அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 34

வடிவேலு
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவேலு

வசதி வாய்ப்பு வரும் போகும்! ஆனா, வாழ்க்கைல எப்பயும் உண்மையா இருந்தாத்தேன் மதிப்பு..!

லகம் ஒரு நாடகக் கொட்டாயி... அதுல நாம எல்லாரும் b ) ஆர்ட்டிஸ்ட்டு'னு சொல்வாய்ங்கள்.... கரெக்ட்டுண்ணே!

அம்புட்டுப் பயகளும் ஆஸ்கார் விருதுக்காரய்ங்க மாதிரிதேன் அலையறாய்ங்கண்ணே ஊருக்குள்ள. ஒவ்வொரு மனுஷனுக்கு உள்ளயும் ஏழெட்டு சிவாஜி, எக்கச்சக்க கமலு உக்காந்திருக்காக. அட, நம்ம வாழ்க்கையே ஒரு நகைச்சுவை சினிமாதாண்ணே!

சின்ன வயசுல, ' எனக்குப் பள்ளிக்கொடம் போவப் புடிக்கல. இன்னிக்கு லீவு போட்டுக்கறேன்னு சொன்னா, ஆரு வீட்லயாவது விட்ருவாகளா? ' அட, எடுபட்ட பயலே! மட்டம் போடவா பாக்கற? ' னு முதுகுல டின்னு கட்டி, பொடனியில கைய வெச்சித் தரதரனு தள்ளிட்டுப் போயி பள்ளிக்கூடத்துக்கு பார்சல் பண்ணிரு வாய்ங்கள்ல... அங்கனயே ஆரம்பிக்கும்ணே ஒவ்வொருத்தனுக்கும் நடிப்பு!

வடிவேலு
வடிவேலு

'யப்பே யாத்தா, வயித்த வலிக்குதே! ' னு காலங்காத்தால அப்பிடியே உருண்டு பொரண்டு ஒரு நடிப்பப் போடுவாய்ங்க. ' ஆத்தீ... இன் னிக்கு நீ பள்ளிக்கொடம் போவேணாம்டா ராசான்னுருவாய்ங்க. அன்னிக்கு வயித்தப் புடிச்சி நடிக்க ஆரம்பிக்கிறவன், அப்புறம் காடு போய்ச் சேர்ற வரைக்கும் வீட்ல, ஆபீஸ்ல, ரோட்லனு அம்புட்டு எடங்கள்லயும் நடிச்சுக்கிட்டே அலையறான். பள்ளிக்கொடம் போகப் பயந்துக்கிட்டு வயித்துவலினு சொல்ற மாதிரிதேன், பெரிய மனுஷங்க செல பேரு கோர்ட்டு, கேஸுனு வந்தா நெஞ்சுவலினு படுத்துக்கிடறதும்!

நடிக்கலைன்னா இங்க பல பேரு வாழவே முடியாதுண்ணே! அதுவும் இந்த ஊர் சண்டியருங்கள்லாம் இருக்காய்ங்கள்ல, அவிங்களுக்கு இதேன் தொழிலு! அவிங்க பேரே அம்புட்டுக் காமெடியா இருக்கும். முட்டபஜ்ஜி வேலு, மொச்ச முருகன், திண்ண தயா, கொத்து கோவிந்து, மீட்டர் நாதன், மின்னல் லோகுனு ஒவ்வொரு பேருக்குப் பின்னாடியும் ஒரு வரலாறு, பூகோளம் இருக்கும்ணே!

எங்கூர்ல குட்ட கணேசன்னு ஒர்த்தன் இருந்தாம்ணே. பேன்ட்டு, கலர் பனியன், பூட்ஸுனு ஒரு கெட்டப்பாதேன் ஊரச் சுத்துவான் எப்பமும் கடத்தெருவுலயே உலாத்திட்டிருப்பான். அங்கிட்டு இங்கிட்டு போறவய்ங்களப் பாத்து, ' நாகராசு, நீ திங்கக்கிழம கரெக்ட்டு பண்ணிருவான். ' மோசமான பயப்பா'னு போற வர்றவய்ங்க சொல்லணும்னே இப்பிடி ஒரு டெக்னிக்க வெச்சிருந்தாம்ணே.

லோக்கல் பள்ளிக்கொடத்துல ஆண்டு விழா, ஆசிரியர் தினம்னு ஏதாவது வரும்ல......அங்கிட்டுப் போயி ஸ்கூல் ஆளுகள மெரட்டி மேடையேறிருவான். மைக்கெல்லாம் கெடச்சிருச்சுன்னா அப்பிடியே அது வேற குட்ட கணேசன்!

இடைவிடாத பணிகளுக்கு நடுவில் உங்கள் அழைப்பை ஏற்று இங்கே வந்திருக்கிறேன். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் உலகு. கற்க கசடற நிற்கத் தக'னு அடிச்சி விட்டாம்னா, மொத்தப் பேரும் திகிலாயிருவாய்ங்க. அப்பிடி ஒரு நடிப்பப் போடுவான்.

எப்பமும் நெஞ்ச நிமுத்தி, ' என்னா இப்ப? ' னு அலையறவன், எம்.எல்.ஏ, சேர்மன்னு ஆராவது வரும்போது, அப்பிடியே வளஞ்சி நெளிச்சிருவான். ' அண்ணே, நீங்க உம்முனு ஒரு கண் சாடை காட்டுங்கண்ணே. தூக்கிரு வோம்ணே... பண்ணிருவோம்ணே'னு முழு நீள நாடகத்தப் போட்டுத் தாக்குவான்.

போலீஸ் புடிச்சிட்டா அங்கிட்டு வேற மாதிரி ஆக்ட் குடுப்பான். ' சார் சும்மா அடிக்காதீங்க. எங்களுக்குஞ் சட்டந் தெரியும். எம்.எல்.ஏ. எங்க பங்காளிதான், தெரியும்ல? ' னு கொரல ஒசத்துவான். அவுக மசியாம போட்டுத் தாளிக்க ஆரம்பிச்சிட்டாகன்னா, ' சார், இல்லீங்க சார்... ஊரக் காலி பண்ணிடறேன் சார்! ' னு ஓரமா ஒண்ணுக்கிருந்துருவான். ஆனாலும், புள்ள நவரச நடிப்பு கொறையாம அலைவாண்ணே!

ஆபீஸ்லயெல்லாம் பாத்தீகன்னா வர்ற போறவய்ங்கள்லாம் தயாரிப்பாளர், டைரக்டர் ஆரம்பிச்சு ஆபீஸ் பாய் வரைக்கும் ஆரு என்னான்னே தெரியாம, அம்புட்டுப் பேருக்கும் வணக்கத்தப் போட்டுட்டே இருப்பாய்ங்க. ' சொல்ல முடியாது, நாளைக்கு யாரு என்னாவான்னு யாருக்குத் தெரியும்? பாலா, இந்தப் பெட்டிக் கடையிலயே நின்னுக்கு இருப்பாரு. தரணி ஒரு பழைய ஸ்கூட்டர்லயே திரிவாரு. லிங்குசாமி எல்லாம் சைக்கிள்ளதேன் அலைவாரு'னு கத சொல்வாய்ங்க.

வடிவேலு
வடிவேலு

புதுசா ஒரு பையன் வந்து ஆபீஸ்ல சேருவான். ஆரப் பாத்தாலும் கண்டபடி பெண்டாகி, வணக்கத்தப் போடுவான். டைரக்டரா, ஆரு என்னன்னே தெரியாம எவனை எப்பப் பாத்தாலும், நாளைக்குப் பத்து இருவது தடவை வணக்கத்தப் போட, அவனவனும் ' யார்றா இவன்? ' னு டயர்டாயிரு வாய்ங்க. கொஞ்ச நாள் கழிச்சு, இவருக்குத்தேன் வணக்கம் வைக்கணும்னு வெவரமாகி, அவுகளுக்கு மட்டும் வணக்கத்தப் போட ஆரம்பிச்சிருவான். மத்தவங்க வந்தா, லேசாக் காலரத் தூக்கிவிட்டு ஒலாத்த ஆரம்பிச்சிருவான். அப்பிடியே இந்த நூதன சூதனங்களச் சரியா கொண்டு போனான்னா, பய கொஞ்ச நாள்ல பயங்கரமாத் தேறிருவான். சினிமா ஆபீஸு மட்டுமில்லேண்ணே.... மத்த எடங்கள்லயும் ' அமைதிப் படை ' அமாவாசை கெணக்காதேன் சுத்துறாய்ங்க!

வேலையில், வீட்டுல, காதல்ல, கல்யாணத்துல, பதவிக்காக, பணத்துக்காகனு எல்லாரும் எதுக்காகவாவது நடிச்சிட்டேதேன் இருக்கோம். ஆயிரம் வாசல் இதயம்... அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்'னு கண்ணதாசன் எழுதியிருக்காருல்ல, அப்பிடி ஒவ்வொரு மனசுக்குள்ளயும் ஓராயிரம் ஆசைங்க, கனவுங்க, நெனப்புங்க! அதுனால எல்லோருமே நடிகங்கதேன்.

ஆனா, ஒண்ணுண்ணே... வசதி வாய்ப்பக் கொண்டு வந்து சேத்துடலாம் நடிப்பு! ஆனா, வாழ்க்கைல எப்பயும் உண்மையா இருந்தாத்தேன் மதிப்பு!

( வருவேன் )

(26.06.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)