அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 29

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

“'காதலன்' படத்துக்காக ஷங்கரு கூப்புட்டாரு" ஆத்தீ... நானு காலேஜ் ஸ்டூடண்ட்டா!'னு கேக்கும்போதே எனக்குச் சந்தோஷமாயிருச்சு...”

ரு யானையும் எறும்பும் லவ்வு பண்ணுச்சாம். ரெண்டு பேர் வீட்லயும் கடும் எதிர்ப்பு.

யானையை எனக்குக் கட்டிவைக்கலேன்னா நான் தூக்கு தொங்கிருவேன்'னுச்சாம் எறும்பு. ஏன் எறும்பு அப்பிடி சொல்லுச்சு? ” - இந்தக் கேள்விய என்கிட்ட ஷூட்டிங்ல கேட்டது ஒரு குட்டி ஜோதிகா.

"தெரியலியேடி செல்லம். ஒருவேளை அது ரெண்டும் உசிருக்குசிரா லவ் பண்ணி இருக்கும் ” னேன்.

அய்யோ!'' னு தலையில அடிச்சுக்கிட்டே, ' யானையோட வாரிசு என் வயித்துல வளருது! ' னு அந்த எறும்பு சொல்லுச்சாம்! ” னது அந்த குட்டிப் பொண்ணு.

ஏ.- யாத்தே! இம்புட்டு வளந்து போச்சா ஒலகம்!

Vadivelu
Vadivelu

இப்ப ஒரு நா கார்ல போறப்ப, சிக்னல்ல ஒரு பஸ்ஸு நின்னுச்சு. படியில ஒரு திருவிழாக் கூட்டம் தொங்குது. பூராம் காலேஜு பயக! 'ஹேஹே'ன்னு கூத்தும் கும்மாளமுமாச் சிரிச்சிக்கிருக்காக. பஸ்ஸு கெளம்பிருச்சு. ரெண்டு பேரு மட்டும் ஏறாம, நின்னானுக. ஏதோ எடயில எறங்கிட்டாய்ங்கனு நெனச்சா, பஸ்ஸு கொள்ள தூரம் போனதுக்கப்புறம் அப்பிடியே இவிங்க ரெண்டு பேரும் கீரு போட்றாய்ங்க. ரோட்ல கிறு கிறுனு அவிங்க பஸ்ஸு பின்னால ஒலிம்பிக் ரேஸு ஓடுறதப் பாத்தா, நமக்குக் கிட்னி கலங்குது. இவிங்க இங்கிட்டுருந்து ' ஏய்ய்ய்ய்! ' னு ஓட, அங்கிட்டு பஸ்ஸுலயிருந்து ' மச்சீ வா மச்சீ! ' னு கத்த, ரோட்ல போற வர்றவய்ங்கள்லாம் ஜெர்க்காகி டென்ஷனாப் பாக்கிறாய்ங்க. இவிங்க எதுக்கும் அசங்கல மசங்கல. அப்பிடியே ஓடிப் போயி ஜன்னல்ல ஒத்தக் கையால புடிச்சித் தவ்வி ஊஞ்சாலாடிக்கிட்டே ஒரு சிரிப்பு சிரிக்கிறாய்ங்க பாருங்க. என்னமோ எவரெஸ்ட்ல ஏறி இந்தியக் கொடிய நட்டுப்புட்ட மாதிரி ஒரு சிரிப்பு! ஆத்தீ கொஞ்சம் மிஸ்ஸானாலும் செதறு தேங்கா ஆகியிருப்பேங்களேடானு நமக்கு பதறுது. அப்பறந்தேன் யோசிச்சேன். இந்த வேகம், வெறி எல்லாத்துக்கும் காரணம் என்னண்ணே? வயசு!

அதுவும் இந்தக் காலேஜு வயசு இருக்கே, ரொம்பப் பயங்கரமான பருவம்! எங்கூர்ல ஒரு சின்னப் பய ஆத்தாளோட திண்ணையில படுத்திருந்தானாம். நடு ராத்திரியில் பயலுக்கு ஒண்ணுக்கு முட்டிருச்சு. அவன் பயந்தாங்குளிக்குப் பொறந்த பயந்தாங்குளி. தனியா மூச்சா போகப் பயம். பக்கத்துல கெடந்தவள எழுப்பி, ' ஆத்தோவ்... ஒண்ணுக்கு வருது. வா! ' னு தொணைக்குக் கூப்பிட்டிருக்கான். அவளுக்கோ பெருந் தூ பக்கம். ' எலேய் திண்ணைக்கு கீழே பேய்டா! ' னுருக்கா. ' என்னாது? ' னு கேட்டிருக்கான் நம்ம பய. ' எடுபட்ட பயலே, திண்ணைக்குக் கீழே பேய்டா! ' னுருக்கா மறுபடியும். ' அய்யய்யோ'னு பய போட்ட சத்தத்துல பாதி ஊரு எந்திரிச்சு ஓடி வந்திருச்சு. ஆத்தா சொன்னது அப்பிடியே திண்ணைக்குக் கீழே அடிச்சுவிடுறாங்கிற அர்த்தத்துல. ' பேய்! ' னதும் பேய், பிசாசுனு நெனைச்சுப் பயந்துட்டான்.

இப்பிடித் திரிஞ்ச பயகூட காலேஜுக்குப் போனதும், நெஞ்ச நிமித்திக்கிட்டுத் திரிவான். ஏன்னா... காலேஜுன்னா அது ஒரு தனிப் பவரு! ஒரு பையன் காலேஜு படிக்க வந்துட்டான்னா அவுக வீடே கொஞ்சம் அவனுக்குத் தக்கன மாறிக்கிரும். ஆஊன்னா கை நீட்ற அப்பன் ஆத்தா அதயெல்லாம் கொறச்சிக்குவாக. அங்கன இங்கன உருட்டிப் பொரட்டியாவது அவனுக்கு நல்லதா நாலு சட்ட பேண்டு எடுத்துத் தந்துருவாக. கொஞ்சம் எதமாப் பதமாப் பாத்துக்க ஆரம்பிப்பாக.

இவிய்ங்க நடவடிக்கைகளும் மொத்தமா மாறிப்போகும். ஆர்கிட்டயும் அதிகம் பேசாம லேசா கொரல் உடைய அலைவாய்ங்க. எந்நேரமும் கண்ணாடி முன்னாலயே நிப்பானுக. இல்லேன்னா தனியா ஒக்காந்து யோசனையிலயே இருப்பானுக. குண்டக்க மண்டக்கச் சிரிச்சுக்குவாய்ங்க. அடிக்கடி வீட்ல அஞ்சறப் பொட்டி, பீரோ, சாமி உண்டியல்னு மானாவாரியா கைய வைக்க ஆரம்பிப்பாய்ங்க. ரெண்டாவது வருஷம் காலேஜு போக பைக்கு வேணும்னு கேட்டு ஒரு டார்ச்சரக் குடுப்பாய்ங்க. உண்ணாவிரதம் சத்தியாக்கெரகம்னு போட்டு அலம்புவாய்ங்க. அந்த வயசே ஒரு தினுசுதேன்!

எளந்தாரிப் பயக பஸ்ஸுல பைக்குல ' ஓய் ஹோய்'னு சவுண்டக் குடுத்துக்கிட்டு தாவணிப் புறாக்களுக்கு லுக்குகள எறச்சிக்கிட்டுப் போய்க்கும் வந்துக்குமிருப்பாய்ங்க. நா அந்நேரம் ஒரு ஓட்ட சைக்கிள எக்கிமுக்கி மிதிச்சி வேலைக்குப் போய்க்கிருப்பேன். என் நண்பய்ங்க செல பேரு காலேஜுல படிச்சாய்ங்க. நான் படிக்காத பய. வேலக்கி போறவய்ங்க, வெட்டியாச் சுத்தறவய்ங்கனு நாங்க ஒரு செட்டு. நாங்க பெரும்பாலும் அழுக்கு வேட்டி, கசங்குன சட்ட, முள்ளு தாடினு கந்தரகோல மா சுத்திக்கிருப்போம். எங்க ஒலகம் தனி. காலேஜுக்குப் போற அவிங்க ஒலகமே வேறயா இருக்கும் கடகண்ணிக்கு வந்தாக்கூட இஸ்திரி போட்ட பெரிய காலரு சட்ட, யானக்காலு பெல்ஸு, சுண்ணாம்பு டப்பா வாச்சுனு ஒரு மார்க்கமாத்தேன் அவிங்க வருவாய்ங்க. ஹிப்பி தல, மொழ நீள கிருதானு லேட் ட ஸ் ட் டு பேச னெல்லாம் அள்ளுவாய்ங்க. ' இன்னிக்கு ஒரு அம்பது பீஸ கண்ணாடி ஆர்டரு. குறுக்கு ஒடிஞ் சிருச்சு ', ' ரீகல்ல வாத்தியாரு படம்... ரெண்டாவது ஆட்டம் கெளம்பிருவோமா? ' னு எங்க பேச்செல்லாம் ஒரு தெசையில போய்க்கிருக்கும். அவிய்ங்க ரேஞ்சே வேற... ' இன்னிக்கு ஏண்டா பார்வதி க்ளாஸ்க்கு வரலை ' ' கெமிஸ்ட்ரி மேடம் ஹஸ்பெண்டு கேரளாக்காரராமே, லவ்வோ?'

வேற ரூட்ல பேசிக்குவாய்ங்க. அப்பப்ப சாயங்காலத்துல எங்கள சைக்கிள்ல வெச்சி மிதிக்கச் சொல்லி பின்னாடி உக்காந்துக்கிட்டு கோயிலு மார்க்கெட்டுனு எதாவது தாவணிய ஃபாலோ பண்ணுவாய்ங்க. சரி நாலெழுத்து படிக்கறவன் நம்மளையும் ஒரு மனுஷனா மதிக்கறானேனு நாமளும் தஸ்ஸு புஸ்ஸுனு சைக்கிள அழுத்தி மிதிப்போம். அப்பப்ப வூட்ல ஆட்டயப் போடுற காசுல ஃபில்டர் சீரெட்ட வாங்கி பொகவிடுவாய்ங்க. கிறுகிறுனு பீருகளப் போட்டு பளபளப்பு கூடிகக இருப்பாய்ங்க. நம்ம கத வேற. நேரத்துக்கு உங்காமத் திங்காம பீடி டீயக் குடிச்சி மேலுகாலு பூரா குச்சிக் குச்சியா நிக்கும். திருட்டு சீரெட்டு அடிக்கறது, சீமச் சரக்கு குடிக்கிறது, பலான படம் பாக்கறதுனு பூராக் கெட்டப் பழக்கத்தையும் நூதனமாப் பண்றதெல்லாம் அவிங்க. ஆனா, அவிங்க வூட்லயுஞ் செரி.... ஊருக்குள்ளயுஞ் செரி... ' ந்தா இந்தப் பயக சகவாசந்தேன் அவிங்களக் கெடுக்குது'னு எங்க பக்கந்தேன் குத்தஞ் சாத்துவாய்ங்க!

Vadivelu
Vadivelu

அமெரிக்கன் காலேஜு, வக் போர்டு, தியாகராசா காலேஜுனு பாகுபாடு பாக்காம அம்புட்டுப் பயகளும் சாயங்காலமானா கூட்டஞ் சேத்துக்கிட்டு தெப்பக்குளம், மீனாச்சியம்மங் கோயில்னு கேகேனு திரிவாய்ங்க. ' மச்சான், மாப்ளே, சித்தப்பு, பங்காளி, நண்பா, மக்கா'னு சொந்தம் போட்டுக்கிட்டு அவிங்க பேசறதே பெரிய கச்சேரியா இருக்கும். அவிங்களுக்குள்ள குரூப்பு கட்டி அடிச்சிக்குவாய்ங்க, பிடிச்சிக்குவாய்ங்க. ஆனா, வெளில வந்து ரோட்ல மேட்ல ஒர்த்தனுக்கு ஒண்ணுன்னா காக்காயா கூடி கலவரம் பண்ணிப்புடுவாய்ங்க!

போலீஸு பப்ளிக்குனு அம்புட்டுப் பேருக்கும் காலேஜுப் பயகன்னா லேசா பயந்தேன்! காலேஜில பாத்ரூம் வசதி சரியில்லன்னாக்கூட ஸ்ட்ரைக், சாலை மறியல்னு வந்து ரோட்ல உக்காந்துருவாய்ங்க. திடீர்னு பஸ்ஸு மேலயெல்லாம் உக்காந்துக்கிட்டுப் போவாய்ங்க. கரகாட்டம், ஒயிலாட்டம்னு நடத்திக்கிட்டு மேளம் அடிச்சிக்கிட்டு யான மேல வருவாய்ங்க. கேட்டா ' காலேஜு எலெக்ஷன்! ம்பாய்ங்க. அரசியல்வாதிக தோத்துப் போகணும். அப்பிடியே டை கட்டிக்கிட்டு ஃபுல் போஸ்ல கும்புட்டுக்கிருக்கற மாதிரி போட்டோவப் போட்டு ' உங்கள் ஓட்டு தளபதி செயல் வீரன் செந்தில்குமார் எம். ஏ இரண்டாம் ஆண்டுக்கே! ' னு போஸ்டரு ஊரெல்லாம் ஒட்டுவாய்ங்க. ஆண்டு விழா அது இதுன்னு அப்பப்ப ரோட்லயே பல வேஷங்களப் போட்டுத் திரிவாய்ங்க. 'எந்நேரமும் இப்பிடி சந்தோஷமாத் திரியிறாங்களேடா'னு எனக்கெல்லாம் அவிங்களப் பாத்தாப் பொறாமையா இருக்கும்ணே. நானெல்லாம் அஞ் சர்ப்போட படிப்புக்கு டாட்டா பிர்லா கோயங்கா அம்பானி சொன்ன பய! ஆனா, சினிமா புண்ணியத்துல ' காதலன்'லேயிருந்து ' சச்சின் ' வரைக்கும் காலேஜு போயிக்கிருக்கேன். நெசத்துல காலேஜு படிக்க வேண்டிய வயசுல கஷ்ட ஜீவனத்தால கண்ணாடி வெட்டப் போனவன் நானு!

' காதலன் ' படத்துக்காக ஷங்கரு கூப்புட்டு " நீங்க காலேஜுப் பையன். ஒவ்வொரு காலேஜுலயும் ஒரு கோமாளி மொக்கராசு இருப்பான்ல. அப்பிடி ஒரு கேரக்டரு! ” ன்னாரு. ' ஆத்தீ... நானு காலே ஸ்டூடண்ட்டா! ' னு கேக்கும்போதே எனக்குச் சந்தோஷமாயிருச்சு.

என்னயக் கேட்டா காலேஜு வாழ்க்கதேன் பல பேரு வாழ்க்கைய தீர்மானிக்குது. ஒலகத்த மறந்து ஜாலியாத் திரியறதும் அங்கனே தேன்... ஒலகத்தச் சந்திக்க வர்றதுக்கு ஒத்திக பாக்கறதும் அங்கன தேன்!

அந்த வயசுல ஒர்த்தன் ஒழுங்கா வாழ்க்கைய அறிஞ்சி புரிஞ்சிக்கிட்டான்னா, அப்புறம் அவன் வாழ்க்கைய அடிச்சி ஜெயிச்சிருவான். முழுக்க அனுபவத்தாலயும் ஒழப்பாலயும் மட்டுமே நாங்கள்லாம் முன்னுக்கு வந்துட்டோம். ஆனாலும், நாமல்லாம் நாலெழுத்து தெளிவாப் படிக்க முடியலையேன்னு அடி மனசுல வருத்தம் இருக்கு. அதேன்..... இப்ப எனக்குஞ் சேத்து எம் புள்ளைக பெரிய படிப்பா படிக்கட்டும்ணே!

- (வருவேன்)

(22.05.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)