சினிமா
தொடர்கள்
Published:Updated:

“வாசிப்பு நல்ல சினிமாக்களை உருவாக்கும்!”

எஸ்.ஆர்.கதிர்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஆர்.கதிர்

விகடன் விருது விழால நான் சொன்னது 100% உண்மை. அவர்ட்ட அசிஸ்டென்ட்டா வாய்ப்பு கேட்டுப் போனப்ப, அவர்தான் என்னை ராம்ஜி சார்ட்ட சேர்த்துவிட்டாரு.

எஸ்.ஆர்.கதிர்... தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். ‘எங்கள் பாரத்தைத் தன் தோளில் பகிர்ந்துகொள்ளும் ஒளிப்பதிவாளர்' என இயக்குநர்களால் கொண்டாடப்படுபவர். அவரிடம் பேட்டி என்றதும் ஒரு பூனைக்குட்டியின் இயல்புகொண்ட கூச்சத்தோடு ஒப்புக் கொண்டார்.

‘‘ ‘ஜெய்பீம்’ படம் தந்த சுவாரஸ்ய அனுபவங்களைச் சொல்லுங்களேன்?”

‘‘ ‘ஜெய்பீம்’ ஒரு மிகச்சிறந்த அனுபவத்தைத் தந்த படம். கதையாகவும் சரி, ஷூட்டிங் அனுபவமாகவும் சரி, நீண்ட நாள்களுக்கு அப்புறம் மனசுக்கு நெருக்கமா வேலை பார்த்த படம். அதுல நான் நெறையா கத்துக்கிட்டேன்னுதான் சொல்லணும். நாம கதைகளிலும் செய்திகளிலும் புத்தகங்களிலும் படிச்சு ஓரளவு மட்டுமே தெரிஞ்சுக்கிட்ட பழங்குடியின மக்களோடு சேர்ந்து ஒண்ணா வேலை பார்த்த அனுபவத்தைச் சுருக்கமா சொல்றது ரொம்பக் கஷ்டம். ஆசைகளை அதிகம் வெச்சுக்காம, தங்களோட எளிமையான வாழ்க்கையைக் கொண்டாடுற குணம் உள்ளவங்களா, பல்வேறு விஷயங்களில் ஆற்றல் நிறைஞ்சவங்களா ஒவ்வொரு நொடியும் நம்மளை ஆச்சர்யத்துக்கு ஆளாக்கிட்டே இருந்தாங்க. பொதுவா ஒரு படத்துல இந்தமாதிரி ‘கலெக்ட்டிவ் எனர்ஜி' கிடைக்கிறது அபூர்வம் சார்.’’

“வாசிப்பு நல்ல சினிமாக்களை உருவாக்கும்!”

‘‘2016 விகடன் சினிமா விருதுகள் மேடையில் உங்கள் மானசீக குரு பி.சி.ஸ்ரீராம் பற்றி ‘அவரது ஒரு வார்த்தை உங்கள் வாழ்க்கை’ என்றீர்கள். அவருடனான உங்கள் அனுபவத்தைப் பகிர முடியுமா?’’

‘‘விகடன் விருது விழால நான் சொன்னது 100% உண்மை. அவர்ட்ட அசிஸ்டென்ட்டா வாய்ப்பு கேட்டுப் போனப்ப, அவர்தான் என்னை ராம்ஜி சார்ட்ட சேர்த்துவிட்டாரு. அந்த விழாவுல அவர் கையால விருது வாங்கும்போது எனக்குள்ள அவ்ளோ நடுக்கம், பதற்றம், பயம்… எல்லாம். ரெண்டு நாள் கழிச்சு சாருக்கு போன் பண்ணினேன். ‘என்ன கதிர்’னு கேட்டாரு… நான், ‘சார், உங்களைச் சந்திக்கணும் சார்’னேன்… உடனே அவரோட ஆபீஸுக்கு வரச்சொன்னார். என்ன விஷயம்னு கேட்டார். பொதுவா ஒருத்தரை நமக்கு ரொம்பப் பிடிச்சுதுன்னா அவங்களோடு எந்த பயமும் பதற்றமும் இல்லாம ரொம்ப கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணுவோம் இல்ல? ஆனா அவரைப் பார்த்தாலே எனக்கு உள்ள உதறுதுன்னு உள்ளதை உள்ளபடி சொன்னேன். ‘எனக்கு அந்த பயம் விட்டுப்போகணும்னு ஆசையா இருக்கு சார்’னு பயத்தோடதான் சொன்னேன். 2 மணி நேரம் எனக்காக ஒதுக்கி என்னோட நிறைய பேசினார். அவர் பண்ணின படங்கள், அனுபவங்கள், பார்வைகள்… அப்புறம் என்னோட படங்களில் அவருக்குப் பிடிச்சது… அதைப்பத்தின விமர்சனங்கள்… சமூகத்தைப் பத்தின அவரோட அக்கறை… இளைய தலைமுறையோட படங்கள்னு பேசிப் பேசி எனக்குள்ள இருந்த எல்லாத் தயக்கங்களையும் உடைச்சு, நார்மல் ஆக்கி, `எப்ப உனக்குத் தோணினாலும் எங்கிட்ட பேசு'ன்ற உரிமையும் கொடுத்து என்னை அன்பால திக்குமுக்காட வச்சு அனுப்பி வச்சாரு… அவர் ஒரு சகாப்தம்!’’

“வாசிப்பு நல்ல சினிமாக்களை உருவாக்கும்!”

‘‘கௌதம் மேனனின் பல படங்களில் ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் உங்கள் பெயர் எப்போதும் இருக்கிறதே... அது எப்படி நிகழ்கிறது?’’

‘‘நான் வொர்க் பண்ணின ‘ராஜதந்திரம்’ படத்தோட தயாரிப்பாளர் செந்தில் வீராசாமி, கெளதம் சார்ட்ட எக்ஸிகியூட்டிவ் புரொடியூசரா வொர்க் பண்ணினவரு. ஒருநாள் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தோட சாங்ஸ் ஷூட் பண்ணணும், கெளதம் சார் உன்ன வரமுடியுமான்னு கேக்கறாரு’ன்னு சொன்னார். எனக்கு பயங்கர சர்ப்ரைஸ்… அவரோட பெரிய ரசிகன் நான். ஆர்வத்தோடு போய் வொர்க் பண்ணினேன். அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவரோட படங்களுக்கு வேலை செய்யற கேமராமேன்களோட டேட்ஸ்ல எப்ப சிக்கல் வந்தாலும், மொத ஆளா என்னைத்தான் கூப்பிடுவாரு. அப்படி அமைஞ்சதுதான் ‘என்னை அறிந்தால்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ எல்லாம். அதுக்கு அப்புறம் அவரோட ‘குயின்’ வெப் சீரிஸ்ல வொர்க் பண்ணினேன். அதைத் தொடர்ந்து ‘ஜோஷ்வா’ படம் பண்ணினோம்.’’

“வாசிப்பு நல்ல சினிமாக்களை உருவாக்கும்!”

‘‘அரசியல் விஷயங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகிறீர்கள். தீவிர வாசிப்பும் உங்களிடம் இருப்பதை உணர முடிகிறது. ஒரு ஒளிப்பதிவாளராக சிறப்பாக வேலை செய்ய இலக்கியம் உங்களுக்கு எப்படிப் பங்களிப்பு செய்கிறது?’’

‘‘அரசியல் விஷயங்களில் நான் காட்டுற ஆர்வம், ‘நல்லது நடந்தாலும் தப்பு நடந்தாலும் அதுல நம்ம நிலைப்பாடு எது'ன்ற பார்வை அளவுதான். ஏன்னா இங்கே நடுநிலைன்னு ஒண்ணு கிடையாதுன்றதுதான் உண்மை. நிறைய வாசிக்கிற பழக்கம் இல்லைங்க... ஆனா நிறைய படிச்சவங்களோடு பழகுற வாய்ப்பு அமைஞ்சதனால, அவங்க தேர்ந்தெடுத்துச் சொல்ற புத்தகங்களை வாசிக்கிறேன். பொதுவா நான் விரும்பிப் படிக்கிறது கதைகள்தான். அதை விட்டா வரலாறு சம்பந்தமா படிக்கிறேன். ஒரு படத்துல வேலை செய்யும்போது ரெஃபரென்ஸுக்கு அந்தக் கதையை ஒட்டின சாயல் இருக்கிற படங்கள் பார்க்கிறதைவிட, அந்தக் கதைக்களத்தை ஒட்டின புத்தகங்கள் படிக்கிறது எனக்கு ரொம்ப வசதியா இருக்கு. புத்தகங்கள் படிக்கும்போது விரியும் நம்ம கற்பனைக் காட்சிகள் ஒரிஜினலா நம்ம மைண்ட்ல் இருந்து உருவாகுது. ஆனா, படங்கள் பார்த்தா ஒண்ணு அந்தச் சாயல் என்னுடைய வொர்க்லயும் வந்துடற மாதிரி ஃபீல் பண்றேன்… இல்லைன்னா நமக்கே தெரியாம இன்னொருத்தரோட வொர்க்கை காப்பி அடிச்ச மாதிரியும் ஃபீல் பண்ணுவேன். பரந்துபட்ட இலக்கிய வளமும் வாழ்வியல் பதிவுகளும் கொண்ட நம்ம தமிழ்க் கதைகளும் களங்களும் இருக்கும்போது, அதைவிட வேற எங்க பெரிய ரெஃபரென்ஸ் கிடைச்சிடப் போகுது சொல்லுங்க? வாசிப்பு நல்ல சினிமாக்களை உருவாக்கும்!’’

“வாசிப்பு நல்ல சினிமாக்களை உருவாக்கும்!”

‘‘OTT-யின் வரவு ஒளிப்பதிவாளர்களுக்கு வரம் என்கிறார்களே, நிஜமா? இனிவரும் காலங்களில் தமிழ் சினிமா எப்படியிருக்கும்?’’

‘‘OTT என்பது கதைகள் சொல்லக்கிடைச்ச இன்னொரு அருமையான பிளாட்பாரம். கால வரையறைச் சிக்கல்கள் இல்லாததனால, கதைய சொல்லத் தேவையான நீளத்தை நாம சுதந்திரமா முடிவு செய்ய முடியுது. கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவையான டீட்டெயிலிங் நல்லா பண்ண முடியுது. எல்லாத்துக்கும் மேல அதனோட ப்ளே டைம் அண்ட் ப்ளே லிஸ்ட் கண்ட்ரோல் ஆடியன்ஸ் கைக்குக் போயிருச்சு. புடிச்சா பார்ப்பாங்க, இல்லைன்னா அடுத்ததை நோக்கி நகர்ந்திடுவாங்க… ஸோ, அவங்க கவனத்த ஈர்க்க நிறைய வேலை பார்த்தே ஆகணும். புது ஸ்டைல் லைட்டிங், புதுப் புது ஷாட்ஸ்னு ஒரு ஓப்பன் கிரவுண்ட்ல இறங்கி ஆடலாம். தமிழைப் பொறுத்தவரைக்கும் ஒருசில சீரிஸைத் தவிர, இன்னும் அதனோட வீரியத்தை சரியா பயன்படுத்திக்கிற கன்டென்ட் வரலைன்னுதான் சொல்லுவேன்… அதுக்குக் காரணமும் இருக்கு. பெரும்பாலான OTT நிறுவனங்களோட கன்டென்ட் தலைமை எல்லாம் இந்த மொழியும் கலாசாரமும் தெரியாத வேற மாநிலங்களில் இருந்து வர்றாங்க... அவங்கள்ட்ட நம்ம மண் சார்ந்த கதைகள் பத்தின புரிதல் கம்மியாத்தான் இருக்கும். ஸோ, ஒரு மர்டர் மிஸ்டிரியோ, இல்ல கான்ட்ரவர்ஷியல் கதைகளையோ மட்டும்தான் அவங்களால கமிஷன் பண்ண முடியுது. என்னை ஒளிப்பதிவு பண்ணச் சொல்லிக் கேட்டு வந்த நாலஞ்சு அருமையான கதைகள் செலக்ட் ஆகாமலே போயிருக்கு. அப்போ நான் புரிஞ்சுக்கிட்டதைச் சொல்றேன். OTT நிறுவனத்தோட நிர்வாகத் தலைமையா யார் வேணா இருக்கலாம், ஏன்னா அது முதலீடு மற்றும் மார்க்கெட்டிங் சார்ந்தது. ஆனா, கதைகளைத் தீர்மானிக்கிற பொசிஷன்ல இருக்கவங்களுக்கு இந்த மொழியும், இந்த மக்களின் வாழ்க்கையும் தெரிஞ்சிருக்கிறது அவசியம்.’’

“வாசிப்பு நல்ல சினிமாக்களை உருவாக்கும்!”

‘‘சமீபத்தில் உங்களை பாதித்த சம்பவம் பற்றி...’’

‘‘ஹிஜாப் பிரச்னை. ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி சொன்ன விஷயம் இப்ப ஞாபகம் வருது… ‘சுதந்திரம் என்பது நீ பிறந்த முதல் ஐந்து நிமிடங்களில், அம்மணமாக அழுதுகொண்டு, பெயரில்லாதவனாய், எந்தப் பாவமும் அறியாதவனாய், எந்த நோக்கமும் இல்லாதவனாய், மனித வன்மங்களை அறியாதவனாய் இருக்கும்போது உனக்குக் கிடைப்பது. அந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு உனக்குப் பெயர் சூட்டப்படும், உன் நாடு இன்னதென்று முடிவாகும், உன் மதமும் ஜாதியும் இன்னதென்று தீர்மானமாகும். அன்றிலிருந்து, உன் விருப்பத்தின்பால் நீ தேர்ந்தெடுக்காத ஒன்றாக இருந்தாலும், அதைக் காப்பாற்றுவதற்காக சாகும்வரை முட்டாள்தனமாக நீ சண்டையிட்டுக் கொண்டிருப்பாய்'னு சொல்றாரு. பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் நடக்கிற, முகத்துல அறையும் உண்மைதான இது? இப்படிக் கட்டமைக்கப்பட்ட சமூகத்துல முறையான கல்வி மட்டுமே அந்தக் குழந்தைக்கு வாழ்க்கையைப் பத்தின, உண்மையான காரணங்களைப் பத்தின தெளிவான புரிதலைக் கொடுக்க முடியும். ஆனா, இப்ப ஸ்கூல்ல படிக்கிற குழந்தைகள் மனசுல பிரிவினைய விதைக்கிற அளவுக்கு இங்கே அரசியல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மதங்கள், அதைச்சார்ந்த மூடநம்பிக்கைகளை விடுங்க. ஒருத்தங்க விருப்பத்தை மத்தவங்க மேல திணிக்கிறது, தனிமனித சுதந்திரத்தைக் குலைக்கிற விஷயம். அதுக்கு யாருக்குமே உரிமை கிடையாது.’’

‘‘PAN Indian movies வந்தபிறகு வடக்கு-தெற்கு சினிமா என விவாதங்கள் வந்துவிட்டன. அஜய் தேவ்கன் சொன்ன கருத்தும் சர்ச்சையானது. இந்தப் போக்கு ஆரோக்கியமா?’’

‘‘ ‘PAN INDIAN MOVIES’ன்ற கான்செப்ட்டே ஒரு வியாபார உத்திக்காகப் பயன்படுத்தப்படுறதாதான் நான் பார்க்கிறேன். முன்னெல்லாம் ஒரு மாநில மொழிப்படம் நல்லா இருந்தா மற்ற மொழிகளில் அதை ரைட்ஸ் வாங்கி ரீமேக் பண்ணுவாங்க. உலகமயமாக்கலுக்கு அப்புறமா எல்லாமே எல்லா இடத்திலும் கிடைக்கிற மாதிரி, இன்டர்நெட் வந்ததுக்கு அப்புறம் ஆடியன்ஸ் அந்தந்த மொழிப்படங்களை அந்தந்த மொழியிலேயே சப்டைட்டிலோடு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இதை நல்லா உள்வாங்கிக்கிட்ட ஹாலிவுட் பெரு நிறுவனங்கள் அவங்க படங்களை உலகம் முழுக்க அந்தந்த பிராந்திய மொழிக்கு டப் பண்ணி ரிலீஸ் பண்றாங்க. அதேதான் இப்ப இந்தியாவிலும் நடக்குது. பெரிய படங்கள் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழியில் டப் பண்ணிட்டு, ஒட்டு மொத்தமா ஒரு லார்ஜ் ஸ்கேல்ல விளம்பரம் பண்ணி அந்தப் படங்களை பிராண்டா மாத்தி ரிலீஸ் பண்றாங்க… அவ்ளோதான்! இதுக்கு இப்ப தான் ‘PAN INDIAN MOVIE’ன்னு பேர் எல்லாம் வச்சு விளம்பரம் பண்றாங்க, இதை வச்சு வடக்கு - தெற்குன்னு பிரிச்சுப் பார்க்கிறதுல எனக்கு சுத்தமா உடன்பாடு இல்ல. சமீபத்துல ‘கங்குபாய்’ படத்தோட கதையும் மேக்கிங்கும் நடிப்பும் என்னை வாயடைச்சுப்போக வச்சுது. எந்த மொழியா இருந்தா என்ன... அந்தக் கதை ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆச்சுன்னா ஹிட். அவ்ளோதான்! மொழிக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. அஜய் தேவ்கன் போட்ட ட்வீட்ல ‘இந்தி தேசிய மொழி’ன்னு சொல்லி அதனாலதான் மற்றவர்கள் இந்தில டப் பண்றாங்கன்னு சொன்னது அவரது புரிதல் தவறாக இருப்பதைக் காட்டுது. படம் நல்லா இருந்தா எந்த மொழில இருந்து வந்தாலும் ஆடியன்ஸ் கொண்டாடுவாங்க. ஆடியன்ஸ் தெளிவா இருக்காங்க சார்… நாம நம்ம வேலையைச் சரியா செஞ்சா போதும்!’’

“வாசிப்பு நல்ல சினிமாக்களை உருவாக்கும்!”

‘‘தற்போது பணியாற்றும் படங்கள்...அடுத்து செய்ய இருக்கும் புராஜெக்ட்டுகள் பற்றி...’’

‘‘அடுத்து வெங்கட்பிரபு டைரக்‌ஷன்ல தெலுங்குப் படம் ஒண்ணு பண்றேன். ஜூன்ல ஷூட்டிங். அதுக்கு அடுத்து த.செ. ஞானவேலோட அடுத்த படம்… அதுபோக இன்னொரு படம் பேசிட்டு இருக்கேன்!’’