அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 2

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

என் வாழ்க்கையைப் புடிச்சு, திருப்பி நல்ல திசை காமிச்சது கமல் சார்தாங்க.

நான் மெட்ராஸ் வந்த கதை தெரியுமுங்களா?

மதுரையில் ஒரு கல்யாணம். ராஜ்கிரண் வர்றார்னு சொன்னாங்க. அடிச்சுப் பிடிச்சு அவரைப் பார்க்க ஓடுனேன். வெளுத்த வேட்டி கட்டுன செவத்த சிங்கம் மாதிரி இருந்தாரு. ' என்ன தெரியும்? ' னு கேட்டாரு. டப்புடுப்புனு நாலு காமெடி பிட்டுகள எடுத்துவிட்டேன். அங்கிட்டும் இங்கிட்டும் பல்டியடிச்சுப் பாடுனேன். ' சரி சரி... ஊருக்கு வந்து பாருனு சொல்லிப்புட்டு காருல ஏறிப் போயிட்டாரு!

மெட்ராஸ் எந்தப் பக்கம் இருக்குனுகூடத் தெரியாது. நாம பாக்குற கலெக்டர் வேலைக்கு கையில துட்டும் கெடையாதே. சுத்திமுத்தி அத்தன பேர்ட்டயும் கையேந்துறேன்... ம்ஹூம், சுத்திச்சுத்தி காலு தொவண்டு போச்சு, முழி பிதுங்கிப் போச்சு. அப்புறம் வட்டிக்கு ரெண்டு சட்டியை வெச்சேன். 100 ரூபாய்க்கு 20 ரூபா பிடிச்சுக்கிட்டு 80 ரூபா குடுத்தாங்க. ஆத்தாவுக்கோ அம்புட்டு வருத்தம். அது சரி, பாண்டிய மன்னன் இப்புடி பஞ்சம் பொழைக்கப் போறானேனு நெனைச்சுச்சோ என்னவோ, ' இதை யாச்சும் தின்னுட்டுப் போடா'னு ஒரு பொட்டலம் காராசேவு கட்டிக் குடுத்துச்சு. அப்படியே அது கால்ல விழுந்து, துண்ணூறு பூசிப்புட்டு பொறப்பட்டேன்.

Vadivelu
Vadivelu

மாட்டுத்தாவணிப் பக்கம் ஒரு லாரிக்காரன் வந்தான். ' அய்யா, கையில காசு ரெம்பக் கிடையாது. மெட்ராஸ் போணும். தாம்பரத்தில் இறக்கிவிட்டாப் போதும். ஒத்தாசை பண்ணுங்கனேன். ' டிரைவர் பக்கத்துல ஒக்காரணும்னா 25 ரூபா, லாரி மேலே படுத்துக்கிட்டா 15 ரூபா'னாங்க. 10 ரூபா மிச்சம் பண்ணலாம்னு ஏறிப்போய், தார்ப்பாய் மேல படுத்துட்டேன். மேலூர் தாண்டறதுக்குள்ள குளிர் தாங்கல. சட்டைப் பையில வெச்சிருந்த காசைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட் டேன். ' வாழ்க்கையில ஜெயிக்கணும். இல்லேன்னா மெட்ராஸ்லயே செத்துரணும் '. அது ஒண்ணுதான் மனசுல நிக்குது.

சமயநல்லூர் பக்கம் லாரி ராத்திரிச் சாப்பாட்டுக்கு நிக்கும். லாரிக்காசை வழியில வாங்கிக்கிறேன்னு சொல்லி இருந்தாரு டிரைவர். நான் ஏதோ யோசனையில அப்பிடியே அசதியில திரும்பிப் படுக்க, எதிர்காத்துல சரசரன்னு என் சட்டைப்பையில இருந்த அத்தனை ரூபா நோட்டும், கண்ணு முன்னாடி பறக்குது. எக்கிப் புடிக்க நினைச்சா, நானும் சொட்டீர்னு கீழே விழுந்து, பரலோகத்துக்கு டிக்கெட் வாங்கிருவேன். ' அய்யோ, அய்யய்யோ'னு கத்துறேன். அழுகையா வருது.

சமயபுரம் வந்துருச்சு. துட்டு கேப்பாங்களேனு எனக்கு கண்ணுல தண்ணி கட்டிக்கிச்சு. ' அண்ணே, பணம் பறந்து போச்சுண்ணே'னு சொன்னா, பகபகனு சிரிக்கிறாங்க. ' அடடா, நம்பலையே'னு இன்னும் கண்ணீர் பெருகுது. கக்கத்துல மஞ்சப் பையோட, பாவமா நின்னேன்.

டிரைவர் நிதானமா என்னப் பாத்தாரு. என்ன நினச்சாரோ, ' வாடா, சாப்பிட லாம் ' னாரு - இல்லண்ணே'னு தயங்குனேன் ' அடச்சீ... வாடா'னு பக்கத்து இலையில ஒக்கார வெச்சு புரோட்டா வாங்கிக் குடுத்தாரு. விடியக் காலையில் தாம்பரத்துல இறக்கி விட்டப்போ, கையில அஞ்சு ரூபா குடுத்து அனுப்பி வெச்சாரு. இறங்கி நிக்கிறேன். அப்பிடியே கரகரனு கண்ணுல தண்ணி ஊத்திருச்சு.

இன்னிக்கு யோசிச்சுப் பாத்தாலும், மனசு நடுங்குது. அந்த டிரைவரு மட்டும் இப்போ எங்கியாச்சும் தட்டுப்பட்டார்னா, அவரு கால்ல விழுந்து கும்பிடணுங்க. முன்னப் பின்னே தெரியாத என்மேல கருணை காட்டுன அந்த மனசு, பக்குவம் இம்புட்டு வசதி வந்தும் எனக்கெல்லாம் வரலியேனு வருத்தமா இருக்கு!

அப்படியே பொடி நடையா ராஜ்கிரண் சார் ஆபீஸுக்குப் போயிட் டேன். ஒருவழியா செட்டாயிட்டேன். அங்கே நாந்தான் பபூன், ஜோக்கரு எல்லாமே. போடற சோத்தைத் தின்னுப்புட்டு, சொல்ற வேலை எல்லாத்தையும் செய்வேன். டீ வாங்கிட்டு வருவேன். கூட்டிப் பெருக்குவேன். சோறு வடிப்பேன். காய்கறி வெட்டுவேன். அப்பிடியே சினிமாவையும் கொஞ்சம் வேடிக்கை பாப்பேன்.

கொஞ்சம் கஷ்டந்தேன். பத்து ரூபாய்க்கு இட்லி வாங்கிப் பத்துப் பேர் திம்போம்.

அப்பத்தான் ராசாவின் மனசிலே ' ஆரம்பிச்சார் ராஜ்கிரண். அவரோடயே திரிவேன். இளையராஜா அண்ணன் பாட்டு போட்டுத் தாக்குறாரு... ' போடா போடா புண்ணாக்குனு. கேக்கும்போதே உடம்பு தன்னால ஆடுது. ஆனா, அந்தப்படத்துக்கு என்னை செலெக்ட் பண்ணலை. வேற ஒருத்தர் நடிக்கிறதா இருந்துச்சு. திடீர்னு அவருக்கு உடம்பு சரியில்லாமப்போக, என் பக்கம் பாத்தார் ராஜ்கிரண். ஆரம்பிச்சிருச்சு நம்ம ஆட்டம். " திறந்திருக்கும் கேட்டு, அது என்னுடைய ரூட்டு... வெடிக்குதொரு வேட்டு, அது பாவலரு பாட்டுனு பாடி ஆடறேன். அது உலகம் பூரா போகுது. படம் பிச்சிக்கிச்சு. ரோட்ல போனா, என்னையும் ஒரு புழுபூச்சியா மதிச்சு ஜனங்க திரும்பிப் பாக்குது.

மதுரைக்குப் போயிட்டேன். ஒரு தந்தி வருது... ' மெட்ராஸுக்கு உடனே புறப்பட்டு வா'னு. தந்தியடிச்சவர் பெயர் நடராஜன்னு போட்டிருக்கு. செத்துப்போன எங்கப்பாவோட பேரு. மெட்ராஸுக்குப் போடான்னு எங்கப்பாவே சொன்ன மாதிரியிருந்துச்சு. ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் சார் ஆபீஸ்ல டைரக்டர் ஆர்.வி. உதயகுமார் சார் இருந்தாரு. ' படம் பாத்தேன். உன்கிட்டே ஏதோ இருக்குடா'னு ' சின்ன கவுண்டர்'ல விஜயகாந்து சாருக்கு கொடை பிடிக்கிற் பண்ணையாள் வேஷம் குடுத்தார். உதயகுமார் அண்ணன் தான் பிரபு, கார்த்திக், கமல்னு என்னை பெரிய மனுஷங்களுக்கெல்லாம் அறிமுகம் செஞ்சு வெச்சாரு. அவரு எனக்கு ரெண்டாவது சாமி.

என் வாழ்க்கையைப் புடிச்சு, திருப்பி நல்ல திசை காமிச்சது கமல் சார்தாங்க. ' சிங்கார வேலன் ' படம் ஷூட்டிங் டைமு. அவர் பக்கத்துல நானும் ஒரு காமெடி வேஷம். என்னைப் பாத்துக்கிட்டே இருக்கார். அப்படியொரு ஆகிருதியான ஒரு ஆளை நெருங்கவே மனசு கூசுது. அப்ப நான் ஒரு சின்னப்பயதான... ஒரு நடிகரு என்னை சும்மா சும்மா அடி மிதிச்சுக்கிட்டே இருந்தாரு.

Vadivelu
Vadivelu

கமல் சார் டைரக்டரைக் கூப்பிட்டு ' இது என்ன சீன்? ஏன் அவர் இப்படிப் பண்றார்? ஒரு டைரக்டரா இதை எப்படி அனுமதிக்கிறீங்க? ' னு கோபமாக் கேட்டாரு. ' அவரு அப்படித்தான் சார்னு ஏதோ பதில் சொல்றார் டைரக்டர். கொஞ்ச நேரந்தேன்... கமல் சார் என்னைக் கூப்பிட்டாரு... ' உனக்கு என்னென்ன தெரியும்? ' னு என் மூஞ்சி யைப் பார்த்தார். ' ஆட்டம், பாட்டம் எல்லாமே கேள்வி ஞானந்தேன் சார். சும்மா குழாய்ல பாட்டுக் கேட்டு அப்பிடியே ஆடுறது பாடுறதுனு திரிவேனுங்க'னேன். ஒரு செகண்டு சிரிச்சார். ' நான் ஒரு படம் பண்றேன். அதுல ' இசக்கி'னு ஒரு காரெக்டர் வெச்சிருக்கேன். போய் ஆபீஸுக்கு போய் செக் வாங்கிக்கங்க'னார். நான் என் வாழ்க்கையில வாங்குன மொத செக்.' தேவர் மகன் ' படத்துல * ' இசக்கி'னு ஒரு காரெக்டர் குடுத்து என்னை ரசிச்சுப் பாத்த மகா மனுஷன். இந்த ஜென்மத்துக்கு அந்த ஒரு படம் போதும்டா சாமிங்கற .

மாதிரி ஒரு வேஷம். கலவரத்துல கையை வெட்டிப்புடுவாய்ங்க. ஆஸ்பத்திரியில படுத்துக் கெடப்பேன். கமல் சார் பாக்க வந்ததும், என் வேதனையைக் காட்டிக்காம சிரிச்சிக்கிட்டே பேசுவேன் பாருங்க... ' என்னா இனிமே கழுவுறதும் கையிலதேன், திங்கிறதும் இதே கையிலதேன்'னு, அந்த வசனந்தேன் வாழ்க்கைக்கே விளக்கேத்தி வெச்சுச்சு.

' தேவிகலா'வில் படம் பிரிமியர் ஷோ போட்டாங்க. சிவாஜி சார் படம் பாக்கு றார். பக்கத்துல இருந்த கமல்சார்கிட்டே ' இவன் யார்றா? ' னு ஸ்கிரீன்ல என்னையைக் காட்டிக் கேட்டாரு. ' வடிவேலுன்னு... மதுரைக்காரன்ப்பா! ' னு சொல்றார் கமல். ' இவன் வெறும் காமெடியன் மட் டும் இல்லடா... காரெக்டர் ஆர்டிஸ்ட். என்னையவே கொஞ்சம் ஆட வைச்சிட்டாண்டா'னார். ஓரமா ஒளிஞ்சு ஒக்காந்திருந்த என் கண்ணுல தாரைதாரையாக் கண்ணீரு வழியுது. கீத்துக் கொட்டகையில மண்ணைக் குமிச்சு, சிவாஜி படத்தைப் பாத்து வளர்ந்த பய நானு. அவர் வாயில இப்பிடி ஒரு வார்த்தை வருது.

என்ன புண்ணியம் செஞ்சேனோ எஞ்சாமி!

- வருவேன்

படங்கள் விவேக்

(14.11.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)