சினிமா
Published:Updated:

“இயக்குநரே ஒளிப்பதிவாளர்; கேமராமேன் கதைசொல்லி!”

ரவிவர்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரவிவர்மன்

இயக்குநர்தான் முதலில் சிறந்த ஒளிப்பதிவாளர், கேமராமேன் சிறந்த கதைசொல்லி. காட்சிகள்தான் கதை சொல்லுது. அப்படித்தான் புரிஞ்சுக்கணும்.

இந்தியாவின் அனைத்து முக்கியமான இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனைத்தான் தேடுகிறார்கள். இந்தியாவின் டாப் இயக்குநர்களுக்கு அவரே ஃபர்ஸ்ட் சாய்ஸ். படு பிஸியாக இருந்ததில் வந்த களைப்பு, சோர்வு அனைத்தையும் மீறி மினுமினுக்கும் கண்களோடு பேசினார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

“ ‘என்ன மும்பைப் பக்கமே போயிட்டீங்க’ன்னு தானே கேக்கப்போறீங்க? இங்கே நாம் டெக்னிக்கலாக என்னதான் செய்தாலும் அங்கே போனால்தான் பெரிய ரீச் ஆகுது. அங்கே போய் ஒர்க் பண்ணினால் இங்கே அதிகமா அங்கீகரிக்கிறாங்க. எனக்கு அமைஞ்ச சஞ்சய் லீலா பன்சாலி, அனுராக் பாசு, மணிரத்னம், இம்தியாஸ் அலி, ஷங்கர், பிரியதர்ஷன், கௌதம் மேனன்னு அவங்களோடு தொழில் செய்யவே ஆசையாக இருக்கும். நாம் எவ்வளவு திறமையாக இருந்தாலும் நல்ல டைரக்டர்கள் அமைகிற வரைக்கும்தான் நல்ல படங்கள் இருக்கும். ஒளிப்பதிவுக்குன்னு எல்லை, வரைமுறைன்னு இனிமே வைக்கவே முடியாது. முன்னாடி எதையெல்லாம் சரின்னு சொல்லிட்டு இருந்தோமோ அதெல்லாம் தப்புன்னு ஆகுது. இப்ப உள்ளது உள்ளபடி சொல்றதுதான் ஆர்ட்னு ஆகிப்போச்சு. இதில் எந்த அளவு நாம் வெளிக்காட்டாமல் இருக்கிறோமோ அதுதான் நல்லது. ஒளிக்கு ஏது மொழி? எனக்கு எல்லாம் ஒண்ணுதான். மனசுக்குப் பிடிச்சிருந்தா எங்கேயும் போய் வேலை பார்ப்பேன். இப்பதான் மணிரத்னம் சார் கூப்பிட்டு, ‘பொன்னியின் செல்வன்’ முடிச்சுக் கொடுத்தேன்!”

“இயக்குநரே ஒளிப்பதிவாளர்; கேமராமேன் கதைசொல்லி!”

“எப்படி இப்படி தேர்ந்தெடுத்துப் படங்கள் செய்றீங்க?”

“ ‘பர்பி’ இந்திப் படம் பண்ணும்போது நீங்க சஞ்சய் லீலா படங்களுக்கு சரியாக இருப்பீங்கன்னு சொன்னாங்க. நான் மணிரத்னம் படம் பண்ணணும்னு சொன்னேன். பார்த்தால் சஞ்சய் லீலா படமும், மணிரத்னம் படமும் அடுத்தடுத்து வருது. பன்சாலி என்னைக் கூப்பிட்டு ‘உங்களோட பெஸ்ட் ஒர்க் எது’ன்னு கேட்டார். ‘இதுவரைக்கும் பண்ணலை சார்’னு சொன்னேன். உடனே என்னை கமிட் பண்ணிட்டார். எல்லோரும் என்னைப் பற்றிப் பேசும்போது ‘பர்பி’, ‘ராம் லீலா’ன்னு சொல்லிக்கிட்டு நிற்கிறாங்க. நான் எங்கேயும் தேங்கி நிற்கலை. அதற்கடுத்து போய்க்கிட்டு இருக்கேன். அதுதான் நல்லது.”

“ஒளிப்பதிவை உங்கள் பாணியில் எப்படிப் புரிய வைப்பீங்க...”

“இயக்குநர்தான் முதலில் சிறந்த ஒளிப்பதிவாளர், கேமராமேன் சிறந்த கதைசொல்லி. காட்சிகள்தான் கதை சொல்லுது. அப்படித்தான் புரிஞ்சுக்கணும். சினிமாவே larger than the life experiences தான். நம் உணர்வுக்கு வர்ணம் பூசுவதுதான் ஒளிப்பதிவு. இதில் தேவைக்கு மேலே தொழில்நுட்பம் அவசியமில்லை. எது செய்தாலும் அதில் இயக்குநரின் விருப்பமும் இருக்கணும். ஒவ்வொரு சினிமாவும் ஒரு சின்ன உலகத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கு. இயக்குநர் ஒரு கதையைச் சொல்லி முடித்ததும் இனம் தெரியாத ஒரு உணர்வு என்னை வேறு ஒரு இடத்துக்குக் கொண்டு போகணும். எனக்குள்ளே எங்கோ கிடைத்த அனுபவம், கேட்ட செய்தி, பார்த்த பார்வை எல்லாமே மனசுக்குள்ளே வந்து கதையோட கலந்து ஒளிப்பதிவுக்கு ஒரு வழி கிடைச்சுடும். டைரக்டர் நினைக்கிற கதையைப் படமாக ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஓட்டுகிற வித்தை ஒளிப்பதிவாளருக்குப் பிடிபடும் வரைக்கும் மத்ததெல்லாம் சும்மா!”

“இயக்குநரே ஒளிப்பதிவாளர்; கேமராமேன் கதைசொல்லி!”

“தள்ளி நின்னு பார்த்து தமிழ் சினிமா எப்படியிருக்குன்னு சொல்லுங்க...”

“இங்கே இருக்கிற திரைமொழி அபாரம். மணிரத்னம், பாலா, வெற்றிமாறன், மிஷ்கின் மாதிரியான திரைமொழி இந்தியாவில் வேற எங்கேயும் இல்லை. ‘ஜெய் பீம்’ மாதிரி நல்ல படங்கள் வேற உலகத்தைக் காட்டுது. நம்மகிட்டே நல்ல கதைகள் இருக்கு. இளையராஜா, ரஹ்மான் மாதிரியானவர்கள் இங்கேதான் இருக்காங்க. அதேநேரம் இன்னொரு எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ் இன்னும் கிடைக்கவே இல்லை. இன்னமும் ஹீரோ ஹீரோயினுக்குக் கதை எழுதிட்டு இருக்காங்க. சின்னச் சின்னதா அப்பப்போ சில சர்ப்ரைஸ் வருது. ஆச்சர்யங்களே வாடிக்கையாகணும்.”

“இயக்குநரே ஒளிப்பதிவாளர்; கேமராமேன் கதைசொல்லி!”

“அமிதாப், ரன்வீர் தொடங்கி எத்தனையோ நட்சத்திரங்களோடு பழகியிருக்கீங்க... அனுபவம் சொல்லுங்க...”

“அமிதாப் எல்லாம் அவ்வளவு எளிமையாக வந்து நடிச்சிட்டுப் போவார். அவருக்கு இருக்கிற பெயருக்கு செட்டையே துவம்சம் செய்யலாம். ஆனா முதல் நாள் ஷூட் முடிச்சிட்டுக் காத்திருந்து அடுத்த நாள் ஷூட்டுக்கு வீட்டுப்பாடம் கேட்கிற மாணவன் மாதிரி கேட்டுட்டுப் போவாங்க. ரன்வீர் சிங் தான் அடுத்த சூப்பர் ஸ்டார். எந்நேரமும் எனர்ஜி ஓடிட்டே இருக்கும். எந்த வேடம் கொடுத்தாலும் இறங்கிச் செய்வார். எனக்கு அதுபோல கார்த்தியை ரொம்பப் பிடிக்கும். உள்ளும் புறமும் மாறாத குணமுடையவர்.”

“இயக்குநரே ஒளிப்பதிவாளர்; கேமராமேன் கதைசொல்லி!”

“இத்தனை வருஷ அனுபவத்தில் கற்ற பாடம், படிப்பினை, அனுபவம் என்ன?”

“எனக்கு முன்னோடியாக இருந்தது வறுமையும், கோபமும்தான். இப்ப வயது அதிகமாக கோபம் குறைஞ்சிருக்கு. அருமையான ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இறந்தபோது பின்னாடி நடந்துபோக பத்துப் பேர்கூட இல்லை. சினிமா இருந்துகிட்டே இருக்கும். சினிமாக்காரங்க அழிஞ்சுகிட்டே இருப்பாங்க. ரொம்பக் குறைஞ்ச படிப்பு. ஆனால் வாழ்க்கையில் படாத அடி கிடையாது. எல்லோரையும் அன்பு செய்யத்தான் விரும்புறேன். ஆனால் பல நேரங்களில் முடியாமல் போவதுதான் யதார்த்தம்.”

“இயக்குநரே ஒளிப்பதிவாளர்; கேமராமேன் கதைசொல்லி!”

“ ‘பொன்னியின் செல்வன்’ எப்படி வந்திருக்கு..?”

“நிறைய சொல்லலாம். மணி சார் இன்னும் பச்சைக்கொடி காட்டலையே! கொஞ்சம் சொல்றேன். நாம எல்லோரும் படிச்ச கதைதான். ஆனால் மணிரத்னம் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். பழைமையும் புதுமையும் இழையோடியிருக்கும். ‘பொன்னியின் செல்வ’னை மணிரத்னத்தைத் தவிர இன்னொருவர் செய்திருக்க முடியும்னு எனக்குத் தோணலை. இதுவே உண்மை.”