
படத்துல என்னயப் பாத்துட்டு ஊரே சிரிச்சிது, ஆனா ஆத்தா அழுவுறா..?
போன வாரம் மதுர போயிருந்தேன்! வீட்ல ஆரையும் காணோம்.
எங்க ஆத்தாளும், ஏம் பொஞ்சாதியும் சேந்து ‘சந்திரமுகி’ பாக்க போயிருக்காக. படத்துலு ரசினி அண்ணனோட நா பண்ற அலப்பறைகளப் பாத்து தியேட்டரே கிரிக்க, ஆத்தா மட்டும் அங்கனையே அழுது குமிச்சிருக்கு. படத்துல ரசினி அண்ணனோட நா பண்ற அலப்பறைகளப் பாத்து தியேட்டரே சிரிக்க, ஆத்தா மட்டும் அங்கனயே அழுது குமிச்சிருக்கு. மாமியாக்காரி அழறதப் பாத்து, இவளுக்கு சேந்துகிட்டு அழுதிருக்கா. வீட்டுக்கு வந்ததும் நா நிக்கிறதைப் பாத்ததும் ஆத்தா அப்படியே விசும்பி விசும்பி அழுவுது.
‘ஏத்தா, படத்துல என்னயப் பாத்துட்டு ஊரே சிரிக்குது, நீ எதுக்கு இப்ப அழுவுறே?’னு கேட்டா ‘சிரிப்பாத்தேன் இருக்கு... ஆனா அழுக வருது!’னு வின்னர் கைப்புள்ள ரேஞ்சுல பேசுது எங்காத்தா. ஆனந்தக் கண்ணீராம்! ‘வேலு... கொஞ்சம் அப்பிடி கெழக்க பாத்து உக்காரு ராசா‘னு உள்ள ஓடிப்போயி உப்பு, மொளகா கொண்டு வந்து எம் மூஞ்சிக்கு நேரா மூணு சுத்து சுத்தி, எலுமிச்சம் பழம் எடுத்து வந்து என் மேலு காலெல்லாம் தடவி, திருஷ்டி கழிக்குது. அதேண்ணே, நம்மாளுக பாசம்!

அவிங்களுக்கு எடம் பொருளு எதுவுந்தெரியாது. அப்பிடியே அம்பக் கொட்டிருவாங்க. காட்டுப் பயகதேன். ஆனா, மனசு அப்படியே வெள்ளப் பேப்பரு. ‘கிக்கிக்கிக்கீ‘னு கூடிச் சிரிச்சாய்ங்கன்னா, பக்கத்து வீட்டுப் பிள்ளைக பயந்து எந்திரிச்சிரும். ‘ஏ யப்பே!’னு அழுது குமிச்சாய்ங்கன்னா, ரோட்ல கட்டியிருக்க ஆடு மாடெல்லாம் மெரண்டு துள்ளும்.
படிப்புக்கு வேலைக்குனு ஒரு பய வெளியூருக்கு கௌம்பிரக் கூடாது. ஹரிகோட்டாவுல ராக்கெட் விடற அளவுக்கு ஊர பரபரப்பாக்கிருவாய்ங்க. ‘சின்னவன் படிப்ப முடிச்சிட்டான். வேலைக்கு எழுதிப் போட்ருந்தான். கெடச்சிருச்சு... ரவைக்கு ரயில்ல பொறப்படுறான். பெரிய கம்பெனியாம்... ஏய்! அது என்னா பேரப்பா?’னு ரோட்டுல பாக்குற ஆளுக, டீக் கட, மிச்சர் கட, கிளப்புக் கட, பழக் கட, பூக் கடனு அம்புட்டு பேர்ட்டயும் நிறுத்தி நிறுத்தி வௌம்பரம் பண்ணுவாய்ங்க.
‘எல்லாம் எடுத்துக்கிட்டியா... எடுத்துக் கிட்டியா‘னு எதுக்கெடுத்தாலும் பையத் தொறந்து தொறந்து மூடி பாதி ஜிப்பை அத்துருவாய்ங்க. முறுக்கு சுட்டு ஒரு டப்பா, அதிரசம் ஒரு டப்பானு திணிப்பாங்க. ‘போற வழியில் பசியெடுத்தா என்னா செய்வே?’னு ஒரு வௌக்கம். ‘அப்புறம் இந்த புளியோதரை ஒரு மூணு கிலோ குடுத்திருக்கியே, அது எதுக்கு?னு கேக்க முடியாது. ‘யக்கோவ்... இம்புட்டும் சொமந்துக்கிட்டுப் போக முடியாது’னு கத்திக் கதறுனாலுங் கேக்க மாட்டாய்ங்க. சீயக்கா, எண்ண பாட்டிலு, எள்ளுருண்ட, கல்ல மிட்டாயின்னு சட்ட துணிமணி இல்லாம இந்தச் சாமாஞ்செட்டே ஒரு மூட்ட இருக்கும்.
பட்டணதுக்குப் போறதையே பட்டாளத்துக்குப் போற மாதிரி பண்ணிருவாய்ங்க. வீட்ல பெரிசுக அத்தன பேர் கால்லயும் கையிலயும் விழுந்து எந்திரிக்கணும். போற வழியில ரெண்டு பங்காளிக, கொலசாமி துண்ணூறோட வந்து மறிச்சு, ‘நம்ம சாமிதாம்யா எப்பவும் கூட நிக்கும்... இந்தா இத வெச்சுக்க‘னு விபூதிய அள்ளி பட்டையா பூசிவுட்டு, ‘ஏ... எதாவது கரச்சல்னா சொல்லிப்புடு. வந்து எறங்கிப்புடுவோம்ல‘னு சவுண்ட் வேற குடுப்பாய்ங்க.
பஸ்ல சீட்டுப் போட்டுத் தர்றேன்னு ஆளும் பேருமா அடிச்சிப் பிடிச்சி சண்டைகளப் போட்டு பஸ்டாண்டையே கலவரப்படுத்துவாய்ங்க. அம்புட்டையுந்தாண்டி பஸ்ஸுல ஏறி உக்காந்தா, பக்கத்து ஸீட்ல பளிச்சுனு பொண்ணுக களுக்குனு சிரிக்கும்.. ’ஆகா’னு பாக்கும்போதே நம்மாளுக விட மாட்டாய்ங்க. ‘ஜன்னலோரம் உக்காந்துக்கிட்டு கைய வெளிய நீட்டக் கூடாது என்னா.. லாரி, பஸ்ஸுனு வந்துக்கிருக்கும்‘னு ஒண்ணாப்பு போற பையனுக்குச் சொல்றதையெல்லாம் நமக்குச் சொல்லி மானத்த வாங்குவானுக. அப்பறம் அந்தப் பொம்பிளைப் புள்ளைக பக்கம் மூஞ்சியத் திருப்ப முடியுமா?
ரயில்வே டேஷன்ல அம்புட்டுக் கூட்டமும் உள்ள நுழைஞ்சிருச்சுனா, ஏதோ ரயில் மறியல் பண்ண வந்திருக்காய்ங்களோனு டேஷனே பதறும். அங்கயும் கடசிக் கட்ட காச்சிகள அரங்கேத்துவாய்ங்க. ‘பாத்து சூதனமா இருந்துக்கிரணும்யா... நம்ம தங்கராசு அங்கிட்டுத்தான் இருக்கான். எதுக்கும் அவனப் பாத்துக் கேட்டு நடந்துக்க. போறப்ப பசிச்சா அந்த பலாச்சொனையில ரெண்ட பிச்சு வாய்ல போட்டுக்கய்யா‘ம்பாய்ங்க.
நம்ம வீடு காடு நெலவரம்லாம் ஒனக்கே தெரியும். பாத்துக்கய்யா!‘னு வண்டி கௌம்புறப்ப சுரசுரனு ஒரு பஞ்ச் டயலாக் அடிப்பாய்ங்கள்ல... எவனுக்கும் அப்பிடியே கண்ணுல தண்ணி ஊத்திரும். வண்டி நகர ஆரம்பிக்கிறப்ப, ‘இந்தா, இத வெச்சிக்க‘னு அவசரமா சட்டக் கை மடிப்புலயிருந்து ஒரு கசங்குன அம்பது ரூவாய எடுத்து பைல சொருவிட்டுப் போவான் ஒரு மாமன். மழயடிச்சி ஓஞ்ச மாதிரி இருக்கும். அம்புட்டுப் பாசக்காரப் பயகண்ணே!
ஒரு மாசம் கழிச்சு திடுதிப்புனு ஒரு நா பட்டணத்துல நாம தங்கியிருக்கற வூட்டுக் கதவத் தட்டுவாய்ங்க. அரிசி மூட்ட, தூக்குவாளில் பணியாரம், காராச் சேவுனு வந்து நிப்பாய்ங்க. ‘என்னடா ஊரு இது. ஒரு பயலும் ஒழுங்கா வழி சொல்ல மாட்டேங்கறான். ஒம் பேரச் சொல்லி வெசாரிச்சா பக்கத்து வீட்டுக்காரனுக்கே தெரியல. என்னா பொழப்புடா பொழைக்கறீங்க?’னு வந்த வாக்குல அலுத்துக்க ஆரம்பிச்சிருவாய்ங்க. ‘சரி, நீ இங்கனயே இரு. நா வேலைக்குப் போயிட்டு வந்துர்றேன்‘னு போயிட்டு வந்து பாத்தா, வீட்டு ஓனரு... எதுத்தாப்ல இருக்க டீக் கடக்காரர்னு அம்புட்டு பேர்ட்டயும் பேசி பழக்கம் புடிச்சிருப்பாய்ங்க.

‘சும்மா அப்பிடியே காலாரப் போனேன். அடுத்த தெருவுல ஒரு அப்பத்தா இட்லி, வட சுட்டு விக்குது. நம்மூரு ர்சியா இருந்துச்சு. அதேன் ஒனக்கு வாங்கிக் கட்டிட்டு வந்தேன்‘னு அதுக்குள்ள ஏரியாவையே படிச்சிருப்பாய்ங்க. மறுநாளே ’நீ வேல பாக்குற ஆபீசுக்கு அழைச்சிட்டுப் போய்யா. ஒரு எட்டு பாத்துட்டுப் போறேன்‘னு அடம்பிடிச்சி, கூடவே வந்துருவாய்ங்க. ‘தம்பிக்கு பொண்ணு பாத்துக்கிருக்கோம். கருமாத்தூர்லேயிருந்து ஒரு சம்பந்தம் வந்துருக்கு‘னு பியூன்ல ஆரம்பிச்சு மேனேஜரு வரைக்கும் அம்புட்டு பேர்கிட்டேயும் தண்டோரா போட்டு ஒரு வழி பண்ணிருவாய்ங்க. ‘இந்த வருஷம் மழ இல்லியே . குருவைக்கு பூராம் பம்பு செட்டடக் கட்டி அடிக்கலாம்னு பாக்கேன்‘னு வெவசாயம் பேசி, ஆட்டோக்காரன், ஓட்டலு, ஜவுளிக் கடனு அம்புட்டு எடத்துலயும் எதாவது தகராறு பண்ணி அமர்க்களம் பண்ணிருவாக. அவர கோயம்பேடு கொண்டுபோயி பஸ் ஏத்திவுடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். போகும்போது ‘ராசா... நீ கொஞ்சம் நூதன சூதனமா இருந்துக்கய்யயா‘னு நீட்டமா பேசிட்டுதேன் போவாக!
நாமதேன் நாகரீகங்கற பேர்ல பலதையும் ஒளிச்சு மறச்சி பொழைக்கப் பழகிட்டோம். பாசத்தையும் சரி, கோபத்தையுஞ் சரி தொறந்து காட்டாம உள்ள வெச்சிட்டு மேம்போக்காதேன் பேசறாக... பழகறாக.. ஆத்தா- அப்பங்கிட்டகூட சரியாப் பேசாம சோலியப் பாத்துட்டுத் திரியற ஆளுகதேன் இங்கிட்டு அதிகம். அது என்னமோ இப்ப பொஞ்சாதி, புருஷங்கூட கம்ப்யூட்டர்லயே பேசிக்கிறாகளாம்ல... கெரகம்டா சாமி!
எங்க ஆத்தாதேன் அடிக்கடி சொல்லும், ‘டேய் வேலு... நீ எங்கிட்டு வேணும்னாலும் போய் இரு. எம்புட்டு ஒசரத்துக்கும் போ. ஆனா, நா ஒன்னப் பாக்கணும்னு நெனச்சா ஒரு எட்டு வந்து ஒம் மொகத்தக் காட்டிட்டுப் போ! அதேன் எனக்கு சந்தோஷம். உன் காசு பணமில்ல!’ய்ங்கும். அந்தப் பாசந்தேண்ணே சத்தியம்!
- வருவேன்
படங்கள் - என்.விவேக்
(12.06.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)