அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 31

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

“கேள்வி கேட்டு கொடயிறவய்ங்க ஒரு வகைன்னா, அதுக்குப் பதிலும் சொல்லி உலுக்குறவய்ங்க இன்னொரு வகை..!”

ம்சைகள் பல விதம் ஒவ்வொண்ணும் விதம்! '

ஒலகத்துலயே பெரிய கஷ்டம் என்னா தெரியுமா... மனுஷப் பயலுவளச் சமாளிக்கிறதுதேன்!

செல பேரு கேள்வி கேட்டே கொல்லு வாய்ங்க! '

ஆட்டோக்கு மட்டும் ஏன் மூணு டயரு வெச்சாய்ங்க?, ' எதுக்கு போலீஸ் டேசன் லாம் சேப்பு கலர்ல இருக்கு? ', ' அமாவாசை அன்னிக்கு நெலா எங்கிட்டுப் போகும்? ' னு தினுசுதினுசா கேப்பாய்ங்கண்ணே... கேள்விக்குப் பொறந்த பயபுள்ளைக!

' அண்டார்டிகாவுல பனிக்கட்டில்லாம் உருகுதாம்ல? அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் கடல் பொங்குதாம்ல? ஒலகமே தண்ணிக்குள்ளபோப் போதாம்ல? ' னு கொல நடுங்கற சந்தேகங்களா கேட்டு கலவரப் படுத்துவாய்ங்க. இப்பிடி நடமாடும் வெடிகுண்டுகளா ஏரியாவுக்கு நாலு பேரு இருப்பாய்ங்க!

கேள்வி கேட்டு கொடயிறவய்ங்க ஒரு வகைன்னா, அதுக்குப் பதிலும் சொல்லி உலுக்குறவய்ங்க இன்னொரு வகை!

Vadivelu
Vadivelu

பொது எடங்கள்ல உக்காந்துக்கிட்டு அவிங்களா கேள்வி கேட்டு, அவிங்களா பதில் சொல்லிக்குவாய்ங்க. பக்கத்துல இருக்கறது ஆரு? இதக் கேக்கறானா... இல்லையா? னு எதயும் யோசிக்காம பல பதில்களைச் சொல்லிக் கிருப்பாய்ங்க. ' இந்த வருஷம் கத்திரி வெக்கை ஜாஸ்தியா இருக்குல்ல? ' னு கேட்டுட்டு ' அதுக்கு என்னா காரணம்னா.... கல்பாக்கத்துல ராக்கெட்டு வுட்டாய்ங்கள்ல, அதேன் பூமிய ஓட்ட போட்டுப் போயிருச் சுல்ல! ' னு விஞ்ஞானி கெணக்கா வௌக்கங்களக் குடுக்க ஆரம்பிச்சி வெறுப்பேத்துவாய்ங்க!

கூட்டத்துல எதையாச்சும் பேசிக்கிருப்போம். திடீர்னு ஒருத்தன் உள்ள புகுந்து, என்னாது? ' னு கேப்பான். இல்ல, சும்மா பேசிக்கிருந்தோம்'போம். ' என்னவாம்? ' னு கேப்பான். பயபுள்ள இன்னொரு வாட்டி மொத்தக் கதையும் சொல்ற வரைக்கும் விட மாட்டான்.

தியேட்டர்ல இன்டெர்வெல்ல ஒர்த்தன் நம்மளப் பாத்துப்புட்டு, ' என்ன இங்கிட்டு? ' ம்பான். அப்பிடியே பொசுபொசுனு எரியும். ' ரெண்டு நாட்டு வெடிகுண்ட வீசிட்டுப் போகலாம்னு வந்தேன். தொணைக்கு வர்றீயா? ' ம்பேன். மொறைச்சுக்கிட்டே போயிருவான். கோயில்ல சாமி கும்பிடப் போங்க.... என்ன இங்கிட்டு? ' னு அங்கேயும் ஒர்த்தன் வந்து நிப்பான். ' செதறு தேங்கா பொறுக்கலாம்னு வந்தேன்'னு சொல்வேன். இப்பிடி குண்டக்க மண்டக்கனு கேக்கிறதுக்கே கொள்ளப் பேரு ஊருக்குள்ள திரியுறாய்ங்கண்ணே!

எங் கூர்ல ஒர்த்தன் போட்டோ ஸ்டுடியோ வெச்சிருந்தான் ஸ்டுடியோன்னா என்னா... ஒரு பக்கம் பூரா சாவித்திரி, சரோசா தேவினு ஆரம்பிச்சி சிரிதேவி சிரிபிரியா வரைக்கும் நடிகைங்க போட்டாவா இருக்கும். இன்னொரு பக்கம் தென்ன மரத்துக்கு மேல நெலா நிக்கிறது, ஆத்துல ஒரு படகு, அங்கிட்டு ஒரு குடிசை வீடு, வானத்துல நாலு பறவை, மலைக்கு மேல சாயங்கால சூரியன்னு பூராம் இயற்கைக் காச்சியா மாட்டி விட்ருப்பான். எங்கூர்க்கு எப்பயோ எம்.ஜி.ஆர். வந்தப்போ ஒரு மீட்டிங்ல குண்டு மைக் புடிச்சுப் பேசற படம் ஒண்ணு எச்சா மாட்டி இருப்பான்.

உள்ள ஊதா கலர்ல தெர கட்டி ஒசரமான ஒரு ஸ்டூலுமேல பூ ஜாடி ஒண்ணு வெச்சிருப்பான். பகுடரு, கண்ணு மையி, சீப்பு, கண்ணாடி, ஒரு அழுக்கு கோட்டுனு கொஞ்சம் பொருளுங்க. இதேன் ஸ்டுடியோ!

ஆனா, ஆளு ஏதோ ஏவி.எம், வாகினி ஸ்டுடியோவுக்கெல்லாம் அதிபரு கெணக்கா நடந்துக்குவான். ஏன்னா... சுத்துப்பட்டுல அம்புட்டு ஆளுகளுக்கும் இவன விட்டா போட்டோ எடுக்க நாதி இல்ல.

குரூப் போட்டோ எடுக்கத்தேன் கூட்டம் வரும். குடும்பப் போட்டோ, ஸ்கூல் போட்டோ, சபரி மலைச் சாமியாருக போட்டோனு எடுப்பான். கல்யாணம், காது குத்துனு சுப காரியங்கள்லேர்ந்து எழவு மாதிரி பெரிய காரியம் வரைக்கும் போட்டோ எடுப்பான்!

வீட்ல தாத்தாவோ, அப்பத்தாளோ போயிச் சேந்துட்டாங்கன்னா அதேன் பெரிய காரியம். அதயும் போட்டோ எடுப்பாய்ங்க. சவத்த ஒரு சேர்ல ஒக்கார வெச்சி, தலை பகுடரு போட்டு, கூலிங் கிளாஸு மாட்டிவிட்டு, அது பக்கத்துல சேந்து நின்னு ஒறவுக்காரய்ங்க போட்டோ எடுத்துக்குவாய்ங்க, ஞாபகார்த்தமா!

அந்தப் படம் எடுக்கிறதுக்கும் ஒவ்வொருத்தனும் சீவிச் சிங்காரிச்சு வந்து நிப்பாய்ங்க. ஒரே மாதிரி பூ போட்ட சேல கட்டி பொம்பளையாளுக நிக்கிறதும், வீட்டுல இருக்க நாய்க்குட்டி, பூனைக்குட்டி வரைக்கும் புடிச்சாந்து ஒக்காற வெச்சுக்கிறதும்னு போட்டு பாடாப் படுத்துவாய்ங்க!

'இதெல்லாம் ஒரு பொழப்பா? ' னு கேட்டா, ' மாப்ளே! இதேண்டி பொழப்பு. வேறெல்லா போட்டோவும் எப்ப நெனச்சாலும் எடுத்துக்கிரலாம். ஆனா, எழவு விழுந்துருச்சுன்னா, அன்னிக்கு படம் எடுத்தா தான உண்டு! னு சொல்லிச் சிரிப்பான்.

அந்த போட்டோவ வாங்குறதுக்கு வண்டி கட்டிக்கிட்டு வருவாய்ங்க. போட்டோ எடுத்தது பாதி, மத்தபடி போட்டோ மேல கண்ணு வரைஞ்சுதேன் குடுப்பான்.

இப்பிடி இம்ச குரூப்பு பல பேரு இருக்காய்ங்க. பாட்டுக்கச்சேரி வெப்பாய்ங் கள்ல... அங்க நடக்கும் ஒரு பெருங் கூத்து!

பளபளனு பகுடரு போட்டு மாடு முட்ற கலர்ல சட்டைகளப் போட்டுனு ஒரு குரூப்ப கொண்டுவந்து எறக்கிருவாய்ங்க. கச்சேரி ஆரம்பிச்சதும் ஒரு சித்தப்புங்க செட்டு போயி முன்னாடி உக்காந்துக்கிரும். அம்புட்டுப் பேரும் எம்.ஜி.ஆர். ரசிகருகளா இருப்பாக. கச்சேரி குரூப்புல ஒரு டி.எம்.எஸ்ஸு இருப்பாருல்ல. அவரு தொலைஞ்சாரு!

Vadivelu
Vadivelu

ரோஸ் பகுடரெல்லாம் அடிச்சிட்டு சந்தோஷமா துள்ளிட்டு வந்து மைக்க புடிச்சி, ' என்னைத் தெரியுமா... நான் சிரித்துப் பழகி மனதைக் கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா? ' னு பாட ஆரம்பிப்பாரு. பாட்டு முடிஞ்சதும் ' ஏ... வெளுத்துட்டப்பு வாத்தியாரு பாட்ட இன்னொருக்கா பாடு! ' னு ஒரு பத்து ரூவா நோட்ட குடுத்து விடு வாய்ங்க. அவரும் உற்சாகமாகி இன்னுங் கொஞ்சம் கொரல என்னைத் தெரியுமா.... ' னு பாடுவாரு. பாட்டு முடியும்போது கூட்டத்துக்குள்ள பங்காளி சரக்கடிச்சிட்டு வந்து அப்பதேன் நொழைவாரு. ஏ...நம்ம பங்காளி வந்துருக்காப்ல. அந்தப் பாட்ட இன்னொரு தடவ பாடப்பா! ' னு சவுண்டு குடுப்பாய்ங்க. பாடகரு லேசா ஜெர்க்காகி ' என்னைத் தெரியுமா? ' னு சுருதி கொறைய ஆரம்பிப்பாரு. அப்பறம் பாத்தா அடுத்தடுத்து ஆளுக வர வர... நம்மாள உக்கார விடாம கப்பட்டுக் கூப்பட்டு பாட்ட பாட விட்ருவாய்ங்க. ' ஆஹா! அவிங்கதானா இது? ' னு பாடகரு ஒரு கட்டத்துல கடுப்பாகி, வேற பாட்ட பாட ஆரம்பிச்சார்னா, ' கை நீட்டி காசு வாங்குறல்ல! ' னு மெரட்டியே பாட வைப்பாய்ங்க.

ஒரு வழியா கச்சேரி முடிஞ்சி மூட்ட முடிச்சக் கட்டி வேனுல போட்டுட்டு காசுக்கு நிப்பாகள்ல. கரெக்டா அந்த நேரத்துல முக்கியமான சொந்தக்காரரு ஒர்த்தரு சரக்கோட வருவாரு. ' ஏ... மாமா வந்துருக்காரு. ஒரே ஒருவாட்டி அந்தப் பாட்டப் பாடப்பு! ' னு சலம்ப ஆரம்பிச்சிரு வாய்ங்க. ' எல்லாம் கட்டி ஏத்தியாச்சுங்க. இனிமே முடியாதுங்க'னு குரூப்பு மொரண்டு புடிப்பாய்ங்க. ' எலேய்... மாமா வந்துருக் காருங்கறேன். பாடுனா காசு. இல்லைனா சல்லிக் காசு கெடையாது. போய்க்கே யிரு! ' னுருவாய்ங்க. திரும்ப எல்லாத்தையும் பிரிச்சி அடுக்கி என்னைத் தெரியுமா... ' னு காத்துப் புடுங்குன டயரு கெணக்கா பாடகரு பஞ்சராகிப் போயி பாடிட்டு பின்னங்கால் பொடனியில அடிக்க போவாரு.!

வாழ்க்கை மாதிரிதேண்ணே மனுஷங்களும். எதுவும் அப்பப்பத்தேன் தும்பம். அதக் கடந்துட்டோம்னா, அப்பறம் நெனச்சுப் பாக்கப் பாக்க அது காமெடிதேன்..... சோக்குதேன், சிரிப்புதேன்!

- (வருவேன்)

(05.06.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)