
புள்ளைகளுக்கு சொத்து குடுக்குறோமோ இல்லியோ, படிப்பைக் குடுத்துரணும்!
அங்கிட்டு ரஜினியோட ' சந்திரமுகி ', இங்கிட்டு விஜய்யோட ' சச்சின்னு ரெண்டு படம் இந்த வாரம் ரிலீஸுண்ணே. டி.வி. பாஷையில சொல் றதுன்னா, பாத்து எஞ்சாய் பண்ணுங்க! '
எல்லாப் பிள்ளைகளுக் கும் லீவு விட்டாச்சு! விடியக் காலையில தட்டுல போட்டதத் தின்னுப்புட்டு வெளியில ஓடுற புள்ளைக, அப்பிடியே ரோட்ல, காட்ல வெளாடித் திரியுற நேரம்ல இது. ஆடட்டும்ணே! ரெண்டு மாசத்துக்கு தன்னால புழுதியில பொரண்டு, மேலு காலெல்லாம் அழுக்காகி, சந்தோஷமாத் திரியட்டும்ணே!
வீட்ல பச்சப் புள்ளைகளை செத்த நேரம் தரையில இறக்கிவிட மாட்டாக. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தோள்லயே தூக்கித் திரிவாக. புள்ள பாதம் தரையில படறதுக்கே கொள்ள நாளாகிப் போகும். வீட்ல வெளாட ஆரம்பிக்கிற புள்ள, வீதியில இறங்கி பத்து நிமிஷம் கண் பார்வையில் காமெடி இல்லாமப் போச்சுன்னா, அம்புட்டுப் பேரும் பதறித் தேட ஆரம்பிச்சுருவாக. அப்படிக் கோழிக்குஞ்சு கெணக்கா பொத்திப்பொத்தி வளக்குற புள்ளைகள, பெத்தவங்க நம்பி ஒப்படைக்கிற ஒரே எடம் பள்ளிக்கூடந்தேன்!

ஆத்தா அப்பனுக்கு அப்புறம் வாத்யாருதேன். அதேஞ் சொல்லி வெச்சிருக்காய்ங்களே, ' மாதா பிதா குரு தெய்வம்! ' னு. ஏன்னா, எதுவுமே தெரியாத பச்ச மண்ணா பள்ளிக்கூடத்துக்குள்ள போறதுகள, எதையும் சந்திக்கிற தைரியத்தோட மனுசங்களா மாத்தி அனுப்புறது படிப்பு தேண்ணே!
பள்ளிக்கூடத்துல படிச்ச பல பேரு பார்லி மென்ட்டு போயிருக்காக. ஆனா, பள்ளிக் கூடத்துலயே பார்லிமென்ட்டு நடக்குற கதை தெரியுமா!
ஜனாதிபதியா எட்மாஸ்டர் இருப்பாரு. பள்ளிக்கூடத்துல படிப்பு, வெளாட்டு, பேச்சுப் போட்டினு எல்லாத்துலயும் நம்பர் ஒன்னா இ ருக்க பையந்தேன் பிரதம மந்திரி. கிளாஸ் லீடர்க எல்லாரும் எம்.பி.ங்க. ' போட்டுக் குடுக்குறதுக்குன்னே அலைவாய்ங்கள்ல அவிங்கெல்லாம் போலீஸு. வெவரமான லீடரு இருப்பான்ல, அவந்தேன் போலீஸ் மந்திரி. டாக்டரு மகன் மாதிரி சுத்தபத்தமாத் திரியற பையன் எல்த் மினிஸ்டரு. துறு துறுனு வேலையப் பாக்குற பையன் பொதுப் பணித் துறைனு பையங்கள தகுதிக்கேத்த மாதிரி மந்திரிகளாக்கி இருப்பாய்ங்க.
அது பெருங் காமெடியா இருக்கும். ஸ்கூல் வாசல்ல இருக்க பிளாக் போர்டுல, அன்னன்னிக்கி பேப்பரப் பாத்து, ' இன்று சீன பிரதமர் இந்திய விஜயம். ', ' இந்திய ராக்கெட் விண்ணில் பறந்தது'னு எழுதிப்போடறது கல்வி மந்திரி வேலை. தெனம் காலையில எல்லாரும் குளிச்சிட்டுத்தேன் வர்றாய்ங் களான்னு பாக்க வேண்டியது சுகாதார மந்திரி வேலை. காலையில மினிஸ்டரு தலைமையில் ஒரு படையே வாசல்ல நின்னுக்கிட்டு, குளிச்சிட்டு வந்திருக்காய்ங்களா இல்லியா'னு செக் பண்ணுவாய்ங்க. எப்பிடி செக் பண்றது? வந்து நிக்கிற ஒவ்வொருத் தனையா நிப்பாட்டி, இடுப்புல கட்டியிருக்க அண்ணாக் கயித்தத் தொட்டுப் பாப்பாய்ங்க. ஈரமா இருந்துச் சுனா, பார்ட்டி குளிச்சிருக்கான்னு அர்த்தம். ஈரமா இல்லேன்னா, புடிச்சு பேர் எழுதி அப்புறம் அபராதம் போட்ருவாய்ங்க. ஆனா, நம்ம பயக எட்டையங்களாச்சே, பள்ளிக்கூடத் துக்கு வர்ற வழியில ஒரு அடிகொழாய் இருக்கும். குளிக்காத பயக அங்க தண்ணி புடிச்சு, அண்ணாக் கயித்த மட்டும் நனைச்சிட்டு வந்து தப்பிச்சிருவாய்ங்க.
ஸ்கூலுக்குள்ள ஒரு முட்டாயிக் கட இருக்கும்ல, கல்ல மிட்டாய், முறுக்கு, கமர்கட்டு, பனங் கிழங்கு, கப்பக் கிழங்குன்னு எல்லாம் வெச்சிருப்பாக விலைப் பட்டியலோட! அதுக்கு நேர்மைக் கடைனு பேரு. நமக்கு என்ன வேணுமோ, அத எடுத்துட்டு அதுக்கான காசை அங்கன இருக்க உண்டியல்ல போட்றணும். ரீசஸ் இன்டர்வெல்ல பயங்கரக் கூட்டம் வரும்ல, அப்ப போலீஸ் பந்தோபஸ்து இருக்கும். கூட்டுறவுத் துறை மந்திரி மேற் பார்வையில் வியாபாரம் நடக்கும்.
மத்தியானம் சாப்பாட்டு டைம்ல மதிய உணவு போடுற எடத்துல உணவு மந்திரி வந்து நிப்பாரு. பசங்க ஒருத்தனுக்கொருத்தன் மல்லுக்கட்டுனாய்ங்கன்னா, நியூஸ் பரவி போலீஸ் வந்துருவாய்ங்க. இப்பிடி எங்க பாத்தாலும் அரசியல்வாதிக நடமாட்டமா இருக்கும்!
அந்த சின்ன வயசுலயே பயபுள்ளை களுக்கு பொறுப்பு வரணும்னு பண்ண திட்டம். வாரத்துக்கொரு நா சனிக்கிழமை பார்லிமென்ட் கூடும். எல்லா கிளாஸ்லயும் செகண்ட் ரேங்கு வாங்குற பயகதேன் எதிர்க்கச்சி!
ஸ்கூலே கூடி வேடிக்க பாக்க, பார்லிமென்ட்டு பரபரப்பா நடக்கும்ணே! ' கூட்டுறவுத் துறை மந்திரி ஊழல். பயங்கர மோசடி! ' னு எதிர்க்கச்சி எம்.பி ஒருத்தர் குற்றஞ் சாட்டுவாரு. ' போன பொதங்கிழமை மத்தியானம் ரீசஸ் இன்டர்வெல்ல, எட்டாங் கிளாஸ் படிக்கிற பாண்டித்தொரைக்கு காசு போடாமலே கல்ல மிட்டாய் திங்கவிட்டாரு மந்திரி. கலயரசிக்கும், தவமணிக்கும் எப்ப வந்தாலும் பனங்கிழங்கு இலவசம். பள்ளிக்கூடத்துச் சொத்தை, கூட்டுறவுத் துறை மந்திரி கொள்ளையடிக்கிறார். உடனடியா அவரை பதவியிலிருந்து நீக்கவும்'னு எதிர்க்கச்சிக்காரய்ங்க கோஷம் போடுவாய்ங்க. ' இல்ல, நான் நிரபராதி. சாமி சத்தியமா, தாய் அறிய நா தப்பு பண்ணல!
இது பொய்க் குற்றச்சாட்டு! ' னு அங்கிட்டு மந்திரி அழுது பொலம்புவான். பிரதம மந்திரி, ' நீதி விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன்'னு சொல்வாரு. தனிப் போலீஸ் படை விசாரிச்சு, குடுக்கிற ரிப்போர்ட்டு, ஜனாதிபதிக்குப் போவும். குத்தம் பண்ணது உண்மைன்னா, அவரைப் பதவி வெலகச் சொல்வாய்ங்க. இப்பிடி நெச பார்லிமென்ட்டு பாதிரியே நடக்கும்ணே! நாட்டு நடப்ப, அந்த சின்ன வயசுலயே எம்புட்டு சுவாரஸ்யமா சொல்லிக் குடுத்திருக்காய்ங்கனு புரியுதுண்ணே!
எழுதப் படிக்கச் சொல்லித் தர்றது மட்டுமா ஒரு பள்ளிக்கூடத்து வேல. ' அசோகரு சாலையோரங்கள்ல மரம் நட்டார்'னு சொல்வாய்ங்க. நானு எங்க வீட்டுப் பக்கம் இருக்க புளிய மரத்தையும் அவர்தேன் நட்டாரான்னு ஆச்சரியமாப் பாப்பேன். மதுரப் பக்கம் முனிச்சாலை வரைக்கும் மரம் நடறதுக்கு வந்திருக்காரேனு இப்ப நினைக்கையிலயே புல்லரிக்கும். ஒரு புட்பாலு, ஒரு டார்ச் லைட்டு ரெண்டையும் வெச்சுக்கிட்டு, பூமி எப்பிடிச் சுத்துது, இரவு பகல் எப்பிடி மாறிமாறி வருதுன்னு பாடம் நடத்துவாய்ங்க. டார்ச் லைட்டு எரிஞ்சுக்கிருக்கும். அதேன் சூரியன். அதுக்கு முன்னால பந்தை வெச்சு, சுத்துவாய்ங்க. எம்புட்டுப் பெரிய மேட்டர, சிம்பிளாய்ச் சொல்லித் தர்றாய்ங்க பாருங்கண்ணே.

' சஞ்சாயிகா சிறு சேமிப்புத் திட்டம்'னு நாலணா, எட்டணாவையும் எப்பிடிச் சேமிக்கிறதுன்னு கத்துக் குடுப்பாய்ங்க. இப்பிடிச் சாமி கும்பிடறதுலேயிருந்து, சமூகத்தோட பழகறது வரைக்கும் எல்லாம் சொல்லித் தருவாய்ங்களேண்ணே!
களிமண்ண வனஞ்சு சட்டி, பாத்திரம், பொம்ம, கிளியஞ் சட்டி, பானை இப்பிடி என்னென்னமோ குயவன் பண்றா மாதிரி, டாக்டரு, எஞ்சீனியரு, ஆபீசருனு வெதவெதமான ஆளுகள உருவாக்குறது வாத்தியாருகதேண்ணே!
நானெல்லாம் படிக்காத பய! எங்கிட்டோ உருண்டு பொரண்டு ஒரு மாதிரி நிமுந்து நின்னுட்டேன். ஆனா, புள்ளைகளுக்கு சொத்து பத்து என்ன குடுக்குறோமோ இல்லியோ, படிப்பைக் குடுத்துரணும்ணே!
அதே மாதிரி, கத்துக்குடுக்குற வாத்தியாருகள மதிக்கணும்ணே... குருவைக் கும்பிடணும்ணே!
(வருவேன்)
படங்கள் : கே.ராஜசேகரன்
(01.05.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)