
சாமி வந்து எம் முன்னாடி நின்னாலும் இந்த வரந்தேன் கேப்பேன்!
சந்திரமுகி'யில ரஜினியண்ணனோட சேந்து செம காமெடி பண்ணியிருக் கேன். எம்புட்டுப் பெரிய ஆளு- இன்னிக்கும் அவரு நிமிந்தா நியூஸு, குனிஞ்சா ஸ்கூப்பு தானண்ணே! அவரு ஒரு படத்துக்குப் பூச போட்டாலே பட்டிதொட்டி காடுகம்மா எல்லாம் பத்திக்குதுல்ல. அம்புட்டுப் பெரிய ஆளு. ஆனா பழக்க வழக்கத்துல தங்கம்ணே!
ரஜினியண்ணே வாறதும் போறதும் சும்மா மின்னலு கெணக்கா இருக்கும். ' நாங்கள்லாம் கருஞ் சிறுத்தயப்பு'னு ' ஏய் ' படத்துல ஒரு டயலாக் பேசியிருப்பேன். அது அப்பிடியே அவருக்குப் பொருத்தம்! சினிமால சில்றக் காசு பாத்துட்டாலே, நெத்திக்கு மேல புருவத்த ஒட்டிக்கிட்டுத் திரியறவய்ங்களுக்கு நடுவுல ரொம்ப யதார்த்தமான ஆளுங்க. இப்ப, சந்திரமுகி'யில பி.வாசண்ணே, ரஜினியண்ணே எல்லாருமா ஒண்ணாமண்ணா கூடிப் பேசி படமெடுத்துக்கிருக்கோம்.
என்னப் பாத்தவாக்குல ரஜினிக்குச் சிரிப்பு ஆரம்பிச்சிரும். நாங்க சேந்து நடிக்கிற ஷாட்ல எஞ் சேட்டையப் பாத்துட்டு பாதியிலயே சிரிச்சிருவாரு. ஷாட்டு இல்லாதப்ப வடிவேலு எதாவது ஜோக் சொல்லு'னு கேட்டு மனசு விட்டுச் சிரிக்கிறாருண்ணே. ' இப்பிடிச் சந்தோஷமாச் சிரிச்சி ரொம்ப நாளாச்சு வடிவேலு ' ங்கறாரு. அது எங் கொடுப்பினண்ணே!

அரசியல் அது இதுனு எந்தக் கரச்சலும் இல்லாம காமெடி, ஆக்ஷன், திகில்னு பின்னிப் பிரிக்கப் போறாரு. ' சந்திரமுகி'யில எம் பேரு முருகேசன். நாசரும் நானும் அண்ணந் தம்பிங்க. பிரபு சாரோட ஃபிரெண்டா வர்ற ரஜினியண்ணே எங்க வீட்ல தங்குவாரு. அப்புறம் அவர அழைச்சுக் கிட்டு ஊரச் சுத்திக்காட்டறது என் வேல.
ஒரு ஸீன்ல அவரும் நானும் சினிமாவுக்குப் போவோம். நாஞ் சைக்கிளு ஓட்ட, பின் னாடி கேரியர்ல ரஜினி. ' என்னா படம் பாக்கப் போறோம்? ' னு கேப்பேன். ' பேய் படம்ப்பா! ' னு சொல்வாரு. ' என்னாது பேய்ப் படமா? நமக்கு அதெல்லாம் புடிக்காது. காதலு, சென்டிமெண்ட்டுனாச் சொல்லு. இல்லனா இப்பிடியே நான் திரும்பிர்றேன்'ம் பேன். பின்னாடி பதிலே வராது. ' ஏய்.... என்னாப்பா. நான் பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு உக்காந்திருந்தா என்னா அர்த்தம்? ' னு நாங் கேட்டுக்கிருக்கும்போது, எதுத்தாப்ல ஒரு காரு வரும். அதுலேயிருந்து எட்டிப் பாப்பாரு ரஜினி. ' ஹாய் முருகேசா! எங்க போறே? ' ம்பாருல்ல... பின்னாடிதான இருந்தாருனு திரும்பிப் பாத்தா, சீட்டு காலியா இருக்கும். கொல நடுங்கிரும் எனக்கு. ' யப்பே'னு நா அலறும்போதே சைக்கிளும் காணாமப் போயிரும். வேட்டி அவுற, விழுந்து தெறிச்சி ஓடுவேன் நானு. இப்பிடிப் படம் முழுக்க ரஜினியண்ண னோட சேந்து காமெடி கிழிச்சிருக்கோம்.
' சச்சின் ' படத்துல நானு யூத்து. ஆமா, விஜய்யும் நானும் காலேஜ் ஸ்டூடண்டு. எல்லா காலேஜ்லயும் ஒரு சித்தப்பு இருப்பான்ல. அந்த மாதிரி பல ஃபெயில் அட்டைகள வாங்கி, ஒம்பது வருஷமா அதே காலேஜ்லயே படிக்கிற பயபுள்ள. ஏம் பேரு அய்யாசாமி. ஓபனிங் ஸீனே கலக்கலா இருக்கும். குட்டிச் சுவத்துல நான் ஒக்காந்துக்கிருப்பேன். திடீர்னு எங்கிருந்தோ வந்து பக்கத்துல தேங்கியிருக்கற மழத் தண்ணியில விஜய் குதிச்சதும், பொளிச்சுனு எம் மூஞ்சியில சேறு அடிச்சிரும். கொந்தளிச்சிருவேன். ' என்ன யாருனு நெனச்சே? ' னு சேத்த வழிச்சிக்கிட்டே நான் கேட்க, அதுக்கு விஜய் ' யூ வாட்ச்மேன்? ' ம்பாரு. ' வாட்ச்மேனா... யாரப் பாத்து? ' னு கொதிப்பேன். ' அப்ப தோட்டக்காரன்.... இல்லைனா சமையல்காரன்? ' னு விஜய் மாத்தி மாத்திப் பேசுவாரு. ' நிறுத்து. நான் ஸ்டூடண்ட்ரா! ' னு எகிறுவேன். அவரு அசால்ட்டா ' ஆமாமா சொன்னாங்க. நீதான் ஒம்பது வருஷமா ஃபெயிலாகி கிளாஸ்ல உக்காந்திருக்கியாம்ல'னு சிரிப்பாரு. ' ஃபெயிலானேன், ஃபெயிலானேங்கறீங்களே. ஏன் ஃபெயிலானேன். அத மொதல்ல கேளுனு சலம்புவேன். ' அப்படியா! சரி, ஏன் ஃபெயிலானே? ' னு கேட்டதும் விடுவேம் பாருங்கண்ணே. 'நாங்கள் லாம் உசுரக் கொடுத்து சொல்லித் தர்ற வாத்தி யாருங்கள மறந்துட்டுப் போற நன்றி கெட்ட வய்ங்க கெடையாது. இதுக்கு பேரு ஃபெயில் கெடையாது. விசுவாசம். உங்களுக்கெல்லாம் நன்றியே இல்லடா. அதான் பாஸாகிட்டே போறீங்கனு போட்டுப் பொளப்பேன். ஆக்ஷனும் ரியாக்ஷனும் அள்ளும் பாருங்க.. ' ஃபெயிலாகிற பசங்க சொல்றதுக்கு ஒரு சூப்பர் ரீசன் சொல்லிட்டீங்கனு சிரிச்சாரு விஜய்.

இதே மாதிரி ' மண்ணின் மைந்தன்' படத்துல சத்யராஜ் அண்ணனும் நானும் சேந்து ராவடி பண்ணியிருக்கோம். படத்துல எனக்கு ஜாலி கேடி ரோலு. சத்யராஜ், ஏரியாவுக்குப் புதுசா வர்ற இன்ஸ்பெக்டரு. போலீஸ் ஸ்டேஷன்ல எல்லாரும் அவங்க அவங்க வேலையப் பாத்துக்கிருப்பாங்க, நான் ஏம்பாட்டுக்கு போயி, சாவிய எடுத்து நானா லாக்கப்பத் தொறந்து உள்ள போயிப் படுத்துக்குற ஆளு. என்னானு புரியாம சத்யராஜ் முழிப்பாரு. நான் அப்பிடியே வேட்டிய எடுத்து முக்காடு போட்டவாக்குல படுத்துக்கிட்டே' அட எட்டு ஒம்பது வருஷமா ஜெயில்லயே படுத்தாச்சா... வெளிய ஒறக்கம் வருதில்ல... கம்பிக்குள்ள கெடந்தாதேன் சொகமாத் தூக்கம் வருது. உங்களுக்கும் ஒரு கேஸ் இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும்லம்பேன். ' அப்பிடியா சங்கதி. கொஞ்சம் லாடம் கட்டுனா ஃபீலிங் இன்னும் நல்லாயிருக்கும்'னு சத்யராஜ் என்னப் போட்டு பிரிச்சி மேஞ்சிருவாரு. படம் முழுக்க எனக்குப் பஞ்ச் டயலாக் வேற!
எதுக்கெடுத்தாலும் 'அது சரி'ம்பேன். காசு கடங் கொடுத்தவன் ஆவேசமா வருவான். ' அறிவிருக்கா ஒனக்கு " 'அதுசரி!', 'சோத்தத் திங்கறியா எதத் திங்கற?' 'அது சரி!, ' சூடு, சொரண, மான, ரோஷமே இல்லை யாடா? ' ' அது சரி! ', ' இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு வேற எதாச்சும் தொழில் பண்ணலாம்டா... ' ' அதுதாஞ் சரி! ' னு முடிச்சிருவேன். என்ன திட்டினாலும் ' அது சரி! ' ங்கறது. உச்சகட்டமாத் திட்டிட்டா, ' அதுதாஞ் சரினு சொல்லிட்டு எகிர்றது... இதான் அவன் காரக்டரு!
அப்பறம் இங்க வெள்ளக்காரங்களோட வக்கீல் கெட்டப்புல நான் இருக்கற போட்டோ பாத்தீங்களா? சுந்தர்.சி - யோட ' லண்டன் ' படத்துக்காகத்தேன் இந்த உதார் வக்கீல் கெட்டப்பு. காரக்டர் பேரே வெடிமுத்து. ' வின்னர் ' கைப்புள்ள, ' கிரி ' வீரபாகுவையெல்லாம் தூக்கியடிக்கற மாதிரி வெடிமுத்து காரக்டரைப் போட்டுப் பொளந்துருக்கோம். ஒல்லி மீசை, சுருட்டத்தலனு பவுடர் கலையாம அலையற மம்முத ராசாதான் வெடி முத்து. பின்னி பெடலெடுப்பான் பாருங்க!
நகைச்சுவைதாண்ணே நமக்கு எல்லாமே! எல்லாத்தையும் காமெடியாப் பாத்துப் பேசி, நாலு பேர சிரிக்க வெச்சிட்டே போயிச் சேந்துரணும்னே. சாமி வந்து எம் முன்னாடி நின்னாலும் இந்த வரந்தேன் கேப்பேன்!
- வருவேன்
(16.01.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)