அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 17

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

மக்களோட மக்களா எத்தனையோ கேரக்டருங்க கலந்துருக்குது...

ள்ளிப் படிப்பு புட்டிப் பாலு.... அனுபவப் படிப்புதேன் தாய்ப் பாலு!

நமக்கெல்லாம் அனுபவந்தேன் மொதலு, அசலு, வட்டி அம்புட்டும். நா பண்ற கேலி, கிண்டலு, நக்கலு, நையாண்டி எல்லாமே அனுபவப் படிப்புதேன்! சுத்திமுத்தி நடக்கறத குறுகுறுனு பாத்தாலே போதும், காமெடி ஸீனா கரெக்ட் பண்ணிரலாம். மதுர மார்க்கெட்ல கொஞ்ச நாளு சோலி பாத்துக்கிருந்தப்ப வகவகயா வந்து போற மனுஷங்களப் பாத்துக்கிருப்பேன்.

கொய்யாப் பழக்கூடையோட வந்து ஒக்கார்ற அப்பத்தா, அரிமா வண்டி தள்ளிட்டு வர்ற ரவுசு பாண்டி, மல்லிலோடு ஏத்தி வர்ற லாரி டிரைவர் மாணிக்கம்... போண்டா, வட, போளி கொண்டு வர்ற கந்தன் சித்தப்புனு ஆத்தீ.... அவுக அடிக்கிற கூத்தை உத்துப் பாத்தாலே பொழுது போயிரும்.

வெட்டி வசூலு பண்ற துக்குனே மார்க்கெட்டுக்கு ஒரு குரூப்பு வருவாய்ங்கண்ணே. வெள்ள வேட்டி - சட்ட, நெத்தியில விபூதி குங்குமம்னு பக்திப் பழம் கெட்டப்புல கக்கத்துல கைப்பை யோட ஒருத்தரு பவ்யமா வருவாரு. பக்க வாத்யமா பழ வாசனையோட மொரடா நாலஞ்சு பேரு. அப்பதேன் கடயத் தொறந்து லச்சுமி படத்துக்கு சூடங் காட்டிக்கிருப்பாரு ஒரு அப்பு.

Vadivelu
Vadivelu

வசூல் ராசாக்க வந்து நிப்பாய்ங்க. கைப்பையிலயிருந்து நாப்பது பக்க நோட்டு ஒண்ண உருகி டப்புனு முன்னாடி போட்டுட்டு, ' அப்பு கும்புட்டுக்கறோம். ஆத்தாவுக்கு திருவுழா வருது. கடையில முன்னூத்தியொண்ணு எழுதுனாக, ராவுத்தரே ரெண்டு நூறு குடுத்துட் டாரு. அப்பு உங்க பங்குக்கு இருவது தயிர் டின்னு வாங்கிக் குடுத்துருங்கனு இவரு பேசப்பேச ' தயிரு டின்னா? ' னு அப்பு ஜெர்க்காவாரு.

'உஷ்ஷ்.. இப்பவே கண்ணக் கட்டுதே'ங்கற மாதிரி பாத்துப்புட்டு,' வருஷத்துக்கொரு தரம்தானப்பா திருவுழா வரும். நீங்க வாராவாரம் சாமி கும்பிடுறேங்களேப்பா!'னு டென்ஷனாவாரு.' அப்பு.... அது நாகாத்தம்மன். இது அங்காள பரமேஸ்வரி. பாத்துச் செய்ங்க. என்னா பொறுப்பேத்துக்கிறீங்க?” ம்பாரு பக்தி பார்ட்டி. ' கட தொறந்து கல்லா பெட்டி தொறக்கற துக்குள்ள, இப்பிடி ஊர்வலம் வந்துர்றீங்களேப்பா, அதெல்லாம் சல்லிக்காசு கெடயாது. கௌம்புங்க அய்யா'னு அப்பு மொறச்சா, ஆட்டம் ஆரம்பிச்சிரும். ' ஏய்... என்னா பேச்சு பேசற?

ஏம்ப்பா, இவுருகிட்ட என்னா பேச்சு. நாளப்பின்ன கட நடத்த ணுமா வேணாமா? ' னு எகிறுவாம் ஒரு பக்க வாத்யம். ' அட, போதையில வார்த்த விட்றாதப்பா, அப்பு இங்கனக்குள்ள தொழில் பாக்குற ஆளு. ஒருத்தருக்கொருத்தர் மூஞ் சியப் பாக்கணும்ல'னு பக்தியாளு மறுபடியும் நோட்ட நீட்டுவாரு. அப்புவுக்குக் கொஞ்சம் கோபம், கொஞ்சம் பயம் வந்திருக்கும். ' ஏய்.... என்னா மெரட்டறீங் களா. எக்குத் தப்பாயிரும் ' பாரு. மோட்டா ஆளு முழுசா ஒரு அருவாள உருவி, ' இது வேற சனியன், முதுவுல அரிப்பெடுக்குது'ம் பான். ' எலேய், குடிகாரப் பயலே, இப்ப எதுக்கு பொருளைக் காட்றே, இப்ப அப்பு என்ன சொல்லிட்டாருனு வேகங் காட்றனு உசுப்பேத்துவான் இன்னொருத்தன்.

காலங்காத்தால ஸீன் போடறாய்ங் களேனு அப்புக்கு கிறுகிறுக்கும். ' போய்த் தொலைங்கடா'னு முப்பது நாப்பது ரூபாயத் தூக்கி வீசுவாரு. அவ்ளோ நேரம் வேகங் காட்னவய்ங்க மூஞ்சியெல்லாம் பல்லக் காட்டி, ' அப்ப வர்றோம் அப்பு! ' னுட்டுப் போவாய்ங்க.

இவிய்ங்க இப்பிடி கட கடய்க்கு ஸீன் போடறதுல எவனாச்சும் கடுப்பானான்னா, போட்டுப் பொங்க வெச்சிருவாய்ங்க. அப்புறம் இவிங்க அலும்பு தாங்காம, ஒரு நா மொத்த மார்க்கெட்டும் கம்ப்ளைய்ன்ட் பண்ணி, போலீஸு புகுந்து அந்த வசூல் குரூப்ப கொத்தா அள்ளி லாடங்கட்டி லங்கோட அவுத்து விட்ருவாக. இப்பிடி தெனைக்கும் எம்புட்டு காச்சி பாக்குறோம் நாம!

அட, எங்கூர்ல ரெண்டு நாளைக்கு ஏதாச்சும் டீக்கடையில உக்காந்து எந்திரிச்சா, ஒரு படத்துக்கே காமெடி ட்ராக் பிடிச்சிரலாம். செல பேரு இருக்காய்ங்க. பாய்லர அடுப்புல ஏத்தற நேரத்துக்கு கரெக்டா கடைக்கு வருவாய்ங்க. 'இன்னுமா பேப்பரு வரல? ' னுட்டே என்ட்ரி குடுப்பாய்ங்க.

'நாட்ல எவனத்தேன் நம்பறதுனு தெரியலப்பா. சாமியாரெல்லாம் பொசுக்கு பொசுக்குனு உள்ள போய்க்கேயிருக்காய்ங்க'னு அன்னிக்கு அரட்ட அரங்கம் ஆரம்பிக்கும். பேப்பரு வந்த வாக்குல தாவிப் பறிச்சு, ஊருக்கே கேக்குற மாதிரி செய்தி வாசிப்பாய்ங்க. ' கம்ப்யூட்டருக்கு வரி வெலக்கு! ஆமா உப்பு புளிக்கே துட்டக் காணோம் கம்ப்யூட்ட ருக்கு வரி வெலக்காம்'னு கருத்து வேற சொல்வாய்ங்க.

சுள்ளுனு வெயிலேறி கட பரபரப்பாகற வரைக்கும் அங்கனயே உக்காந்து வார்டு கவுன்சிலர்ல இருந்து மன்மோகன் ஜார்ஜ் புஷ்ஷு வரைக்கும் ' வாடா வாடா'னு கபடி ஆடிட்டு போறப்போ, ' ஒரு டீ ஒரு வட.. எழுதிக் கப்பா'ம்பாய்ங்க. மாஸ்டரு சுர்ருனு பாப்பாரு, ' என்னா எழுதறது, எழுதுன வரலாறே முன்னூத்தி சொச்சம் நிக்குது'னு சூடாவாரு. அரட்டப் புலி அப்பிடியே அமைதிப் பூனையா மாறி ' எங்க போப்போது, தர்றேனப்பா'னுட்டு எகிறிருவாரு.

டீக்கடையில நம்ம ஆளுங்க டீ காபி கேக்கற அழகே தனிதேன்!

'ஒரு டீ. சக்கர கம்மியா பாலு தூக்கலா'ம்பாய்ங்க. ' சக்கர தூக்கலா டிக்காஷன் திக்கா'ம்பாய்ங்க. ' காபி தொண்டையில கசக்கணும்யா'னு கேப்பாய்ங்க. ' நொரையோட, ஆடையில்லாம! ' னு ஒரு கிளாஸு டீ, காபியிலயே இம்புட்டு ருசி தேடறது நம்ம ஆளுகதேன்!

மக்களோட மக்களா எத்தனையோ கேரக்டருங்க கலந்துருக்குது. அதை எல்லாம் பாத்துப் பாத்து படத்துல வைக்கறது தேண்ணே நம்ம காமெடி!

இப்ப வரப்போற ஒரு படத்துல நாய் புடிக்கிற கேரக்டருனு ஒரு ட்ராக்கு புடிச்சிருக்கேன். ஓப்பன் பண்ணினா பாண்டி பஜாரு.... காக்கிச் சட்ட - டவுசர்ல கையில கம்பிய வெச்சுகிட்டு நாலஞ்சு ஆளுகளோட சேந்து ' புட்றா.... பக்கிய அமுக்குடா'னு சவுண்டு குடுத்துக்கே ஓடிக்கிருப்பேன். முன்னாடி நாலஞ்சு நாய்க, வெறி எடுத்து ஓடுங்க. அப்டியே அங்கனக்குள்ள இருக்கற ஓட்டல்ல நாயிங்க பூந்துரும்.

Vadivelu
Vadivelu

சாம்பார் வாளியில வுழுந்து, சாப்பாட்டு தட்டுலயெல்லாம் பொரண்டு, தின்னுக்கிருந்த சனமெல்லாம் தெறிச்சி ஓடுவாக. கடைசியா உருண்டு பொரண்டு நாய்கள அமுக்கி வண்டி யில ஏத்தி, ' யாருகிட்ட? நாங்கள்லாம் ஜார்ஜ் புஷ்ஷூ வூட்டு நாயையேக் கட்டி வெச்ச பயக! ரே... ரே'னு கௌம்புனா, பாதிச் சாப்பாட்டுல பதறி எந்திரிச்ச பயக அத்தன பேரும் எங்கள வெரட்டிக் கிருப்பாய்ங்க!

அப்புறம் பாத்தா பெரிய பெரிய பணக்கார வூடுக வாசல்ல போய் கம்பியோட நின்னுக்குவோம். பொசு பொசுனு எட்டிப் பாக்குற நாய்கள அமுக்கித் தூக்கிட்டு ஓடிருவோம். அப்புறம் அந்த நாய் ஓனர்கிட்டே நாங்களே அந்த நாயப் புடிச்சுத் தர்ற மாதிரி மெரட்டி உருட்டி, ப்ளாக் மெயில் பண்ணி காசு புடுங்கு வோம்.

ஒரு நா ஒரு வூட்டுல அதே மாதிரி நாயப் புடிச்சி வெச்சிருவோம். தேடி வர்ற வூட்டுக்காரர்கிட்ட ' லைசென்ஸ் இல்லைல... அமௌண்ட்ட வெட்டிட்டு, குட்டியக் கொண்டு போ... என்னா பாக்குற? ' னு போட்டுத் தாளிப்போம்.

அவரு ரொம்ப அமைதியா, ' நாஞ் சொல்ற எடத்துக்கு நாளைக்கு வாங்க, காசு தர்றேன் பாரு. கே - னு மறு நா அவரு சொன்ன எடத்துக்குப் போனா அது கோர்ட்டு! மொத நா நாங்க மெரட்டுன ஆளுதேன் ஜட்ஜு, புடிச்சுப் பெரிய அமௌன்டா ஃபைன் போட்டு என்னைப் பின்னி பிரிச்சிருவாய்ங்க.

கடைசியா அதே பாண்டி பஜாரு... அதே கெட்டப்பு.... நாங்க ஓடிக்கிருப் போம். அஞ்சாறு நாய்க எங்களத் தொரத்திக்கிருக்கும். அம்புட்டும் எங்ககிட்டயிருந்து மிஸ்ஸான நாய்க. கூடிப் பேசி சதித் திட்டந் தீட்டி பழிவாங்க தொரத்திக்கிருக்கும். ' அண்ணே... ட்ரிப்ளிகேன்ல ரெண்டு நாய மிஸ் பண் ணோம்ல. சைதாப்பேட்டை யில ஒண்ணக் கோட்ட வுட்டம்ல'னு ஓடிக்கிட்டே கணக்கு சொல்லுவாய்ங்க நம்ம கூட்டாளிக!

இப்பிடி பாக்கற கேரக்டர் கள்ல நம்ம கற்பனையக் கொஞ்சம் கலந்துவுட்டு அடிச்சா அது தேம்னே - காமெடி. சும்மா அறிவுர சொல்லாம, பெரிய மனுஷங் களக் கேலி பேசாம அப்பாவியா நம்ம வெகுளித் தனத்த வெளிச்சம் போட்டுக் காட்டுனா எல்லாரும் ரசிப்பாக! எல்லாத்துக்கும் மேல மதுர பாஷ! கொஞ்சுனா மட்டுமில்ல கோபப் பட்டாக் ராகம் போட்டு திட்டறவய்ங்கண்ணே மதுரக்காரய்ங்க. ' ரொம்ப ஆடாதடா! காலம் முடிஞ்சா காலக்கரைக்குப் போயிச் சேந்துருவே!'னு பெருசுக வய்யும். அட, சுடு காட்டக் கூட காலக்கரனு சொல்றதுல எம்புட்டு அழகு, அர்த்தம் இருக்கு பாருங்க!

எனக்கெல்லாம் சோறு போட்டு கொழம்பு ஊத்தி, தொட்டுக்க கடிச்சுக்க வெஞ்சனமும் வெச்சது மதுர பாஷதேண்ணே!

- வருவேன்

(27.02.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)