
“வெள்ளக்காரய்ங்களப் பாத்தா, மொறச்சு மொறச்சுப் பாக்கற புத்தி நம்மள விட்டுப் போகலைல்ல?“
நேத்து கார்ல போய்க் கிருக்கப்ப பாத்தேன்...ரோட்ல சில்லுண்டி புள்ளைக ஓட்ற மாதிரி குள்ளமா ஒரு சைக்கிளு. அத எங்கிட்டு எவன் தயாரிச்சானோ தெரியல... அப்பிடி ஒரு சைஸு! அதுல வெள்ள வெளேர்னு ஒரு வெள்ளக்காரரும் ஒயிட் லகான் கோழி கெணக்கா ஒரு பொம்பளையாளும் விறுக் விறுக்னு மிதிச்சிட்டுப் போயிக்கிருக்காக. ரோட்ல அம்புட்டுப் பயகளும் ஆகானு அவுகளையே பாக்கறாய்ங்க!
நம்மாளுகளுக்கு வெள்ளக்காரய்ங்க என்ன பண்ணாலும் ஆச்சரியந்தேன்... வேடிக்கதேன்!
மதுரயிலயுஞ் சுத்துப்பட்டுலயும் பாத்தீகன்னா... எப்பமும் தோள்ல பையி, கேமரானு மாட்டிட்டு யாராவது வெள்ளக்கார சித்தப்பு, சின்னம்மாக்க சுத்திக்கேயிருப்பாக. நம்மாளுக வெள்ளத் தோலப் பாத்ததும் பூரிச்சுப் பொங்கிருவாய்ங்கள்ல!
ஆனா, வெள்ளக்காரய்ங்க வெவரம்ணே! இந்தியாவுக்கு டூரப் போட்டா எல்லாத்தையும் சீப்பா முடிச்சிரலாம்னுதேன் அவிங்களே கௌம்பி வாராய்ங்க. அவிங்க கணக்கே வேறயா இருக்கும். ரோட்டுக்கடையில பூந்து இட்லி மொளவாப் பொடினு வாங்கி வெச்சி அடிப்பின்னுவாய்ங்க. நம்மாளுக ' எலே! வெள்ளக்காரரு இட்லியெல்லாஞ் சாப்புட்றாருடோய்'னு அதயும் அதிசயமாப் பாப்பாய்ங்க. அவிங்ககல்ல முட்டாயி, முறுக்குனு வாங்கி நொறுக்கிட்டு, கரெக்டா ‘ பிப்டி பைசே சேஞ்! ' னு மிச்சத்தையும் கேட்டு வாங்கிட்டுப் போவாய்ங்க.

சீரெட்டு வாங்குனா ரெண்டு ரூவானு தெரிஞ்சுக்கிட்டு, காலணா குடுத்து பீடி வாங்குற அளவுக்கு வெவரக்காரனுக்குப் பொறந்த வெவரக்காரனுக. ' வாவ்! இண்டியன் சிகரெட் சூப்பர்'னு பீடிக்கு ஒரு பிட்டு சர்ட்டிபிகேட்டையும் போறபோக்குல போட்டுப் போவாய்ங்க. ' அடடா, என்னா ஒரு எளிம பார்த்தியா! ' னு நம்மாளுக அதயும் பெருமயாப் பாப்பாய்ங்க!
எவனாவது ஒர்த்தன் வழியில காவி வேட்டி - காசித் துண்டு வித்துக்கிருப்பான். வெள்ளக்காரரப் பாத்ததும், ' திஸ் வேட்டி காட் டிரெஸ்! ' னு நொர தள்ள எதாவது பேசி, பொருள வித்துருவான். அவரும் ஒரு சீப்பான ரேட்ட பேசி அத வாங்கிக் கட்டிட்டு, ஒரு முத்து மாலய வாங்கி கழுத்துல போட்டுட்டு அப்பிடியே ஊர வேடிக்க பாத்துட்டே நடக்க ஆரம்பிப்பாருல்ல... ' வெள்ளக் கார சாமியாரு'னு அப்பிடியே ஒரு கூட்டம் அவரு பின்னாடியே ஓடும்.
இந்த டூரு வர்ற மொத்த வெள்ளக் காரய்ங்களும் ஏதோ விஞ்ஞானிக கெணக்காவே அலைவாய்ங்கண்ணே. தண்டட்டி மாட்டிட்டு யாராவது அப்பத்தா வந்தா தொட்டுத் தொட்டுப் பாத்துட்டு போட்டாவா எடுப்பாய்ங்க. ஆத்துல குளிக்கறவய்ங்க, தெப்பக்குள மீனுங்க, வயல்ல நாத்து நட்றவய்ங்க, உரல்ல நெல்லு இடிக்கறவய்ங்க, ஜல்லிக்கட்டு, சேவச் சண்ட கெடாச் சண்டனு அம்புட்டையும் போட்டா புடிப்பாய்ங்க. கையோட ஒரு டேப் ரெக்கார்டர வெச்சிட்டு, அப்பத்தாக்களை எல்லாம் பாடச் சொல்லி வேற டார்ச்சரக் குடுப்பாய்ங்க. பகல் பூரா இப்பிடி எதாவது ஆராய்ச்சியிலயே இருப்பாய்ங்க.
சாயங்காலம் பாத்தீகன்னா... ஆம்பள பொம்பளனு இல்லாம அம்புட்டுப் பேரும் கையில ஒரு பீர வாங்கி குடிச்சிட்டே ரோட்ல நடக்க ஆரம்பிச்சிருவாய்ங்க. அப்பறந்தேன் பல காச்சிங்க அரங்கேற ஆரம்பிக்கும். சரக்கப் போட ஆரம்பிச்சிட்டாய்ங் கன்னா அப்புறம் நாடு என்னா.... ஊரு என்னா... எனம் என்னா... கொலம் என்னா...அவிங்க மார்க்கமா பேச, நம்மாளுக ' யெஸ் ஜென்டில்மேன். திஸ் ஈஸ் அவர் கன்ட்ரி சரக்கு! ' ன்னெல்லாம் வேகாத இங்கிலீஸ்ல போட்டு அவிக்க ஆரம்பிப்பாய்ங்கள்ல. அவிங்க ஒண்ணு பேச... இவிங்க ஒண்ணு பேச... ஒரு மாதிரி செட்டாகி சட்டுனு நட்பாயிருவாய்ங்க.
அப்பிடியே ரவைக்கு கூட்டணி குரூப்பா வைகை ஆத்தங்கரைக்குப் போயி, ' திஸ் ஈஸ் ஃபோக் டான்ஸ்! ' னு சொல்லிட்டே ' மச்சானப் பாத்தீங் களா, மலவாழத் தோப்புக்குள்ள'னு பாட்டப் போட்டுவிட்டா, பூரா வெள்ளக்காரய்ங்களும் குமுக்கு குமுக்குனு டான்ஸப் போடுவாய்ங்க. ' ஹேய் ராக் அண்ட் தி ரோல்'னு அவிங்க பாட, அதுக்கு இவிங்க ஆடனு... கொஞ்ச நேரத்துல ஒருதிருவிழாவே நடத்திருவாய்ங்க.
அழகர்சாமி, ஆத்து மண்ணு, பான சட்டி, சடங்கு காரியம்னு அம்புட்டையும் ஆராய்ச்சி ஆரய்ச்சின்னே பண்ணிக்கிருப்பாய்ங்க. அப்பறம் பாத்தா தமிழு கத்துக்கறோம், சங்கீதம் கத்துக்கறோம்னு எறங்குவாய்ங்க. பூரா வெள்ளக்கார பொம்பளையாளுகள்லாம் பொடவயக் கட்டிட்டு கையெடுத்துக் கும்புடும்க. பாக்கறவய்ங்ககிட்டயெல் லாம் ' வணுக்கம்! நள்ளா இர்க்கிங்களா'னு சொல்லியே கொல்லும்க. திருக்குறள் படிக்கிறது, பரதநாட்டியம் ஆடுறது சாம்பார் வைக்கிறதுனு என்னென்னவோ பண்ணுவாய்ங்க.
நம்மாளுக பாதிப் பேருக்குத் தமிழ்ல எத்தன எழுத்துன்னே தெரியாது. எதாவது கேட்டம்னா, ' அது வந்து... எழுத்தா முக்கியம். தமிழுக்கு ஒண்ணுன்னா தலயக் குடுப் பம்ல'னு நெஞ்ச வெறச்சிட்டே கோவப் படுவாய்ங்க. இப்பிடி இருக்கும்போது வெள்ளக்காரன் தமிழ் பேசுனா எப்புடி இருக்கும். ஆத்தீ... னு அவனவனும் மூக்குல வெரல வெப்பாய்ங்க. அப்பிடியே சில பேரு திருக்கொறளு, செலப்பதிகாரம், குண்டலகேசி மண்டலகேசினு பெரிய அளவுல படிக்க ஆரம்பிச்சி, எப்பமும் குண்டு குண்டு புஸ்தகத் தோட அலைய ஆரம்பிச்சிரு வாய்ங்க. நம்மாளுக பேரு வைக்கறதுக் குன்னே பொறந்த வய்ங்க ஆச்சே... வெள்ளக்கார புலவரு'ன்றுவாய்ங்க.
மீனாச்சியம்மங் கோயிலச் சுத்தி ரிச்சாக்காரங்க இருப்பாங்க. அதுல சில பேரு இங்லீஸுல அடி பின்னுவாய்ங்கண்ணே. வெள்ளக்காரய்ங்களப் பாத்தவாக்குல ' பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்'னு கூவுவாய்ங்க. ' வந்தவாக்குல நம்மளை அண்ணந் தங்கச்சி'ங்கறாய்ங்களேனு அவிங்க புல்லரிச்சுப் போயி, உடனே இவிங்க ரிச்சால ஏறிடுவாக. ரிச்சா ஓட்டிட்டே பல கதைகள அடிச்சி விட்டுட்டே போய்க்கிருப் பாரு ரிச்சாக்காரு. சாயந்தரத்துக்கு மேல சரக்கப் போட்டுட்டு சலம்பும்போதுதேன் மதுர பாஷைக்கே வருவாய்ங்க. இப்பிடியே பிடிச்சு பிக்கப் பண்ணி வெள்ளக்காரம்மாவோட சேந்து லவ்ஸு, கல்யாணம்னு போறவய்ங்ககூட உண்டு.

அப்பப் பாத்தீகன்னா, அந்த வெள்ளக்காரம்மா நம்மூரு காதலரு வூட்டுக்கு வரும்ல. நம்மாளு குடிசையில தண்டட்டி ஆட உக்காந்திருக்கற மாமியாக் காரியோட, பாவாட தாவணியில நின்னுக்கிருக்கிற நாத்தனாருகூட, கொல்லையில நிக்கிற மாடுக கூடயெல்லாம் போட்டா எடுத்துக்கும். சுங்கிடி சேலயச் சுத்தி மல்லிப்பூ வெச்சினு அதுங் கெட்டப்பையே மாத்திருவாய்ங்க. மொத்தத் தெருவும் வந்து கூடிக் கூடி நின்னு வேடிக்க பாப்பாய்ங்க. அப்பறம், கொஞ்ச நாள்ல அந்த அம்மாவோட நம்மாளு கௌம்பி ஒரு பாரின் டூரு போவாரு. ஒரு வருஷத்துல வெள்ள வெளேர்னு ஒரு புள்ளையப் பெத்து பீட்டர் முனியன் னு வெச்சிருவாய்ங்க. இப்பிடியும் நடந்துருக்குண்ணே!
என்னதேன் தெளிவா இருந் தாலும் அதையுந் தாண்டி வெள்ளக்காரய்ங்ககிட்டே சூதனமா யாவாரம் பாக்கறவய்ங்களும் இருக்காய்ங்க. சாதாரணமா ஒரு பன விசிறியக் காட்டி, ' இது இந்தியன் கல்ச்சர். விசிறினா பக்தி வரும்'னெல்லாம் பேசி, இருநூறு முன்னூறுனு ஒரு ரேட்ட சொல்லுவாய்ங்க. மண்பானையக் காட்டி, ஒரு பெரிய ரேட்ட சொல்லி தலையில கட்டிருவாய்ங்க. ' ஓ நைஸ்'னு சொல்லிட்டே வாங்கி பன விசிறிய முதுவுல சொருவிட்டு அலையறவய்ங்களும் இருக்காக.
அப்பறம், இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல பாத்தீகன்னா... பூரா வெள்ளைக்காரய்ங்களும் கையில ஒரு கேமராவோட நிப்பாய்ங்க. ஜல்லிக் கட்டு, சேவல் சண்டனு அம்புட்டையும் அதிசயமாப் பாப்பாய்ங்க. அங்கிட்டு ஆராவது ஒர்த்தன் இருந்து வெள்ளக்காரய்ங்களுக்கு வேட்டி சட்டய மாட்டிவிட்டு அந்தப் பொம்பளையாளுகளுக்கு சேல கட்ட வெச்சி, பொங்க வெக்கச் சொல்லினு ஒரு திருவிழாவ நடத்தி அவுகள சந்தோஷப் படுத்துவாய்ங்க. ஊரே அத அம்புட்டு ஆச்சர்யமா பாக்கும். இப்பமும் வெள்ளக்காரய்ங்களப் பாத்தா, மொறச்சு மொறச்சுப் பாக்கற புத்தி நம்மள விட்டுப் போகலைல்ல?
இன்னொரு பக்கம் பாத்தீ கன்னா... வர்ற ஆளுகளுக்கு நெசமாவே நம்ம நாட்டப் பத்தி அறிய புரிய வைக்கணும். ஒரு குரூப்பு இருப்பாக. தலைவாழை இலையில சாப்பாடு போட்டு அவிங்களுக்கு மகாபாரதம், ராமாயணம்னு கத சொல்றது, சுக்கு கசாயத்துல ஆரம்பிச்சி கேப்பக்களி, கம்பங்கூழுனு அம்புட்டையும் அறிமுகப்படுத்தி வெச்சு ஒரு வழி பண்றதுனு, எதையும் எதிர்பார்க்காம கங்கணம் கட்டிட்டுப் பல நல்ல விஷயங்களச் செய்வாங்க.
பொதுவா, தமிழன் வந்தாரை வாழ வைக்கிறவன்னு சொல்லுவாக. இப்ப வந்தாராலயும் வாழ்றான் அவன் போன வாரம் ஒரு கலை நிகழ்ச்சிக்காக மலேஷியா போயிருந்தேன். அங்கிட்டுப் பாத்தா அம்புட்டு தமிழர்களும் நாமள்லாம் பாத்துப் பெருமப் படத்தக்கன வாழ்றாக. அதேன் ஒண்ணு சொல்லுவாகள்ல. ' நம்ம நாட்டுக்கு வெளிநாட்டுக்காரன் வந்தா இங்க செல பேரு நல்லாயிருக்கலாம். தமிழன் வெளி நாட்டுக்குப் போனா அந்த நாடே நல்லாருக்கலாம்'னு..! அதுதேஞ் சரி!
( வருவேன் )
(03.07.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)