அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 12

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

செல்போன வெச்சுகிட்டு இந்த பொண்டு புள்ளைக அடிக்கிற கூத்து இன்னும் ஜாஸ்தி...

சின்னப்பயலா இருந்தப்ப டெலிபோன்னாலே அதிசயம்ணே! ஊர்ல பெரிய மனுஷய்ங்க வூடுகள்ல, பெரிய கடைங்கள்லதேன் போனு வெச்சிருப்பாக. நம்மள மாதிரி ஏழபாழைங்களுக்குனு போஸ்ட் ஆபீஸுல ஒரு போது இருக்கும். ஏழெட்டு கிலோ எடையில் கன்னங் கரேல்னு ரெண்டு பக்கமும் குண்டு குண்டா மண்டைங்க இருக்கும். அதுல நம்பரச் சுத்தறதுக்கே தனியாக் கஞ்சி குடிக்கணும். ஏதாச்சும் எழவு செலவுன்னாத்தேன் நம்மாளுக போனுக்கு ஓடுவாய்ங்க. ஆபீசரு லைனு போட்டுத் தந்தா, அப்பிடியே காதுல வெச்சுக்கிட்டு பெரம புடிச்சது மாதிரி அரண்டுபோயி நிப்பாய்ங்க. அந்தப்பக்கம் இருக்கற ஆளு ' அலோ அலோ'னு கத்தித் தீத்துருவான். அலோ சொல்லுய்யா... அலோ சொல்லுனு ஆபிசரு மெரட்டுனதும், ' ஆ... ஆலோ'னு நாக்கு ஔஸ்ரீ வேத்துக்கொட்டி ஒரு வழியாகிருவாய்ங்க. அப்புறம் அந்த ஆசேரு தான் போன வாங்கி சேதியச் சொல்லுவாரு.

நானெல்லாம் எளந்தாரியா மதுரயச் சுத்திக் கிருக்கும்போதுதாம்ணே அங்கிட்டொண்ணும் இங்கிட்டொண்ணுமா பொட்டிக் கடைகள்ல போனு வெச்சி காசுக்கு பேசவெச்சாய்ங்க. அப்பவெல்லாம் யாருக்காச்சும் காசு குடுத்து போன் பண்ணோம்னா, ' என்னா மாப்ள செல்வாக்காயிருக்காப்ல தெரியுது... ' ம்பாய்ங்க. அம்புட்டுத் துட்டு செலவாகும் ஒரு போனு பண்ண.

Vadivelu, Rajinikanth
Vadivelu, Rajinikanth

நாங்கெல்லாம் கைல துட்டு செழிம்பாச் சேந்துருச்சுன்னா, போயி நின்னு, கண்டமேனிக்கு ஒரு நம்பரச் சுத்தி, எங்க செல்வாக்க ஏரியாவுல மெயின்டைன் பண்ணிக்கிருப்போம். ' ராங்க் நம்பரு'னு அங்கிட்டு எவனோ சொன்னாலும், ரஜினியண்ணங்கூட ஒரு போட்டோ எடுக்க முடியாதானு, பெருங்கூட்டம் தவியாத் தவிக்குது. நாமெல்லாம் ஒரு முழுப் படமே நடிக்கிறோம்ல... சும்மா அந்தப் பந்தாவக் காட்டணும்னு வாங்குன போட்டோ.... ' சந்திரமுகி'யில அண்ணனும் நானும் அம்புட்டு ஜாலியாக் கலக்கியிருக்கோம்!

'ஆமாமா, திங்கக்கிழமை டெலிவரி. அப்பறம் என்னா சோலி போயிட்டிருக்கு? ' னு இங்கிட்டு ஒத்தையிலயே பேசி உதாரு வுடுவோம். பாக்குறவய்ங்க ' ஆத்தாடி பெரிய எடத்து சினேகிதமாப் புடிச்சு வெச்சுருக்கானே'னு பயந்து வெலகிப் பொகைவாய்ங்க. அப்பிடி அதிசயமா இருந்த போனுக, இப்ப என்னான்னா ரோட்டோரமா சரளக் கல்லுகள கொட்டி வெச்சிருக்க மாதிரி, கூவிக்கூவி விக்கிறானுகளே!

செல்போனுனு ஒண்ணு வந்தாலும் வந்துச்சு, அக்குருமம் ஜாஸ்தியாப் போச்சு! ஆளாளுக்கு பையில காசு இருக்கோ இல்லியோ, கையிலயும் காதுலயும் ' கிணிங் கிணிங்'னு செல்போனோடதான் திரியிறாய்ங்க. பாக்கச் சந்தோஷமாத்தேன் இருக்கு. ஆனா, அத வெச்சுகிட்டு இவிங்க அடிக்கிற கூத்தும் கொடுமையும் தாங்கலைண்ணே!

அன்னிக்கு கார்ல சிக்னல்ல நின்னுக்கிருக்கேன். பக்கத்துல நின்ன ஒரு பைக்காரன் திடுதிப்புனு அவம் பாட்டுக்கு 'என்னா பேசற... மூஞ்சி மொகறையெல்லாம் பேத்துப்புடுவேன் தெரியும்ல'னு சவுண்டு வுடறான். அவம் பக்கத்துல நின்ன ஆட்டோ டிரைவரு, தன்னத்தான் திட்றாம்னு நெனச்சிக்கிட்டு ' ஒழுங்காத்தான நிக்கிறேன். இப்ப எதுக்குடா திட்டுனே? ' னு அவன அடிக்க வர, கலவரமாயிருச்சு. அப்புறந்தேன் தெரிஞ்சுது. பைக்காரன் என்னமோ இயர்போனாம்ல, அதக் காதுல மாட்டிக்கிட்டு யார் கூடயோ செல்போன்ல பேசிட்டிருந்திருக்காம். விஞ்ஞான வெவரம் புரியாம வெவகாரமாகி வெட்டுக்குத்து ரேஞ்சுக்கு போயிக்கிருக்குண்ணே. பட்டணத்துல இப்ப பாதிப்பயக இப்பிடி தனக்குத்தானே பேசிக்கிட்டு ரோட்ல திரியறாய்ங்க. புதுசா யாராச்சும் பாத்தா, ' ஆத்தி இது என்னா ஊர்ல பாதிப்பேரு கிறுக்கு புடிச்சு அலையறானுகளே? ' னு பயந்துருவாய்ங்க.

அன்னிக்கு ஒரு பயல, மவுண்ட் ரோட்லயிருந்து சாலிகிராமத்துலயிருக்கற நம்ம ஆபீஸுக்கு வரச் சொன்னேன். கௌம்பி வாற அர மணி நேரத்துல அஞ்சு போன் பண்ணிட்டான். ' அண்ணே ஜெமினிகிட்ட வந்துக்கிருக்கேன். இப்ப வந்துருவேன்'னு மொத போன் அடிச்சான். ' வள்ளுவர் கோட்டம் சிக்னல்ல நிக்கிறேண்ணே'னு அடுத்த போனு. ' கோடம்பாக்கம் பாலத்துமேல ட்ராஃபிக் ஜாஸ்தியாயிருக்கு'னு மூணாவது போனு. ' வடபழனி பஸ் ஸ்டாண்டைக் கிராஸ் பண்றேன்'னு மறுக்கா ஒண்ணு. ' அண்ணே, நிமுந்து பாருங்க'னு போனுல சொல்லிக்கிட்டே வாசல்ல எதுத்தாப்ல நின்னு இளிக்கிறான். அவன அப்பிடியேக் கோத்துப் புடிச்சு ' எலே என்னவோ டெல்லியிலயிருந்து பிரதமரு கௌம்பிட்டாரு... வந்துக்கிருக்காரு... இப்ப வந்துருவாரு'ங்கற மாதிரி இங்ஙன இருக்கற மவுண்ட் ரோட்லயிருந்து வர அஞ்சு போனு அடிக்கிறியே... ' னு மண்டையில கொட்டுனா, ' அட விடுங்கண்ணே... ஐ நூத்தியொரு ரூபா போனு'னு சிரிக்கறான்.

இப்பல்லாம், பஸ்ல ரெண்டு பயக முன்னாடி பின்னாடி ஏறிட்டாய்ங்கன்னா முன்னாடி ஏறுனவன் பின்னாடி இருக்கறவனுக்கு போனு போட்டு ' எனக்கும் சேத்து டிக்கெட்டு எடுத்துரு மச்சான்'ங்கறான். ரெண்டு ரூவா டிக்கெட்டு எடுக்க ரெண்டு ரூவா செலவு பண்ணிப் பேசுறாய்ங்க.... காலக்கொடும!

Rajinikanth, Vadivelu
Rajinikanth, Vadivelu

இதை விடுங்கய்யா. செல்போன வெச்சுகிட்டு இந்த பொண்டு புள்ளைக அடிக்கிற கூத்து இன்னும் ஜாஸ்தி. பொது எடம் அது இதுனு எதையும் பாக்கிற தில்ல.... எங்க பாத்தாலும் ' கெக்கே பிக்கே'னு செல்போனும் சிரிப்புமா நிக்குதுங்க. அப்பிடி இந்தப் பிள்ளைக என்னதான் பேசுதுகன்னு கேட்டா ' ஹேய் இல்லப்பா... ச்சீய், ஓகே, ஒத வாங்குவே, ஸாரிடா, போப்பா... ம்ம்ம்... " இப்பிடி துண்டு துண்டாவே ரெண்டு மணி நேரத்துக்குப் பேசிக்கிருக்குதுங்க.

'இந்தப் புள்ளைக இம்புட்டு நேரம் பேசிக்கிருக்குதுங்களே. எப்புடிய்யா காசு கட்டும்? ' னு ஒரு யூத்து அஜிஸ்டெண்ட்டுகிட்ட கேட்டேன். ' அண்ணே பொண்ணுங்க ரொம்பத் தெளிவு! பயகளுக்கு ' மிஸ்டு கால் ' குடுப்பாளுங்க. அவிங்கதேன் அடிச்சிப் புடிச்சிக்கிட்டு லைனுக்கு வருவாய்ங்க. அவிங்க காசுல தேன் இவளுக அரட்டையடிக்கிறதே'ன்னாரு. இப்ப இந்த காதல், கத்திரிக்கா, முள்ளங்கி கீரையெல்லாம் செல்போனுலயே தேன் நடக்குதாம்ல. சுப்ரபாதம், தேசிய கீதம் தொடங்கி சினிமா பாட்டு அம்புட்டையும் செல்லுல வெச்சிக் கத்தவுட்டு கரச்சல் பண்றாய்ங்க. அட, இந்த எஸ்.எம்.எஸுங்கற பேர்ல வேற கொல்றாய்ங்களேண்ணே. நல்லா தூங்கிக்கிருக்கறவன உசுப்பிவுட்டு ' குட்டு நைட்டு'ங்கறாய்ங்க.

வெரசாப் பேசிக்கிறதுக்குக் கண்டுபுடிச்சத இப்பிடி சைஸா பயன்படுத்தறாய்ங்களேண்ணே. இப்போ அதுலயே போட்டோ எடுக்கிறாய்ங்களாமே, பாத்ரூம்ல குளிக்கிறதுகூட படமா வந்துருதாம்ல. ஆத்தி, என்னய இப்பிடி எவனாச்சும் படம் புடிச்சுட்டா என்ன பண்றதுங்கற பயத்துல, இப்பல்லாம் புது இடத்துல குளிக்கப் போனாலே ஒடம்பு கூசிப் போகுதுண்ணே!

- வருவேன்

(23.01.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)