சிட்டிசன்’ படத்துல ‘பூக்காரா’ பாடலுக்கு மட்டும் ஒளிப்பதிவு பண்ணுற வாய்ப்பு வந்தது. இந்தப் பாடலுடைய ஷூட்டிங் முடிஞ்சு என்கிட்ட, ‘நாலஞ்சு நாளில் உங்களுக்கு ஒரு முக்கியமான போன் கால் வரும்’னு சொல்லிட்டுப் போனார். அதே மாதிரி ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி சார் போன் பண்ணி, ஆபீஸுக்கு வரச்சொன்னார். அங்கே போனவுடன் ‘அஜித் சாருடைய அடுத்த படம் ‘ரெட்.’ நீங்கதான் ஒளிப்பதிவாளர்’னு சொன்னார். யாருக்கு எப்போ சரியான வாய்ப்பு கிடைக்கும்னு யாராலயும் சொல்லமுடியாது. சிங்கம்புலி சார்தான் இயக்குநர். முதல் நாள் ஷூட்டிங். இதுல அஜித் சாருக்கான லுக் என்னன்னு யாருக்குமே தெரியாது. மொட்டை போட்டு, நெத்தியில குங்குமம் வெச்சு சிவப்புக் கலர் சட்டையில வந்து நின்னார். பார்க்கும்போதே வேற மாதிரி இருந்தார். அப்படியே பத்து வருஷம் கழிச்சு, ‘பில்லா 2’. தெற்காசியாவிலேயே ரெட் எபிக் கேமராவுல முதன்முறையா பண்ணிய படம். இயக்குநர் சக்ரி டோலட்டியே அந்தக் கேமராவை வாங்கிட்டு வந்துட்டார். எனக்கு டிஜிட்டல்ல வொர்க் பண்ண ரொம்ப தயக்கம் இருந்தது. அஜித் சார்தான் ‘டிஜிட்டல்ல முயற்சி பண்ணிப் பாருங்க’ன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்.”

`` ‘கஜினி’ படத்தில் இரண்டு போர்ஷனுக்கும் ஒளிப்பதிவில் வித்தியாசம் இருக்கும். அதை முருகதாஸ் சொன்னவுடன் என்ன தோன்றியது?’’

அஜித் கொடுத்த ஊக்கம், சூர்யா கொடுத்த பரிசு!

“அவர் கதை சொல்லும்போதே ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. முருகதாஸ் பயங்கரமான ஸ்கிரிப்ட் ரைட்டர். ஏதாவது சந்தேகம் வந்து ‘இது வேணுமா?’ன்னு கேட்டா, நிச்சயமா வேணும்னு சொன்னதோடு ஏன் வேணும், அதுக்குப் பின்னாடி எவ்ளோ ஆராய்ச்சி பண்ணியிருக்கார்னு தெளிவா சொல்லுவார். சூர்யா சார் மொட்டை அடிச்சு உடம்பெல்லாம் டாட்டூ குத்தி கண்ணாடியைப் பார்த்து உட்கார்ந்திருப்பார். அதைப் பார்த்ததும்தான் எனக்கு லைட்டிங் எப்படிப் பண்ணணும்னு ஒரு ஐடியா வந்தது. அந்தப் போர்ஷன் எல்லாம் குறைவான வெளிச்சத்துல பச்சைக் கலர் டோன்ல இருக்கும். அதே சமயம், சூர்யா - அசின் போர்ஷனுக்கு வேற மாதிரி லைட் பண்ணணும். இது எல்லாமே முருகதாஸ் சாருடைய ஸ்கிரிப்ட்லயே இருக்கும். படம் முடிச்ச பிறகு, ‘நான் என்ன நினைச்சேனோ அது அப்படியே வந்திருக்கு’ன்னு சொன்னார்.”

``காக்க காக்க, கஜினி, சில்லுனு ஒரு காதல், மாஸ்... சூர்யாவுடன் நான்கு படம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். உங்களுக்கும் சூர்யாவுக்குமான நட்பில் மறக்க முடியாத மொமன்ட்?’’

“என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான மனிதர், சூர்யா. ஒரு கேரக்டருக்குள்ள வந்துட்டா, அவருக்குத் திருப்தியாகுற வரைக்கும் அதுல இருந்து வெளியே வரமாட்டார். இப்போ ‘சூரரைப் போற்று’ அவருடைய லுக், டிரெய்லரெல்லாம் பார்க்கும்போதே அவ்ளோ பாசிட்டிவா இருக்கு. ‘சில்லுனு ஒரு காதல்’ முடிஞ்ச சில நாள்களில் சூர்யா சார் அனுப்பிவிட்டார்னு ஒருத்தர் என் ஆபீஸுக்கு வந்தார். ‘நீங்க நிறைய படங்கள் பார்ப்பீங்க. அதனால, உங்க ஆபீஸ்ல புரொஜெக்டர், ஹோம் தியேட்டரெல்லாம் ஃபிக்ஸ் பண்ணச் சொன்னார் சூர்யா சார்’னு சொல்லி எல்லாம் ரெடி பண்ணிக்கொடுத்துட்டுப் போனார்.”

அஜித் கொடுத்த ஊக்கம், சூர்யா கொடுத்த பரிசு!

``நீங்க ஒளிப்பதிவு செய்த பாடல்கள் எல்லாம் நல்லா பேசப்பட்டிருக்கு. பாடல் காட்சிகள் எடுப்பதற்கு எப்படித் தயாராவீங்க?’’

“அந்தப் பாடலுக்கான ஃபீல் என்னன்னு தெளிவா கேட்டுக்குவேன். அதுக்குத் தகுந்த மாதிரி லொகேஷன் பார்க்குறதுல மெனக்கெடுவேன். தவிர, டான்ஸ் மாஸ்டர்களுடைய பெரிய சப்போர்ட் தேவைப்படும். பிருந்தா மாஸ்டர்கூட சேர்ந்து நிறைய பாடல்கள் ஷூட் பண்ணியிருக்கேன். அவங்களோட வொர்க் பண்ணுறதுக்கு அவ்ளோ சுவாரஸ்யமா இருக்கும். நாம என்ன நினைக்கிறோமோ அதைப் புரிஞ்சுக்கிட்டு ரொம்ப உறுதுணையா இருப்பாங்க. ‘சில பாடல்கள் அதிகாலையில எடுத்தா விஷுவல் நல்லாருக்கும். ஷூட் பண்ணலாமா?’ன்னு கேட்டா, ‘நான் ஆர்ட்டிஸ்ட்களை வரவைக்கிறேன். சூப்பரா வொர்க் பண்ணலாம்’னு சொல்லி ஹீரோ, ஹீரோயின்கிட்ட பர்சனலா பேசி அவங்களை சரியான நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வரவெச்சிடுவாங்க. அதே சமயம், மான்டேஜ் மூவ்மென்ட்ஸ் எடுக்கிறதுல ரொம்ப ஸ்ட்ராங். ‘முன்பே வா அன்பே வா’, ‘சுட்டும் விழிச் சுடரே’ மாதிரியான பாடல்கள் எல்லாம் இப்போவரை பேசப்படுறதுக்கு இதெல்லாம்தான் காரணம்.”

``ஓர் ஒளிப்பதிவாளர் எப்போது இயக்குநராகிறார்?’’

“ஒளிப்பதிவாளர் எப்போ இயக்குநராகுறாங்கன்னா ஒரு சுமாரான இயக்குநர்கூட வொர்க் பண்ணும்போதுதான். ‘என்னடா இவங்க. பேசாம நம்மளே டைரக்ட் பண்ணிடலாம் போல’ன்னு நினைப்பாங்க. எனக்கு அந்த மாதிரியான சூழல் இல்லை. நான் வொர்க் பண்ணின இயக்குநர்கள் எல்லோரும் ஒவ்வொரு வகையில ரொம்ப புத்திசாலியா இருந்திருக்காங்க. என் கரியர் ஆரம்பிக்கும்போதே படம் இயக்கணும்னு எனக்கு ஆசை இருந்தது. ஒளிப்பதிவுல இன்னும் நாம பெருசா அடிச்சு நொறுக்கலையே. அதைப் பண்ணிட்டு அப்புறம் படம் இயக்கலாம்னு இருக்கேன். ஆனா, கதைகள் எழுதி வெச்சிருக்கேன்.”

``மிஸ் பண்ணிட்டோம்னு நினைத்த படங்கள்?’’

“ஷங்கர் சாருடைய ‘அந்நியன்’ படத்துல வொர்க் பண்ண வாய்ப்பு வந்தது. ஆனா, அந்தச் சமயத்துல ‘கஜினி’ ஷூட்டிங்ல இருந்தேன். அதனால பண்ண முடியலை. அதை மிஸ் பண்ணிட்டோமேன்னு எனக்குள்ள பெரிய வருத்தம் இருக்கு. அப்புறம், ‘தூம் 2’ மிஸ் பண்ணிட்டேன்.”

அஜித் கொடுத்த ஊக்கம், சூர்யா கொடுத்த பரிசு!

``அடுத்து என்னென்ன படங்கள் இருக்கு?’’

“இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய பயோபிக் ‘800’ பண்ணுறேன். விஜய் சேதுபதி நடிக்கிறார். இலங்கைக்குப் போய் முரளிதரன் வீட்ல மூணு நாள் தங்கி லொகேஷனெல்லாம் பார்த்துட்டு வந்தோம். பீரியட் படங்கிறதனால ஒளிப்பதிவுல நிறைய ஸ்கோப் இருக்கு. முரளிதரனுக்கு சினிமா மேல அவ்ளோ ஆர்வம் இருக்கு. தினமும் ஒரு தமிழ்ப் படம் பார்ப்பாராம். இந்தப் படத்துடைய ஷூட்டிங்குக்குப் போக ரொம்ப ஆவலா இருக்கேன். அப்புறம், நயன்தாராவுடைய ‘நெற்றிக்கண்’ பண்ணியிருக்கேன்.”