அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 20

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

வந்தார வாழ வைக்கிற ஊரு.... அது இந்த ஊருக்குத்தேன்ணே உண்டு...

மக்கு மதுர அட்ரஸ்னா... ஆளாக்குனது மெட்ராஸ்ணே! என்ன மட்டுமா... மஞ்சப் பையும் கையுமா மாக்கானா வந்த பயக பல பேர மனுஷனாக்கி அழகு பாக்கற ஊருண்ணே இது. சோத்துக்கு வழியில்லாம மாத்துத் துணிக்கும் வசதியில்லாம வந்த கொள்ளப் பயகள குபேரனாக்கிக் கொண்டுபோயி கோபுரத்துல வெச்ச ஊரு!

எந்தப் பட்டணத்துலேயிருந்தும் பொழைக்க வழி தேடி இந்த சென்ன பட்டணத்துக்குளாற வந்துட்டா, அவன் யாராயிருந்தாலும் டப்புடுப்புனு புடிச்சி பிக்கப் பண்ணிப் போயிக்கேயிருக்க எம்புட்டு வழிக இருக்கு இந்த ஊர்ல. என்னயக் கேட்டா மெட்ராஸு நல்ல டீச்சரு. ஒழுங்கா பாடங் கத்துக்கிட்டா வாழ்க்கையில ஒசந்துருவ. அசந்த மேனிக்கு இருந்துட்டா அன்ட்ராயர உருவிருவானுக!

இந்தா... இந்த டிநகரு ரெங்கநாதன் தெருவுக்குள்ள தெனந்தெனம் சித்திரத் திருவிழா கெணக்காத்தான இருக்கு. எம்புட்டு சனக் கூட்டம்... யே... யப்பே! ஒரு ஆளு உள்ள போனா முழுசா அஞ்சாறு கிலோ கரஞ்சிதேன் வெளிய வரணும். அம்புட்டு நெரிச. கூட்டத்துல வேத்து விறுவிறுத்து மூச்சு முட்டி நீந்திக்கிருக்கப்ப ' எலே வேலு'னு எங்கிட்டுருந்தோ ஒரு கொரலு வரும். பாத்தா நம்மூருப் பய எவனாச்சும் ஓரமா ஒரு கொட விரிச்சு கர்ச்சீப்புகளக் குமிச்சுப் போட்டு வித்துக்கிருப் பான். ' அப்றம்.... என்னா இந்தப் பக்கம்? ' னு கேப்பான். 'டாப்பா போயிக்கிருக்கு பிசினஸு! ” னு பெரிய தொழிலதிபர் தோரணையில பேசுவான். அதேன் மெட்ராஸு தர்ற துணிச்சலு!

Vadivelu
Vadivelu

எங்கிட்டுப் போனாலும் சனக்காடு தேன். எங்க போறாய்ங்க, எதுக்குப் போறாய்ங்கனே தெரியாது. செல நேரம் எரிச்சலா வந்தா லும் இத்தன சனங்க பொழைக் கறதுக்கு வழி தருது பாருய்யானு ஆச்சர்யமா இருக்கும்ணே.

ஒலகத்துல நாம எங்க போனாலுஞ் சரி, நம்ம ஊரு ஆளுக ஒண்ணாக் கூடிரு வாய்ங்க. ஆட்டோல போய்க் கிருப்போம். ' உஸ்ஸ்.... மக்கா என்னா வெயிலு, சட்டை தீப் புடிக்குதுறா சாமி! ' னு ஒரு வார்த்தை விட்ருப்போம். சட்டுனு ட்ரைவரு திரும்பி அண்ணனுக்கு மதுரப் பக்கமா? ' ம்பாரு. அட ஆமாண்ணே! ' ' நா மேலூரு தேன்ணே. பருத்தி யாவாரம் பண்ணிக்கிருந்தேன். படுத்துருச்சு. இங்கன வந்து பத்து வருஷமாச்சு'னு சரசரனு சரித்திரத்த எடுத்து விட ஆரம்பிச்சிருவாரு. எறங்கும்போது அஞ்சு பத்து கம்மியா சில்ற குடுத்தாலும், ' விடுங்கண்ணே, உங்களப் பாத்ததே பங்காளியப் பாத்தது மாதிரியிருக்கு'னு பாசங் காட்டிட்டு பறப்பாய்ங்க. அடுத்து தரம் பாத்துட்டோம்னா, அப்பிடியே ரோட்டோரக் கடையில டீ குடிப்போம். பேச்சு பிக்கப் ஆயிருச்சுனா, ஃப்ரெண்டாயிருவாய்ங்க. அவருக்குத் தெரிஞ்சவய்ங்க நமக்கும், நமக்குத் தெரிஞ்சவய்ங்க அவருக்கும் பழக்கமாயி எல்லாம் ஒரு செட்டு சேந்துருவோம்.

பொட்டிக் கட, ஓட்டலு, தியேட்டரு, பீச்சு, பஸ்ஸுனு அம்புட்டு எடங்கள்லயும் ஆராவது ஒரு ஊருக்காரஞ் சிக்கிருவான். செல நேரம் இந்த ஊருக்காரய்ங்க வொயின்ஷாப்புல மாட்டிருவாய்ங்க. ரெண்டு மூணு பேருங்க ஒக்காந்து தண்ணியப் போட்டுப்புட்டு ஊர்க் கதைகளப் பேசிக்கிருப்பாய்ங்க. பக்கத்துல ஒரு ஆளு சிவாஜி சிரிப்போட எல்லாத்தையும் கேட்டுக்கிருப்பான். கொஞ்ச நேரத்துல அப்பிடியே நெருங்கி வந்து தாங் கிளாச தூக்கி, இவிங்க டேபிள்ல வெச்சி சரக்க ஊத்திக்கிட்டே ' மதுரயாண்ணே ஒங்களுக்கு? ' னு கேப்பான். ' ஏன், என்னா? மதுரயில ஒங்களுக்கு யாரத் தெரியும்? ' னு இவிங்க கேப்பாய்ங்க. ' நாயக்கரு, எந்தவி மங்கம்மா, மீனாச்சினு ஊரு பூராத் தெரியும்ல. நீங்க எந்த ஏரியா... அதச் சொல்லுங்க'னு அவரு கேக்க அப்பிடியே பீரும் நொரயுமா எணஞ் சிருவாய்ங்க. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ' ஒங்களுது என்னா பிராண்டுண்ணே? ' னு ஒர்த்தங் கேக்க, ' அட! நா வாங்கறேம்பா'னு இவரு சலம்ப, எவங் காசுல எவங் கட்டிங் அடிக்கிறான்னே தெரியாம... ஒண்ணா மண்ணாக் கெடந்துட்டு போன் நம்பரு, அட்ரஸுனு அம்புட்டு டாகுமெண்டுகளையும் பரிமாறிட்டு, அவங்கவங்க வீட்டுக்கு ஆம்லெட்டு சோத்துக்குனு பிரிஞ்சு செதறிருவாய்ங்க.

அடடா... எத்தன வெத வெதமா சனங்க கூடிக் கெடக்காங்ய்க இந்த ஊர்ல. ஒவ்வொருத்தனும் ஒரு வக. ஒவ்வொருத்தனுக்கும் சுவ. சங்கந் தியேட்டருக்கு போனா மலையாளப் படம் போட்ருப்பான். ' வல்லிய கதயாயிட்டு'ங்கற ரேஞ்சுல நிக்கும். ஏரியாக்கு ஏரியா செவத்த தோளு, உருண்ட கண்ணுனு மம்மூட்டி அண்ணஞ் சாயல்ல ஒரு நாயரு டீக் கட வெச்சிருப்பாரு. ஏரியா மலையாளிக அம்புட்டு பேரும் கடையில கூடி பூப்போட்ட லுங்கியை மடிச்சுக் கட்டிக்கிட்டு " அதெங்கினா நிங்ஙள் பறயறது? ' னு கீச்சு மூச்சுனு பேசிக்கிருப்பாய்ங்க.

அங்கங்க சந்து பொந்துல ஆந்த்ரா மெஸ்னு போர்டு மாட்டிட்டு ஆராவது தெலுங்குக்காரரு பொஞ்சாதி சகிதம் காரஞ் சாரமா சமச்சிப் போடுவாரு. ' செப்பண்டி உப்பண்டி'னு பென்சில் மீசயோட தெலுங்கு ஆளுக ஜெமினி டி.வி. பாத்துக்கிட்டே சாப்புட்டுக் கிருப்பாய்ங்க.

சௌகார்பேட்ட பக்கம் போனீகன்னா வெண்ணெய்க் கட்டிக்கு கண்ணு காது மொளச்சது கெணக்கா செவசெவனு அம்புட்டும் சேட்டு பார்ட்டிங்க. இந்திப் பாட்டு, அமிதாப் பச்சன், சாரூக்கான் பட போஸ்டருனு அப்பிடியே மும்பைக்கே போயிட்ட மாதிரி இருக்கும். தலையில் முக்காடு போட்டு ஒரு தினுசா சேல கட்டிக்கிட்டு குண்டு குண்டுனு வர்ற சேட்டு பொம்பளை யாளுக திரிவாக. பானி பூரி, குல்பி ஐஸு, ரசகுல்லானு அவிங்க ஐட்டங்களும் அங்கங்க தெறந்து போட்ருப்பாய்ங்க.

Vadivelu
Vadivelu

குப்பத்துப் பக்கம்லாம் போனீங்கன்னா ஏரியா ஆரம்பத்துலயே ஒரு தொந்தி மார்வாடி அடகுக் கடயப் போட்டு உக்காந்துக்கிருப் பாரு. சடங்கு சரக்குனு அம்புட்டுக்கும் அடகு வெக்கிற பயகளாச்சே நாம. சட்டையில ஆரம்பிச்சி அண்டா, குண்டா, கடியா ரம், செயினுனு அம்புட்டை யும் அடகுல வெச்சிட்டு ஆப்பம் வடகறிய வாங்கி சாப்ட்டு போயிக்கிருப் பாய்ங்க மெட்ராஸு ஆளுக. சேப்பாக்கம் பக்கம் போனா சப்ப மூக்கோட குட்ட குட்டயா பூராம் நேபாளம், பூட்டான் சிட்டிசய்ங்களா திரிவாய்ங்க. கோணிப்பை யில பாவாட, ஊசி பாசி அப்பிடியே வந்த புதுசுல கோழிக்குஞ்சா பயந்துக்கிட்டு ரோட்டோரமா கடயப் போடுவான். மெள்ள மெள்ள ஒரு இடத்த புடிச்சி ஓட்டலாக்குவான். புத்தியிருந்தா பிடிச்சுப் பிக்கப் பண்ணி வளந்து பெரிய அதிபராகிப் போவாய்ங்க. வேலயில்லனு கெடயாதுண்ணே இங்க. சட்டுனு பேண்டு சட்ட டை கட்டி பாண்டி பஜார்ல பொம்ம விக்கலாம். வூட்லயே சமச்சி பிளாஸ்டிக் டப்பால போட்டு ஆபீஸு ஆபீஸா ' வூட்டு சாப்பாடு'னு போட்டுக் காசு பாத்துப் புடலாம். நம்மூர்ல பொம்பளையாளுக கொடக்கு மொடக்குனு ஆட்டுக்கல்ல ஆட்டுற அதே தோச மாவ, பொசுக்குனு கலர் பேப்பர்ல சுத்தி கடையில வெச்சி ஜில்லுனு வித்து பில்லப் போட்றாய்ங்கள்ல. அட! சென்ட்ரல் ஸ்டேஷன் வாசல்ல படுக்க எடம் புடிச்சி தர்றதுக்கு ரெண்டு ரூவா கூலி வாங்கறது ஒரு தொழில்ணே!

சினிமாவயே எடுத்துக்கங்க. நடிகரு, டைரக்டரு, லைட்மேன் வரைக்கும் முக்காவாசிப் பேரு அசலூருக்காரய்ங்கதேன். அம்புட்டுப் பேருக்கும் உங்க தங்க உயர எடந் தந்த மண்ணு இது.

வந்தார வாழ வைக்கிற ஊரு.... ஆனா, இந்த ஊர்லயே பொறந்து வளந்த மக்க ரொம்ப சாதாரண வாழ்க்கைதேன் வாழறாக. ஆராவது வந்து பசிக்குதுனு நின்னா ' இன்னா வோணும். இன்னா ஊரு'னு கேட்டுட்டு வவுத்துக்கு இல்லாம இன்னாத்துக்கு வாழ்றது. துட்ட துன்னவா முடியும். அப்டிக்கா குந்து! ' னு கதம்பச் சோறு குடுக்கற ஈரம் இந்த ஊருக்குத்தேன்ணே உண்டு.

ரிச்சா ஓட்டறது... மீனு புடிக்கறது... லோடு ஏத்தறதுனு வேக்க வேக்க வேல பாத்துட்டு சுண்டக்கஞ்சி சோறு, பீடி, வறுத்த மீனு, கானா பாட்டு, கடலு காத்துனு ஒரு வாழ்க்கைய வாழ்றவய்ங்க. உப்பு பூத்த ஒடம்புலயும் இம்புட்டு ஈரத்தோட இருக்கறவய்ங்க!

அதனால அவிய்ங்களாலதேன் இந்த ஊர்ல இன்னமும் மழ பெய்யுதுண்ணே!

- வருவேன்

(20.03.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)