அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 18

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனோட இளைமைக் காலம்தான் சொகமான காலம்..!

பாட்டுன்னா எனக்கு உசுருண்ணே! நம்மூர்லதேன் புள்ள பொறந்தாலும் பாட்டு, எழவு விழுந்தாலும் பாட்டுனு பூராம் பாட்டுக்காரப் பயகளாச்சே!

நானெல்லாம் அப்பிடிப் பாட்டுகளாக் கேட்டு, ஆடிப் பாடி வளந்த பயண்ணே! அப்பல்லாம் கிராமபோனு பாப்புலரு. பெரிய மனுஷய்ங்க வீட்ல வெச்சிருப்பாக. ஒரு வட்டத் தட்டு... அதுல நீளமா ஒரு முள்ளு வெச்சிக் கீறி ஓடவிடுவாய்ங்க. சும்மா பேத்தனமான சைஸுல இருக்க ஊமத்தம் பூ மாதிரி பித்தளையில ஒரு கொழாய் ஸ்பீக்கரு நீட்டிக்கிருக்கும். 'வதனமே சந்த்ர பிம்பமோ'னு அது கொரலெடுத்துப் பாடுச்சுன்னா, அப்பிடியே ஒடம்பெல்லாம் சிலுத்துக்கும். 'உள்ள ஆரோ ஒரு பெருங்கொண்ட பாகவதரு ஒக்காந்து பாடிக்கிருக்காரப்போய்னு செல பெருசுக கதையடிக்கும். சின்னப் புள்ளைக நாங்களும் அத ரொம்ப நாளைக்கி நம்பிக்கிருந்தோம்ணே. என்னிக்காவது ஒரு நா அந்த பாகவதரு திங்க உங்க, தங்க வெளிய வந்தா பாத்துப்புடலாம்னு ஆச ஆசயா காத்துக்கிருந்த காலமெல்லாம் உண்டு. அப்பல்லாம் ஒரு தீப்பெட்டி, அதுல ஒரு எட்டணாக் காசு, ஒரு குண்டூசி, நெசமாவே ஊமத்தம்பூவுனு எல்லாம் வெச்சி, நாங்களே ஒரு கிராமபோனு பொம்மை ரெடி பண்ணி பக்கத்துல உக்காந்து ' காயாத கானகத்தே'ல ஆரம்பிச்சு, ' பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே வரைக்கும் பாடி பட்டயக் கௌப்புவோம்.

Vadivelu
Vadivelu

எங்கனயாவது கும்பாபிஷேகம், கூழ் ஊத்தறோம்னு மேட போட்டாய்ங்கன்னா ஏறிப்புடுவோம்ல. 'ஏறாத மலைதனிலே வெகு ஜோரான கௌதாரி ரெண்டு'னு ராகத்தப் போட்டோம்னா அத்தன பேருக்கும் தூக்கம் போயிரும்,

'சின்னக் குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா'னு பாடிக்கிட்டே டான்ஸ வேற போட்டு டார்ச்சரு பண்றது. ஓரஞ்சாரமா ஒதுங்க வந்தவய்ங்களெல் லாம் 'ச்சு.... ச்சு... நல்லாத்தேன் பாடறானப்பா'னு ஏத்தி விட்டுப் போயிருவாய்ங்க. மனுசப் பயலுக்கு அதுல ஒரு ஆனந்தம்.

'நீயெல்லாம் மொறயா பாட்டு கீட்டு கத்துக்கிட்டா எங்கியோ போயிருவே'னு ஆளாளுக்கு உசுப்பேத்திவிட, நானும் நம்பி, மேலவீதியில ஒரு சங்கீதக்காரரு வீட்டுக்கு ஓசித் தாம்பாளம் வாங்கி மல்லிப்பூ, மாம்பழம், வெத்தல, பாக்குனு வெச்சி பதினோரு ரூவா காணிக்கை யோட போயிக் கதவத் தட்டிப்புட்டேன் அத்தாந்தண்டி உருவத்துல ' யாரூ? ' னு வெளிய வந்தாரு ஒரு பெரியாம்பள. அள்ளி முடிஞ்ச கொண்டையோட வெள்ள வேட்டி வெத்து ஒடம்போட ' அன்னியன் ' விக்ரமு கெணக்கா வந்து நிக்குறாரு. 'குருசாமீனு டுபீர்னு அவரு கால்ல விழுந்தேன்.

அப்பல்லாம் கறுகறுனு ஒட்டடக் குச்சியாட்டமா, களவாணிப்பய அம்சமா மூக்கும் முழியுமாத் திரிவோம்ல. ' என்னவோய்? ' னு வெசாரிச்சவர்ட்ட ' பாட்டுக் கத்துக்கணும் சாமீ! ' ன்னதும், ' இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை? ' ங்கறது மாதிரி அப்பிடியே மேலுங் கீழுமாப் பாத்தாரு.

ஒரு வழியா கெஞ்சி உள்ள போயி உக்காந்துட்டேன். 'சரி, ஏதாவது பாட்டு பாடுப்பா'ன்னாரு. ' நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றான். அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை, இந்தக் கன்னம் வேண்டும் என்றான்னு எடுத்து வுட்டதும் பதறிட்டாரு பெரியவரு. அபிஷ்டூ....பகவானப் பத்தி பாடுடா! ' ன்னாரு. எடுத்துவிட்டேன் இன்னொரு சரக்கை.... ' குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம். அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம், வண்டாட்டம்... ' னு பத்துப் பதினைஞ்சு கட்டைக் குரல்ல பாட ஆரம்பிச்சதும், ' வெளங்கிரும்டானு ஒரு பார்வ பாத்தாரு பெரியவரு. இது கூத்து சொல்லித் தர்ற எடம் இல்லை. சங்கீதம் பழகற இடம். சரஸ்வதி குடியிருக்கிற இடம். புரியுதா நோக்கு! ' னுட்டு மக்கா நாளு வரச் சொல்லிட்டாரு.

சும்மா சொல்லக் கூடாது. அப்பிடியே அவர் நாக்குல சரஸ்வதி நட்டுக்குத்தலா டான்ஸ் ஆடும். பிரமாதமாப் பாடுவார்.

'ஸா... ரீ... க... ம... ' னு பாடத்த ஆரம்பிச்சாரு. ' அய்யய்யே, என்னா இது எழுத்துக் கூட்டிப் பாடுறாய்ங்க'னு எனக்குனா ஒண்ணும் வெளங்கல. ' சாமீ, கொஞ்சம் வேகமாப் பாடலாம்ல'னு நான் எதையாச்சும் கமென்ட் அடிக்க, என்னோட அந்த வகுப்புல ஒக்காந்திருக்க ரெண்டு மாமி வீட்டுப் பொண்ணுக களுக்குனு சிரிச்சுக்கும். இதோ செத்த வந்துர்றேன்'னு அவர் எந்திரிச்சு உள்ள போனா, நான் அந்த ஆர்மோனியப் பொட்டிய வாசிக்கிற மாதிரி பாவன பண்ணி, ' பச்சைக் கிளி முத்துச் சரம் முல்லைக் கொடி யாரோ.... சரிகம பதநிஸ பச்சைக் கிளி'னு எதாச்சும் லந்துவிட்டு, எல்லாரையும் கெக்கேபிக்கேனு சிரிக்க விட்ருவேன்.

Vadivelu
Vadivelu

ஒரு நா பாகவதரு வெளிய போயிருந்தாரு.... வீட்ல முன்னாடி பொட்டி ரெடியா இருந்துச்சு. எடுத்தேன். ' ஆங்... க்கும்... சித்தாட கட்டிக்கிட்டு சரி கம கம.... சிங்காரம் பண்ணிக்கிட்டு பத நிஸ நிஸ... மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி மயிலாடவந்தாளாம்..... பாடுங்க கொழந்தைகளா! ' னு பெரியவர் குரல்ல மிமிக்ரி பண்ணி அலப்பறையக் குடுத்துக் கிருந்தப்போ வக்குனு என் முதுவுல ஒரு மிதி!

சண்டாளா! நீ இப்படிப் பண்ணுவேனு நேக்குத் தெரியும்டா... ' - சிவுசிவுனு செவந்த மொகமாயிட்டாரு பெரியவரு. விட்டா சொத்த வித்து கேஸு நடத்தி எனக்குத் தூக்குத் தண்டன வாங்கிக் குடுத்துட்டு தேன் விடுவாரு போல தெரிஞ்சதுல்ல... நா அப்பிடியே எகிறிட்டேன். அப்பறம் அந்தத் தெரு பக்கம் தல வெச்சே படுக்கறதுல்ல.

எனக்கெல்லாம் நெசமான பாட்டு வாத்தியாரு எங்க அப்பத்தாவும் எம்.ஜி.ஆருந்தேன்! எதுக்கெடுத்தாலும் பாடியே வண்டியோட்டுன சீவன் எங்க அப்பத்தா. 'ஏ ராசா... தெவுட்டாத தேங்கருப் பட்டியா ஓம் பேச்சு, மனசரிக்கும் மங்கரயான் போலப் பார்வ'னு அவுக புருஷனாரு பத்தி பாட ஆரம்பிச்சுதுனா உருக்கி எடுத்துப்புடும்.

ஏரியால எங்கியாவது எழவு வுழுந்தா அப்பத்தாதேன் சீப் கெஸ்ட்டு. செத்துப்போன மகராசனப் பத்தி அது இஷ்டத்துக்கு ஒரு பாட்ட எடுத்துவிடும் பாருங்க, ஆகா! ' ராசா நீ நடந்து வந்தா சிங்கக்குட்டிக செதறியோடும், தர்மம்னு வந்து நின்னா தங்கக்கட்டி ரெண்டு விழும்'னு... அடேங்கப்பா!

ஒத்தப் பாட்டுல எட்டு சீரியலு ஓட்டிப்புடும்ணே. அப்பத்தாகிட்டதேன் ஊரு நாட்டுப் பாட்டெல்லாம் படிச்சேன் நானு. இன்னிக்கும் எங்கொரலு ஒலகத்துக்கே தெரியும்னா, அதுக்கு அந்த அப்பத்தாவும் காரணம்ணே!

அப்புறம் வாத்தியாரு! இப்பவும் எங்கியாவது 'ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ... 'பாட்டு கேட்டுச்சுனா, அப்பிடியே செத்த நேரம் செலையா நின்னுருவேன். தத்துவம், தைரியம், வீரம், காதலுனு வெளுத்து வாங்குன மகராசனாச்சே!

பாட்டுக்கு மட்டும் ஒரு தனிக் கொணம் உண்டுண்ணே. மனசுக்குப் பிடிச்ச எந்தப் பாட்டைக் கேட்டாலும் அதை முதல்ல எப்போ கேட்டோமோ அந்தக் காலத்துக்கே கூட்டிப் போயி கொஞ்ச நேரம் கொஞ்சிட்டுத்தேன் விடும். அதுனாலயே நான் வீட்ல, கார்லனு எங்கியும் என் மனசுக்குப் புடிச்ச பழைய பாட்டுக்களாக் பாடிக்கிட்டடுகிருப்பேன்.

ஒவ்வொரு மனுஷனுக்கும் பாத்தே அவனோட சொகமான பால்ய காலந்தேன்!

- வருவேன்

படங்கள் : சு.குமரேசன்

(06.03.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)