அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 3

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா? நிசமான நிசம்ண்ணே!

ரெண்டு இட்லி வாங்கித் திங்க முடியுதாங்க இந்த ஊர்ல?

அதுவும் மெட்ராஸ்ல இட்லியா தர்றாய்ங்க? வெள்ளை வெள்ளையாக் கல்லைக் கொண்டு வந்து கொட்றாய்ங்கய்யா தட்டுல!

சாப்பாடுன்னா அது மதுரதேன்! அதும் ரோட்டோரமா ஏதாவது ஆத்தா அப்பத்தா கடையில ஒக்காரணும். அவுக அவிச்சு, ஆவி பறக்க எலயில தட்டி, ஏழெட்டு சட்னியைப் போட்டுத் தந்தாகனா, ஆகா... ஒவ்வொண்ணும் சும்மா அல்வா கெணக்கா உள்ள எறங்கும். கொஞ்சந்தாண்டி புரோட்டா கடைப் பக்கம் போயிட்டோம்னா இன்னும் விசேஷம். கொத்து புரோட்டா மட்டுஞ் சொல்லிப்புட்டோம்னா, மதுரயில ஓசில சிம்போனியே கேக்கலாம் தெரியுமா?

கல்லுல புரோட்டாவைப் பிச்சிப் போட்டு, கொஞ்சம் கறிக் கொழம்போ, கோழிக் கொழம்போ ஊத்தி, ரெண்டு கரண்டியில கல்லை ' ணங்க ணங்க ணங்கன்னு குத்தி எடுப்பான் பாருங்க, சும்மா நம்ம டப்பா தன்னால டான்ஸாட ஆரம்பிச்சிரும். மதுர மாஸ்டர் ஒவ்வொருத்தனும் ஒரு குட்டி இளையராசாதேன்! ஒரு நைட் ஷோ சினிமா, ரோட்டோரச் சாப்பாடு... இது ரெண்டுந்தேன் எங்களுக்கெல்லாம் அப்போ பெரிய சொகுசு!

ஆனா அப்பு, பூமி சுத்துதுல்ல! ஹெஹே..... ஏரோப்ளேனு எங்களுக்குந்தான செஞ்சு விட்ருக்கான். அட ஏறிப்புட்டோம்ல. சும்மாவா... நாங்கள்லாம் இப்போ ஃபாரீன் ரிட்டன்ல!

Vadivelu
Vadivelu

கழுத அந்தக் கூத்தையும் பேசிப்புடுவோம். ந்தா இப்ப ரெண்டு நாளைக்கு முன்னாடி ' சந்திரமுகி ' ஷூட்டிங்ல ரஜினியண்ணன்கிட்ட இந்தக் கதையச் சொன்னப்போ, வேலையக் கொஞ்ச நேரம் நிறுத்திப்புட்டுச் சிரிச்சாரு. ஏன்னா, அப்போ நான் போனதே அவரோடதேன்!

என்னையும் ஒரு சீவனா மதிச்சு வெளிநாட்டுக்கு டிக்கெட்டு போட்டது பி.வாசு அண்ணன். ' லவ் பேர்ட்ஸ் ' படத்துக்கு லண்டன் போகணும். பிரபுதேவா, நக்மானு ஒரு பெருங்கூட்டம் முன்னாடியே போயிருச்சு. நானும் என் கூட்டாளி முருகேசனும் தனியாக் கௌம்பணும். ஏர்போர்ட்ல போய் நின்னா, எங்கிட்டுப் போறது, எவங்கிட்ட விசாரிக் கிறதுன்னு திக்குத் தெரியல, திசையும் புரியல. திருதிருனு முழிச்சிட்டு நிக்கும் போது தோள்ல ஒரு கை விழுது. திரும்பிப் பார்த்தா உடம்பு சிலுத்துப்போச்சப்பு. ரஜினியண்ணே நிக்குறாக!

' ' என்ன வடிவேல்? ' ' னு சிரிச்சாரு. ஆத்தி, அப்பிடியே அவுக கையைப் பிடிச்சுக்கிட்டு ஈன்னு சிரிக்கிறேன். ரஜினி அண்ணே குடும்பத்தோட லண்டன் டூர் போறாகளாம். நாங்க அப்பிடியே அண்ணன்கிட்டே சரண்டராயிட்டோம். ரஜினியண்ணன் மகளுக ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் கூடவே வந்திருந்தாக. ' இந்த ரெண்டு லக்கேஜையும் பத்திரமாப் பாத்துக்கங்க'னு எங்களைக் கைகாட்டி அவுங்ககிட்ட சிரிச்சாரு அண்ணன். அவுக ரெண்டு பேரும் ' என்னன்னாலும் கேளுங்க அங்கிள்'னு ஒத்தாசையாப் பேசுதுக. பிளேனு சொய்ங்குனு கௌம்புது. என் அடிவயித்துல சிவ்வுனு ஏதோ உருளுது. பிளேன்ல கெழங்கு கெணக்கா நிக்கிற பொம்பளையாளுக இங்கிலீஸ்ல என்னவோ கேக்குதுங்க.

நமக்குத்தேன் வெள்ளக்காரன் பாஷைன்னாலே, ஜன்னி வந்துருமே. ' ஓ யெஸ் யெஸ். குட் மார்னிங், ஃபீவர், கூல் ட்ரிங்க்ஸ்'னு என்ன பேச நெனச்சாலும், வேத்துக் கொட்டுது. எந்நேரமும் வழியில இறக்கி விட்ருவாய்ங்களோனு வேற ஒரு பயம் ஈரக்கொலய ஆட்டுது. எல்லாரும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசறாய்ங்க. ஆனா, எழவு என்னா பேசறாய்ங்கன்னே புரியல. லண்டன் போறவரைக்கும் உசிரே இல்ல. லண்டன்ல வாசு அண்ணன் கைல என்னப் புடுச்சிக் குடுத்திட்டுத்தேன் ரஜினியண்ணன் கௌம்புனாரு. லாட்டரியில முழுசா நூறு ரூபா விழுந்தாலே எங்கூர்ல பாதிப்பயலுக கண்ணைத் தூக்கி நெத்திக்கு மேல ஒட்டிட்டு அலைவானுக. ஆனா ரஜினியண்ணன், அம்புட்டு யதார்த்தமான ஆளு.

இப்ப ' சந்திரமுகி ' படத்துல அண்ணன் கூட ரொம்ப நாளைக்கப்புறம் நடிக்கிறேன். ' வடிவேலு, உங்க ' பாடி லாங்வேஜ் ' பிரமாதம்'பார். நம்மள ஏதாவது காமெடியாப் பண்ணவிட்டு அவர் ஓரமா நின்னு ரசிப்பார். ஒக்காரவெச்சு பல விஷயம் மனசுவிட்டுப் பேசுவார். தங்கம்பாய்ங்கள்ல... அது அவருதேன்!

அட, பேச்சுவாக்குல லண்டன் கதைய விட்டுப்புட் டேன் பாத்தீகளா.... எடுத்த உடனே அங்க ஷூட்டிங் எங்க தெரியுமா, பக்கிங்ஹாம் அரண்மனை! நானெல்லாம் லண்டனை கனாவுல கண்டேன்னு சொன்னாக்கூட மதுரயில நம்பமாட்டாய்ங்க. ஆனா லண்டன் அரண்மனை முன்னால் நிக்கிறேன். அன்னிக்குப் பாத்து இங்கிலாந்து ராணி எலிசபெத்தும், அவுக மகன் இளவரசர் சார்லசும் அங்கே தரிசனம் தர்றாக. ஏ யப்பே... அழகர் ஆத்துல இறங்கறதப் பாக்குற மாதிரி பேய்க்கூட்டம் நிக்குது. அம்புட்டு பயகளும் புள்ளையார் கொழுக்கட்டை கணக்கா வெள்ள வெளேர்னு திரிய, நாம கரும்பு மாதிரி கரேல்னு தனியா டாலடிக்கிறோம்.

கூட்டத்துல நான் பாஸ்போர்ட்டைத் தொலைச்சிட்டு தேடற மாதிரி ஸீனு. எனக்கு ஒடம்பு நடுங்குது. சட்டுனு ஒரு ஆவேசம். சடசடனு சாமி வந்த மாதிரி பேச ஆரம்பிச்சிட் டேன். ‘ பாவி மக்கா உசிலம்பட்டிக்கு போகக்கூட ஒழுங்கா வழி தெரியாதேய்யா. யம்மா ராணியம்மா காப்பாத்தம்மா! ' னு ஒப்பாரி பாடிக்கிட்டு ஆட்டத்தைப் போட்டேன் பாருங்க, மொத்தக் கூட்டமும் என்னையத் திரும்பிப் பாக்குது. அத ஏன் கேக்குறீக, ' யார்ரா இந்த கேனக் கிறுக்கன்'னு கூட்டமே விழுந்து சிரிக்குது. பாஷை புரியாத ஜனங்களும் சிரிக்குதேன்னு அதுல எனக்குமொரு சந்தோஷந்தேன்!

இப்பிடித்தேன் ' தாய்க்குலமே... தாய்க்குலமே ' படத்துக்கு நேபாளம் போனப்பயும் பெருங்கூத்து! எம் மூஞ்சியைப் பாத்தா, அதிகபச்சம் பிக் பாக்கெட்னு சந்தேகக் கேஸ்ல புடிக்கலாம். அதுக்கு மேல ஒரு அம்சமும் கெடையாதுல்ல. ஆனா, அங்க ஏர்போர்ட்ல என்னைய நிறுத்தி, ஏழெட்டு கேள்வி கேட்டாய்ங்க. திடீர்னு ' நீ விடுதலைப்புலிதானே? ' னு கேட்டாம் பாரு ஒரு கேள்வி... அப்பிடியே புல்லரிச்சிருச்சு எனக்கு. ' இல்லீங்க. நா நெசப் புலியைக் கூடப் பாத்ததில்லீங்கன்னேன். அவிங்களுக்குத் தமிழே தெரியலை. தஸ்ஸு புஸ்ஸுனு தாளிக்கிறாய்ங்க. எனக்கு லேசா ஒதற ஆரம்பிச்சிருச்சு. ' நோ நோ நோ... ' ன்னு எத்தனை தடவைதேன் சொல்றது? அதிலயும் அவிங்க என்னமோ சட்டை டவுசரைக் கழட்டி விட்டு வெத்து உடம்புல ஐஸ் கட்டி மேல படுக்கப் போட்டுத்தேன்

Vadivelu
Vadivelu

விசாரிக்கவே ஆரம்பிப்பாய்ங்கன்னு பக்கத்துல முருகேசன் பொரளியக் கௌப்புறான். அங்கதாம்யா கொலசாமி அய்யனாரு அருள் பாலிச்சாரு. என் நல்லநேரம்.... அந்த ஆபீஸருல ஒருத்தன் தெலுங்குக்காரன். என் மூஞ்சிய உத்துப் பாத்தவன், ' நீ ‘ பிரேமிடு ' படத்துல நடிச்சியா? ' ன்னான். எனக்கு உசிரு வந்துருச்சி. " ஆமாய்யா, அதே ஆளுதான்யா நானு! ' னு மூன்றாம் பிறை கமல் கெணக்கா இல்லாத குட்டிக் கரணம்லாம் போட்டுக் காட்ட றேன். ' காதலன் ' படந்தேன் தெலுங்குல ' பிரேமிடு '! ஷங்கர் சார் புண்ணியத்துல, என்னை யும் முருகேசனையும் வெளியே விட்டாங்க. இல்லைனா அப்பவே லாடம் கட்டி பனிக்கட்டியில பாடம் பண்ணியிருப்பாய்ங்க. நமக்கு அடி வாங்குறது ஒண்ணும் மானப் பிரச்னை இல்ல. ஆனா, மானத்தைப் பறிச்சிப் பிட்டுத்தேன் அடிக்கவே ஆரம்பிப்பாய்ங்கன்னா, ஆத்தி... நான் கும்பிட்ட சாமிதேன் காப்பாத்துச்சு!

அப்புறம் எவ்வளவோ வெளிநாடுங்க போயிட்டேன். ஆனாலும் ஆயிரஞ் சொல்லுங்க, நம்ம ஊரு மாதிரி வராது! வேலையாப் போனோமா, பத்து நாள் இருந்தோமா, பராக்கு பாத்தோமா'னு வந்துட்டே இருப்பேன். என்னா அங்க நம்ம தமிழ் பேசற ஆளுகளைப் பாத்தா மட்டும் கொஞ்சம் பாசம் பொங்கும். அம்புட்டுத்தேன்!

என்னை வாழவைச்சது மெட்ராஸ். இல்லைன்னு சொன்னா எனக்கெல்லாம் அடுத்த வேளைக்குச் சோறு கிடைக்காது. இருந்தாலும் புடிச்ச ஊர்னா அது மீனாட்சி ஆள்ற மதுரதேன்!

உலகம் பூராப் போய் கண்டதைக் கடியதத் தின்னு பாத்துட்டேன். ஆனா மதுரயில நடு ராத்திரியில பொசுங்கப் பொசுங்கப் போட்டுத் தருவாங்கள்ல அந்த கொத்து புரோட்டா டேஸ்ட்டு வேற எதிலேயும் கெடையாதுண்ணே! ராசா அண்ணே சும்மாவா பாடுனாரு... ' ஆங்... சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா? நிசமான நிசம்ண்ணே!

- வருவேன்

படங்கள் : கே.ராஜசேகரன்

(21.04.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)