
நா ஜெயிலுக்குப் போறேன்... நா ஜெயிலுக்குப் போறேனு கெத்தாக் கௌம்புவோம்ல...
எங்கூர்ல ஒருத்தரு வியாழக் கெழமையானா மௌன விரதம் இருப்பாரு!
வியாழன் வந்துருச்சுன்னா, அவருக்கு சனி தொடங்கிருச்சுனு அர்த்தம்ணே. விடியக் காலயிலயே ' வாலி ' அஜீத்து கெணக்கா ஒரு சைஸா சைகயாலயே பேச ஆரம்பிப்பாரு. இதேஞ் சாக்குனு எல்லாரும் அவருகிட்ட ' ஆங்... ஏங்.... என்னாது? ' னு சகட்டுமேனிக்கு வெறுப்பேத்துவாய்ங்க. மத்த நாளா இருந்தா மனுஷன் வாயாலயே மண்டகப்படி நடத்திரு வாரு. மௌன விரதமாச்சே... சாமி காரியம்!
சொல்லவும் முடியாம... மெல்லவும் முடியாம கண்ல தண்ணி வரத் திரிவாரு.
மாரியம்மன் கோயிலுக்கு டொனேஷன் கேக்கிற ஆளு மாதிரி, கையில் நோட்டும் பேனாவுமாத்தேன் வெளிய வருவாரு. ' ரெண்டு ரூபாய்க்கி வெத்தலை சீவல்னு ஒரு ஓல எழுதி ஓர்த்தன் கையில குடுத்து அனுப்புனார்னா, அவன் இதேன் சாக்குனு ஒண்ணார் ரூவாய்க்கு வெத்தல வாங்கிக் - குடுத்துப்புட்டு, மிச்சத் துட்டு எட்டணாவை வாயோரமா ஒதுக்கிக் கிட்டுப் போயிக்கேயிருப்பான்.

டீக்கடைப் பக்கம் அன்னிக்கு வர மாட்டாரு. தப்பித் தவறி வந்துட்டாரு, பயபுள்ளைக தாறுமாறாப் பேசுவாய்ங்க. வெளிய இப்பிடின்னா வூட்டுக்குள்ள வேற டைப்பு கொடும! அவரு மக்கா நாளு கண்ணாலத்துக்குப் போக சலவ பண்ணி வெச்சிருக்க வேட்டி- சட்டைய எடுத்து மாட்டிட்டுக் கௌம்பிருவாய்ங்க மகய்ங்க. மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிங்கற மாதிரி மௌன விரத அண்ணாச்சிக்கு அம்புட்டுப் பக்கமும் ஊமக் குத்தா இருக்கும். அப்பிடியே சித்தங் கலங்கி ரத்தங் கண்டிஷனுக்குப் போயி மீண்டுதேன் வெள்ளிக் கெழமைக்கு வருவாரு. ஒரு நாளைக்குப் பேசாம இருந்தாலே, ஒர்த்தரு நெலமையப் பாத்தீங்களாண்ணே!
ஏன்னா, பேச்சுதாம்ணே தமிழனுக்கு மூச்சு!
இந்த நாலு இன்ச்சு வாய வெச்சுக் கிட்டு நானூறு ஏக்கரா பொறம்போக்கு நெலத்த பட்டா போட்டு வித்துரு வாய்ங்கண்ணே நம்மாளுக. டீக்கட... சலூனுனு அங்கங்க குத்த சலூனுனு அங்கங்க குத்த வெச்சி அரசியலு பேச ஆரம்பிச்சாய்ங்கன்னா முனிசிபாலிட்டி கவுன்சிலர்ல இருந்து முஷாரப்பு வரைக்கும் தெறிச்சி ஓட வைப்பாய்ங்கள்ல. எங்கூர்ல ஒர்த்தரு இருந்தாரு. ' என்னா வேல பாக்கறீங்க? ' னு கேட்டா ' நா முழு நேர அரசியல்வாதி! ' ம்பாரு. புள்ளைக டவுசரு கிழிஞ்சி அலையும். ஆனா, இவரு சலவகலயாத வெள்ள வேட்டி சட்ட, தோள்ல துண்டு, பத்தாக்கொறைக்கு கூலிங்கிளாஸு, ரெண்டு இஞ்சுக்கு பகுடரு போட்டுக்கிட்டுத்தேன் பொறப்படுவாரு.
'எம்.ஜி.ஆரு மொத மொதல்ல திண்டுக்கல்ல கச்சிக் கொடிய ஏத்துனப்ப கிட்டக்க நின்னது மூணே பேரு! ஆர்.எம்.வீரப்பன், மாயத் தேவரு, மூணாவது நானு'ங்கற ரேஞ்சுலதேன் பேச்சு ஆரம்பிக்கும். ஒரு நா நெசமாவே எம்.ஜி.ஆருமாலய மதுரக்கி வந்தப்ப இவரப் பாக்கணுமே.... கதம்பவாங்கிட்டு ' தலைவரு நம்மளப் பாத்தா விட மாட்டாருப்பா! ' னு கிட்டே போனாருல்ல. அங்கன பேக் கூட்டம்!
ஆளும் பேருமா இவரப் போட்டு கூட்டத்துல வெச்சி மிதிச்சி நசுக்கிட் டாய்ங்க. அப்பிடியே விழுந்து பொரண்டு கூட்டத்துல கெடைச்ச ரெண்டு, மூணு மாலைய என்னமோ இவருக்கு போட்டது கெணக்கா கையில சுருட்டிக்கிட்டு தெருவுல நடந்தாரு பாருங்க. அடடா.... கல்யாணப் பரிசு தங்கவேலுவெல்லாந் தோத்தாரு. மக்கா நா கேட்டா, " ரொம்பக் கூட்டம். அதேன் தலைவரு சைகயிலயே ' மெட்ராஸு வா பாப்பம்! ' னு சொல்லிட்டாரு ” ங்கறாருண்ணே. அப்பிடி ஒரு வாயி!
அது என்னமோ தெரியல... மேடை ஏறுன வாக்குல வானம் பூமியே மறந்து போயி, ஒரு வீரம் பொங்கும்ணே அவருக்கு. ஏரியால எதாவது கச்சிக் கூட்டம்னா முக்கியப் புள்ளி வர்ற வரைக்கும் நம்மாள மேடையேத்தி விட்ருவாய்ங்க. அடிச்சதுடா சான்ஸுனு அவருமைக்க புடிச்சார்னா அம்புட்டுதேன்!
இருவதாவது வட்டச் செயலாளர் அருமை அண்ணன் தண்டபாணி அவர்களே.....
கடையேழு வள்ளல்களுக்கு அப்புறம் எங்கள் எட்டாவது வள்ளல் தருமத்தின் உருவம் தரும கர்த்தா அய்யா கோவிந்த ராஜ் அவர்களே! ' னு ஆரம்பிச்சி மொய்யி எழுதறா மாதிரி பூராப் பேரையும் சொல்லிப் புட்டு, மேட்டருக்கு வர்றதுக்கே கொள்ள நேரம் ஆகிப்போகும். அப்பறம் அப்பிடியே கொரல உயர்த்தி ' ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாரும் இல்லை. நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை அணயிட்டுச் சொன்னாலும் அலை கடல் ஓய்வதில்லை. தெரியாமல், அறியாமல், புரியாமல் எங்கள் தங்கத் தலைவரின் புகழை மறைக்க நினைக்கும் மதி கெட்டவர் களின் சதியை முறியடிக்க சிங்கப் படையே சிறுத்தை எனப் புறப்படு! நாங்கள் ஒட்டும் போஸ்டர்களை கிழிக்கும் எதிரிகளுக்கு இந்த நேரத்தில் சவால் விடுகிறேன். முடிந்தால் முகத்துக்கு நேராக மோதிப் பார்ப்போம்'னு சோடாவக் குடிச்சிக்கிட்டே சொடக்குப் போட்டு சவால விட்டுக்கிருப்பாரு.
வர வேண்டிய முக்கியஸ் தரு வந்துட்டாருன்னா தமிழர்களின் வீரவாள் எங்கள் குலக்கொழுந்து அண்ணன் வந்துவிட்டார் வந்துவிட்டார்'னு இவரு பேசும்போதே, ஆராவது தாவி மைக்க புடுங்கி, ' வாழ்க வாழ்க! ' னு கத்த ஆரம்பிச்சிருவாய்ங்க. அப்பறம் அவர ஒரு நாயும் கண்டுக்காது. அப்பிடியே ஓரமா நின்னு எதாவது ஒரு சால்வைய ஆட்டையப் போட்டுட்டு, வட்டஞ் செலவுல சரக்கடிச்சிட்டு, நடுரோட்ல நின்னு ராட்டினம் சுத்த ஆரம்பிச்சிருவாரு.

பேச்சு பேச்சா எல்லா நேரமும் இருக்காதுல்ல. எவனாச்சும் ஒருத்தன் பொடனியில நாலு சாத்தி சாத்தி, ரோட்டோரமா தூக்கிப் போட்டுப் போயிருவாய்ங்க. மேலு காலெல்லாம் ரத்தம் வழிய வீடு வந்து சேருவாரு நம்ம ஆளு!
என்னையக் கேட்டா பேச்சக் கொறைக்கணும்ணே. ஓவரா பேசி அதிகமா நாம ஆடுறதாலதேன் பூமித்தாயே அப்பப்ப அங்கங்க ஆட்டம் காட்டுறா. இந்தோனேஷியால பூகம்பம்னு சேதி வந்தா இங்க அவனவனும் கடலப் பாக்குறாய்ங்க. அப்பிடி ஆகிப்போச்சுண்ணே நெலம!
அன்னிக்கு ஒர்த்தரு கடலப் பாத்துக்கிட்டே டி.வி - ல பேட்டி குடுக்குறாரு, ' ஒருவாட்டி சுனாமி வந்துச்சு. பொறுத்துக்கிட்டோம்.
ஆனா இப்பிடி அடிக்கடி வந்தா நாங்க எங்க போறது? நீங்களே சொல்லுங்கய்யா'ங்கறாரு.. இதுக்கு ஆரு பதில் சொல்ல முடியும். மனுஷன் தப்பு பண்ணா போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணலாம். கடல பத்தி கடவுளுகிட்டயா கம்ப்ளைண்ட் குடுக்க முடியும்!
அவனவனும் ஆசையில பினாமி வெச்சி பூமிய வளைக்க வளைக்க சுனாமி வந்து மொத்தமா சுருட்டுது. சாமியாரெல்லாம் மாமியாரு வூட்டுக்கு பிக்னிக் கெணக்கா போயிட்டு வாராக. போலீஸ் ஸ்டேஷனு வாசல மிதிச்சதுக்கே நாண்டுக்கிட்டு செத்தவய்ங்களும் இங்க தேன் வாழ்ந்திருக்காக!
இப்ப ஜெயிலுக்குப் போக ஜீப்புல ஏத்துனாலும், ஒலிம்பிக்குல தங்கப் பதக்கம் கெடச்ச மாதிரி ஈனு இளிச்சுக்கிட்டே கையாட்டி போஸீ குடுக்கறாய்ங்க. நியாய அநியாயத்துக்கு பயப்படுறவங்க கொறஞ்சி போகக் கூடாதுண்ணே!
- (வருவேன்)
(17.04.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)