அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 25

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

தாய் ஒறவு மாதிரிதேன்... இந்தத் தாய் மாமன் ஒறவும்...!

பொறப்பும் வளர்ப்புந்தேண்ணே ஒருத்தன மனுசனா உருவாக்குது!

தொப்புள்கொடினு ஒண்ண வெச்சித்தேண்ணே ஒவ்வொரு உசுரையும் கடவுளு படைக்கிறான். அப்பிடிப் பொறப்புக்கும் எறப்புக்கும் நடுவுல நடக்கிற பயணத்துல, வழித் துணையா வர்றதெல்லாம் ஒறவும் நட்டந்தேண்ணே!

தெருவோரமா நாய் ஏழெட்டுக் குட்டிங்களோட கெடக்கும். இன்னுங் கண்ணு தொறக்காத குட்டிங்க, அம்புட்டு கரெக்டா அம்மா மடி தேடிப் போயி பாலு குடிக்கும்ல, அப்பிடித்தேன் மனுச சென்மமும்!

ஆத்தாக்காரி, அப்பனை அடையாளம் காட்டுவா. அப்பறம் ஆளாளுக்குத் தோள்லயும் மார்லயும் சொமந்து திரிஞ்சு, பூரா சொந்த பந்தம், சாதி சனத்தையும் அந்தப் பச்ச மண்ணுக்கு பழக்கிவுட்ருவாய்ங்க. பொடி வீச்சத் தோட, கை நடுநடுங்க ' எலேய் என் மொக்கத்துரை!'னு பாதந் தொட்டுக் கும்பிடுறவந்தேன் தாத்தா. குப்புனு சாராய நாத்தத்தோட, முள்ளு மீசை குத்த மொச்சு மொச்சுனு முத்தங் குடுக்கறவந்தேன் தாய்மாமன். இடுப்புல தூக்கிக்கிட்டு எல்லாப் பக்கமும் தட்டாம் புடிக்கத் திரியறது அக்காக் காரி. காலு மேல போட்டு, எதமாப் பதமா வெந்நீத் தண்ணி ஊத்திக் குளுப்பாட்டு சின்னம்மா. ' குட்டிக் குட்டிப் பாப்பா!'னு மூச்சு முட்டக் கட்டிப் புடிக்கிறது அண்ணங்காரன்... இப்பிடி அம்புட்டுச் சொந்தத்தையும் அந்தப் புள்ள அடையாளங் கண்டுக்கிரும்!

Vadivelu
Vadivelu

பேரு வைக்கறது, சோறு ஊட்டுறது, காது குத்தறது, இருந்த சடங்கு, கண்ணாலம்னு கருமாதி வரைக்கும் கண்ணு அடிச்சாலும் மொறச்சாலும் கொஞ்சிக்கிட்டுக் கெடக்கறது சொந்த பந்தந்தேன்!

எங்கூர்ல இன்னமும் ஒரு குடும்பத்துக்குள்ள ஏதாச்சும் வெவகாரம், வில்லங்கம்னா போலீஸ் ஸ்டேஷன் போகமாட்டாய்ங்க. கோர்ட்டு படியேற மாட்டாய்ங்க. ' கூட்டுறா பஞ்சாயத்த! ' னு கூட்டிரு வாய்ங்க. சொந்தபந்தம், சாதி சனத்துல இருக்கற பெருசுக வெள்ளையும் சொள்ளையுமா ' கெடாச் சோறுக்கு கேரண்டிடா! ' னு குமிஞ்சிருவாய்ங்க. முத்தத்துல ஜமுக்காளத்த விரிச்சி முறுக்கு மீசைக உக்காந்துரும்.

'ஒண்ணா மண்ணா கெடந்த பயக, நல்லா இருந்தாத்தேன் கண்ணுக்கழகு..... என்னப்பா நாஞ் சொல்றது'னு பல்லக் குத்திக்கிட்டே ஒரு புலி மீச பங்காளி பஞ்சாயத்தத் தொடங்கி வெப்பாரு. அப்பிடியே எரச்சலும் கரச்சலுமா பேச்சு போயி அந்தி சாஞ்சவாக்குல ஏதாவது தீர்வ சொல்லிப்புட்டு, சொந்த பந்தங்க கஞ்சிய அடிச்சுப் புட்டுக் கலைஞ்சுபோகும்.

காது குத்து, கண்ணாலம்னா பத்திரிகையில ரெண்டு பக்கத் துக்குச் சொந்தக்காரய்ங்க பேரை மளிகக் கட லிஸ்ட்டு கெணக்கா போட்டுத் தாளிச்சிரு வாய்ங்க. தாய்வழி மாமன்கள், தந்தை வழி மாமன்கள், பங்காளிகள், உடன்பிறப்புகள்னு அதுபாட்டுக்கு லிஸ்ட்டு போயிக்கேயிருக்கும்.

ஒவ்வொரு வூட்லயும் ஒரு பெரிய சைஸு நோட்ட த்தேன் ஆயுசுக்கும் மெயின்டெயின் பண்ணுவாய்ங்க. தான் வீட்டு க்கழகு! " விசேசத்துக்கு ஆராரு எம்புட்டு மொய்யி எழுது னாய்ங்கனு கரெக்டா வெவரம் வெச்சிருப்பாய்ங்க. அதப் பாத்து தேன் இவிங்க மொய்யி மொற பண்றது. அப்பிடி யாரு என்ன மொய்யி வெய்க்கிறாய்ங் களோ, அதவிட எச்சா ஒர் ரூபாயாவது சேத்து வெச்சாத்தேன் மரியாத!

ஒரு விசேசம் வெச்சா, வர்ற மொய்ப் பணத்த வெச்சே அந்தக் குடும்பம் நிமிந்துரும். அப்பிடி எப்பவும் ஒறவுகளத் தூக்கிட்டே திரியற பயபுள்ளைகண்ணே அவிங்க!

அம்பு இருக்க அளவுக்கு வம்பும் பஞ்சமில்லாம இருக்கும். பேச்சுவாக் குல வந்து விழுற வார்த்தைக்கெல்லாம் போரைக் கூட்டிருவாய்ங்க. உறவு மொறைக்குள்ள என்ன அடிச்சுக்கிட்டா லும், வேற வெளியாளுகளோட ஒரு பொல்லாப்பு வந்துச்சுன்னா, எல்லாம் மறந்து மல்லுக்கு வந்துருவாய்ங்க. அதும் மேலு காலு சரியில்லேன்னா, நாளைக்கு ஒரு வீடுனு கோழியடிச்சு கறிச் சோறோட வந்துருவாய்ங்க. அதேன் அம்பு!

தாய் ஒறவு மாதிரிதேன்... இந்தத் தாய் மாமன் ஒறவும்! புள்ளைக்கு பேரு வைக்கிறதோ, பொண்ணுக்கு சீர் வைக்கிறதோ தாய் மாமனுக்குத்தேன் மொத மரியாதை! அக்கா புள்ளைகள மாமங்காரன் மடியில வெச்சித்தேன் மொட்ட போடுவாய்ங்க, காது குத்துவாய்ங்க. அக்கா பொண்ணு சடங்கானா ஓல கட்டி ஒக்கார வைக்க வேண்டியது தாய் மாமந்தேன்.

Vadivelu
Vadivelu

விட்டு வீடு பொண்ணு போயிட்டாலும், அப்பன் வீட்டு ஒறவும் ஒத்தாசையும் வாழையடி வாழையா வர்றது இந்தத் தாய் மாமன் ஒறவுனாலதேன்! இப்பிடிக் கூடிக் கொண்டாடித்திரியற சனங்க, பொழப்பு தேடி ஊர் ஊராப் போயிட்டானுக. இப்ப டவுனு வாழ்க்கையில சொந்த பந்த பாசமெல்லாம் பாதி போயிருச் சேண்ணே. ஆராவது சொந்தக் காரய்ங்க ஆசையா பாக்கணும்னு தேடி வந்தா அவனவனும் மூஞ்சி குடுக்காம டி.வி - யப் பாத்துக்கிருக்காய்ங்க. வந்தவாக்குல ' இங்கல்லாம் தண்ணி கஷ்டம் மாமா. ஒரு நாளைக்கு அஞ்சு கொடந்தேன் கெடைக்குது'னு குண்டப் போட்டு வந்த ஆளுகளுக்கு வேப்பல அடிச்சி அப்பிடியே திருப்பி விட்டுர்றாய்ங்க. வேற வழியில்ல. இங்கிட்டும் வாழ்க்க அப்பிடித்தேன் இருக்கு.

ஆனா ஒண்ணு... ' வீடு வரை உறவு... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ'னு கண்ணதாசன் எழுதுனார்ல. ஆனா, ஒறவெல்லாம் நல்ல வெதமா அமைஞ்சிபோச்சுன்னா எவனும் காடு வரைக்கும் நிம்மதியா போயிச்சேந்துடலாம்ணே!

- (வருவேன் )

(24.04.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)