அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 28

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

ஒங்கிட்ட காசு இருந்தா 'பூ'வத் தூவுவாய்ங்க... இல்லன்னா வெளியிலகூட 'தல' காட்ட முடியாது.

நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கு. ஒண்ணு.... பூவு. இன்னொண்ணு... தல!

அதுக்கு அர்த்தம் என்னானு தெரியுமாண்ணே? ஒங்கிட்ட காசு இருந்தா ' பூ'வத் தூவுவாய்ங்க... இல்லன்னா வெளியிலகூட ' தல ' காட்ட முடியாது. அதேன் அர்த்தம்!

'கையில வாங்குனேன், பையில போடல, காசு போன இடம் தெரியல! ' னு தங்கவேலய்யா பாடுவார்ல. அது அம்புட்டு நெசம்!

மாச முச்சூடும் மூச்சு முட்ட ஓடியாடி வேல பாத்து சம்பளக் கவர வாங்குவோம். வூட்டு வாடக, கரண்ட்டு பில்லு, கேசு, கேபிளு, பேப்பரு, வாட்டரு, மளிக, பாலு, இஸ்திரி, மருந்து மாத்தர, ஸ்கூல் பீசுன்னு வாசல்லயே செலவுக கூடி நின்னு கும்மியடிச்சு கெக்கெக்கேனு சிரிக்குமுண்ணே! எல்லாத்தையும் பைசல் பண்ணிப்புட்டு, கவரப் பாத்தா அப்பிடியே திரும்பி சொவரப் பாக்க வேண்டியதுதேன்!

'ஒண்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணிலிருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் திண்டாட்டம்னு அப்பவே கலைவாணரு பாடிட்டார்ல. இப்ப உள்ள வெலவாசிக்கு தேதி ஏழு எட்டு தேதிக்கே திண்டாட்டம் வந்து திண்ணையில ஏறி ஒக்காந்திருதே!

Vadivelu
Vadivelu

நம்மாளுக பல பேர உத்துக் கவனிச்சீங்கன்னா ஒண்ணுல இருந்து பத்து தேதிக்குள்ள பல முகங்களுக்கு மாறி ஒரு நவரச நாடகமே நடத்திருப்பாய்ங்க. ஒண்ணாந் தேதி பாத்தா அப்பிடியே வெறப்பா நின்னு கிரிப்பா சிரிப்பாய்ங்க. 'ஆங், அப்பறம்?' னு காலர ஏத்திவுட்டு எதிர்காத்துல ஸ்டைலா வருவாய்ங்க. பழசு எம்புட்டுப்பா நிக்குது... நூத்தி இருவதா? ந்தா... கணக்க செட்டில் பண்ணிட்டு, ஒரு கிங்ஸ் பாக்கெட்டு குடுப்பா! ' னு? அங்கங்க சலவ நோட்டுகள விசிறியடிப்பாய்ங்க. போற போக்குல பைக்க சைடுஸ்டாண்டு போட்டுப் புட்டு, ' அல்சருக்கு நல்லது! ' னு மாதுளம் ஜூஸ் வாங்கிக் குடிப்பாய்ங்க. அப்பிடியே பொன்னுசாமி, வேலு மிலிட்டரினு போயி வறுத்த மீனு, கோழி சாப்ஸு, டபுள் ஆம்லெட்டோட ஃபுல் மீல்ஸ் இருக்கும் சாப்புட்டு ஸ்வீட் பீடா போட்டு வாய் செவக்கத் திரிவாய்ங்க. குடும்பத்தோட, சச்சினு, சந்திரமுகினு ப்ளாக்ல டிக்கெட்டு வாங்கிப் படம் பாப்பாய்ங்க. ம்... தள்ளுபடி, ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீனு எங்க கவே வெளம்பரம் பாத்தாலும் உள்ள பூந்து ரவுண்டடிச்சிட்டு எதையாச்சும் வாங்கிட்டு வருவாய்ங்க.

சாயங்காலம் வூட்டுக்குப் போகும்போது மல்லிப்பூ, ஜிலேபி, பகோடா, காராசேவுனு மூணு நாலு பொட்டலத் தோடதேன் போவாய்ங்க. அப்பிடியே வீட்டுக்காரம்மாவ மல்லிப்பூ மணக்க வண்டில ஏத்தி சரவணபவன், வசந்தபவன்னு போயி மசால் தோச, கல்கண்டுப் பால்னு குடிச்சிக்கிட்டே ' வயசான காலத்துல கெழவி அப்பிடி இப்பிடின்னுதேன் பேசும். நீதான்டா அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்'னு நைஸா குடும்பப் பஞ்சாயத்து பண்ணுவாய்ங்க. இந்தத் திருநாளும் பெருநாளும் நாலு நாளைக்குதேன்!

அப்பறம் சுதி கொஞ்சங் கொஞ்சமா எறங்கும். கிங்ஸ்லேயிருந்து ஃபில்டர் கோல்டுக்கு வாயி மாறிக்கிரும். வீட்லேர்ந்து மறுபடியும் மத்தியானத்துக்கு டிபன் பாக்ஸ் தூக்கிருவாய்ங்க. ' ஒரு டீ, ரெண்டு சீரெட்டு, ஒரு கல்ல மிட்டாயி கணக்குல ஏத்திக்கனு கட அக்கவுன்ட்ட புதுப்பிப்பாய்ங்க. இஸ்திரி சட்ட இல்லேனா என்னனு கொஞ்சம் கசங்குன சட்ட உடுத்துவாய்ங்க. நாலைஞ்சு நாளக்கி ஷேவ் பண்ணாமத் திரிவாய்ங்க.

இருபது தேதிக்கு மேலயெல்லாம் ஆளக் கண் கொண்டு பாக்க முடியாது. ' ஒரு பிப்டி ருபீஸ் இருக்குமா... பெட் ரோலுக்கு! ' னு அக்கம் பக்கம் திரும்பி இளிப்பாய்ங்க. அந்த நேரம்னு பாத்து பாத்து வூட்ல புள்ளைக்கு மேலு காலு சரியில்லாமப் போச்சுன்னா போச்சு! எந்நேரமும் தேள் கொட்டுனக் கெணக்காவே சிடுசிடுனு காசு கவலையில அலைவாரு நம்மாளு.சம்பளக் காரவுக நெலம இன்னிக்கு இப்பிடித்தேண்ணே இருக்கு!

எல்லாருங் காசத் தேடி ஓடிக்கேயிருக்காங்க. செல பேரத் தேடி காசு ஓடி உக்கே யிருக்கு. இதுதேன் இன்னிக்கு நாட்டுக்குள்ள நடந்துக்கிருக்கு. வாங்க அஞ்சறப் பொட்டியில வெச்ச காசு எங்க போச்சுனு தேடற சனம் ஒரு பக்கம். காசப் பதுக்க லாக்கர் எங்கடானு தேடற கும்பல் இன்னொரு பக்கம்னு பேலன்ஸ் இல்லாத தராசு கெணக்கால்ல நம்ம சமுதாயம் ஆடிக்கிருக்கு.

எங்கூர்ல ஒர்த்தரு இருந்தாரு. ஜவுளிக் கட ஓனரு. பெரிய காசுக்காரரு. ஆனா, ஒலக மகா கஞ்சாமட்டி!

அவரு கடையில யாவாரம் முடிச்சு ரவைக்கி கணக்கு முடிக்கிறப்ப, காச படி வெச்சித்தேன் அளப்பாய்ங்களாம். அம்புட்டுப் பெரிய யாவாரம்! அத அப்பிடியே ஆறு மாசத்துக்கு ஒருக்கா அசையாச் சொத்தா வாங்கிப் போட் டுட்டு இவரு அசைஞ்சு அசைஞ்சு தேரா வருவாரு. பிச்சைக்காரங்க யாராவது வாசல்ல வந்து நின்னா, கோவம் தலைக்கேறி மானா வாரியா திட்டிக் குமிச்சி அனுப்பிரு வாரு. இந்தா கோல்டன் பீச்சுல ஒர்த்தர சிரிக்க வெச்சிட்டாப் பரிசுங்கறாய்ங்கள்ல.... அப்பிடி அவருகிட்ட அஞ்சு பைசா வாங்கிப்புட்டா பரிசுன்னு போட்டியே வைக்கலாம்ணே. அந்த மாதிரி ஆளு!

Vadivelu
Vadivelu

அவருகிட்டே ஒரு கொணம் உண்டு. காலையில வாக்கிங் 7. போறப்ப, ஒரு பை நெறைய அரிசிப் பொரிய அள்ளிப் T போட்டுக்கிட்டு, போற வழி எல்லாம் எறும்புக சாப்புடப் போட்டுட்டே போவாரு. என்னாத்துக்குனு கேட்டா புண்ணியம் சம்பாதிக்கவாம். பணங்காசு சம்பாதிக்க திட்டம் போடுற மாதிரி புண்ணியம் சம்பாதிக்கவும் திட்டம் போட்டு எறும்புக்கு அரிசி போடுற ஆளு. ஒரு நா வாக்கிங் போற வழியில அடிக்கறது இன்னாருன்னே தெரியாம கோணிப்பைய போட்டுச் சாத்திச் சவட்டிப்புட்டாய்ங்க. பத்தாக் கொறைக்கு, அவரு கழுத்துல போட் டிருந்த சைக்கிள் செயின் சைஸு தங்கச் சங்கிலியும் அத்துட்டு ஓடிட்டாய்ங்க.

தர்மம் பண்ணாம பணத்த பூட்டிவெச்சி அடி வாங்குனவரு இவருன்னா தர்மம் பண்ணியே காலியானவய்ங்க கொள்ளப் பேரு இருக்காய்ங்க. ' ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் ' பாய்ங்கள்ல... அதோட அர்த்தம் தெரியாம வீணாப்போன பயக பல பேரு. ' எட்டணா இருந்தா எட்டூருக்கெம்பாட்டுக் கேக்கும்'னு காசப் பாத்தவாக்குல அள்ளிவுட்டு குத்துப் பாட்டப் போடுவாய்ங்க. அப்பறம் எல்லாம் போனதும், ' ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் ஒறவும் புரிஞ்சுக்கிட் டேன் கண்மணினு சோக ராகம் பாடுவாய்ங்க.

புதுசாக் காசப் பாத்தவாக்குல பொசகெட்டுப் போயி எல்லாத் தெசயிலயும் எடுத்துவிடுவாய்ங்க. ஊருக்குள்ள திருவிழா விசேஷம்னா, ஊர் பெரிய மனுஷன் எம்புட்டு நன்கொட எழுதுனார்னு பாத்துட்டு அதைவிட ஆயிரஞ் சேத்துப் போட்டுக்கனு அலம்பு வாய்ங்க. கரகாட்டம் பாட்டுக் கச்சேரின்னா அஞ்சு பத்து நிமிஷத்துக்கு ஒருதடவ ' ஆட்டத்தப் பாராட்டி வள்ளல் நவீனக் கர்ணன் அண்ணன் வெள்ளச்சாமி ரூபாய் நூறு'னு மைக்ல அலற விட்டுக்கேயிருப்பாய்ங்க. வெள்ளச்சாமின்னு பேரச் சொல்லும் போதெல்லாம் கை தட்டிச் சலம்ப, சரக்கு வாங்கித் தந்து ஒரு குரூப்ப வேற ரெடி பண்ணி வெச்சிருப்பாரு. ஒரு நா இல்லாட்டி ஒரு நா தொழில் புட்டுக்கிச்சு, நஷ்டத்துல நட்டுக்கிச்சுனு எதாவது நடந்து பூராப் பணமும் போயிரும். நம்மாளுதேன் ஒண்ணுஞ் சேத்து வெக்காம மைக்குல பேரக் கேக்குற சொகத்துக்கே ரூவாக்கள அடிச்சி விட்ருக்காரே... தெருவுக்கு வந்தா கை தட்டுனவய்ங்கள்லாம் காணாப் போயிருப்பாய்ங்க. ஓசிக்கு ஒரு டீ வாங்கித் தர ஒரு ஈ, காக்கா இருக்காது.

காசோட அருமய ஒவ்வொரு நிமிஷமும் ஒணந்தவன் நானு. இங்கிட்டு சான்ஸு கேட்டு திரிஞ்சிக்கிருந்த காலத்துல எப்பவாவது நல்ல சாப்பாடு கெடைச்சா திங்கிறதுக்கு முன்னாடி

மதுரயில எங்க ஆத்தா, எம் பொண்டாட்டி புள்ளைக, தங்கச்சிக இந்நேரம் சாப்புட்ருப்பாகளானு நெனைச்சுப்பேன். அப்பிடியே கண்ணுல கரகரனு தண்ணி ஊத்திரும்.

இருக்கும்போது காசோட மதிப்பு தெரியாதுண்ணே. இல்லாதப்பதேன் தெரியும். என்னையே எடுத்துக்கங்க. இன்னிக்கு தாராளமா காசு இருக்கு. காரு, வூடுனு வாங்க வசதி இருக்கு. ஆனா, இருவது வருஷத்துக்கு முன்னாடி எங்கப்பா ஆசயா கட்டிப் பாக்க எங் கையால ஒரு மல்லு வேட்டி எடுத்துக் குடுக்க வக்கில்லாமத் திரிஞ் சேன். இன்னிக்கு ஜவுளிக் கடையே வாங்கித் தரலாம். ஆனா, எங்க அப்பா இல்லயேண்ணே!

- ( வருவேன் )

(15.05.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)