கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

“கமலால் கிடைத்ததுதான் கோலிவுட்டும் பாலிவுட்டும்!”

ரவிவர்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரவிவர்மன்

தமிழ் சினிமாவின் கனவுப் படத்தில் நான் இருப்பதற்கு ரொம்பவே சந்தோஷப்பட்டேன்.

தஞ்சாவூரின் பொய்யுண்டார்குடிகாடு கிராமத்திலிருந்து கிளம்பியவரின் படைப்பை நியூயார்க் பிலிம் ஸ்கூலில் புராஜெக்ட்டாக எடுத்துப் படிக்கிறார்கள் என்றால் நிச்சயம் அது வியப்பாகத்தானே இருக்கும். அந்த வியப்பை ஏற்படுத்தியவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருக்கும் ரவிவர்மன்தான். இவர் ஒளிப்பதிவு செய்த ‘பர்ஃபி’ படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். ரவிவர்மனிடம் பேசினேன்.
ரவிவர்மன்
ரவிவர்மன்

``ஒளிப்பதிவாளராகும் ஆசை எப்போது வந்தது?’’

``நான் பிறக்குறதுக்கு முன்னாடி எங்க அப்பா பணக்காரரா இருந்தாராம். அம்மாவும் எனக்கு 12 வயசு இருக்கும்போது இறந்துட்டாங்க. எங்க அம்மாவோட இறப்புக்கு வந்தவங்க, `இனி இந்தப் பையன் என்ன பண்ணப்போறானோ’ன்னு பேசினது என் காதுலேயே விழுந்துச்சு. என் வாழ்க்கையைப் பார்க்கிறதுக்கு நான் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்துட்டேன். சின்ன வேலை கிடைச்சது. முதல் சம்பளத்தில் நல்ல டிரஸ் எடுக்கலாம்னு மூர் மார்க்கெட் போனேன். போற வழியில ஒரு கேமரா கடை இருந்துச்சு. என்ன நினைச்சேன்னு தெரியலை; டக்குனு ஒரு கேமராவை வாங்கிட்டேன். அந்தக் கேமராவை வாங்க வெச்சதே எங்க அம்மாதான்னு நான் நம்புறேன். 6 மாசத்துல எப்படி யூஸ் பண்றதுனு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்தில் கேமரா சார்ந்து வேலைகளும் பார்க்க ஆரம்பிச்சேன். அது அப்படியே சினிமா சம்பந்தப்பட்ட வேலையா மாறுச்சு.

`கே.வி.மணி’ன்னு ஒரு போட்டோகிராபர்கிட்ட சினிமா ஸ்டில்ஸ் போட்டோகிராபரா வேலை பார்த்தேன். அடுத்து, ஒளிப்பதிவாளர் ரங்காகிட்ட, ரஜினி சார் நடிச்ச ’மாப்பிள்ளை’ படத்திலிருந்து உதவி ஒளிப்பதிவாளரா வேலை பார்த்தேன். அவரோடு இருந்தப்போதான் ’முதல்குரல்’ படத்துல சிவாஜி சார் நடிச்ச காட்சியை ஷூட் பண்ணினேன். அதுதான் நான் ஷூட் பண்ணின முதல் காட்சி. பிறகு, பாலு மகேந்திரா சாரின் உதவியாளர் செல்வம் மூலமா அவரைப் பார்த்தேன். அப்போ பாலு மகேந்திரா சார் என்னைப் பற்றி நல்லா விசாரிச்சிட்டு, ‘உனக்கு இப்போ தங்குறதுக்கு நல்ல இடமும், சாப்பிடுறதுக்கு சாப்பாடும் கிடைக்கணும்னா பிஸியா இருக்குற ஒளிப்பதிவாளர்கள்கிட்ட வேலைக்குப் போ. நான் வருஷத்துக்கு ஒரு படம்தான் பண்றேன்’னு சொன்னார். பிறகு அவரின் உதவியாளர்தான் என்னை ரவி கே சந்திரன்கிட்ட உதவி ஒளிப்பதிவாளரா சேர்த்துவிட்டார். இவர்கிட்ட வொர்க் பண்ணும்போதுதான் ஒளிப்பதிவுன்னா என்னன்னு புரிஞ்சிக்கிட்டேன். அவர்கிட்ட 93 -99 வரை பல படங்கள் வொர்க் பண்ணினேன். பிரியதர்ஷன் படங்கள், இந்திப் படங்கள்னு பெரிய பெரிய படங்களில் வேலை பார்த்ததுக்குப் பிறகுதான் எனக்கு முதல் படம் கிடைச்சது.’’

 “கமலால் கிடைத்ததுதான் கோலிவுட்டும் பாலிவுட்டும்!”

‘`ஒளிப்பதிவாளராக உங்கள் முதல் பட அனுபவம் சொல்லுங்க?’’

``நான் ஒளிப்பதிவாளரா ஆனதுக்கு என் மனைவிதான் காரணம். எனக்காக எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு வந்தாங்க என் மனைவி. அவங்களை நான் சந்தோஷமா வெச்சுப் பார்த்துக்கணும்னு முடிவு பண்ணி, இனிமேல நாம உதவி ஒளிப்பதிவாளரா வேலை பார்க்க வேணாம். ஒளிப்பதிவாளராகலாம்னு முடிவெடுத்தேன். அப்போதான் மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் சார் `ஜலமர்மரம்’ படத்தில் என்னை ஒளிப்பதிவாளரா கமிட் பண்ணினார். இவர் ரவி.கே.சந்திரன் சார்கிட்ட நான் உதவியாளரா இருந்தபோதே பழக்கமானவர். `ஜலமர்மரம் படத்தை வெறும் 8 லட்ச ரூபாய் பட்ஜெட்ல பண்ணணும்; 14 நாளில் படப்பிடிப்பை முடிக்கணும்’னு சொன்னார். முதல் படமே ரொம்ப சவாலானதா இருக்கேன்னு உடனே ஓகே சொல்லிட்டேன்.’’

ரவிவர்மன்
ரவிவர்மன்

‘`மல்லுவுட் டு பாலிவுட் கதை சொல்லுங்க?’’

``தமிழ் சினிமாவுக்கு வரதுக்கும் இந்திப் பட வாய்ப்புகள் கிடைக்கிறதுக்கும் காரணமா இருந்தவர், கமல்ஹாசன் சார்தான். நான் மலையாளத்தில் பண்ணின `ஷாந்தம்’ என்கிற படத்தில் லைட்ஸ் எதுவுமே யூஸ் பண்ணாம, முழுப் படத்தையும் எடுத்தேன். அந்தப் படத்தில் என்னோட வொர்க்கைப் பாராட்டி, எனக்கு இன்டர்நேஷனல் அவார்டு ஒண்ணு கிடைச்சது. ஆனால் எனக்கு இந்த அவார்டு கிடைச்சது அந்த டைம்ல ஒரு பெரிய நியூஸ் ஆகலை.`மருதநாயகம்’ படத்தில் நான் உதவி ஒளிப்பதிவாளரா இருந்ததனால, விருது விஷயத்தை கமல் சார் கேள்விப்பட்டு, `தமிழ்ப் பையன் மலையாள சினிமாவில் வேலை பார்த்து அதுக்காக சர்வதேச விருது வாங்கியிருக்கான். அவனை நாம பாராட்ட வேணாமா’ன்னு என்னை வரச்சொல்லி, ஒரு பிரஸ் மீட் வெச்சார். அந்த பிரஸ் மீட்டுக்கு அப்புறம்தான், என்னைப் பற்றித் தமிழ், இந்தி, தெலுங்கு சினிமா ஆட்களுக்குத் தெரிய வந்துச்சு. அது மூலமாதான் மணிரத்னம் சார் தயாரிச்ச `ஃபைவ் ஸ்டார்’ படமும் அமிதாப் பச்சன், அனில் கபூர் நடிச்ச `அர்மான்’ போன்ற படங்களும் கிடைச்சது.’’

‘`அமிதாப் பச்சன், கமல், மோகன் லால், மம்மூட்டி போன்ற சீனியர் நடிகர்களோடு வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?’’

``கமல் சார். என்னைப் பாராட்டுனது மட்டுமல்லாமல், `வேட்டையாடு விளையாடு’ படத்தையும் அவரோட கரியர்ல மிக முக்கிய முயற்சியான `தசாவதாரம்’ படத்தையும் என்னை நம்பிக் கொடுத்தார். அமிதாப் சார்தான் நான் இந்தி ஃபீல்டுல மொழி தெரியாம கஷ்டப்பட்டுட்டு இருந்தப்போ, `இங்க மொழி ஒரு பிரச்னையே கிடையாது. உன்னோட நோக்கம்தான் முக்கியம்’னு தன்னம்பிக்கை கொடுத்த ஆள். ஒரு தொழிலாளி மிகச்சிறந்த தொழிலாளியா மாறு வதற்கு அவனோடு வேலை பார்க்கிறவங்களும் நல்ல உணர்வாளர்களா இருக்கணும். அவனோட வேலையை மதிக்கணும். அப்படிப்பட்டவங்கதான் மோகன் லாலும் மம்மூட்டியும். அனில் கபூர் சார் என் வொர்க்கைப் பார்த்துட்டு, இவன் மிகப்பெரிய கேமராமேனா வருவான். இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க’ன்னு அவருக்குத் தெரிந்த ஆட்கள்கிட்ட சொல்லி, எனக்குன்னு ஒரு விலாசத்தையே உருவாக்கிக் கொடுத்தார்...’’

 “கமலால் கிடைத்ததுதான் கோலிவுட்டும் பாலிவுட்டும்!”

‘`உங்க கரியர்லேயே மிகப்பெரிய பிரேக்கைக் கொடுத்த படம் ‘பர்ஃபி.’ அந்தப் படம் பற்றிச் சொல்லுங்க..?’’

``ஒரு நல்ல படத்துக்காகக் கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா எந்தப் படத்துலேயும் கமிட்டாகாமல், விளம்பரப் படங்கள் மட்டும் பண்ணிட்டிருந்தேன். அப்போ ஷில்பா ஷெட்டி மூலமா எனக்குக் கிடைச்ச படம்தான், ‘பர்ஃபி.’ இந்தப் படத்தின் இயக்குநர் அனுராக் பாசு, யாரையுமே பாராட்ட மாட்டார். `பர்ஃபி’ படத்துக்காக முதல் நாள் ஷூட்டில், முதல் ஷாட்டை எடுத்து முடிச்சதும் பிரேக்ல, ‘I am impressed’னு சொன்னார். அந்தப் படத்தின் ஃப்ரேம்ஸைப் பார்த்துட்டு, நான் மதிக்கும், எனக்கு முன்னோடிகளான சக ஒளிப்பதிவாளர்கள் எல்லோருமே என்னைப் பாராட்டியதும் மறக்க முடியாதது. அனுராக் பாசு சார் அந்த அளவுக்கு எனக்கு சுதந்திரம் கொடுத்ததனாலதான், என்னால இப்படி வொர்க் பண்ண முடிஞ்சது.’’

அமிதாப் பச்சன், ரவிவர்மன்
அமிதாப் பச்சன், ரவிவர்மன்

‘`ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரான அனுபவம் எப்படி இருந்தது?’’

``நான் பெரிய சுயநலவாதி. என்னோட இந்த குணம் குவாலிட்டிக்காக டைரக்டர்கிட்ட அதிகமா சண்டை போட வைக்கும். ஆனால், இந்த குணம் நான் இயக்குநராகும் போது எனக்குக் கைகொடுக்கலை. இயக்குநர் எப்போதும் பொதுநலவாதியாக இருக்கணும். அது நான் இயக்கிய `மாஸ்கோவின் காவிரி’ படத்தில் மிஸ்ஸானதால், அது தோல்விப் படமா அமைஞ்சிடுச்சு. அந்தப் படத்தின் மூலமா நான் கத்துக்கிட்டது அதிகம். என் தவறுகளை சரிசெஞ்சு சீக்கிரமாவே நான் மீண்டும் படம் இயக்குவேன். அதுக்கான வேலைகளையும் ஆரம்பிச்சிருக்கேன்.’’

‘`உங்க கரியர்ல முக்கியமான பட அனுபவங்கள் சொல்லுங்க...’’

``பர்ஃபி படம் மூலமாதான் சஞ்சய் லீலா பன்சாலியோட `ராம்லீலா’, மணிரத்னத்தின் `காற்று வெளியிடை’ன்னு படங்கள் கிடைச்சது. ராம்லீலா வொர்க் பண்ணும்போது, அந்தப் படம் முழுக்கவே பெயின்டிங் மாதிரி இருக்கணும்னு முயற்சி பண்ணி ஃப்ரேம்ஸ் வெச்சேன். முதல் நாள் ஷூட் முடிஞ்சதுமே சஞ்சய் லீலா பன்சாலி என்கிட்ட, `இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும்னு தெரியலை. நான் முதல் நாளோட அவுட் புட்டைப் பார்த்துட்டுதான் முடிவு பண்ணுவேன்’னு சொல்லிட்டார். நானும் அன்னைக்கு நைட்டே எல்லாத்தையும் ரெடி பண்ணி, கலர் கரெக்‌ஷன் பண்ணி, `அவுட் புட் இப்படித்தான் வரும்’னு அவரோட ஆபீஸ்ல கொடுத்துட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிட்டேன். அதைப் பார்த்து ஸ்பாட்டுக்கு வந்த சஞ்சய், `என்னைக் கட்டிப்பிடிச்சு, நான் ஒரு ஓவியரோடு பயணிக்கிறேன்’னு சொன்னார். இம்தியாஸ் அலி டோட்டலா வேற மாதிரியான இயக்குநர். அவருக்கு ஸ்ட்ரீட் போட்டோகிராபி மாதிரி விஷூவல்ஸ் இருக்கணும்னு நினைப்பார். ராஜ்குமார் ஹிரானியோட தனித்தன்மை எனக்கு ரொம்பவே பிடிக்கும். `சஞ்சு’ படம் ஷூட் பண்ணும்போதே சில இடங்களில் என்னை அழ வெச்சுட்டார்.

பிரியதர்ஷன் சார் படங்களில் லொகேஷன் எல்லாமே ரியலா பார்க்கிறதுக்கு சுமாரா இருக்கும். அதையே கேமரா செட் பண்ணி, லைட் செட் பண்ணிப் பார்த்தால், அவ்வளவு அழகா இருக்கும். ஷங்கர் சாரோடு ஒரு நண்பனாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. கெளதம் மேனனோடு நான் வேலை பார்த்ததுதான், என் வயதுடைய இயக்குநரோடு பணியாற்றிய முதல் முறை. கே.எஸ்.ரவிக்குமார் சார் ஒரு மிலிட்டரி கேப்டன் மாதிரி. தனக்கு என்ன தேவையோ அதைச் சரியா வாங்கிப்பார். மணிரத்னம் சாரோடு வேலை பார்க்க வேண்டும்கிறது என்னோட நீண்ட நாள் ஆசை. அது `காற்று வெளியிடை’ படம் மூலமா அமைஞ்சது. இப்போ `பொன்னியின் செல்வன்’ படத்திலேயும் சேர்ந்து வேலை பார்க்கிறோம். ‘பொன்னியின் செல்வன்’ நான் படித்து வியந்த காவியம். நான் தஞ்சாவூர்க்காரன்கிறதால ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மேல தனி அக்கறையும் உண்டு. தமிழ் சினிமாவின் கனவுப் படத்தில் நான் இருப்பதற்கு ரொம்பவே சந்தோஷப்பட்டேன். படம் சூப்பரா வந்துட்டிருக்கு. இப்போ கொரோனாவால ஷூட்டிங் நிறுத்தி வச்சிருக்காங்க. டெக்னாலஜில உலகம் போயிட்டிருக்கிறதைப் பார்த்து, `செவ்வாய் கிரகத்திலேயே இடம் வாங்கி வீடு கட்டப்போறாங்க’ன்னு சொன்னாங்க. ஆனால், அந்த டெக்னாலஜியெல்லாம் ஒண்ணுமே கிடையாதுடான்னு ஒரு வைரஸ் நமக்கு வாழ்க்கையைப் புரியவெச்சிடுச்சு.’’