அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 15

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

”நா பாட்டாளி படத்துல பொம்பள வேஷங் கட்டி நடிச்சேன்ல. அது எங்கூர்ல நா பாத்த ஒரு அக்கா வோட கேரக்டர் தான்அது...”

பொட்டப் புள்ளகள் தெய்வ அம்சம்னு சொல்வாக!

அதுவும் அதுகள அலங்கரிக்கிறது இருக்கே, பொம்மை கெணக்கா இருக்கற புள்ளய, அப்பிடியே செதுக்கி வெச்ச சாமி செல கெணக்கா ஆக்கிருவாக! அட, ஒரு பச்ச மண்ண டப்பு டப்புனு நாலு சொம்பு தண்ணிய ஊத்திக் குளுப்பாட்டி, அது மேலு காலெல்லாம் பகுடரக் கொட்டி, கண்ணு மையி எழுதி, திருஷ்டிப் பொட்டு வெச்சி, ஆத்தாக்காரி கொஞ்சம் பாலைப் பொகட்டி, அப்பிடிப் படுக்க வெச்சா பால கிருஷ்ணரு மாதிரி கெடக்கும்.

தவழ்ற புள்ள அப்பிடியே நட்டக்குத்தலா எந்திரிச்சு நின்னு, டிகுண்டா டிகுண்டானு ஆடிக்கிட்டே ரெண்டு எட்டு எடுத்துவெய்க்கப் பழகிருச்சுனா.... அம்புட்டுதேன். சந்தயில விக்கிற அத்தனை கலர் ரிப்பனையும் கிழிச்சிருவான். பாசி மணி, கருக மணி, வளவி, கொலுசு, பூப் போட்ட சீட்டிப் பாவாடனு அத அலங்கரிக்கிற அழகு இருக்கே, அப்பிடியே ஃப்ளாஷ்பேக் சீன்ல வர்ற மதுர மீனாச்சி மாதிரித்தேன் இருக்கும்.

Vadivelu
Vadivelu

அடுத்து ஒரு புள்ள பொறந்திருச்சுனா, அந்தச் சின்னப் புள்ளையே அதுக்கு ஒரு ஆத்தாவா மாறுறது நம்ம ஊருல மட்டும் நடக்குற அதிசயம்ணே!

தன்னக் கொஞ்சுனதெல்லாம் அதுக்கு நெஞ்சுல எப்பிடித்தேன் ஞாபகம் இருக்குமோ... அது தன் தம்பி தங்கச்சிப் பாப்பாவைச் சீராட்டற அழகு இருக்கே, அதேன் தெய்வ அம்சம்! அப்பவே அதுக்கு எல்லா வேலையும் பழக்கிருவாய்ங்க. வீடு வாச கூட்டிப் பெருக்கறது, தண்ணிக் கொடம் சொமக்கறது, சமைக்கிறது, தொவைக்கிறதுனு வீட்டு வேலை, காட்டு வேலைனு அம்புட்டையும் பழக்கிருவாய்ங்க. விடியக் காலை குனிஞ்சா பொடிசாயத்தேன் நிமிர முடியும். அம்புட்டுச் சோலி கெடக்கும். ஆனா, அதுக்கு நடுவுல அதுக குளிச்சு, சுத்தமா உடுத்தி, வழிச்சுச் சீவி, திருத்தமா இருக்கும் பாருங்க. ஆத்தி, வீட்டுக்கு ஒரு தெய்வம் வாசல்ல வந்து ஒக்காந்திருக்க மாதிரி கண் கொள்ளாக் காட்சி. இப்பிடி ஒரு ஒலகமும் பளிச்சுனு இருக்கு. இன்னொரு பக்கம் இப்ப பொட்டப் புள்ளைகளக் கொஞ்சிக் கொஞ்சி வளக்குறாக. இன்னொரு எடத்துக்கு கட்டிக் குடுத்துட்டோம்னா அப்புறம் அது வாழ்க்க பூராம் நல்லது கெட்டது பாத்துத் திரியப்போகுதுக. அதுனால இங்க இருக்க மட்டும் ராசாத்தி கெணக்கா இருக்கட்டும்னு வளக்குறாக. நல்லதுண்ணே! அது அந்தந்த ஆத்தாக்காரி' தான் பட்ட தும்பம் தன் மகளும் வேணாம்'னு வேண்டிச் செய்ற விஷ சந்தோஷம்!

வீட்ட விட்டு வெளியே மாட்டாக. சமைக்க சொல்லித் தர மாட்டாக. புதுசா யார் வீட்டுக்கு வந்தாலும் ஓடி சமையக் கட்டுப் பக்கம் போயி ஒளிஞ்சு ஒக்காரச் சொல்லிக் குடுத்திருப்பாக. அத ஒரு பொம்ம கெணக்கா வெச்சிருப்பாக. அது மட்டும் தப்புண்ணே. அதுக்குத் தைரியம் குடுத்து வளக்கணும். நம்ம பயத்த அது மேல திணிச்சுப் பாக்கக் கூடாதுங்கறது ஏங் கட்சி!

இப்ப புள்ளைக சேல கட்றதில்ல. தாவணி உடுத்துறதில்ல. ஜீன்ஸ் பேன்ட்டு, ஒடம்பக் கோத்துப் புடிச்சவாக்குல டைட்டா பனியன் போட்டு பொட்டப் புள்ளைக அலையுதுக. தப்பில்லைங்கறேன். அவுக வெச்சிருக்கற கை பேக்குல ஒரு பாண்டி பசாரையே வெச்சிருக்காக. கண்ணாடி, பகுடரு, ஒதட்டுச் சாயம், கண்ணு மைனு நடமாடும் பேன்சி ஸ்டோரா இருக்காக. இப்பல்லாம் பொண்ணுக நிமிந்த வாக்குல என்னாங்குற'ங்கற ரேஞ்சுலதேன் இருக்காக. இதேன் சரி!

ஏஞ் சொல்லுதேன்னா, நா அறிஞ்சி தெரிஞ்ச மொத பொம்பள எங்க ஆத்தா! நா பாத்த நாள் மொதலா இன்னி வரைக்கும் அது அப்பிடியே சமையல இருக்கு. மாறவேயில்ல. ஆகாசத்துல நெலா போறதுக்கு முந்தி எந்திரிச்சி' என்னா இன்னுங் கூவாமக் கெடக்க?'னு சேவலயே எழுப்புற பொம்பள. அப்பிடியே வெந்நீத் தண்ணியப் போடறது, சட்டி பாத்திரம் கழுவறது, ஆரம்பிக்கிறதுனு பிஸியாயிரும். 'எலே எந்திரிங்கடா'னு அது எல்லா வேலையும் முடிச்சிட்டு எழுப்பறப்போ, 'இன்னுங் கொஞ்சம் தூங்கிக்கறேன்'னு கெஞ்சுவேன். ஏனா எனக்கெல்லாம் அது தேன் நடுச்சாமம்.

ஒழைக்கிறதுக்குனே பொறப்பெடுத்த மாதிரி ஒரு பெறவி எங்காத்தா. பெரிய வேலக்கார மவராசிண்ணே அது. வூட்ல இட்டிலிக்குப்போட்டாச்சுன்னா அது ஆட்டுக்கல்லுல உக்காந்து ' கொடக்கு கொடக்கு'னு மாவாட்ட ஆரம்பிக்கற சத்தத்துல மதுரயே மெரண்டு போகும். மாங்கு மாங்குனு மாவரச்சி, மாவரச்சி, காலையில சேவல எழுப்புன கையோட அடுப்புல இட்டிலி பானைய ஏத்தி அம்புட்டு பேருக்கும் ஈடு ஈடா சுட்டு வெச்சி, அம்மியில சட்டினி தொவையல அரச்சினு ஒத்த ஆளா நின்னு திருவிழாவ நடத்திப்புடும்ணே. ஆனா, இன்னிக்கு வசதி வாய்ப்புனு அம்புட்டும் வந்துருச்சு.

Vadivelu
Vadivelu

'ஏங்கூட மெட்ராஸ் வந்துரு. டீவியக் கீவியப் பாத்துகிட்டு வூட்ல படுத்துக் கெடனு கூப்பிட்டா கேக்க மாட்டேங்குது. வெந்நீத் தண்ணி போட வெறகடுப்பு தேஞ் சரினு இன்னும் வெறகு சொமக்கக் கௌம்புது. இங்க மெட்ராஸுக்கு கூப்புட்டு வந்து தங்க வெச்சேன். வீட்டுக் கதவச் சாத்தி வெய்க்கிறதே அதுக்குப் பிடிக்காது. ' யாத்தா! இங்கன அப்பிடிதேன். நாமதேன் கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்கணும்'னு சொன்னா ' போடா நீயும் ஒங்க ஊரும்'னு பொட்டியத் தூக்கிட்டுக் கௌம்பிருச்சு. ஒழைக்கச் சலிக்காத பொம்பள... ஆனா, ' எடம் மாறிப் படுத்தாலே தூக்கம் வராது'னு பழகிப் போயிருச்சு.

இப்ப ஊரு ஒலகம் போற போக்குல எல்லாத்தையும் அனுசரிச்சு, சகிச்சுக்கிட்டுத்தேன் வாழணும்னு புரியாத ஆத்தா. மதுரயில டவுன் ஹால் ரோட்ல நிப்பாட்டி ரெண்டு சுத்து சுத்தி விட்டோம்னா கண்டுபிடிச்சு வரத் தெரியாது. அப்பிடி ஒரு அப்புராணி அம்சம்!

இன்னிக்கு ஆணும் பொண்ணும் சமம்னு ஐ.நா. சபையிலயே சொல்லிட்டாய்ங்க. வீட்டுக்கு ஒழைக்க ஆம்பளைக்கு முன்னால பொம்பள வேலைக்குப் போயி வருது. இன்னாரு சம்சாரம், இன்னாரு மக, இன்னாரு மருமகங்கறது மட்டுமே இன்னிக்கு அட்ரஸ் கெடையாது. எல்லாருக்கும் தேவை இருக்கு. தெறமை இருக்கு. ஒழைக்க உறுதி இருக்கு. ' வாசத் தெளிச்சிக் கோலம் போடற பழக்கமெல்லாம் பாதி பேருக்கு மறந்தே போச்சு. கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்டிடறாக... ' அப்பிடி இப்பிடினு சும்மாக் காமெடிக்கு கேலி பேசிச் சிரிச்சுக்கலாமே தவிர, அவுகளக் கும்பிடணும்ணே! ' பாட்டாளி படத்துல நா பொம்பள வேஷங் கட்டி நடிச்சேன்ல. அது எங்கூர்ல நா பாத்த ஒரு அக்கா வோட கேரக்டருதேண்ணே. கருவேல மரத்துக்கு தாவணி கெட்டுனது கெணக்கா அப்பிடியே கருகருனு ஒரு உருவம். ஒலக்கை கெணக்கா அது கை கால் வீசி தெருவுல நடந்து வந்தா எதுத்தாப்ல படுத்துக் கெடக்கிற மாடுகளே மெரண்டு எந்திரிச்சு நிக்கும். ஒடம்புதேன் அப்பிடி. ஆனா மனசு கொழந்த... கடைசி வரைக்கும் கல்யாணமாகாத அந்த அக்கா அத்தன புள்ள களையும் தாம் புள்ளையா பாவிச்சுக் கொஞ்சிச் சீராட்டுன அழகு இன்னுங் கண்ணுக்குள்ளயே நிக்குதுண்ணே.

ஆனா எறங்கி அடிச்சுச்சுன்னா செவுளு கிழியும். அது கடைக்குப் போய் வாறப்ப, டீக்கடையில உக்காந்திருந்த ஒரு பய சாட மாடையா

என்னவோ கேலி பண்ணிப்புட்டான். அம்புட்டுதேன். அப்பிடியே கையில வெச்சிருந்த பொட்டியை வெச்சி அவனப் போட்டு பிரிச்சி மேஞ்சிருச்சு. ' யாத்தே... யப்பே'னு அவன் கதறிக்கிட்டு ஓட ஓட, அக்கா வெரட்டி வெரட்டி அடிச்சத

ஊரே பாத்து வெலவெலத்துருச்சு. மொறத்தால புலிய வெரட்டு பொம்பளையாளுகளும் இருந்துருப்பாகனு நானும் நம்பினது அன்னிக்குத்தேன்!

- வருவேன்

(13.02.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)