அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 13

வடிவேலு
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவேலு

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்! ‘வீரபாகு’ கிட்டத்தட்ட அப்படித்தான்...

'கிரி' படத்துல வர்ற 'வீரபாகு' கிட்டத்தட்ட நாந்தேன்!

அப்பிடி ஒரு அப்பாவிப் பயபுள்ள எனக்குள்ள எப்பவும் இருக்காம்ணே. அவந்தேன் நம்மளை செயிக்க வெக்கிறான். அந்த வெள்ளந்தித்தனம் நம்ம ஊரு குடுத்ததுண்ணே. பாசக்காரப் பயக! வெளியில விருதாவா அருவா தூக்கிச் சலம்புவாய்ங்க. ஆனா, மனசுக்குள்ள நல்லி எலும்பைக்கூடக் கடிக்கத் தெரியாத அப்பாவிகளா இருப்பாய்ங்க. எங்கியாவது வழுக்கி விழுந்துட்டாக்கூட விருட்டுனு எந்திரிச்சி யாரும் பாக்கலியேனு சுத்திமித்தி பாத்துப்புட்டு, வேட்டியை ஒதறிக் கட்டிகிட்டு லேசா மீசைய நீவிவிட்டுக்கிற சாதி. நாலு பேரு பாக்கணும், பண்ணணும்ங்கற கௌரதியிலயே வாழறவய்ங்கண்ணே.

காமெடி வடிவேலு - 13

அவிங்க சரக்கடிக்கறதே ஒரு திருவிழாக் கோலமாத்தேன் இருக்கும். பாட்டிலக் கைல புடிக்கிற வரைக்கும் பூனையாட்டம் இருப்பாய்ங்க. மொத ரெண்டு ரவுண்டுக்கு அப்பிடியே “ பாச மலர் 'படம் ஓட்டுவாய்ங்க. மூணாவது ஊத்தும் போதே, ' எளையவ கல்யாணத்துக்கு நீ வெச்ச மொய்யிதான் தெரியும்ல. ஏத்தங் கட்டி எறச்சாலும் நீங்கள்லாம் அம்புட்டுதாண்டா'னு கோழிக் கால கரகரனு கடிச்சுக்கிட்டே மொதக் குண்ட போடு வாய்ங்க. ஒடனே எதிராளி விறுவிறுனு ஒரு ரவுண்ட முடிச்சுட்டு ஃப்ளாஷ்பேக் போருக்குத் தயாராயிருவான். ' அடேய், அட்டடேய்... நீங்க மட்டும் என்னா பெரிய சின்னமனூரு ஜமீனா? இதுக்குத்தேன் தட்டுக்கெட்டாலும் தராதரம் பாக்கணும்பாய்ங்க. ஒங்கூட சேந்தம்பாரு'னு வாயாலயே செலம்பம் சுத்த ஆரம்பிப்பாரு. வெவகாரம் கைகலப்பு, உருட்டல் பொரட்டல்னு போயி ஆளும் பேருமா சேந்துப் பிய்ச்சுப் பிரிச்சு அடுத்த ரவுண்ட ஊத்திவிடுவாய்ங்க. அரை மணி நேரத்துக்கு முன்னால அடிச்சிக்கிட்டவய்ங்கனு சொன்னா எவனும் நம்ப மாட்டான். நடந்ததெல்லாம் கனவா நெனவானு சுத்தியிருக்கறவய்ங்க அத்தன பேரையும் கொழப் பிரு வாய்ங்க. அப்பிடியே ஆக்ஷன் ஸீனு மாறி செண்டிமெண்டுக்கு வந்துருவாய்ங்கண்ணே.

சண்டைய ஆரம்பிச்சவரு ஒரு ஆம்லெட்டை உள்ள தள்ளிக்கிட்டே ' என்னா அடி, அடேங்கப்பா! எல்லாம் நம்ம ரத்தம்தான மாப்ளே. அந்தச் சூடு இருக்கும்லம்பாரு. வுடுங்க மாமோய்.

ஒண்ணும் மனசுல வெச்சுக்காதீங்க. கொஞ்சம் ஊத் துங்க'னு இவுக எறங்கி வந்துருவாரு. அப்பிடியே ரோட்டுக் கடையில முட்ட தோச, மொளவா சட்டினியை ஒரு காட்டு காட்டிட்டு வேட்டிய அவுத்து உருமாக் கட்டிகிட்டு சோடியா பாட்டு பாடிக்கிட்டே வூட்டப்பாக்கப் போயிருவாய்ங்க. ஒரு ஆஃப்குள்ளயே வெட்டுகுத்து வரைக் கும் போயி வெள்ளக் கொடியும் காட்டி சேந்துக்கற புள்ளக. எல்லாத்தையும் ஒடனுக் கொடன் பைசல் பண்ணிப்புட்டு போயிட்டே இருப்பாய்ங்க. மனசுல ஒண்ணும் வெச்சுக்க மாட்டாய்ங்க அவிங்கதான் நம்ம காமெடிக்கெல்லாம் அடிப்படையே.

இன்னுஞ் செல பேரு இருக்காய்ங்க. கொணத்துல தங்கமா இருப்பாய்ங்க. ஆனா கோக்குமாக்காவே பேசிட்டுத் திரிவாய்ங்க. எங்க செட்டுல கூட அப்பிடி ஓர்த்தன் இருந்தான். டீக் கடைக்கிப் போனா போனவாக்குல தட்டுலயிருக்கற வடைகள அழுத்தி அழுத்தி பாத்துட்டு ' இந்த வருஷம் போட்டதா? ' ம்பான். கடக்காரன் லேசா டென்ஷனாவான்ல, ' என்னா மொறப்பு. காசு குடுக்கறவய்ங்க பேசத்தான செய்வாய்ங்க. சரி சரி, வெந்நீத்தண்ணியப் போடு'னு எரியற கொள்ளியில எண்ணைய வூத்துவாம்ணே. பஸ்ஸுல ஏறுனாம்னா ட்ரைவரப் பாத்து ' என்னா ட்ரைவரே... இதுக்கு முன்னாடி எழவு வண்டியா ஓட்டிக்கிருந் தீங்க'னு டார்ச்சர ஆரம்பிப்பான். கண்டக்டருகிட்ட ' சில்லற இல்லனு நெத்தில எழுதி ஒட்டிக்கிற வேண்டியதுதான ' னு அறிவுர சொல்லுவாம்ல. அவிங்களும் எம்புட்டு நேரந்தா பொறுப்பாய்ங்க. ஒருகட்டத்துல வெகுண்டு எழுந்து பொடனியப் புடிச்சி மொய்யி எழுதிருவாய்ங்க.

ஆனா, நம்மாளுகிட்ட உள்ள செறப்பு என்னன்னா அடி வாங்கறதப் பத்தி ஃபீல் பண்ணவே மாட்டான். ' ஏண்டா இப்புடி ஊருக்கு முன்னாடி அடிவாங்க வெக்கமாயில்ல? ' னு கேட்டா, ' அட, வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்! ' னு போயிக்கிட்டேயிருப்பான். ஒரு தடவ மளிகக் கட அண்ணாச்சி ஒர்த்தர்ட்ட ' பொருள்லயெல்லாம் கலப்படமில்லைனு நாங்க எப்புடி நம்பறது? என்னா ஆதாரம்? ' னு பேச்ச ஆரம்பிச்சி டாப் கியர்ல கௌம்பிட்டான். ' சீனியில ரவைய கலக்க மாட்டீங்கனு என்னா காரண்டி? 'ங்கற ரேஞ்சுல பேசிக்கிட்டேயிருந்தாம்ல. அண்ணாச்சி ' யப்பா... புடிச்சா வாங்கு. இல்லைனா போயிரு. சும்மா நின்னு யாவாரத்தக் கெடுக்காத'னு சொல்லி சொல்லிப் பாத்துட்டு குபீர்னு பொங்கிட்டாரு. அப்பிடியே வெறிகொண்டு வீட்டுக்குள்ள ஓடினவரு வெறகுக் கட்டையோட வந்து மகய்ங்களோட சேந்து இவன வளச்சிட்டாரு. போட்டுப் பொளந்துட் டாய்ங்க. ஒடம்பெல்லாம் வீங்கிப்போயி பத்து வெச்சுகிட்டு வூட்டுல க் படுத்துக்கிருந்தவனப் பாக்கப் போனா, ' ஆப்பிளு ஆரஞ்சுனு ஒண்ணும் வாங்காம என்னாத்துக்கு வந்த? ' ங்கறாண்ணே. ' ஏண்டா இது ஒனக்கு தேவையா'னு கேட்டா ஒண்ணு சொன்னாம்ணே. ' வழக்கமா அண்ணாச்சி இப்புடி நடந்துக்கற ஆளு இல்லடா. யாரோ தப்பா கைட் பண்றாய்ங்க'ங்கறாண்ணே. அப்புடி ஒரு பெறவி! இப்பவும் மாறாம இருக்காண்ணே. ஊருக்கு போனோம்னா ' அப்பறம் சினிமால்லாம் எப்புடி இருக்கு. ரசினி கமலையெல்லாங் கேட்டதாச் சொல்லு'ம்பான். சும்மா அப்பிடி ஒரு ரவுசு. ஆனா தங்கமான மனசு!

காமெடி வடிவேலு - 13

நாமளும் அப்பிடி வந்தவய்ங்கதானண்ணே. பள்ளிக்கொடம் படிக்கும்போதே வாத்தியாரு ' வாட் ஈஸ் யுவர் பாதர்? ' னு கேட்டாரு. நா எந்திரிச்சி ' ஒங்களுக்கு தெரியாதது என்னங்கய்யா இருக்கு'னு சொல்லிப்புட்டு ஏம்பாட்டுக்கு உக்காந்துட்டேன். அவுரு அப்பிடியே வந்து ' எந்திரிடா எடுபட்ட பயலே... அம்புட்டு கொழுப்பாயிருச்சா'னு பெரம்பாலயே போட்டு வாங்கிட்டாரு. எனக்கா கண்ணு கட்டிகிட்டு தண்ணியா ஊத்துது. ' என்னா சொல்லிப்புட்டம்னு இப்பிடி அடிக்கிறாரு. நெசத்ததான சொன்னோம்னு கோவமாயிப் போச்சு. அன்னிலெருந்து அந்த வாத்தி சைக்கிள்ல ஒரு மாசத்துக்கு தெனமும் காத்து புடுங்கி வுட்டுகிட்டு காத்தா கருப்பா அலஞ்சேன். அதையும் ஒரு நாளக்கி கண்டுபுடிச்சி ' காத்தா புடுங்கற காத்து'னு சாத்து சாத்துனு சாத்திட்டாய்ங்க.

எ ளந்தாரியா சுத்துனப்பயும் இதேதான். சினிமாக் கொட்டாயில தர டிக்கெட்டு வாங்கிட்டுப் போயிர்றது. நமக்கு முன்னாடி மணலக் குமிச்சி ஒக்காந்துக்கிட்டு எகிறி எகிறிப் படம் பாப்பாய்ங்கள்ல. ' படம் தெரியல. கொஞ்சங் குனிஞ்சு உக்காருங்கனு பதவிசாவே பேசறதில்ல. எடுத்தவாக்குலயே ' எலேய், இப்பிடி உக்காந்தா எப்பிடி, ஒந் தலையிலயா படம் பாப்பம். தள்ளுடா'னுதான் ஆரம்பிக்கறது. ஒடனே அவன் ' அத மெதுவாச் சொல்லலாம்ல'னு இழுப்பான். ' ஏன் வெரசாச் சொன்னா அய்யா கேக்க மாட்டீகளோ'னு அவன தூண்டி வெச்சி இழுத்து பல்லாஞ்சடுகுடு ஆடி புழுதி பறக்க உருண்டு பொரண்டுட் டுதேன் வர்றது. ஆகாசத்துல நச்சத்திரங்களக் கூட எண்ணிப்புடலாம். நாங்க பட்ட விழுப்புண்களயெல்லாம் எண்ண முடியா துண்ணே!

- வருவேன்

(30.01.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)