அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 21

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

மனுஷனுக்கு அழகு பணமில்ல, கொணம்! அதைச் சொல்லிக் குடுத்து வளக்க வேண்டியது அவுகவுக அப்பன் - ஆத்தா பொறுப்பு...

கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்க! ' அட... இந்த கிரிக்கெட்டத்தேன் சொல்றேண்ணே... ரோட்ல, தெருவுல சன நடமாட்டம் கொறஞ்சிபோச்சி. கூட்டங் கூட்டமா டி.வி. முன்னாடி ஒக்காந்துக்கிட்டு ' அவுட்றா... அவுட்றா... அவுட்றா சக்க! ' னு சலம்புறாய்ங்க. அங்கங்க செல்போன வெச்சிக்கிட்டு ' என்னா ஸ்கோரு? என்னா... கேச்சு மிஸ்ஸா?'னு வெசாரிச்சுக்கே திரியறாய்ங்க.

வழியில் ஒரு கட முன்னாடி கும்பலா நின்னு 'கோ'னு கத்துனாய்ங்க. பதறிப்போயி எட்டிப் பாத்தா உள்ள ஒரு டி.வி - யில கிரிக்கெட்டு ஓடுது. ஊர்ல நாட்ல பொட்டக் காட்லயெல்லாம் இந்நேரத்துக்கு பஞ்சாயத்து டி.வி. முன்னால பொக்க வாயி பெருசெல்லாம் கூடி ஒக்காந்து கெக்கெக்கேனு கிரிக்கெட்டு பாக்குறாக. ஆபீஸுக்கு போட்றாய்ங்க, காலேஜு, பள்ளிக்கொடத்துக்கு மட்டம் போட்றாய்ங்க. ஏதோ வீடே பத்திக்கிட்டு எரியறது கெணக்கா போச்சு போச்சு... விட்டுட்டாய்ங் களே'னு பயங்கர டென்ஷனா வந்து தம்மப் போடுவான் ஒரு பையன்.

Vadivelu
Vadivelu

'எலேய்! என்னடா போச்சு போச்சுங்கற. வூட்ல ஆருக்காவது சீரியஸா இருக்கா? ' னு கேளுங்க... ' தூளு ' பட பசுபதி கெணக்கா லுக்கு விட்டுட்டு, ' டெண்டுல்கரு செஞ்சுரி மி ஸ் ஸாயிருச்சேனு நானே டென்ஷனாருக்கேன்'பாம். கொல வெறிதேன் வரும்! அட... நாதாரிப் பயலே! மறுக்கா சுனாமி வருதுங்கறான், காஷ்மீர்ல பனிப்பொழிவுங்கறான், அது என்னா டிக்கா... அண்டார்டிகா... அங்கன பனி உருகி கடலு பொங்குதுங்கறான், இங்கிட்டு என்னான்னா சட்டசபையில சண்டைங்கறாக, கத்திரி வெயிலு இப்பவே சுள்ளுனு தூக்குது. அவனவன் தண்ணிக் கவலையில தாடயச் சொறிய ஆரம்பிச்சிட் டாய்ங்க.... இம்புட்டு பிரச்னைகளையும் விட்டுப்புட்டு, டெண்டுல்கரு விக்கெட்டு விழுந்ததுக்கு மூணு ரூபா சீரெட்ட மொத்தமா வாங்கிக் கொளுத்துறி யேடா!'னு அவங்கிட்ட தர்ம நியாயம் பேச முடியுமா! இப்பத்தேன் எவன எது கேட்டாலும், ' அது போன வாரம். இது இந்த வாரம்!'னு எனக்கே எக்கோ குடுத்து டயலாக் சொல்றாய்ங்களே!

ஊருக்குள்ள இப்ப கொள்ள பேரு கிரிக்கெட்டு வெறி புடிச்சு திரியிறாய்ங் கண்ணே. எனக்கு என்னமோ இந்தக் கிரிக்கெட்டு இன்னும் மட்டுப்படல. ஒருத்தரு பந்துல எச்சியத் துப்பி, ஒண்ர கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து எறியறாரு. அந்தப் பக்கம் நிக்கற மனுஷன், எச்சிப் பந்தை எறியறானேனு ஒரு கூச்ச நாச்சம் கொஞ்சமும் இல்லாம அதை லொட்டுனு தட்டிவிட்டுட்டு, அப்பிடியே வானத்தப் பாக்குறாரு. அப்பப்ப இழுத்து அடிச்சுப்புட்டு ரெண்டு பேரு குறுக்க மறுக்க ஓடறாய்ங்க. அந்தப் பந்த வெரட்டிக்கிட்டு ரெண்டு பேரு ஓடுறாய்ங்க. பின்னாடி ஒர்த்தரு திருவுழா கூட்டத்துல காணாமப் போனவய்ங்கள மைக் செட் போட்டுக் கூப்புடுற மாதிரி இங்கிலீஸுல அலறுறாரு. அட, அப்பிடியே நம்மூரு கிட்டிப்புள்ளுண்ணே!

நாங்க கிழிஞ்ச ட வு ச ரோட பு ழு தில ஆடுறத, இவிங்க பேண்டு, பனியன், ஹெல்மெட் டோட கிரவுண்ட்ல ஆட்றாய்ங்க. நானெல்லாங் கிட்டி புடிச்சு கீந்துனேன்னா தெக்குச்சீமயே அலறும்ணே! அப்ப சுப்பிரமணினு ஒர்த்தன் இருந்தான் எங்களோட. பய கிட்டிய எடுத்தாம்னா தெனைக் கும் ஒரு மண்ட, ரெண்டு சில்லு மூக்கு ஒடைப்பான். அவங்கையிலயெல்லாம் பேட்டு சிக்குச்சுன்னா கிறுகிறுனு சுத்தி பாகிஸ்தான் டவுசர உருவி ஓட விட்ருப்பான். இன்னிக்கு அந்த சுப்பிரமணி ஊர்ல உப்பு யாவாரம் பாக்குறான். ஆனா, கிரிக்கெட்டுக் காரவுகளுக்குக் கோடி கோடியா தருவா களாம்ல.

அட டி.வி - ய போட்டா அம்புட்டு வெளம்பரத்துலயும் அவுகதான ஆடிப் பாடுறாக!

நண்டு சிண்டுனு வூட்ல அர டிக்கெட்டு அம்புட்டும் இப்ப கிரிக்கெட்டு பாக்கதேன் நீ நான்னு நிக்குதுக. நம்ம தோஸ்த்து ஒர்த்தரு வீட்டுக்குப் போயிருந்தேன். டி.வி -யில கிரிக்கெட்டு பாத்துக்கிருந்த பையன்ட்ட, ' சிவராமா... பரீட்சை வருதுல்ல, டி.வி - ய நிறுத்திட்டுப் போயிப் படிப்பா! ' ன்னாரு. தெரியும்ல..... டி.வி. பாக்கு றோம்ல! ' னுட்டு பயபுள்ள நகர மாட்டேங்கிறான். கிரிக்கெட்டு முடிஞ்சதும் படக்குனு பக்கத்துல இருந்த கம்பியூட்டரு பொட்டியில உக்காந்து நோண்ட ஆரம்பிச்சிட்டான். ' டி.வி. இல்லேன்னா கம்பியூட்டரு. இதேன் இவனுக்கு. கெட்டிக் காரன்! ' னாரு நண்பரு!

இப்பல்லாம் புள்ளைக ரொம்ப வெவரமா வளர்றாக. எங்கயாவது விசேஷம் அது இதுனு போகும் போது பக்கத்துல வந்து உக்காந்துட்டாய்ங்கன்னா அவிங்க கேக்கற கேள்வி களுக்குப் பதில் சொல்லத் தெரியலைண்ணே! என்னை யெல்லாம் பத்து வயசுக்கு மேலதேன் கோயிலு திருவிழானு வெளிய தனியாத் திரிய விட்டாய்ங்க. அப்பவும் நாடகத்துல முன்னாடி பபூனு ஸீனு வரும். பூப்போட்ட சட்ட, பலூனு பேண்டுனு போட்டுக்கிட்டு அந்த பபூனு டபுள் மீனிங் டயலாக்குகள போட்டுப் பின்னி பெடலெடுப்பான். அதுனால அந்த ஸீனெல்லாம் முடிஞ்சு மயானத்துல அரிச்சந்திரன் அறிமுகமாவுற ஸீன்லதான் பாக்க விடுவாய்ங்க. அதும், ஆத்தா சேலக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டே நாடகத்தப் பாத்துட்டு வந்தவன் நானு. இன்னிக்குப் பாத்தீகளா... முட்டூனு ரிமோட்ட கையில வெச்சிக்கிட்டு பயபுள்ளைக நூத்தி முப்பது சேனலு அசால்ட்டா பாக்குறாய்ங்க. அதும் எதையும் நின்னு நிதானமாப் பாக்கறதில்ல. கொரங்கு கெணக்கா அத்தன சேனலும் தாவித் தாவிப் போயிக்கேயிருக்காய்ங்க.

ரெண்டு மோட்டா ஆளுங்க, முட்டி மோதி மல்லுக்கட்டி மொகரையெல்லாம் பேத்துக்கறாய்ங்க.... என்னமோ டபிள்யூ டபிள்யூவாமே.... அத சந்தோஷமாப் பாக்குதுக. வெள்ளத் தோலு கறுப்புத் தோலுனு வெதவெதமான பொம்பளையாளுக கிழிஞ்ச துணிமணிகளப் போட்டுக் கிட்டு, விலுக்கு விலுக்குனு நடக்குதுக. அதப் பாக்குறாய்ங்க. வீட்ல உள்ளவுகளும் சீரியலு வையி, சினிமாப் பாட்டு போடுனுதேன் சண்ட போடுறாகளே தவிர, ஆரும் எதையும் கண்டுக்கறதில்ல. கண்டிக்கறதுமில்ல!

Vadivelu
Vadivelu

நானெல்லா படிக்காத பயபுள்ள! ' இந்தியாவின் தலைநகரம் எது? ' னு கேட்டா 'மதுரதேன்!' னு சொல்லி குண்டக்க மண்டக்க அடி வாங்குன பர பய. டவுசர் பாக்கெட்டுல எப்பவும் மூஞ்சி பம்பரக் கட்ட.... கோலிக் குண்டோட திரிஞ்சவய்ங்க. ரொம்ப நாளைக்கு படப் பொட்டிக்குள்ள நடிகரு - நடிகையெல்லாம் உக்காந்துக்கிட்டு நடிக்கிறாக..... அதேன் சினிமாவா தெரியு துனு நெனச்சிக்கிருந்தவய்ங்க. ஒலகத்த தெரிஞ்சி, புரிஞ்சி வெவரமாகறதுக்குள்ள கொள்ள நாளாகிப்போச்சுண்ணே!

இன்னிக்கு பச்சப்புள்ள வாய் பேச ஆரம்பிக்கிறதுக்குள்ள டி.வி. ரிமோட்டைக் கையில குடுத்துர்றாய்ங்களே! கம்பியூட்டரு, செல்போனுனு அறிவியலு குந்தாங் கொறையா வளந்து ச்சு. விட்டா ஆப்கானிஸ்தானுக்குப் போயி பின்லேட ன்ட்டயே ஆட்டோகிராபு வாங்கிட்டு வந்துரு வாக. அம்புட்டு வெவரம்!

அதேமாதிரி படிப்புலயும் கிழிச்சி தோரணங் கட்டறாக. நாங்கள்லாம் பள்ளிக்கூடம் போன காலத்துல திங்கக்கிழமை வந்தாலே வயித்து வலிக்குதுனு பெரியாஸ்பத்திரியில சேக்கற அளவுக்கு ஆக்டிங் வுட்டவய்ங்க. இன்னிக்கு அப்பிடியெல்லாம் இல்ல. அவுக பாட்டுக்கு புளி மூட்ட கெணக்கா கொள்ள பொஸ்தகத்தத் தூக்கிக்கிட்டு போயிக்கேயிருக்காய்ங்க. நல்லா படிக்கிறாக. பாட்டு கிளாஸு, கராத்தே கிளாஸு, டான்ஸுனு அம்புட்டுக்கும் போறாக. பாக்க சந்தோஷமா இருக்கு.

ஆனா, நாங்க என்ன படிச்சமோ படிக்கலியோ, வாழ்க்கையில் மரியாதை படிச்சு வளந்தோம்ணே. அதேன், பொஸ்தக அறிவு இல்லைனாலும் நீ கூட அப்பிடி.... இப்பிடி குட்டிக்கரணம் போட்டு இந்தளவுக்கு வந்து நிக்கிறோம்.

இன்னிக்குப் புள்ளைகளுக்கு எல்லாம் இருக்கு. எது கேட்டாலும் வாங்கித் தர்றாக. புள்ளைக கைக்கு பக்கத்துலயே எல்லாம் கெடைக்குது. அண்ணே, விஞ்ஞானம்னா என்னண்ணே, வெவரம் தெரிஞ் சுக்கிறது, வசதி பண்ணித் தர்றது. அவ்ளோதாண்ணே!

ஆனா, மனுஷனுக்கு அழகு பணமில்ல, கொணம்! அதைச் சொல்லிக் குடுத்து வளக்க வேண்டியது அவுகவுக அப்பன் - ஆத்தா பொறுப்பு. அதை சரியாச் செய்ஞ்சிட்டா அதேன் புள்ளைகளுக்குப் பண்ற செறப்பு!

- வருவேன்

(27.03.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)