
பகுமானமாப் பேசுவாய்ங்க... ஆனா, டக்குனு கால்ல விழுந்துருவாய்ங்க..!
‘நேத்துதான்‘ அந்த நாள் ஞாபகம்'ங்கற படத்துக்காக ஒரு காமெடி ஸீன் நடிச்சேன்! அதுல நா ஒரு ஓட்டலு மொதலாளி. காலையில வந்து கடக் கதவத் தொறந்து, ஊதுவத்தி கொளுத்துனவாக்குல பரபரப்பாயிருவேன். வெளிய வேலையாளுகள வரிசையா நிறுத்தி 'போ... நீ அந்த ஏரியா போ, நீ இந்த ஏரியா போ... புடிச்சுக் கொண்டா போ!' னு வெரசாப் பத்திவுடுவேன். அவனவனும் தெறிச்சு ஓடுவாய்ங்க. எதுத்தாப்புல ஒரு டீக்கடையில ரெண்டு போலீஸு நின்னு இது அம்புட்டையும் வாட்ச் பண்ணிக்கிருக்கும். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போன பயக ஆளுக்கு நாலஞ்சு ஆளுகளோட வந்து எறங்குவாய்ங்க. நா என் ஆளுக காதுல மெதுவா 'என்னடா வெளியூர்காரய்ங்கதான... பஸ் ஸ்டாண்டுப் பக்கம்தான புடிச்சீங்க'னு கேட்டு கன்ஃபாம் பண்ணிக்கிட்டு, அப்பிடியே நிமிந்து கும்புட்டு ஈஈஈஈன்ன்னு சிரிச்சமானிக்கு வரவேற்பப் போடுவேன்.

வாங்க... வந்து வகுறு முட்டச் சாப்புடுங்க'னு அம்புட்டுப் பேரையும் கூப்புட்டு உக்காரவெச்சி போட்றா பந்திய! 'னு எலயப் போட ஆரம்பிச்சிருவோம்.
'ஏய்... அங்க சாம்பாரு ஊத்து ', ' ந்தா அண்ணாச்சிக்கு பொங்கலப் போடு ', ' அப்பத்தாவுக்கு பஜ்ஜி எடுத்து வை! ' னு ஒரே அன்புத் தொல்ல அலம்பல் பண்ணி, பயபுள்ளைகள நல்லா எர எடுக்க வெப்பேன். திடீர்னு சாப்புட்டுக்கேயிருக்க ஒரு ஆளு பவ்வுனு கக்க ஆரம்பிப்பான்ல. வரிசையா அம்புட்டுப் பேரும் வாயையும் வயித்தையும் புடிச்சிக்கிட்டு சவுண்டு குடுக்க ஆரம்பிச்சிருவாய்ங்க. நா அப்பிடியே செம ஜாலியாகி ' ஏ மாப்ள, ஏத்து... பயகள பார்சல் பண்ணி ஏத்து! ' னு கொரலு குடுப்பேன். சர்க்கு சர்க்குனு வாசல்ல ரெண்டு மூணு வேனு வந்து நிக்கும். பூராப் பேரையும் தூக்கி போட்டுக்கிட்டு வேனு போயிக்கேயிருக்கும். நா அப்பிடியே சாமியக் கும்புட்டுட்டு' அப்பனே இன்னிய சோலி முடிஞ்சுதுரா'னு கடய இழுத்து மூடிப்புட்டுக் கெளம்பிருவேன்.
இந்தக் கூத்தயெல்லாம் பாத்துக்கிருந்த போலீஸு, 'என்னா.... இவன் இப்பிடிப் பண்றான்?'னு அக்கம்பக்கத்துல வெசாரிக்கும். ' இது தெனம் நடக்குற கூத்துங்க. காலையில கடயத் தொறப்பாய்ங்க. வண்டியில ஆளுங்களக் கூட்டிக்கிட்டு வருவாய்ங்க. ஒரே ஒரு பந்திதேன் போடுவாய்ங்க. அத்தன சனமும் வாந்தி, வகுத்துவலினு வுழுந்து உருளுவாய்ங்க. ஒடனே வேனு வந்து நிக்கும். எல்லாப் பேத்தயும் அள்ளிப்போட்டு அனுப்பி வெச்சிட்டு, ஓனரு கௌம்பிருவாரு!'னு என்னயக் கையைக் காட்டிருவாய்ங்க.
'என்னடா இது! மர்மக் கதையா இருக்கே?'னு போலீஸு என் பொடனியில சாத்திப் புடிச்சிரும்.' அட! இது கஸ்டமர் கேருங்க. வந்தவுகள் நல்லபடியாக் கவனிச்சி, அவுகவுக போய்ச் சேர வேண்டிய எடத்துக்கு வேன்லயே கொண்டுபோய் வுட்டு வர்றோம்'ம்பேன்.’
உண்மையச் சொல்றா என் உடுக்கு! ' னு அப்பிடியே என்னய ஸ்டேஷனுக்குத் தூக்கிட்டுப் போய்ப் போட்டு, உரிச்சு ஊறுகா போடுவாய்ங்கள்ல. வலி தாங்க முடியாம, ' சொல்லிர்றேன்ய்யா, சொல்லிர்றேன்ய்யா? னு குத்தத்த ஒப்புக்குவேன். என்னான்னு?
'மெட்ராஸுல இருக்கற பிரைவேட்டு ஆஸ்பத்திரி எல்லாத்துலயும் நானு கான்ட்ராக்ட்டு எடுத்துருக்கேன்ய்யா. தெனமும் ஆசுபத்திரிக்கு ரெவ்வெண்டு பேசண்டுகளப் புடிச்சுக் குடுக்குறதா ஒப்பந்தம். அதான் வெளியூர் ஆளுங்களா தேடிப் புடிச்சிக் கூட்டியாந்து பெருச்சாளி சாம்பாரு, பல்லிக் கொழம்பு, கரப்பான் பூச்சி பொறியல்னு வெதவெதமாப் போட்டு நாங்களே வேனு வெச்சி ஆசுபத்திரிக்கு அனுப்பிச்சிருவோம்'ம்பேன்.
போலீஸு போட்டு அடி பின்னிக்கிருக்கும் போதே எனக்கு செல்போனு வரும். ' விட்ரா... விட்ரா அப்பறம் பாக்கலாம்! ' னு அவசரமா கட் பண்ணு என்னா போனு? ' னு கேப்பாய்ங்கள்ல, ' அது ஒண்ணுமில்ல சார். மதுரயில பிராஞ்சு ஆரம்பிக் கலாம்னு சொல்றாய்ங்கம்பேன். 'பிராஞ்சு, பெரிய பில்கேட்ஸு! பிராஞ்சு ஆரம்பிச்சு பிசினஸை டெவலப் பண்றீங்களோ! ' னு பிச்சிப் பிரிச்சிருவாய்ங்க.
இப்பிடிக் கோக்குமாக்கான ஆளுக ஊருக்குள்ள கொள்ளப் பேரு திரியறாய்ங்கண்ணே. அன்னிக்கு மதுரைக்கு ஏரோப்ளேன்ல போனேன். பக்கத்துல ஒரு கோட்டு சூட்டு ஆளு. பக்கத்துல ஒக்காந்ததும் ஒரு மாதிரி மொறச்சான். நானும் வெவரம் புரியாம, லேசா சிரிச்சுவெச்சேன். பயபுள்ள ரியாக்ஷன் குடுக்கலே. சரி, ஒரு மணி நேரந்தானேனு கண்ண படுத்துரலாம்னு நெனச்சேன். முட்டூனு சோத்தைக் குடுத்தாய்ங்க. புளிசாதம், தயிர்சாதம்னு ஒரு தட்டு. நல்ல பசியில கெடந்தேன். லவக்கு லவக்குனு ரெண்டு அள்ளிப் போட்டதும், 'ப்ச்... மிஸ்டர். இதெல்லாம் இப்பிடிச் சாப்பிடக் கூடாது. இப்பிடிச் சாப்பிடணும்'னு பண்ணிக் காமிச்சான். நா அதுக்கும் ஒரு சிரிப்போட, நா ஊர் நாட்டாந்தான! னு சொம்மா ஒரு வார்த்தை சொன்னேன். 'ஓ நோ, லாஸ் ஏஞ்சல்ஸ்ல இப்பிடிச் சாப்பிட்டா, பக்கத்துல இருக்கவனுக்கு வாமிட்டு வந்துரும்'னுட்டு டீசன்ஸி, எட்டுக்கெட்டுனு என்னமோ கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சான். என் பேரு வடிவேலுனு தெரியாத மாதிரியும், நான் நடிச்ச சினிமா எதையும் பாத்ததில்லங்கிற மாதிரியும் அவரு பேசுன பேச்சு தாங்காம, 'ஸாரி சார்'னுட்டு டக்குனு ஜன்னலு பக்கம் திரும்பிட்டேன்.
மதுரயில எறங்குனதும் ஓட்ட ஓட்டமா நடக்க ஆரம்பிச்ச என்ன வெரட்டிப் புடிச்சு நிறுத்துனாரு அந்தாளு. என்னானு பாத்தா, 'வடிவேலு சார்! என்ன ரிசீவ் பண்ண ஒரு பெரிய கூட்டமே வந்திருப்பாங்க. சும்மா சேந்து வந்தீங்கன்னா, கொஞ்சம் மரியாதயா இருக்கும். நாமள்லாம் ஒரு போட்டோ எடுத்துக்கலாமே'னாரு. அம்புட்டு நேரம் வரைக்கும் ஏதோ பெரிய மனுசன்னு நெனச்சிருந்தேன். 'ஹேய் மிஸ்டர்! ஹூ ஆர் யூ? நோ போட்டோஸ்!'னுட்டு தோளைக் குலுக்கிட்டுப் போய்க்கேயிருந்தேன். என்னா ஆளு பாருங்க?

எங்கூர்ல ஒரு ஆளு இருந்தாரு. வேல ஒண்ணுங் கெடையாது. கட்சிக் கூட்டம் போடுறேன்னு வசூல் பண்ணி வாழ்த்துறதுதேன் அவருக்கு பிசினஸே. ஏரியாவாரியா மாசத்துக்கு ஒரு கூட்டத்தப் போட்ருவாரு. கக்கத்துல சுருட்டுன பையோட சட்டுனு வெள்ளையுஞ் சொள்ளையுமா பிட் நோட்டீ ஸ அடிச்சிட்டுக் கௌம்பிருவாரு. 'அண்ணாச்சி கச்சி மீட்டிங்கு போட்ருக்கோம். மாவட்டம் வருது... பாத்து கவனிங்க'னு வீடு, வாச, கடைனு அம்புட்டுலயும் பூந்து பொறப்பட்டு வருவாரு. அப்பிடி இப்பிடிக் காசு தேத்தி தெரு முக்குல ஒரு மேட போட்டு, கொழா ரேடியா கட்டி கச்சிப் பாட்டுங்கள அலற விட்டுட்டு, கடத் தெருவுல அங்கிட்டும் இங்குட்டுமா ஓடிக்கிருப்பாரு. வர்றவங்க போறவங்ககிட்டயெல்லாம்' எப்புடி.... ரேடியாவக் கட்டிப்புட்டம்ல. மாவட்டம் வந்துக்கிருக்காரு. சீரியல் லைட்டுக்கு சொல்லியிருக்கு.
பாத்துப் பண்ணிட்டுப் போங்கப்பு'னு கடைசிக் கட்ட அதிரடி வசூல்ல எறங்கிருவாரு. அங்க இங்க தேறாம மேடைக்கு எதுத்தாப்புல இருக்கற எதாவது கடையில வம்படியா போயி நிப்பாரு. 'பாத்து எதாவது பண்ணுங்க அண்ணாச்சி!' ம்பாரு.
அண்ணாச்சி!' ம்பாரு. அண்ணாச்சி இவரக் கண்டுக்காம' என்ன வேணும்...
அரலி கிருஷ்ணாயிலா?'னு அவரு பாட்டுக்கு வேணும்னே யாவாரத்துல குறியா இருப்பாரு. கெஞ்சி கெஞ்சிப் பாத்துட்டு' தர மாட்டியா... இல்ல தர மாட் டியங்கறேன். காட்றேன்யா... நா யாருனு காட்றேன்! ' னு ஆவேசமா கெளம்பிப் போவாரு. அங்க இங்க எதாச்சும் சில்லறையத் தேத்தி படுகப் பக்கம் போயி பட்டச் சரக்கப் போட்டுட்டு வந்து மீட்டிங்க ஆரம்பிச்சிருவாரு. லோக்கல் கச்சிக்காரங்க பேசப்புடிச்சி எதுத்தாப்புல இருக்கற அண்ணாச்சி கடயப் பாத்துப் பாத்து, ' எங்ககிட்டயே அரசியலா... நாங்கள்லாம் அரசியல்லயே பொறந்து வளந்தவய்ங்க. அழிச்சிருவோம், ஆமா! நீ எப்படி இந்த ஏரியாக்குள்ள வந்த... என்னா பண்ணி வளர்ந்தனு உன் பூகோளஞ் சரித்திரமே எனக்குத் தெரியும். வெச்சுக்காத... வேணாம் தர்சாயிருவ! ' னு எதிர்க்கச்சிக்கு எச்சரிக்க விட்ற மாதிரி அண்ணாச்சிக்கு எச்சரிக் கயப் போட்டுக்கிருப்பாரு. மீட்டிங் முடியறதுக்குள்ள பார்ட்டிக்கு மப்புத் தெளிஞ சிரும். மைக் செட்டுக்காரன், பந்தக்காரன் வேற கரெக்டா காசுக்கு வந்து நிப்பான். நம்மாளு வேகவேகமா அண்ணாச்சிக் கடைக்குப் போவாரு. இவரு வர்றத ஓரக்கண்ணாலயே பாத்துட்டு அண்ணாச்சி கண்டுக்காம யாவாரத்துல தீவிரமாவாரு. இவரு போயி நின்னு ' வணக்கம் அண்ணாச்சி! வணக்கம் அண்ணாச்சினு சொல்லிக் கேயிருப்பாரு. சட்டுனு அண்ணாச்சி திரும்பி என்னமோ அழிச்சிருவேன், ஒழிச்சிருவேன்னு பேசினீரும் பாரு கோவமா. ' அட! அது அந்த காத்தமுத்துப் பயலச் சொன்னேன் அண்ணாச்சி... மைக் செட்டுக்காரன் நிக்கறான். பாத்து பண்ணுங்க அண்ணாச்சி'னு கெஞ்சிக் கெஞ்சியே எப்புடியாவது காச வாங்கிருவாரு.
பகுமானமாப் பேசுவாய்ங்க... ஆனா, சக்கரம் சுத்திருச்சுன்னா, டக்குனு கால்ல விழுந்துருவாய்ங்க மனுசன்னா நெஞ்சு நிமுந்திருக்கணும்ணே!
- ( வருவேன் )
(08.05.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து..)