
நடந்தா ஊர்வலம், நின்னா கலவரம்'னு அப்படி திரிஞ்ச பயேன்னா...
ஆத்தி.... இந்தப் பாட்டக் கேட்டா இப்பவும் மனசு தட்டாமால சுத்தும்ணே! ' ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் பொன்மாலை மயக்கம் ' - னு டொக்டொக் டொக்டொக்னு குருத வண்டியில வாத்யாரு, சரோசாக்காவ ஒரு சைஸா அணச்சுக்கிட்டே பாடுவாரு. அவருக்கெல்லாம் அவங்க ஆத்தா கண்ணு மையி வைக்கறதுக்குப் பதிலா மச்சத்த அரச்சிப் பூசிருக்கும் போல. நாமெல்லாம் நெறமே கண்ணு மையி கலருதானே!
'நடந்தா ஊர்வலம், நின்னா கலவரம்'னு திரிஞ்ச பயதேன். இருந்தாலும் பாறையிலயும் சும்மா கும்முனு பூ பூத்துரும்ல. அப்பிடி நமக்குள்ளயும் லவ்ஸு எட்டிப் பாத்த காலம் ஒண்ணு இருக்குண்ணே.
அந்தி சாஞ்ச வாக்குல அலங்கரிச்சிக்கிட்டு கொமரிக கும்மிக்கு நாங்க கெளம்புவோம். தலையில் குருவி கூடு கட்டுன மாதிரி அம்சமா தண்ணி தொளிச்சு முடிய ஒதுக்கி, இல்லாத மீசய திருவி முறுக்கி, பப்பளானு பகுடரு அப்பி, பரிவட்டங் கட்டுன எளவட்டம் கெணக்கா கௌம்பிருவோம். தேருக்குப் பதிலா சைக்கிளு... அம்புட்டுதேன்.

தெப்பக் கொளம், மீனாச்சியம்மங் கோயிலுனு எங்கனயாவது பட்டறயப் போட்டு, கொளத்து மீனுகளுக்கு பொறியாட்டமா கொமரிகளுக்குலுக்குகள வீசுவோம். எம்.ஜி.ஆரு. ஸ்டைல்ல ஒதட்டக் கடிச்சுக் கண்ணச் சிமிட்டி, வெரலச் சொடுக்கி ஃபுல் ரொமான்ஸு குடுப்போம். ஏரியா விட்டு ஏரியா போயி எளமத் திருவிழா நடத்துவோம். அப்பிடி ஒரு கொழாயடிக் காதலச் சொல்லட்டுமா!
கொழாயடியில தண்ணி புடிக்க கொடந் தூக்கி கொமரிக வாறதும் போறதுமா சாயந்தரமானா சாமி தரிசனந்தேன். நாங்க எளந்தாரிக அம்புட்டுப் பயகளும் பளிச்சுனு சட்ட, துவச்சி வெச்ச அப்பன் வேட்டியக் கட்டிகிட்டு திருட்டு மொசலாட்டமா மூஞ்சத் தூக்கின மேனிக்கு ஒலாத்தி சிக்னல்கள வீசுவோம். அப்பிடியே அங்கிட்டு ஓரமா ஒரு கட்டச் சொவத்துல எடம் புடிச்சு ' ஆஹா.... மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்? ' னு ரவுசா பாட்டுப் பாடி அருளேத்துவோம்.
ஏழெட்டு கொடந் தூக்கற கொமரிக, எங்க அளும்புக தாங்காம ஒத்தக் கொடத்தோட வீட்ல இருந்துக்கிருவாக. ஒரு பொண்ணு இருந்துச்சுண்ணே. சளைக்காம இருபது முப்பது கொடந் தூக்கும். கொடத்த அப்பிடி இடுப்புல வெச்சி கழுத்த ஒரு வெட்டு வெட்டி எங்க அம்புட்டுப் பயகளுக்கும் பொதுவா ஒரு லுக்க வீசும்ணே. பார்ட்டிக்கு அப்பிடியே ' வாம்மா.... மின்னல் ' கண்ணு! அது என்னா ஒரு பார்வையோ, எவன் எதுக்க பாத்தாலும் ' ஆத்தாடீ அது நம்மளத்தேன் பாக்குது'னு மனசுல மத்தாப்பு கொளுத்திருவாய்ங்க. நானெல்லாம் கொஞ்சம் ஓவரா வாண வேடிக்கையே வுட்டேன்.
எவனும் எவனுக்குஞ் சொல்லல. எல்லாரும் காதலாயிட்டாய்ங்க. கூட்டணியே கெடையாது... ஆளாளுக்கு சுயேச்சையா மனு தாக்கல் பண்ணத் தயாராயிட்டாங்க. ' செம தாக்கல் ' இருக்குனு எவனுக்குத் தெரியல. அவனவனுந் தனித்தனியா அந்தப் புள்ளைய ஃபாலோ பண்ணிக் காதலச் சொல்லிட்டிருக்காய்ங்க.
அதுவும் காதல் பொயலுதேன்! அம்புட்டுப் பயகளுக்கும் ரம்பா லுக்கைக் குடுத்து 'ரோசிச்சுச் சொல்றேன்'னு ஒரே பஞ்ச் டயலாக்க சொல்லிருக்கு. நமக்கு அடிதடி சடுகுடுன்னாதேன் தெகிரியம் ஊத்தெடுக்கும். இங்கிலீஷு மாதிரியே இந்த லவ்ஸ்லயும் நாம கொஞ்சம் வீக்குதேன். லுக் விடறதோட சரி. நா மட்டும் காதலச் சொல்லல. ஆத்தி... அதுக்கெல்லாம் படக்குனு தைரியம் வர்லே!
ஒரு நா வழக்கம் போல கட்டச் சொவத்துல டாப்பைப் போட்ருக்கோம். அந்தப் புள்ள வந்துச்சு. மொத கொடந் தூக்கிட்டு ஒரு நமுட்டுச் சிரிப்போட அங்கிட்டு சந்துப் பக்கம் திரும்பி கைய ஆட்டி சிக்னல் கொடுத்துட்டு விடுவிடுனு போய்க்கேயிருக்கு. அம்புட்டுதேன்.... சந்துக்குள்ள இருந்து அவனவன் அப்பன், ஆத்தாளை எல்லாம் கெட்ட வார்த்தையில திட்டிக்கிட்டே பத்துப் பதினஞ்சி பேரு! சுதாரிக்கறதுக்குள்ள சுனாமியா சுத்தி வளச்சி தவிலடிக்க ஆரம்பிச் சிட்டாய்ங்க. ' பட்டாளத்தாஞ் சொத்துலயே கண்ணு வெக்கப் பாக்குறீங்களாடானு கேட்டுக் கிட்டே உருட்டியெடுக்கறாய்ங்க. ஆளாளுக்கு கெடச்ச அடிய வாங்கிட்டு தெறிச்சி ஓடறாய்ங்க. நானெல்லாம் அப்பாவிண்ணே. பாத்த பாவத் துக்கே பத்து போடற அளவுக்கு மாத்து மாத்துனு மாத்திட்டாய்ங்க. எவனும் ஒரு வாரத்துக்கு வெளிய தலயக் காட்டாம தல மறைவு. அப்புறந்தேன் தெரிஞ்சது அந்தப் புள்ளையோட மாமங்காரன் பட்டாளத்துல இருக்கானாம். லவ்வுக்காக மிலிட்டரியே தாக்குன ஆளுங்கண்ணே நாங்க!

அதெல்லாம் வெடலப் பருவத்துல! அப்புறம் நம்ம வாழ்க்கையில இந்த லவ்வு கிவ்வெல்லாம் வரல. பசியும் பட்டினியுமாக் கெடந்து பொழப் புக்குப் போராடவே பொழுது சரியா இருந்துச்சு.
இப்பல்லாம் ஆணும் பொண்ணும் பேசறது பழகறது அதிசயமில்லண்ணே! அம்புட்டும் ஜோடி போட்டு பைக்குல டர்ர்ர்ர்ருனு போய்க்கே இருக்குதுக. ஒருத்தருக்கொருத்தர் நல்லாப் பழகி புரிஞ்சிக்கிறாக. காதல், நட்புனு தனித் தனியாப் பிரிச்சுப் பாக்குறாக, நாமள்லாம் ஒரு பார்வ பாத்ததுக்கே புத்தூரு கட்டுப் போட்டு அலைஞ்சோமேடானு பொறாமையா இருக்குண்ணே.
என்னக் கேட்டா கண்ணாலத்துக்கு அப்புறந்தேன் நெசமான காதலே ஆரம்பிக்குது. சந்தோஷம், துக்கம்னு எல்லாத்தையும் பாத்து ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா அன்பு செலுத்தறது இருக்கே.... அதேன் காதலு!
ஒண்ணா மண்ணா இருந்து ஒரு புள்ளயப் பெத்து, அதுக்கு அப்பப்போ ஈரத் துணிய மாத்தினு ஒரு வாழ்க்கை வரும்ல. அப்ப நடுச்சாமத்துல புள்ள திடீர்னு அழும்போது ' யாத்தா... நீ ஒறங்காத்தா'னு பொஞ்சாதிட்ட சொல்லிட்டு, கண்ணு முழிச்சி புள்ளயத் தூக்கக் தூக்குறப்போ கலக்கத்துல அந்தம்மா கண்ணுல ஒரு சின்னச் சிரிப்பு தெரியும் பாருண்ணே, அதேன் காதலு!
- வருவேன்
(20.02.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)