
சினிமா பாக்குறது சந்தோஷம். ஆனா சினிமால வாழ்றது கஷ்டம்..!
மதுரையில ஒரு அக்கா இருந்துச்சு... 'கான மயில் சரோசா'ன்னு பேரு!
சுத்துப்பட்டுல அக்கா அம்புட்டு பேமஸு! நடனத் தாரகை, நாட்டிய மேனகை, நடிப்பரசி, நவரசத் தென்றல், ஜில்ஜில் ராணி, கொஞ்சும் இளவரசி, நாடக சிரோமணினு அக்காவுக்கு ஏரியாவுக்கு ஏரியா ஏகப்பட்ட பட்டம் குடுத்து பட்டதாரி பாப்பாவா ஆக்கிப்புட்டாய்ங்க!
சித்திரை, வைகாசி, மாசி, மார்கழி, தைன்னு திருவிழா சீஸன் வந்துட்டா பத்துப் பதினெட்டுப் பட்டியிலயும் அக்கா கூத்துதேன். ஆத்தீ... யக்கா மேடையேறுச்சுன்னா கோயிலு கொளம்லாம் கொந்தளிச்சிரும்ணே! அக்காவும் அலப்பறைக்குப் பஞ்சமில்லாத பார்ட்டி, கருமாத்தூர் மாரியம்மங் கோயில்ல டேட்டு கேட்ருக்காக, ஆரப்பாளையம் காளியம்மங் கோயில்ல ஆடக் கேட்ருக்காக, ரவைக்கு ஆண்டிப்பட்டியில் கூத்துக்குக் கூப்ட்ருக் காக, அதுக்கு மக்காநா செக்கானூரணியில வள்ளித் திருமணத்துக்குக் காத்திருக்காகன்னு எப்பமும் ஹெஹெஹென்னு காத்தாடியாப் பறந்துக்கிருக்கும்.

சீஸன் டைமுல அக்கா வூட்டுப் பக்கம் போயி நின்னோம்னா, அம்பு மழதேன். பச்சப்பச்ச நோட்டுகள அள்ளிவுடும். ' வாடா ராசா'னு அப்பிடியே கொஞ்சிக்கொலாவி முறுக்கு, கலர் சோடா, கடல உருண்டனு என்னென்னமோ வாங்கித் தரும். எப்பமும் வெத்தல சேப்பு மினுமினுக்குற வாயோட சலக்கு சலக்குன்னு சிலுக்கு கெணக்கா ஏரியால ஒலாத்தும். க கண்ணுல தெம்படுற பொருளுகளயெல்லாம் வாங்கும். அக்கம்பக்கத்துக் கடக்காரய்ங்க ' யெக்கோவ்... யெக்கோவ்'னு கூப்பாடாப் போடுவாய்ங்க. அம்புட்டுச் செல்வாக்குல வளைய வந்துக்கிருக்கும்.
ஒரு தடவ அக்காவ தூர்தர்சன் டி.வி - யில என்னமோ ஒரு நாட்டுப்புற நிகழ்ச்சியில கூப்புட்டுப் பேசிப்புட்டாக. அதப் பஞ்சாயத்து போர்டு டி.வி. பொட்டியிலப் பாத்த பய மக்க சும்மா இருப் பாய்ங்களா... அதுலயிருந்து பூரா திருவிழா மஞ்சப் போஸ்டர்கள்லயும் ' டி.வி. புகழ் கான மயில் சரோசானு அடிக்க ஆரம்பிச் சிட்டாய்ங்க.
மேட ஏறுற வரைக்குந்தேன் அது அக்கா, ஏறிப்புடுச்சுன்னா அது லக்கலக்கலக்க சோதிக்கா!
சலக்கு சலக்குனு சலங்கை செதற, படக்கு படக்குன்னு இடுப்பு துடிக்க, ஆடிப் பாடி பின்னிப் பேன் பாத்துரும். ' சத்தியவான் சாவித்ரி ' - யில அக்காதேன் சாவித்ரி. அக்கா நடிப்பப் பாத்தா நவராத்திரி சாவித்திரியே கதறி ஓடிரணும். ' வந்தேனே... வந்தேனே'னு அக்கா வந்துச்சுன்னா கலவரமாயிரும். ' அதாகப்பட்டது பிரபோ... நாட்டிலே காட்டிலே விழுந்து எழுந்து விதி வசம் சாய்ந்து வந்தேனே'னு அடிச்சிக்கிட்டுப் பாடுச்சுன்னா, சங்கு தெறிக்கும்ணே. இப்பிடி செகசோதியா திரியற அதே அக்காவ சீஸன்லாம் முடிஞ்சுப் போன பொறவு பாக்கணுமே... ஏரியா கட வாசல்ல அரக்காப்படி அரிசிக்கு அம்புட்டுப் பாவமா நிக்கும். ' எலே தம்பி.... ரெண்டு நாள்ல வந்துரும்ரா. தந்துர்றேன் குட்றா'னு கறிகாயப் போயித் தொடும். அந்த கடக்காரன் ' யக்கோவ்... அங்கிட்டுப் போ நீ... யாவாரத்தக் கெடுக்காத. ஏற்கெனவே வாங்குன பாக்கியே முந்நூத்தி சொச்சத்துல நிக்குது'னு தொரத்துவான். அப்பம்னு பாத்து அக்கா வூட்டுப் பக்கம் போயிட்டம்னா கையில தம்ளரக் குடுத்து ' வூட்டுக்குப் போயி இதுல கொஞ்சம் கொழம்பு வாங்கிட்டு வாடா'னு எதாவது எடுத்துட்டு வரச் சொல்லி ஏவி விடும். ஒரு ஈ காக்கா வர மாட்டாய்ங்க வாசப் பக்கம். போகப் போக வயசு தளந்து அக்கா ஆட்டங் கண்டுடுச்சி. அங்கங்க புதுசு புதுசா குஞ்சுகுளுவானுகன்னு கான மயிலு, கோழி, குருவின்னு நெறைய்ய வந்துட்டாக. அக்காவுக்கும் நடிப்ப வுட்டா வேற நாதி இல்ல. சீஸனுக்குத் தேடி வர்றவகள்லாம் நின்னு போயி ஒரு கட்டத்துல சீந்த நாதியில்லாம சீமக்கருவேல முள்ளா ஆயிருச்சுண்ணே அக்கா. குடும்பம் குட்டின்னு ஒண்ணுங் கெடையாது அதுக்கு. அப்பிடியே கெடந்து நோயி நோவுனு வுழுந்து பசியும் பட்டினியுமா அநாதையா போயிச் சேந்துருச்சு. நா கண்ணால பாத்த மொத கலைஞி சரோசாக்காதேன்!
இன்னிக்கு நெனச்சாலும் நெஞ்சு பதறும்ணே. மனசுக்குள்ள அந்த அக்காவும் சாவித்ரி, சரோசாதேவி, பத்மினியாத் தான வாழ்ந்துருக்கும். கனவுல எம்.ஜி.ஆர்., சிவாஜி கூடயெல்லாம் டூயட்டு ஆடியிருக்கும்ல? ஆனா நெனப்பு நெனப்பாவே போயிச் சேந்துருச்சேண்ணே!
சினிமா இப்பிடி சன்ன பேரையா ஆட்டிவெக்குது? இப்பமும் வடபழனி கோடம்பாக்கம்னு போயி டீக்கட கௌப்புக் கடனு அம்புட்டு எடங்கள்லயும் பாத்தீகன்னா ஆராவது நாலஞ்சி அஜிஸ்டெண்டு டைரக்டருங்க கூடி நின்னு கையக் கால ஆட்டி ஓட்டி கத சொல்லிக்கிருப்பாக. அமைதியா டீ குடிச்சிக்கிருக்கும்போதே திடீர்னு, ' கட் பண்ணுனாஜி.... ஸ்டேஷன்லயே வெச்சி ஹீரோவோட அப்பாவை வில்லன், நீட்ட அருவாள எடுத்து சரக்குனு சீவிடுறான். ரத்தம் பொளேர்னு அங்கிட்டு மாட்டியிருந்த காந்தி தாத்தா மொகத்துல அடிக்குது னு ஒர்த்தரு கதறலா கத சொல்ல ஆரம்பிப்பாருல்ல. பக்கத்துல டீ வட தின்னுக்கிருந்தவன்லாம் திகில்ல பொரயேறி நொரயேறித் தெறிச்சு ஓடுவானுக. ' நேத்து நைட் எஃபெக்ட்ல போயிக்கிருக்கேன். ஜூம் பண்ணா நம்ம சுந்தர் கேரக்டரு எதிர்க்க வருது. கட் பண்ணா டீக்கடையில நிக்கிறோம். ஆர்வத்துல டீயக் குடிச்சாச்சு. துட்டு? ரியாக்ஷன் போட்டா சுந்தருக்கு ஷாக்கு'ன்னு அஜிஸ்டெண்ட்டுங்க பேச்சே சினிமா பாஷையிலதேன் இருக்கும்.. அப்பிடிச் சோத்துக்குச் சிங்கியடிச்சாலும் சினிமாவுலயே ஊறிப் போயி வாழ்றவய்ங்கண்ணே!
ரவைக்கெல்லாம் பேயாட்டமா முழிச்சு கத பேசுவாய்ங்க. சினிமா சம்பந்தமா ஒண்ணுன்னா போதும். அது ' சந்திரமுகி ' பிரிவியூ காச்சியா இருந்தாலுஞ் சரி மொழி புரியாத பட வெழாவா இருந்தாலுஞ் சரி... முன்னாடி போயி நின்னுரு வாய்ங்க. அட, அவிங்க ஒரு கத வெச்சிருப் பாய்ங்கண்ணே. இந்த கேரக்டருக்கு இவருதேன்னு மொத்தமா அவிங்க முடிவு பண்ணி வெச்சிருப்பாய்ங்க ஆருக்காவது கத சொல்லும்போதே ' விஜய் வர்றப்ப த்ரிஷா கோலம் போடுறாங்க. பக்கத்துத் திண்ணையில கையில ஹிண்டு பேப்பரோட பிரகாஷ்ராஜ்'னு தேன் சொல்லுவாய்ங்க. சினிமாவையே மூச்சா பேச்சா வெச்சிட்டு திரியற கூட்டம்ணே அது!

இன்னொரு பக்கம் பாத்தீகன்னா மேக்கப் கடைம்பாய்ங்க. வடபழனியில சந்துக்குள்ளயெல்லாம் கலைஞ்ச துணிமணிங்க, ட்ரெஸ்ஸுங்க, விதவிதமா விக்குன்னு வெச்சி கட போட்டுட்டு உக்காந் திருப்பாக. திடுதிப்புனு ' இன்னிய ஸீனுக்கு ரெண்டு பாம்பு தேவப்படுது. கமலா தியேட்டருக்குப் பின்னாடி புலிக்குட்டி கோவிந்தன்ட்ட போயி வாங்கிட்டு வா'ம்பாய்ங்க. புலிக்குட்டி கோவிந்தனுக்கு இதுதேன் தொழிலு. ஆராவது பாம்பு கேட்டு மாட்டாகளானு பாத்துக்கிருப்பாரு புலிக்குட்டி. கிரேனு வாடகைக்கு விட்றவய்ங்க, லைட்டு விட்றவய்ங்க, காரு விட்றவய்ங்கன்னு ஆருக்கும் தெரியாம சினிமாவை நம்பி கொள்ள பேரு வாழ்றாகண்ணே. லைட் பாய், மேக்கப் மேன், சாப்பாடு ஏற்பாடு பண்றவுக, ஜூனியர் ஆர்டிஸ்ட்டு ஏஜண்டுகனு எம்புட்டு பேர சினிமா சோறு போட்டு பாதுகாக்குதுங்கறத நெனச்சா ஆச்சரியமா இருக்குண்ணே!
சினிமா பாக்கதேன் சந்தோஷம். சினிமால வாழ்றது கஷ்டம்ணே! ஆத்தீ... எம்புட்டு ஆளுக தெருத் தெருவா திரிஞ்சி தேடுனது கெடைக் காமலே காணாப் போயிருக்காக. பல படங்கள்ல ஜமீன்தாரு வேஷங் கட்டுவாரு ஒர்த்தரு. போற போக்குல பாத்தீகன்னா வடபழனி அருணாச்சலா ஸ்டுடியோ எதுத்தாப்புல டீக்கடையில கடஞ் சொல்லி காஞ்ச போண்டா தின்னுக்கிருப்பாரு. நாட்டாமயா பல படங்கள்ல பாத்துப் பழகிப் போயிருக்கும் ஒரு மொகம். தண்ணி லாரி பின்னால ரெண்டு கொடம் தண்ணிக்கு அல்லோலகல்லோலப் பட்டுக்கிருப்பாரு. போலீஸுன்னாலே மொரட்டு மீசையோட வர்ற ஒர்த்தரா இருக்கும்... ரோட்டுக் கடையில வெல கேட்டு வெல கேட்டு வாங்கித் தின்னுக்கிருப்பாரு. சேட்டு வேஷம்னா கூப்புடு அவரம்பாய்ங்க. வாடக பாக்கிக் காக ஓனரு முன்னாடி தெரு பாக்க கூனிக்குறுகி நின்னுக் கிருப்பாரு சினிமா சேட்டு! நெழலு எப்பமும் குளிர்ச்சிதேன். நெசம் சுடும்ணே!
ஆனாலும், ஒரு நம்பிக்கையில வெறியில வாழ்றாக பாருங்க... அதேன் சினிமா! நானெல்லாம் இந்த சினிமால இருக்கிற ஒவ்வொரு உசுரையும் மனசார கையெடுத்துக் கும்புடுறம்ணே!
( வருவேன் )
(19.06.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)