அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 14

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

நல்ல நண்பங்கெடைக்கறது வாழ்க்கையில பெரிய வரம்...

'சந்திரமுகி ' படத்துல நடிக்கக் கூப்பிட்டப்ப பி.வாசு அண்ணே, ' படத்துல உங் கேரக்டருக்கு என்ன பேரு வைக்கலாம் வடிவேலு? ' னுகேட்டாரு. யோசிக்காம நாஞ் சொன்ன பேரு 'முருகேசன்'. ஒண்ணாப்புலேர்ந்து எங்கூட ஒண்ணாச் சுத்திக்கிட்டுத் திரிஞ்ச கூட்டாளிண்ணே முருகேசன். நா வெறும் வேலுப்பயலா சுத்துனப்பயுஞ் சரி, பெறவு காசு பணம், காரு பேருனு நடிகன் வடிவேலுவா வௌஞ்சி நின்னப்பயுஞ் சரி, ஏங்கூட எப்பவும் நின்னவம்ணே. எனக்கு மேனேசரு, ஆலோசகரு அம்புட்டும் முருகேசந் தேன்!

நா மூச்சுக்கொரு தரம் முருகேசா, முருகேசானு கூப்பிட்டுப் பழக்கப்பட்ட ஆளுண்ணே. போன வாரம் பொசுக் குனு எமன் வந்து, ஏ முருகேசன் உசுர புடுங்கிட்டுப் போயிட்டாம். ' சந்திரமுகி ' ஷூட்டிங்ல நிக்கிறேன்... சேதி வருது. அப்பிடியே கிறுகிறுனு சுத்துது... மேலு காலெல்லாம் நடுங்குது எனக்கு.

Vadivelu
Vadivelu

அன்னிக்குனு பாத்து காம்பினேஷன் ஷாட்டு! சேதி தெரிஞ்சி அம்புட்டுப் பேரும் என்னக் கெளம்பி போவச் சொல்றாக. நா வந்துட்டம்னா ஷூட் டிங்கு கேன்சலாயிருமேனு, ' இருக்கட் டும்ணே'னு மொத்தத் துக்கத்தயும் முழுங்கிக்கிட்டு நிக்கிறேன்.... முடியல! ' யாருக்கும் நம்மால நஷ்டம் வரக்கூடா துரா'னு முருகேசம் பயதாஞ் சொல்லுவாம். அவுக்கிட்ட அனுமதி வாங்கிக் கிட்டு, ஓடிவந்து பாத்தா, ஐஸ் பொட்டியில செலையாக் கெடக்காம் முருகேசன்!

ஏ மக்கா... ஏ உசுரயே உருவி எடுத்தாப்ல இருந்துச்சு. ஆச ஆசயா நாங் கட்டிக் குடுத்த புது வீட்டுல பொட்டிக்குள்ள படுத்துக் கெடக்கான். ' எலேய் முருகேசா... எஞ் சாமீ'னு கெடந்து அரத்துறேன். நா திரும்பிப் பாத்தாலே என்னானு ஓடிவந்து நிக்கிற பய, அன்னிக்கு அம்புட்டுக் கத்தியும் அசைஞ்சுகூடப் பாக்கலியேண்ணே!

ஊரும் பேருமா அவனக் கொண்டு போயி சுடுகாட்டுல வெச்சி எரிச்சிட்டு வந்து படுத்தா தூக்கங் காங்கலீங்க!

என்னானு சொல்லுவேன். நானும் முருகேசனும் வேற வேற வயித்துல பொறந்துபுட்டோம். அம்புட்டுதேன். மத்தபடி ஒத்த உசுராத்தேன் வாழ்ந்தோம், வளந்தோம். பழசை எல்லாம் நெனச்சிப்பாத்தா நெஞ்சு விருக்குங்குதுண்ணே.

மதுரயில எங்க வீட்டுக்குப் பக்கத்துலதாம் முருகேசன் வீடு. எனம் எனத்தோட சேரும்பாய்ங்கள்ல. அப்பிடி பள்ளிக்கூடத்துல நாங்க ரெண்டு பேருமே மக்குப் பயபுள்ளைக. வாய்ப்பாடு சொல்லத் தெரியாம ரெண்டு பேரையும் அடி பின்னியெடுத்து ' பள்ளிக்கூடத்தச் சுத்தி ஓடிட்டு வாங்கடா'னு அனுப்புவாய்ங்கள்ல, நாங்க அப்பிடியே ஓடிப்போயிருவோம்.

அப்புறம் ரெண்டு பேரையும் தேடிப் புடிச்சிட்டு வந்து திருவிழா நடத்துவாய்ங்க. அடினா, உங்க வீட்டு அடியில்ல, எங்க வீட்டு அடியில்ல, மினிமம் ரெண்டு நாளைக்கு ஒக்கார முடியாது. ரவைக்கு குப்புறத்தேன் படுக்க முடியும். மாறி மாறி ஆறுதல் சொல்லி அப்பவே நண்பய்ங்கடா! ' னு உள்ள ஒரு பாசம் வளந்து போச்சுண்ணே. எளந்தாரியாத் திரிஞ்ச காலத்துல நாங்க சேந்து அடிச்ச கூத்தை எல்லாம் ஆயுசுக்கும் மதுர மறக்காது. ' இவிங்க ரெண்டு பேரையும் சேர வுட்டா வெளங்காம போயிருவாய்ங்க'னு ரெண்டு வீட்டுலயும் திட்டித் தீப்பாய்ங்க. கேக்கற சாதியா நாம்..... முருகேசன் வீடு மச்சு வீடு. எங்க வீடு கீத்து வீடு. அவம் அங்கனக்குள்ளயிருந்து சிக்னல் கொடுப்பாம். நா நைஸா சைக்கிள எடுத்துகிட்டுப் போவேன். தெருமுக்குல ஜோடி போட்டுக்கிட்டு அப்பிடியே மொரசு கொட்டிக் கெளம்பிருவோம்.

அப்ப எங்க செட்டுல முருகேசந்தேன் காசுக்காரன். வீட்டுல அசந்த நேரமாப்பாத்து அங்கிட்டு இங்கிட்டு வெச்ச சில்றய ஆட்டயப் போட்டுட்டு வந்துருவான். நைட் ஷோ சினிமா, பொரட்டாக் கடைனு எங்க போனாலும் ஸ்பான்ஸரு.

"நீ நல்லாருப்ப அவந்தேன் ராசா'னு என்ன மனசார வாழ்த்தி அனுப்பின சீவன், எங்க ஆத்தாவுக்கு அடுத்தது முருகேசந்தேன்.

போருக்குப் போற மாதிரிதேன் போவோம். போற எடத்துல வாரத்துக்கு ஒரு வம்பு வழக்குனு வரலாறுபொஸ்தகத்தையே நெறைச்சி இருக்கோம். மொரட்டுப் பய... எதுக்கெடுத்தாலும் எகிறு வான். எக்குத் தப்பா ஆகிப் போச்சுனா, எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்றதும் அவந்தேன். எங்கியாவது ஏரியா மாறிப்போயி எதாவது சண்டயப் போட்ருவோம். 'ஏ கொடுக்கு!'னு டாப் கியரப் போட்டு போயிக்கிருப்போம். திடீர்னு சூழல் சரியில்லைனு தோணுச்சுனா, எங்காதுல வந்து 'டேய், பங்காளிங்க பலமாயிருக்காய்ங்க. அப்பிடியே ஓடிருவோம்'பாம். அம்புட்டுதேன்.. நழுவி எகிறிடுவோம். அப்படி ஒண்ணா மண்ணாக் கெடந்து அடிச்ச கூத்தையெல்லா சென்மத்துக்கும் மறக்க முடியாதுண்ணே! நடிகனாகணும்னு மதுரயிலேர்ந்து மெட்ராசுக்கு லாரியேறினப்ப ' போயி என்னத்தக் கிழிக்கப் போற'னு பொறம் பேசுனவய்ங்கதேன் அதிகம். ' நீ நல்லாருப்ப ராசா'னு என்ன மனசார வாழ்த்தி அனுப்பின சீவன் எங்க ஆத்தாவுக்கு அடுத்தது முருகேசந்தேன்.

இங்கன வந்து படாத பாடு பட்டுக்கிருந்தப்பகூட வந்து தங்குன ஒரு ஊருக்கார நண்பன், கழண்டு மதுரக்கே வண்டியேறிட்டான். தனியாக் கெடந்து நா அல்லாடிக்கிருந்தப்ப 'ஓங்கூடவே வந்துர்றேன்'னு முருகேசன் வண்டியேறி வந்துட்டாம்ணே. எங்கூட வந்து தங்கி, பட்டினி கெடந்து பாடுபட்டு நா பட்ட கஷ்டம் அம்புட்டை யும் அவனும் பட்டாம்ணே. நானாவது இந்த மெட்ராசுக்கும் சினிமாவுக்கும் தக்க கொணத்த மணத்த அப்பிடி இப்பிடி கொஞ்சம் மாத்திக்கிருவேன். அவம் அப்பிடியே அச்சு அசலா அந்த மதுரக்கார ஊர் நாட்டாந்தேன்!

Vadivelu
Vadivelu

அங்கிட்டு இங்கிட்டு சான்ஸு வர ஆரம்பிச்சப்ப விஸ்வநாதபுரத்துல ஒரு வீடு எடுத்து, புதுசா போனு வாங்கி வெச்சோம். 'எப்படா மணியடிக்கும்.... யாராச்சும் கூப்பிடுவாங்களா?' னு ரெண்டு பேரும் போனு பக்கத்துலயே கெடயாக் கெடப்போம்ணே.

இவனுக்கு போனுல எப்பிடி பேசறதுனு அப்பத் தெரியாது. மணியடிச்சதும் படக்குனு எடுத்து ஆரு... என்னா வேணும். சொல்லு.... கேக்குரம்ல!' னு மொரட்டுத்தனமா பேச ஆரம்பிச்சிருவான்.' யார்றாது காட்டாய்ங்களா இருக்காய்ங்களே?'னு லைன்ல வந்தவன் போனை வெச்சிரு வான். 'எலேய் முருகேசா.... போன்ல அப்பிடி பேசப்படா துடா. பூ மாதிரி ' அலோவ்.... எஸ்.... நீங்க யாருங்க சார் பேசறீங்க? ' னு பேசணும்டா'னு சொல்லிக் குடுப்பேன். இனிமே நாந்தா உன் மேனேசரு'னு சிரிப்பான். அப்புறம் அவந்தேன் என் மேனேசரு. அம்புட்டு போனுக்கும் பதில் பேசி குறிச்சு வெச்சி, கம்பெனி கம்பெனியா ஏறி எறங்கி, காசு பணம் கால் ஷீட்டு அம்புட்டும் அவந்தேன் பாத்தான்.

சினிமால அவனத் தெரியாத ஆளில்ல. நேத்து வரைக்கும் ரவைக்கு ஷூட்டிங் முடிய எம்புட்டு நேரமானாலும் ஆபீசுக்கு வந்து அவங்கூட கொஞ்ச நேரம் ஊர் கதையெல்லாம் பேசிக்கிருந்துட்டுதேன் நா ஒறங்கப் போவேன். இந்த மெட்ராசுல எனக்கு இன்னொரு ஆத்தாவா இருந்த பய இன்னிக்கு இல்ல!

அவன் என்னப் பாத்துக்கிட்ட அளவு தன்னப் பாத்துக்கிட்டதில்ல! புதுசா ஆபீசு கட்றப்போ, ' நீபாட்டுக்கு ஷூட்டிங் போயிருவே, இதை அனுபவிக்கப் போறது நாந்தேன்'னு சிரிச்சான். ' சந்தோசம்ரா, ஆனா, அதுக்காகவாவது ஒன் ஒடம்பப் பாத்துக்கடா'னு சொன்னேன். எதுக்கெடுத்தாலும்' நமக்கெல்லாம் ஜிம் பாடில்ல'ம்பான். மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு தடவ முருகேசனுக்கு ரொம்ப சீரிய ஸாகிப் போச்சு. ஆசுபத்திரியில மூச்சுப் பேச்சில்லாமக் கெடந்தாம். நா பதறிப்போயி வந்தவன் மனசு கேக்காம, அப்பிடியே அவங் காதுகிட்டே குனிஞ்சி, ' டேய் முருகேசா, எதுக்கும் கவலப்படாதடா.

கோடி ரூபா செலவானாலும் பரவாயில்ல, ஒன்ன அமெரிக்கா கொண்டு போயாவது காப்பாத்திருவேண்டா'னு சொன்னேன். எஞ்சத்தம் கேட்டதும் அவங் கண்ணு முழி அப்பிடியே உருண்டுச் சுண்ணே. டாக்டருங்களே அசந்துட்டாங்க. அன்னிக்கு சாயந்திரமே படுக்கையில இருந்து எந்திரிச்சி, ஏங்கூட வாக்கிங் கெளம்பிட்டான். 'அமெரிக்கா போலாம்னதும் எந்திரிச்சிட்டியாடானு வெளையாட்டுக்குக் கேட்டா, 'நண்பங்காசுல அமெரிக்காவையும் பாத்துப் புடலாம்னு தேன்'னு சொல்லிச் சிரிச்சான். இன்னிக்கு என்ன அழுவ வெச்சுட்டு, அவம் போயிட்டாம்யா.

நல்ல நண்பங்கெடைக்கறது வாழ்க்கையில பெரிய வரம். 'நூறு எதிரிங்க இருந்தாலும் செயிச்சிரலாம். ஒரு நல்ல நண்பன் இல்லைனா முடியாது!'னு சொல்வாக. அது நெசம்ணே!

- வருவேன்

(06.02.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)