அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 1

vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
vadivelu

வெள்ளாட்டுக் கறியை ஆத்தா பஞ்சு மாதிரி வறுத்து வெச்சு, பதினஞ்சு இட்லியைக் கொட்டி, நடுவுல குழிவெட்டிக் கோழிக் குழம்பை ஊத்தும். அட.... அட... அடடா!

ணக்கமுங்க!

ஊர்ல கல்யாணம்...... மார்ல சந்தனம்பாங்க. அப்படி ஒரு ஆளுதானப்பு நானு!

பட்டிக்காட்டுப் பய. நாலு காசு பொழங்குற குடும்பம் இல்ல. சொத்து சொகம்னு எதுவும் கிடையாது. பட்டணத்து நாகரிகமும் பழக்கமில்ல. தஸ்ஸு புஸ்ஸுனு இங்கிலீஷ் பேசத் தெரியாது. அதுனால என்ன... அனுபவம் இருக்கே.... அதும் நானெல்லாம் மதுரக்காரன்ல!

இன்னிக்கு மெட்ராஸ்ல காமெடி நடிகனா வண்டியோடுது. ஆனா, இப்பவும் நமக்கு அட்ரஸ் மதுரதாண்ணே. வாராவாரம் நம்ம பொழப்புதலப்பு பத்திப் பேசுவோம். சன்ன கூத்தா நடந்திருக்கு நம்ம வாழ்க்கையில!

vadivelu
vadivelu

மாரியம்மன் கோயில்ல மஞ்சத் தண்ணி ஊத்தினதும், ஆடு ஒரு சிலுப்பு சிலுப்பும் பாருங்க, தீபாவளின்னா அப்படி மனசு சிலுத்துக்கும்.

நமக்கு எல்லாமே நம்ம கூட்டாளிக தான்! அவிங்களோட வெள்ளந்தியா சுத்திக்கிட்டுத் திரியற துல ஒரு சுகம். ஆகா... அது ஒரு வாழ்க்கை!

தீபாவளின்னா ஒரு மாசத்துக்கு முன்னாலயே மனுஷனுக்கு அருளேற ஆரம்பிச்சிரும். புதுத்துணி, வேட்டு, வெளாட்டு, கறிச்சோறு, சினிமானு ராத்திரி எல்லாம் கனவு வர ஆரம்பிச்சிரும்ல.

நடராஜப் பிள்ளை..... எங்கப்பா. எங்களுக்காகவே வாழ்ந்த மனுஷன். சுத்துப்பட்டு ஏரியாவுல, கண்ணாடி வெட்டுறதுல கில்லாடியாம் ஆளு. அவரு வேலை திறமையைப் பார்த்துப்புட்டு, கொடைக்கானல்ல வெள்ளைக்காரன் பங்களாவுக்கே வேலைக்குக் கூப்பிட்டான்னா பாத்துக்கங்க. பிரீமியர் சக்ரவர்த்தி வேட்டி ஒண்ணு அப்போ பாப்புலர். அது வேணும்னு மூஞ்சியைத் தூக்கி வெச்சிக்கிட்டுத் திரிவேன். ' கொள்ளத் துட்டு சொல்வானேடானு மறுகிப்புட்டு, ‘ மகனுக்குப் பிடிச்சது'னு ராத்திரி எங்கேயோ புடிச்சுக் கொண்டாந்து, ஓரத்துல மஞ்ச தடவி வெச்ச மனுஷன மறக்க முடியுமா?

தீபாவளிக்கு மொதநாளு ராத்திரி டவுனு பக்கம் கௌம்புவோம். கையில மஞ்சப்பை இருக்குமே தவிர, பையில சல்லிக்காசு இருக்காது. ரோட்டுல பனியன், ஜட்டி, செருப்புனு ஆரம்பிச்சு அம்புட்டு அயிட்டமும் மானாவாரியா குமிச்சுப்போட்டு விப்பாங்க. திருவிழாக் கூட்டம் திரியும். நாம ஒரு நேக்கா, அப்படியே போற போக்குல ரெண்டு செருப்பு, நாலு கர்ச்சீப்னு கையில் சிக்குனதையெல்லாம் லவட்டிருவோம். வேட்டை முடிஞ்சதும், வைகையாத்துப் பக்கம் ஓரமா ஒக்காந்து வசூல கரெக்டாப் பங்குபோட்டுப் பிரிப்போம். வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை கூடிப்பேசின மாதிரி, மக்காநாளு என்ன பண்ணப்போறோம்னு அம்புட்டையும் பேசி முடிவு பண்ணிப்புட்டுத்தேன் கலைவோம்.

வீட்ல உரல்ல மறுநாளு இட்லிக்கு மாவரைக்க ஆரம்பிச்சுட்டா, அப்படியே குளுந்து போகும் மனசு. . பொழுது விடியுதோ இல்லையோ... சட்டி எண்ணெயைத் தலையில கவுத்து, கைப்பிடி சீயக்காயை அள்ளிக் கொறகொறனு தேய்ச்சிக் குளிச்சிப்புட்டு, புதுத் துணியை எடுத்து ஓதறிப் போட்டா திருநாளு தொடங்கிரும். வெள்ளாட்டுக் கறியை ஆத்தா பஞ்சு மாதிரி வறுத்து வெச்சு, பதினஞ்சு இட்லியைக் கொட்டி, நடுவுல குழிவெட்டிக் கோழிக் குழம்பை ஊத்தும். அட.... அட... அடடா!

உக்காந்து ஒரு வெட்டு வெட்டுனோம்னா, காங்கிரீட் செட் போட்ட மாதிரி கரெக்டா இருக்கும். முடிச்சு மொழங்கை வரைக்கும் நக்கி எந்திரிப்போம். ஆத்தா அப்பன் கையில கால்ல விழுந்து முப்பது நாப்பது ரூபாயைப் புடுங்கிக்கிட்டு பொறப்பட்ருவோம்ல.

கூட்டாளிக வந்திருவானுக. ஒரே அலப்பறைதேன். ஆளுக்கொரு சைக்கிளை எடுத்தோம்னா, மதுர கிழியும். தங்கம், சென்ட்ரலு, ரீகலு, சிந்தாமணி, நியூ சினிமானு ஊர்வலம் கௌம்பிருவோம். எம்.ஜி.ஆர். படம் பாக்கலேன்னா அது என்னா தீபாவளி?

அன்னிக்கு டிக்கெட் வாங்கறது கஷ்டம்னு சொல்வாங்க. முத நாளு ராத்திரியே அவனவன் க்யூவுல நிப்பான். நாமதான் தரையில நடக்கறதில்லியே.. அவிங்க தலை மேல நடந்து டிக்கெட் வாங்கற சாதியாச்சே. எங்க கூட்டத்துல ஒரு டஜன் பேரு இருப்பாய்ங்க. முருகேசன் தான் தலைவன். காசடிச்சிட்டு வர்றதுல அவன் ஒரு கப்பர்சிங்கு. தீபாவளின்னா நிச்சயமா ரெண்டு படம் பாத்தாகணும். இதுக்கிடையில் வெடி வெடிக்கறதே தனித் திருவிழாதேன். ' வின்னர் ' படம் கைப்புள்ள கணக்கா நெசத்துலயும் நாம சவடால் பார்ட்டிதான! அதும் ஏதாவது பொட்டப்புள்ளைக கண்ணுல பட்டுட்டா, நாம மிலிட்டரி ரேஞ்சுக்கு பிக்கப் ஆயிருவோம். ' நொட்டாங் கையிலயே வெடிப்பம்ல! னு உதாரா வேட்டு விடுவோம். அது சனியன், கொளுத்தித் தூக்கிப் போடற நேரம் பாத்து, எக்குத்தப்பா வெடிச்சுத் தொலைக்கும். வலிக்குந்தேன்.... எரியுந்தேன்... அழுகையே வருந்தேன். ஆனாலும் அடுத்த தெரு போற வரைக்கும் ஒரு நேக்குல சமாளிச்சு நடக்கணும். இல்லேன்னா மானம் போயிரும்ல. உள்ளங்கை யில ஊதா மை ஊத்தாம ஒரு தீபாவளியும் முடிஞ்ச தில்லை. வீரதீர சாகசங் கள்ல ஈடுபடறப்போ வி ழு ப் பு ண் சகஜம்தானப்பு!

vadivelu
vadivelu

கழுதை வால்ல சரம் கட்டறது, கெழவன் வர்றப்போ வெடி போட்டு தெறிக்க விடறதுனு அங்கங்க நாலு பேரைப் பயந்து அலறி ஓடவிட்டு, அவன் திட்டிக்கிட்டே போவான்ல..... மனுஷப்பயலுக்கு அதுல சந்தோஷம்!

தீபாவளிக்கு நாடகமும் போடுவோம். வேட்டியை விரிச்சுக் கட்டி, அரிக்கேன் விளக்கைப் பின்னால வெச்சு, டிராமா நடக்கும். ' அடேய் வடிவேலு, ஆனாலும் ரொம்ப ஆட்டம்டா! ' னு கெழவி கத்தும். ஆத்தா ஒண்ணும் சொல்லாது. அப்பாவோ அன்னிக்கும் கடையில் உக்காந்து கண்ணாடி வெட்டுவார்!

ஒரு தீபாவளியை மறக்க மாட்டேன். வேலைக்குப் போன அப்பா, நெஞ்சு வலிக்குதுனு வீட்ல வந்து படுத்தார். ஆஸ்பத்திரிக்கு அள்ளிட்டு ஓடுனோம். டாக்டர்கள் பாத்துட்டு, ' காப்பாத்திரலாம்ப்பா. ஒரு லட்ச ரூபா ரெடி பண்ணிரு'னு சொன்னாங்க. லட்சத்துக்கு எத்தனை சைபர்னுகூடத் தெரியாதே!

கண்ணு முன்னால அப்பா செத்துப்போனாருங்க. குடும்பமே கொலைஞ்சு போச்சு. அதோட முடிஞ்சுது அத்தனை ஆட்டமும். கூட்டாளி களோடு சேர்ந்து திரிய முடியலை. தம்பி, தங்கச்சிங்க என் மூஞ்சியைப் பாத்து நிக்குது. நாலு பக்கமும் தவிச்சு நின்னு பாத்தேன். அதுக்கப்புறம் ரெண்டு மூணு தீபாவளிக்கு வீட்டுல உரல் சத்தம்கூட இல்லை. அப்புறந்தேன் மெட்ராஸுக்கு நான் வண்டியேறின தெல்லாம். இப்ப காசு கையில இருக்கு. அப்பா இல்லை!

அதுக்கப்புறம் குடும்பத்தை எந்தக் குறையுமில்லாமப் பாத்துக்கறேன். தீபாவளின்னா பொட்டியைத் தூக்கிட்டு, மதுரைக்குக் கௌம்பிருவோம். தம்பி, தங்கச்சி, ஆத்தானு அத்தனை பேரும் கூடிக் கும்மியடிச்சாதானப்பு தீபாவளி தீபாவளி மாதிரியிருக்கும். அப்பு வர்ட்டா? வர்ற வாரம் வெச்சிக்குவோம் மத்த கதையை!

- வருவேன்

படங்கள் - என்.விவேக்

(07.11.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)