அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 10

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

வி.ஐ.பி - யா இருக்கறதுல சில வில்லங்கமும் இருக்குண்ணே.

யாத்தா... ஒம் புள்ள சினிமால செயிச்சுட்டுத்தேன் மதுர மண்ண மிதிப்பாம்! ' னு சத்தியம் பண்ணிப்புட்டு, வண்டியேறின பய நா!

'போயிட்டு வா ராசா'னு சுருக்குப் பையிலேர்ந்து ஆத்தா அள்ளிப் பூசிவிட்டு, பொட்டலம் கட்டிக் குடுத்த துண்ணூற, ஏழெட்டு வருஷத்துக்கு நெத்தியில வெச்சிட்டுத் திரிஞ்சவய்ங்கண்ணே நாங்க!

இம்புட்டுத் தும்பப்பட்டதும் ஒரு நா இல்லேனா ஒரு நா பெரியாளா ஆவணும்னுதான. ' ந்தா, வடிவேலு வர்றாண்டா! ' னு நாலு பேரு பாக்கணும்னுதான தின்னாமக் கொள்ளாமத் திரிஞ்சோம். எத்தன எடங்கள்ல கழுத்தச் சேத்தடிச்சிப் பத்திவிட்ருக்காய்ங்க. ' மூஞ்சையும் மொகரக்கட்டயையும் பாரு. இதெல்லாம் நடிக்க வந்துருச்சு'னு கேவலமாப் பேசுனாய்ங்க. அம்புட்டையுந் தாண்டி, விழுந்து எந்திரிச்சு, உருண்டு பொரண்டு மேல வந்துட்டோம்ண்ணே!

இன்னிக்கு நெனச்சதெல்லாம் நடந்து போச்சேய்யா. நாலு பேரு பாக்கணும்ங்கறது போயி இப்ப எங்கியும் ஒரு நிமிஷம் சொதந்திரமா திரிய முடியல. எங்க போனாலும் சனங்க சுத்திக்குது. ' அய்... வடிவேலு! ' னு புடிச்சி இழுக்கறாக. பிள்ளைங்களெல்லாம், எங் கையக் காலத் தொத்தித் தோள்ல ஏறுதுக. அட, இதுவும் ஒரு சொகந்தாண்ணே!

Vadivelu
Vadivelu

ஆனா, வி.ஐ.பி - யா இருக்கறதுல சில வில்லங்கமும் இருக்குண்ணே. மொதல்ல சொந்தபந்தம், சாதி சனம்னு கூடிக் கெடக்க நேரமில்ல. பாதி நாள் ஷூட்டிங், பாதி நாள் டப்பிங்னு அரிபரியில ஓடிட்டேயிருப்போம். அந்த நேரத்துல ஊர்லயிருந்து ஒர்த்தரு வாழத்தாரோட வந்து நிப்பாரு. வந்தவாக்குல வெத்தலை பாக்கோட ஒரு பத்திரிகைய வெச்சி, ' நடுவுள்ளவளுக்கு காதுகுத்து வெச்சிருக்கேன். கட்டாயம் கறிச்சோறு திங்க வந்துப்புடணுமப்பு'ம்பாரு. இருக்கற சோலியில் அவர் பேச்சக் கேக்காம ஓடிட்டோம்னா அம்புட்டு தேன்..... அவிங்க அழுத்தக்காரய்ங்கண்ணே. இந்த ஊரு, காரு, சினிமாவையெல்லாம் மீசைய முறுக்கிட்டே கால்ல எத்தி விட்ரு வாய்ங்க. அதுனால, முடிஞ்சவரைக்கும் சொந்த பந்தத்துக்கு ஒண்ணுனா ' யாத்தா... போய் பாத்துட்டு வாத்தா'னு வீட்டுக்காரம்மாவ அனுப்பி வெச்சிருவேன். நமக்குத்தேன் நெனச்ச நேரத்துல எங்கயும் போய் வர நேரமில்லையேய்யா.

சரி நாலு பேர் நம்மள ரசிக்கிற வரைக்கும் இப்பிடித்தேன் வண்டியோடிட்டிருக்கும்னு மனசத் தேத்திக்க வேண்டியதுதேன்!

நம்ம ரசிகங்க பாசக்கார ஆளுங்கண்ணே! அன்னிக்கு ரவைக்கு நல்ல ஒறக்கம். திடீர்னு போன் அலறுது. எடுத்து ' அலோ'ன்னா, எதுத்தாப்ல ஒருத்தரு ' நா உங்க ரசிகரு, எனக்காக இந்த ' வின்னர் ' படத்துல வர்ற ' வேணாம்... விட்ரு... அழுதுருவேன் ' டயலாக்கை ஒரு தடவ சொல்லுங்க, கேப்போம்'ங்கறார். மணியப் பாத்தா, ராத்திரி ரெண்டு. நான் நெசமாவே ' வேணாம்... விட்ரு... அழுதுரு வேன்'னு சொல்றேன். கிக்கிக்கிக்கிக்கீ 'னு சிரிச்சிட்டு போனை வைக்கிறாரு. அப்பிடி ஒரு பாசம்ணே!

போன வருஷம் பொள்ளாச்சி பக்கத்துல ஒரு கிராமத்துல ஷூட்டிங்கு. வேல இல்லேனா, அப்பிடியே அங்கனக்குள்ள காடு கர கம்மானு சுத்தித் திரியறதுல ஒரு சொகம். ஒரு நா அந்தி சாஞ்சு அப்பிடியே வயக்காட்டுப் பக்கமா சுத்தப் போனேன்ல..... ரொம்பத் தூரம் போயிட்டேன். நல்லா இருட்டிக்கிச்சு. வழியில் கரும்புக் காட்டுக்குள்ள பூந்து நடந்தம்ல... திடீர்னு 'ஏ ஆர்றா அது? ' னு ஒரு சவுண்டு.

கையில தடிக் கம்பு, அரிக்கேன் வௌக்கோட ஒரு கெழவனாரு ' கயவாணிப்பய புள்ள'னு கத்திக்கிட்டே கிட்டக்க வந்து படீர்னு அமுக்கிப் புட்டாரு. ' யெய்யா... நானு வடிவேலு. நடிகன்யா'ன்றேன். பெருசு கேக்கவேயில்ல. ஆர ஏமாத்தப் பாக்குற'னு படக்குனு அருவாள உருவிட்டாரு. ஆத்தீ... ஈரக்கொல ஆடிருச்சு எனக்கு. பொசுக்குனு போட்டுத் தள்ளிட்டாருனா சாட்சிக்கு கூட ஆளில்லாம போயிச்சேந்துரு வோமேனு கண்ணக் கட்டிக்கிட்டு வந்துருச்சு.

'பெருசு... சொல்றதக் கேளும்யா'னு அம்புட்டுக் கத்தியும் அந்தக் கோவணச் சிங்கம் கேக்கல. அருவா மொனையிலயே கொண்டுபோயி பம்பு செட்டோரமா குத்த வெச்சு ஒக்கார வெச்சிட்டாரு.

அப்ப அந்தப் பக்கம் ஒரு லாரிச் சத்தம் கேட்டுச்சு. பெரிசு போட்ட கூப்பாடுல ஏழெட்டுப் பேரு எறங்கி ஓடிவந்தாங்க. வந்தவங்ககிட்ட பெருசு, ஒரு களவாணிப் பயலப் புடிச்சி ஒக்கார வெச்சிருக்கேன்னு சொல்றாரு. அத்தன பேரும் எங்க, எங்கனு வெறிகொண்டு ஓடி வர்றாய்ங்க. ' ந்தா கெடக்கான் பாரு'னு பெருசு என்னயைக் காட்ட, வௌக்கு வெளிச்சத்துல என்னப் பாத்தவங்க பதறிப் போயிட்டாங்க. ' ஏம்யா... இது நம்ம வடிவேலுல்ல..... சினிமா நடிகருப்பா. பாவி...... அவுத்து விடுய்யா'ன்னாங்க.

ஏஞ் சாமி மீனாச்சியே, லுங்கி கட்டி லாரியில வந்த மாதிரி இருந்துச்சு எனக்கு. அப்புறம் அந்தப் பெருசு, என் மூஞ்சத் தடவி ' அய்யா... தெரியாமப் போச்சேய்யா. நீ பொய் சொல்றேனு நெனைச்சேன்'ங்கறாரு. அப்புறந்தேன் அவருக்கு ' மாலக் கண்ணு'ங்கற சேதி தெரிய வந்துச்சு.

ஏரியாவுல அங்கங்க பம்பு செட்டக் கழட்டிட்டுப் போயிடறானுங்கனு ஊரே களவாணிப் பயலுகளப் பிடிக்கத் தேடித் திரிஞ்ச டைம்ல சிக்கியிருக்கேன் நானு. அத்தன பேருக்கும் பெரிய கும்புடாப் போட்டுத் திரும்பி வந்து சேந்தேன். அன்னிக்குத்தேன் நாமளும் ஏதோ கொஞ்சம் சாதிச்சிருக்கோம்னு தோணுச்சுண்ணே. எங்கியோ இருக்கற குக்கிராமத்துல ‘ நம்ம வடிவேலு'ங்கறாங்கள்ல, அதுக்குத்தான இம்புட்டுத் தும்பப்பட்டதும்!

Vadivelu
Vadivelu

காரு, வீடுனு அம்புட்டும் வாங்கியாச்சு. ஏதோ பேரு சொல்ற மாதிரி நடிச்சிக்கிருக்கேன். மதுரையிலேருந்து வத்தலும் தொத்தலுமா லாரியேறுன வேலுப்பய, ஏதோ ஓரளவு நெனச்சத நடத்திக் காட்டிப்புட்டாண்ணே. என்னிக்குமே கலைஞனுக்கு சனங்கதேஞ் சாமி.. அவிங்கள மறந்தா வந்ததெல்லாம் புட்டுக்கிட்டுப் போயே போயிரும்.

உழைப்பும் பொழப்பும் சொத்து சொகத்தக் கொண்டு வந்து சேத்துரும்ணே. ஆனா, அது மட்டுமே வாழ்க்கையில்லைண்ணே. இந்தா ஒரு நெல நடுக்கம் வந்தா, கடல் பொங்குதுங்கறாங்க. கை சொடுக்கிற நேரத்துல எம்புட்டுச் சனம் போய் சேந்துருச்சி. ஆத்தீ.... டி.வி - யில காட்டறதை எல்லாம் கண்கொண்டு பாக்க முடியலையே. ஆத்தாமையா வருதுண்ணே. ஒண்ணு மட்டும் நல்லா ஒறைக்குதுண்ணே. காசு பணத்தவிட, மேலு காலு சொகமா இருக்கிற நிம்மதிதேன் மனுசனுக்குப் பெருசு!

- வருவேன்

(09.01.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)