
“எனக்கெல்லாம் எம் பொஞ்சாதிகூட நின்னா அம்பது பேரு ஏம் பின்னாடி நின்னுக்கிருக்கிற மாதிரி ஒரு சக்தி வரும்ணே! பொண்டாட்டியக் கும்புடணும்..!”
வீட்டுக் காரம்மா நாலு நாளா வீட்ல இல்லண்ணே! புள்ளகுட்டிக அம்புட்டையும் கூப்பிட்டுக் கிட்டு மதுர போயிருக்கு... அங்கன ஒரு விசேஷம். நெசமா சொல்றம்ணே..... வீடு வெறிச்சுனு கெடக்கிறப்பதேன் பொஞ்சாதியோட அரும பெருமயெல்லாந் தெரியுது.
சில பேரு இருக்காய்ங்க... என்னிக்குடா பொஞ்சாதி வண்டியேறும்...... பீரப் போட்டுட்டு ரோட்டுக் கடையில முட்ட பரோட்டா திங்கலாம்னு காத்துக்கிருப் பாய்ங்க. அந்தம்மா கௌம்புறன்னைக்கு பய புள்ளைக மூஞ்சியப் பாக்கணுமே,
“இப்ப நீ அவசியம் போய்த்தான் ஆகணுமா? நீ இல்லாம போரடிக்கும்டா செல்லம். ஊருக்குப் போனதும் போன் பண்ணும்மா.... பாட்டில்ல தண்ணி எடுத்து வெச்சுக்க... பாப்பாவுக்கு செரிலாக் எடுத் திட்டியா... ” னு ஃபுல் ஆக்டிங் குடுப்பாய்ங்க. ஆட்டோக்காரன் அவன் எம்புட்டுக் கேட்டாலுஞ் செரி பேரம் பேசாம ஏறி உக்காந்துக்கிருவாய்ங்க. கோயம்பேடு போயி அவுகள ஆம்னி பஸ்ல ஏத்திவுட்டு, பஸ் மறையிற வரைக்கும் கையாட்டிட்டு, அப்பிடியே திரும்பி ஒரு வில்லச் சிரிப்பு சிரிப்பாய்ங்க பாருண்ணே... பி.எஸ். வீரப்பா, எம்.என். நம்பியார் எல்லாம் டியூஷன் படிக்கணும்ணே!

படக்குனு செல்போன எடுத்து, "என்னா மச்சான்.... எங்க இருக்க.... அசோக் பில்லரு பக்கம் பாருக்கு வந்துரு”னு சட்டு புட்டுனு புரொக்ராம்கள போட்டு, மேல்சட்ட பட்டன் ரெண்டக் கழட்டிப் பப்பரப்பானு காத்தாடக் கௌம்பிருவாய்ங்க. மொத ரெண்டு நாளு கொண்டாட்டமாத்தேன் இருக்கும்.
வூட்டுக்குள்ளயே செருப்பப் போட்டுட்டே திரிவாய்ங்க. குப்புகுப்புனு பொகயப் போடுவாய்ங்க. பார்சலு வாங்கிட்டு வந்த மட்டன், சிக்கனு எல்லாத்தையும் குருமாவுல கொழப்பி அடிப்பாய்ங்க. அப்பிடியே நட்ட நடு ஹால்ல பாயப் போட்டு, சரிஞ்ச வாக்குல போதையில எஃப் டிவி, எம் டிவி-னு மாறி மாறிப் பாத்துட்டு, காலையில ஒம்போது பத்து மணி வரைக்கும் கசந்த வாயோட கெடப்பாய்ங்க. அவசரமா எந்திரிச்சி ஆபீஸு ஓடி, ஏதோ ரெண்டு வேலய பொரட்டிப் பாத்துட்டு, சாயந்தரமானா இந்த தொள தொள டவுசரு, கட் பனியனெல்லாம் போட்டுட்டு பால்கனியில நின்னு, அக்கம்பக்கத்து சின்னஞ் சிறுசுகளை எல்லாம் பாத்து ஆட்டோகிராஃபுகள போட்டுக்கிருப்பாய்ங்க.
மொத்த நண்பய்ங்களையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து, சீரெட்டும் சீட்டுக்கச்சேரி நடத்தறதுமா ரணகளமாக்குவாய்ங்க. எல்லாம் மிஞ்சிப்போனா நாலு நாளு. அப்பறந்தேன் பொஞ் சாதி இல்லாத நெலவரம் தெரியும். எடுத்தது வெக்காம, தின்னது கழுவாம அப்பிடியே வூடு நாறிப்போகும்ல. மைனரு ஜட்டியக்கூட தொவைக்காம காலாட்டிக்கிருந்து ருப் பாருல்ல. இப்ப அழுக்குத் துணிமணிக குமிஞ்சிப்போயி அட! நாதாரிப் பயலே'னு சிரிக்கறப்பத்தேன் தெரியும்... பொண்டாட்டி அரும!
ஒடம்புக்கு ஒண்ணு... மனசுக்கு ஒண்ணுன்னா பக்கத்துல உக்காந்து கையப் புடிச்சி மடியில வெச்சுக்கிட்டு " என்னங்க நா இருக்கேங்க'னு சொல்ற ஆளு அவுகதாம்ணே. நாலு நாளைக்கு மேல தனிம தாங்காது. அப்பிடியே சொவத்த வெறிச்சிப் பாக்க ஆரம்பிச்சிரு வாய்ங்க. கட்டிலு அப்பத்தேன் பேச ஆரம்பிக்கும்யா. தலாணியில பொண்டாட்டி வாசம் தேடும். அவுக கழட்டிப் போட்டுப் போன சேலைய எடுத்துத் தலையில வெச்சுக்கத் தோணும். அங்கிட்டும் இங்கிட்டுமா புள்ள குட்டிக ஓடி ஆடி அலப்பற பண்ற சத்தமெல்லாம் வந்து வந்து போகும். திடுக்கு திடுக்குனு எந்திரிச்சி வாசலப் பாக்க ஆரம்பிச்சிருவாய்ங்க.
ஆக்கி அரைச்சு, தூக்கிச் சொமந்து, கரியில கெடந்து, கட்டில்ல சிரிச்சுனு பொஞ்சாதி எம்புட்டு பெரிய சக்தினு அப்பத்தேன் உணருவான்.
போனப் போட்டு, " ஏம்ப்பா, வந்துருப்பா! ” னு நெசமாவே பொலம்பத் தொடங்கிருவாய்ங்க. இல்லைனா, ரெண்டு நாளைக்கு லீவப் போட் டுட்டு வீட்டுக்காரம்மாவக் கூப்புட்டு வர வண்டி ஏறிருவாய்ங்க. குடும்பம் மதுரயில கெடக்க, சினிமா சான்ஸுதேடி இங்க மெட்ராஸ்ல திரிஞ்ச காலத்துல ரொம்ப செரமப்பட் டேம்ணே. அஜிஸ் டெண்ட் டைரக்டருங்க, நடிக்க வாய்ப்பு தேடறவய்ங்கனு நம்மள சுத்தி இருக்கற அம்புட்டு ஆளுகளும் பேச்சுலர்ஸா இருப்பாய்ங்க. சிந்தனக் குருதய தட்டிவுட செயினா சீரெட்டு கொளுத்தறது, பேட்டா காசு வந்தவாக்குல சல்பேட்டா சாத்திட்டு ரவை கெல்லாம் அம்புட்டு ஒன்ன சினிமாக்களையும் தெச்சிக் கிழிச்சி, பிச்சிப் பிரிக்கறது, திடுதிப்புனு கும்பல் சேந்து பரங்கிமல ஜோதியில படம் பாக்கப் போறதுனு வயசுக் காலத்து கூத்தையெல்லாம் அரங்கேத்திக்கிருப்பாய்ங்க. நாம அம்புட்டையும் மதுரயிலயே பண்ணிப்புட்டம்ல. கையிலயும் துட்டு கெடயாது!
வாங்கிவிட்ட ரெண்டு கப்பலும் வங்காள விரிகுடா அக்கத்துல கவுந்து போன ரேஞ்சு கவலையிலேயே திரிவேன். குடும்பஸ்தன் வர்றாம்பா'னு அவுகளும் என்னக் கொஞ்சம் தள்ளி வெச்சிட்டாக. அப்பல்லாம் ரூமுக்கு வந்தா ஒப்பாதுண்ணே. எந்நேரமும் ஆராவது ஒர்த்தன் வந்து கலைஞ்ச கோலத்துல ஒருக்களிச்சுப் படுத்து சீரெட்ட ஊதி சிந்திச்சிக்கிருப்பான். தீந்து போன பகுடரு டப்பாவ ஆஷ்ட்ரே வாக்கி, அத வுட்டுட்டு ரூமு முழுக்க சீரெட்டுத் துண்டா போட்டு வெச்சிருப் பாய்ங்க. அழுக்குத் துணிமணிக அங்கங்க சேந்துபோயிக் கெடக்கும். அதுல ஒரு லட்சங் கோடி கொசுங்க கூடிப் பேசி மாநாடு போட்டுக்கிருக்கும். அப்பிடியே விட்டத்த வெறிச்சிப் பாத்தமானிக்குப் படுத்துக் கெடக்க வேண்டியதுதேன்.

நா அடிக்கடி பொஞ்சாதிக்கு லெட்டரு எழுதுவேன். ' அட, லெட்டரு வேறயா? இதப் பார்றா'னு செல பேரு பண்ணுவாய்ங்க. அப்ப எனக்கிருந்த ஒரே நெனப்பு எப்பிடி யாவது சம்பாதிச்சி முன்னேறி, வேலயா குடும்பத்த மெட்ராஸுக்குக் கொண்டுவந்து ஒரு வூடு புடிச்சுக் குடியேறிப்புடணும்ங் கறதுதேன்!
அதுக்காகவே இன்னும் வெறியெடுத்து ஒழச்சம்ணே. இந்தா... இன்னிக்கு அவுக நாலு நாளு ஊருக்குப் போனாலே தாங்கல. இப்ப புள்ளைகளுக்கு கோட லீவு வேற வருது. ஒரு மாசத்துக்கு மதுர ட்ரிப்புக்கு இப்பவே பிளானு போட்டாக. ஆத்தீ... நானும் மதுரக்கிப் போயிட்டு வரலாம்னு இருக்கேண்ணே. ஒரு மாசத்துக்கெல்லாம் கூரய வெறிச்சிட்டுக் கெடக்க நம்மால முடியாது!
பொஞ்சாதி சரியில்லைனு பொலம் பறதே பல பேரு ஃபுல்டைம் சோலியா வெச்சிருக்கான். போன வாரம் தெரிஞ்ச ஒர்த்தரு மண்டையில கட்டோட வந்தாரு. என்னன்ன வெசாரிச்சா ' அட விடுப்பா... சின்ன ஆக்ஸ்டெண்டுனு நழுவுனாரு. ' சும்மா சொல்லுப்பா'னு வெசாரணையப் போட்டா, போர்க்களத்துல நின்னு பொஞ்சாதி பறக்கவுட்ட தட்டுல வீரன் விழுப்புண் வாங்குன விஷயம் தெரிஞ்சது.
'ய்யே என்னாப்பா? ' னு கேட்டா, ' அவ சரியில்லைங்க. பிடாறிங்க. அவளோடல்லாம் வாழ முடியா துங்க'ன்னே சொல்லிக்கிருந்தாரு. ' அப்பிடி நீ என்னய்யா செஞ்சே? ' னு கேட்டா ' ஆத்திர அவசரத்துக்கு ஒரு குத்து வௌக்கக் கொண்டு போயி அடகு வெச்சிட்டேன். அதுக்கு கழுத நாலு தெருவுக்குக் கேக்கிற மாதிரி லபோ திபோனு சத்தம் போட்டா... நா என்னா சும்பனா? ' போடி... நீ தூங்கிக்கிருக்கும்போது தாலிக் கொடிய அறுத்துட்டுப் போயி அடகு வெப் பேண்டி! ' னு சும்மா ஒரு வார்த்தைய வெறுப்புல சொல்லிப் புட்டேன். அதுக்கு கடங்காரி தட்ட எடுத்து வீசிப் புட்டா! ' னு என்னமோ இவரு அறிவியலு சாதன பண்ணிட்டா மாதிரியும் அத பொஞ்சாதிபுரிஞ்சிக்கலங்கற மாதிரியும் சலிச்சிக் கிறாரு.
'ஒன்னையெல்லாம் அருவாளக் கொண்டு வீசியிருக்கணும்யா! 'ன்னேன். இப்பித்தாம்ணே பலபேரு தப்பு எங்கனு தெரியாம பொஞ்சாதிய திட்டிக்கிட்டு திரிஞ்சிக்கிருக்காய்ங்க.
அடிமனசுலயிருந்து சொல்றம்ணே... பொஞ்சாதி மட்டும் இல்லைனா, அது வூடு இல்லண்ணே... சுடுகாடு!
பணம், காரு, பங்களா, வேலக்காரங்கனு எம்புட்டு வசதி வாய்ப்பு இருந்தாலும் வீட்டுக் காரம்மாங்கற எசமானி இருந்தாத்தேன் எல்லாத்துக்கும் அர்த்தம் இருக்கும். சொகமோ, துக்கமோ ஒண்ணுமண்ணா நிக்க அவுக இருந்தாத்தேன் தெம்பு. எனக்கெல்லாம் எம் பொஞ்சாதிகூட நின்னா அம்பது பேரு ஏம் பின்னாடி நின்னுக்கிருக்கிற மாதிரி ஒரு சக்தி வரும்ணே!
வெள்ளக்காரய்ங்க வேணும்னா குபீர் குபீர்னு கண்ணாலம் பண்ணிக் கிட்டு, கொறட்ட விடுறதுக்கெல் லாம் டைவர்ஸு வாங்கிக்கலாம். நாம அப்பிடி இல்லையே!
ஒடம்பையும் உசுரையும் போட்டுக்கிட்ட பார்வதி பரம சிவத்த கும்புடுற பயகதான. அதேன் சொல்றேன். பொண்டாட்டியக் கும்புடணும்ணே!
- வருவேன்
(10.04.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து..)