அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 30

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

பொழப்புதழப்பத் தேடி அங்கிட்டு இங்கிட்டுனு போயிட்டாலும், ஊரும் ஆறும் நம்மள மறக்கல...!

'மிழன் என்றொரு இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு! ' னு சும்மாவா சொன்னாக. நல்லதும் கெட்டதுமா நம்மாளுகளுக்குன்னே ஒரு தனி மணம், தனி கொணம் இருக்குண்ணே!

சின்ன வயசுலயே நமக்குப் பல மேட்டர்களக் கத்துக் குடுத் துருவாய்ங்களேண்ணே. மொட்ட போட்டு காது குத்துற வைபவம் ஒண்ணு வரும். ' மொட்ட போட'னு கூப்புட்டா அழுது குமிச்சிரு வோம்ல. அதுனால, ' திருவிழாக்குப் போயி குட்டிம்மாக்கு பலூனு, பொம்ம, முட்டாயி அல்லாம் வாங்கலாமா? ' னு பொய் சொல்லி, வண்டில ஏத்திருவாய்ங்க. அங்கிட்டு கொலசாமி கோயிலுக்குப் போனவாக்குல மாமங்காரன் மடியில உக்காரவெச்சி கிலுகிலுப்பையக் காட்டி ' இந்தா பாரு... இந்தா பாரு'னு ஆட்டிக்கிட்டே சரக் சரக்குனு மொட்டயப் போட்ருவாய்ங்க. அடுத்து ' ஆ காட்டு.... ஆ காட்டுனு வாய்ல ஒரு வாழப் பழத்த திணிப்பாய்ங்க. அந்தத் தித்திப்புல கொஞ்சம் மயங்கு வோம்ல, அப்பிடியே நறுக் நறுக்குனு காதக் குத்திப் புடுவாய்ங்க. ' அடப்பாவி மக்கா... ஏமாத்திப்புட்டீங்களேடா! ' னு விழுந்து பொரண்டு அழுதா, ஆளாளுக்குத் தூக்கி நம்மள டயர்டாக்கி கெறங்கி ஒறங்க வெச்சிருவாய்ங்க. இப்பிடி நூதன சூதனம் நெறைய வெச்சிருக் காய்ங்கண்ணே!

Vadivelu
Vadivelu

எங்கிட்டாவது ஒரு நாலு பேரு கூடி நின்னாப் போதும், போற வர்றவய்ங்களுக்குப் பொறுக்காது. என்னவாம்? ' னு ஒர்த்தன் விசாரணையப் போடுவான். ' ஒண்ணுமில்லப்பா! உசிலம்பட்டிப் பக்கம் நம்ம ஆளுக ஒருத்தன அவிங்க... ' னு சொல்ல ஆரம்பிக் கறதுக்குள்ள, ' அப்பிடியா மேட்டரு? ' னு கேட்டவன் நவுந்துருவான். அவன்ட்ட இன்னொருத்தன் வந்து கேக்க, ' அட, நம்ம ஆளுக நாலு பேருக்கு வெட்டாம். ஸ்பாட்லயே ஒர்த்தன் காலியாம்! மத்தவங்கள பெரியாஸ்பத்திரி கொண்டு போயிருக்காங்களாம். கொஞ்சம் செரமந்தேன்னு பேச்சு! ' னு ஒரு போடு போடுவான். கேட்டவன் அப்பிடியே வேகமா சைக்கிள்ல மணியடிச்சிட்டே போயி ' சாதி கலவரமாம். டவுனு பக்கம் கடை அடைக்கிறாய்ங் களாம்'னு அங்கங்க தந்தியடிப் பான். கொஞ்ச நேரத்துல ' பஸ்ஸை ஒடக்கிறாய்ங்களாம் ', ' வீட்டைக் கொளுத்திட்டாய்ங்களாம்'னு ஊரு முழுக்க மேட்டர் கரகரனு பரவி, சரசரனு சட்ட ஒழுங்கு பிரச்னையாகி, போலீஸு வந்து குமிஞ்சிரும்.

இம்புட்டுப் பிரச்னைகளுக்கும் காரணமாயிருந்த பயபுள்ள போயி இட்லிய கறிக்கொழம்புல ஒழப்பி அடிச்சிட்டு, திண்ணையில துண்ட விரிச்சி மல்லாந்துருக்கும்.

ஒண்ண நூறாக்கி பரப்புறதுல நம்மாளுகள மிஞ்ச முடியாதுண்ணே!

எங்கிட்டு வரிச நின்னாலுஞ் சரி... எலவச வேட்டி சேலை, கோயிலுக்கு கூழு ஊத்தறது, மோர்ப்பந்தலுனு அது என்னன்னே தெரியாம நடுவுல பூந்து நின்னுக்கிருவாய்ங்க. கேட்டா ' சும்மா நிக்கறதுக்கு வரிசையில நின்னா எதாவது கெடைக்கும்ல'ம்பாய்ங்க. அப்பறம் சீஸனுக்கு சீஸன் எதாவது ஒரு மேட்டர கௌப்பி சந்தோஷப்பட்டுக்கிருவாய்ங்க. அண்ண ன்மாருக தங்கச்சிமாருகளுக்கு இந்த வருஷம் பச்சப் பொடவ வாங்கிக் குடுக்கணும்'னு பரப்பிருவாய்ங்க. அம்புட்டுப் பொம்பளைகளும் ஒரு புதுச் சேல வாங் கிருவாக. ' ஊர்ல தலையில்லா முண்டம் அலையுது... வீட்டு வாசக் கதவுல நாமம் வரையணும். வேப்பில கட்டணும்'பாய்ங்க. ' வீட்டுல ஆம்பளப் புள்ளைக எத்தினி இருக்கோ அத்தினி வௌக்கு, வாசல்ல ஏத்தி வெக் கணும்'ம்பாய்ங்க.

இந்தா இப்ப பேப்பர்ல பாத்தோம்ல, அது என்னமோ அட்சயத்திரி, ஆசுபத்திரினு.... ஆம்பள பொம்பளனு அம்புட்டுக் கூட்டமும் காச அள்ளிக்கிட்டு தங்கம் வாங்க க்யூ கட்டி நிக்கிறாய்ங்களே... ஆத்தி, கூட்டங் கூடுறதுன்னா நம்மாளு களுக்கு ஒரு தனி சந்தோஷந் தேன்!

நூதனமா டார்ச்சர் குடுக்கறத யும் நம்மாளுக ஒரு கலையா கத்துவெச்சிருக்காய்ங்க. பக்கத்து வீட்டுக்கும் இவன் வீட்டுக்கும் நடுவுல முட்டூனு சந்து போகும். அதுல வேலி போட்டு நெலப் பிரச்னைய ஆரம்பிப்பாய்ங்க. ' வேலி அடி வந்துருக்கு'னு பக்கத்து வீட்டுக் காரன் தம் புள்ளகுட்டிகளோட சேந்து வேலிய வெட்டி எறிவான்.

போட்ட வேலியில கைவெச்சா அது எம்மேல கைவெச்ச மாதிரிடா'னு இவன் திருப்பாச்சி அருவாள உருவ, இவன் இங்கிட்டு கடப்பாறையத் தூக்கிட்டு வர, ' ஷோ ஆரம்பிச் சிருச்சுடா'னு தெருவே ஜாலியா கூடிருவாய்ங்க. அப்பறம் போலீஸு, கேஸு, கோர்ட்டுனு போயி ரெண்டு குழி எடத்துக்கு, இருக்குற சொத்துபத்தையெல் லாம் வித்து செலவு பண்ணிட்டுத் திரிவாய்ங்க.

அதுக்கப்புறம் ' என்னயவா கேஸுல இழுத்து வுட்ட'னு நெஞ்சு எரியும்ல.... பக்கத்து வீட்டுக்காரன தூங்கவிடாமப் பண்றதுக்கு எக்கச்சக்க சதிக பண்ணுவாய்ங்க. நடுராத்திரியில அவரு வீட்டுக் கூர மேல கல்ல கட்டிண்ணே!

இன்னிய வரைக்கும் வந்தாரை மன சார வாழவைக்கிற சீவன் நாம தாண்ணே! பசினு ஆரு வந்தாலும் இருக்கற சோத்துல ஒரு புடி குடுத்துட்டு சாப்புடுற மனசு நம்மாளு களுக்கு இன்னும் போகலண்ணே!

குண்டு சட்டியில குருத ஓட்டிக்கிட்டு இருந்த வரைக்கும் அப்பிடி இப்பிடி அறியாம புரியாம இருந்தோம். இன்னிக்கு தமிழன் ஒலகம் பூரா ஒசந்து நிக்கிறான்ல. பூரா நாடு கள்லயும் நம்மாளுக பரவிக் கெடக்க றாக. அம்புட்டு நாடுகள்லயும் பெரிய பெரிய பதவிகள்லயும் வேலையிலயும் இருக்காக. அது எம்புட்டுப் பெரிய பதவியில இருந்தாலும், பணக்காரனா இருந்தாலும், தமிழனுக்கு ஒண்ணுன்னா ஒண்ணாமண்ணா கூடி நிக்கறாக!

Vadivelu
Vadivelu

இப்ப போன வாரம் மலேஷியாவுக்கு போயிருந்தம்ணே. அங்கன பூரா நம்மாளுகதேன். அவுகளப் பாக்கப் பாக்க பெருமையா இருக்குண்ணே. தெளிவா தமிழ்ல பேசறாக. ஒரு தமிழ்ப் படம் விடாம பாத்துர்றாக. எல்லாரு கார்லயும் தமிழ்ப் பாட்டுகதேன் ஓடுது. தமிழ்நாட்டப் பத்தி அத்தன சேதிகளையும் ஒடனே ஒடனே தெரிஞ்சி வெச்சிக்கிறாக.

என்னையப் பாத்ததும் அவுகளுக்கு அப்பிடி ஒரு சந்தோஷம்ணே. ஆத்தீ.... ' வடிவேலு வடிவேலு என்னையக் கொண் டாடுறாக.

ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்துலயும் என்னைய அண்ணனா தம்பியா பாக்குறாக. எங்கன போனாலும் சாப்புட்டுத்தேன் போகணும்னு ஒத்தக் கால்ல நிக்கிறாக. எனக்கெல்லாம் கண்ணுல தண்ணி வந்திருச் சுண்ணே. ' இது போதும் ஆத்தா! ' னு மீனாச்சியம்மனக் கும்புட்டுக் கிட்டேன்.

பொழப்புதழப்பத் தேடி அங்கிட்டு இங்கிட்டுனு போயிட்டாலும், ஆரும் ஊரயும் மறக்கல, வேரயும் மறக்கல!

- ( வருவேன் )

(29.05.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)