அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 19

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

“தேர்தல்ல கூட மதுரயில ஜெயிக்கிற கச்சிதான் கோட்டயப் புடிக்கும். அப்பிடி ஒரு ரசனக்காரங்கண்ணே மதுரக்காரன்..!”

சிக்கிறது.... ருசிக்கிறது ரெண்டுலயும் மதுர மதுரதேண்ணே! ஜாக்கிசான் தொடங்கி ‘ காதல் ' கரட்டாண்டி வரைக்கும் எல்லாருக்கும் ரசிகர் மன்றம் வெச்சிருப்பாக. ' இளைய தளபதி விஜய் அவர்களின் நல்லாசியுடன்னு காதுகுத்துக்கே கலர் போஸ்டர் அடிச்சு ஒட்ற ஊரு.

எம்.ஜி.ஆரு - சிவாஜி ரசிகனுங்க ஒரு தலமொற, அப்புறம் ரஜினி - கமல்னு ஒரு கூட்டம், இப்போ அஜீத்து, விஜய்யு, விக்ரமு, சூர்யானு தெருவுக்குத் தெரு தீவிரவாதிக நடமாட்டம் ஜாஸ்தியா இருக்கும். ஏதாச்சும் புதுப் படம் ரிலீஸுனா ஊரு ரெண்டுப்படும். ' அண்ணாமலை ' ரிலீஸானா ரஜினி மாதிரியே வெள்ளை கலர் குர்தா- பைஜாமா, இடுப்புல துண்டு, நெத்தியில பட்டை, கழுத்துல கொட்டைனு தேன் வெளியவே வருவாய்ங்க. ' ஆளவந்தான் ' ரிலீஸ்னா மொட்டைத் தலை, கறுப்புச் சட்ட, பேன்ட்டு, தோள்பட்டைல பச்சை குத்திக்குட்டுத்தேன் பொறப் படுவாய்ங்க. அப்பிடித் தலைவனைத் தன் வீட்டுல ஒரு பொறப்பா நேசிக்கிற கூட்டம்.

Vadivelu
Vadivelu

இன்னிக்கு படம் ரிலீஸுனா ரெண்டு மாசம் முன்னாடியே வேலை ஆரம்பிச்சிரு வாய்ங்க. போஸ்டர் அடிக்கிறது, தோரணம் கட்றது, சொவர் வெளம்பரம் பண்றது, மைக் செட்டு கட்டிப் பாட்டுப் போடறது, ஏரியால அன்னதானம் பண்றது, சாரட்டு வண்டி, இல்லேன்னா யானையைப் புடிச்சு படப் பெட்டியத் தூக்கி வெச்சு ஊர்வலம் வர்றது, கட் - அவுட்டுக்குப் பாலபிஷேகம்னு ஒவ்வொருத்தனும் கடன உடன வாங்கி, ஆளுக்கு ஆயிரம் ரூபா செலவு பண்ற பயக. தனக்காக இப்பிடி உயிரைக் குடுத்து அலையற கூட்டம் இருக்கிறத எந்த நடிகரு வந்து நேர்ல பாத்தாலும் ரெண்டு நாளைக்குச் சோறு எறங்காதுண்ணே. அப்பிடியே நெக்குருகிப் போயிருவாக.

சினிமானு இல்லே அரசியல்லயும் அப்பிடித்தேன்!

தீப்பொறி ஆறுமுகம் மீட்டிங்னா அன்னிக்கு பக்கத்து தியேட்டர்லாம் டப்பா டான்ஸாடும். மைக்கைப் புடிச்சார்னா நவரசத்தையும் கலந்து காதுல ஊத்தற பேச்சு. அதுலயும் அவர் அப்போ எந்தக் கச்சியில இருக்காரோ அதுக்கு எதிர்க்கச்சில யாரு இருந்தா லும் போட்டுப் பொளந்துருவாரு.

இந்தப் பக்கம் காளிமுத்து மைக் புடிப்பாரு. எழுதப் படிக்கத் தெரியாத வனுக்கும் ஓசிக்கு எலக்கியம் சொல்லித் தர்ற வாத்யாரு. ' என் புரட்சித் தலைவ னின் கால் சுண்டுவிரலில் குண்டுமணி ரத்தம் வந்தாலும், எதிரிகளின் தலைகளை வெட்டித் தோரணம் கட்டுபவன் தான் எம்.ஜி.ஆரின் உண்மை யான தொண்டன்! ' னு அவர் பேசும்போதே கூட்டத்துல பாதிப் பேருக்கு ரத்தம் நெஞ் சுக்கும் மண்டைக்குமா ஏறிரும்.

அந்தப் பக்கம் கோயில், மன்றம்னு பட்டிமன்றங்க களகட்டும். குன்றக்குடி அடிகளார், அய்யா பாப்பையானு படிச்ச பெரியவங்க ராத்திரிக்கு தெருவோரமா சிரிப்புச் சோறு போடுவாங்க. வீட்டை விட்டு வெளிய வந்துட்டா சும்மா கேகேனு பொழுது போக்கா இருக்கும். எல்லாத்துக்கும் சிரிப்பான். கை தட்டுவான். இப்பிடிக் கொண்டாடிக் கொண்டாடியே சாதாரண ஆளுங்க பல பேர மீனாச்சியம்மன் கோயில் கோபுரத்துக்கு மேல கொண்டு போயி வெச்சு பெரிய மனுஷய்ங்களாக்கி அழகு பாக்குற ஊருங்க!

சும்மா ரெண்டு இட்லிக்கே ஏழெட்டு கலர்ல சட்னி தொட்டுக்கற ரசனைக் காரய்ங்க. ரோட்டோரமா அடுப்ப மூட்டி அரிக்கேன் வௌக்கு வெளிச்சத் துல புருஷனும் பொஞ்சாதியுமா இட்லி, தோச சுட்டு விப்பாக, தேங்கா சட்னி, மொளவா சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, சாம்பாரு, எண்ணப் பொடி, மட்டன், சிக்கன் கொழம்புனு தட்ட ரொப்பிட்டுப் பிடிச்சுப் பிக்கப் பண்ணிப் போய்க்கேயிருப்பாய்ங்க.

செல பேரு ரெண்டு இட்லிதேன் வாங்குவாய்ங்க. அதுக்கு அப்பிடியே சட்னியுஞ் சாம்பாருமா வாங்கி ரவுண்டு கட்டி அடிப்பாய்ங்க. 'யக்கா... கொஞ் சூண்டு கொழம்பு ஊத்து! இம்புட்டூனு சட்னி காட்டு, கொஞ்சம் சேர்வ போடறதுனு கேட்டுக் கேட்டு கொழப்பி அடிப்பாய்ங்க. கொறஞ்சது நாலஞ்சு ரவுண்டுக்காவது இட்லிக்குச் சேதாரமே இருக்காது. கடக்காரம்மா ' ம்க்கும்'னு கணச்சிக் காட்டும். புருஷங்காரரு கரண்டியால வாளில் தட்டிக் கோவம் காட்டுவாரு. நம்மாளுகளுக்கு மொளவாச் சட்னியத் தவிர வேற ஒண்ணும் ஒறைக்காதுல்ல.

இன்னொரு குரூப்பு இருக்கு. ராத்திரியானா இடுப்பு வேட்டியில பொட்டலமா இல்லேன்னா... அண்டர்வேர் பாக்கெட்ல பத்திரமா ரெண்டு கட்டிங்கோட வந்து பட்டறயப் போடுவாய்ங்க. ' அப்பூ.... ஒரு கிளாஸக் குடு! ' னு வாங்கி அப்பிடியே கொட கொடனு ஊத்தி, ஒரே மடக்கா கடகடனு அடிச்சிட்டு ' தூளு நெறையா போட்டு ரெண்டு ஆம்லேட்டு! ' ம்பாய்ங்க.

ஜில் ஜில் ஜிகர்தண்டா எங்க கெடைக் கும், பஜ்ஜி வட எந்தக் கடயில ருசியா இருக்கும், விசாலம் காபி குடிச்சாத்தேன் காப்பிக் கசப்பு அப்பிடியே நாக்குல நிக்கும், பெருமாள் கோயில்ல என்னிக்குப் பிரசாதம் நல்லா இருக்கும்னு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்க கொள்ளப் பேரு இருக்காய்ங்க.

பாண்டி கோயில்ல கெடா வெட்றோம்னு கூப்பிடுவாய்ங்க. ஆத்தீ... சொல்லும்போதே எச்சி ஊறுதுண்ணே. பொம்பளையாளுக அடுப்ப மூட்டி பொங்க வெக்க, ஆம்பளையாளுக அப்பிடியே பத்துப் பதினஞ்சடி தள்ளி சரக்குங் கையுமா பொங்க ஆரம்பிச்சிருவாய்ங்க. தண்ணி ஒரு பக்கம் பாய்ஞ்சிட்டிருக்கும். கண்ணு ஒரு பக்கம் மேய்ஞ்சிட்டிருக்கும். ' மாப்ள ஒங்க அக்காகாரிட்ட உங்கத் திங்க ஒறப்பா எதாச்சும் எடுத்து வரச் சொல்லு! ' னு சவுண்டு குடுப்பாய்ங்க. ஒரு தட்டுல நல்லி எலும்பு, தலக்கறினு பொம்பளையாளுக கொடுத்துக்கேருப்பாக.

Vadivelu
Vadivelu

'என்னா செக்கானூரணி சிலுக்கு, உங்க அக்காவ வெரட்டி விட்டுர்றேன். என்னயக் கட்டிக்கிறியா? ' னு சரக்கடிச் சிட்டே ஒரு பாவாட தாவணிக்கு ரொமான்ஸக் குடுப்பாரு கெடா மீச மாமா. ' வெந்த கறியத் திங்கவே பல்லக் காணோமாம். ஒனக்கு கல்ல மிட்டாய் கேக்குதோ? ' னுட்டு கொலுசுக் காலோட கொமரி ஓடும். அப்பிடியே கூத்துங் கும்மாளமுமா கூடித் திங்கிறதுக்குனே திருவிழா நடத்தி வாழ்க்கைய கொண்டாடற ஊருண்ணே!

பொடிசாய, மீனாச்சியம்மங் கோயிலு, மாரியம்மன் தெப்பக் கொளம்னு போனா சும்மா தெனம் திருவிழாதேன். டவுன் ஹாலுப் பக்கம் வேலை இருக்கோ இல்லியோ கூட்டம் கூட்டமா போயிக்கேயிருப்பாய்ங்க. மீனாச்சியம்மன் கோயிலோட நாலு பிரகார வீதியயும் சுத்துனா, சாமி கும்புட்ட மாதிரியும் மாதிரியும் ஆச்சு, சாயங்காலம் வாக்கிங் போன மாதிரியும் ஆச்சுனு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிற பயக.

இன்னிக்கும் வாரத்துக்கு ஒரு திருவிழா நடத்தற ஊருண்ணே. மதுரயில ஒரு படம் ஓடிருச்சுனா அது தமிழ்நாடு முழுக்க ஹிட்டுனு அர்த்தம். தேர்தல்ல கூட மதுரயில செயிக்கிற கச்சிதேன் கோட்டயப் புடிக்கும். அப்பிடி ஒரு ரசனக்காரய்ங்கண்ணே!

டி.வி, கம்பியூட்டருனு இம்புட்டு விஞ்ஞானம் வளந்த பொறவும் கூத்து, பாட்டு, கரகாட்டம்னு பழைய பொழுது போக்குகளுக்குப் பஞ்சமில்லாத ஊருண்ணே!

இம்புட்டு நல்ல ஊர ஆட்சி பண்றா எங்க ஆத்தா அன்னை மீனாச்சி!

ஆகவே வாக்காளப் பெருமக்களே! அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே, தங்கச்சிமார்களே, எங்களின் இனமானம் காக்க வந்த தமிழ்ச் சிங்கங்களே, உலக அதிசயமாம் அன்னை மீனாச்சிக்கு இன்டர்நெட்டில் ஓட்டுப் போட்டு, இன்டர்நேஷனல் லெவலில் ஆத்தா புகழைப் பரப்ப ஆதரவு தாரீர்.... தாரீர்... தாரீர்!

- வருவேன்

படங்கள் : சு.குமரேசன்.

(13.03.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)