அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 36

வடிவேலு, பார்த்திபன்
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவேலு, பார்த்திபன்

”எங்க படம் வந்தா தமிழ் நாட்டுக்கே வயித்து வலி வந்துரும்.”

மா, பார்த்திபனும் நானும் மறுபடியும் ஒண்ணு சேர்றோம்ல... படத்தோட பேரே ' குண்டக்க மண்டக்க!

அதுசரி, நாங்க ரெண்டு பேரும் எப்ப சேந்தாலும் அது குண்டக்க மண்டக்கதேனே இருக்கும். இப்ப ஒரு கலை நிகழ்ச்சின்னு மலேஷியா போயிருந்தோம்ணே! கடைசி நேரக் கொழப்பத்துல எங்களுக்கு ஸ்க்ரிப்ட் பண்ண வேண்டிய ஆளு வரலே. பார்த்திபண்ணே நக்கல் மன்னனாச்சே... ஏரோபிளேன் எறங்கறதுக்குள்ள அவரே எகனமொகனையா டக்குனு ரெடி பண்ணிட்டாரு.

மக்கா நா மேடையேறி நின்னா, எங்களப் பாத்ததுமே விசில் பறக்குது. கூத்து என்னன்னா... ஒரு பஞ்சாயத்து நடந்துக்கிருக்கும். நடுவுல ஒரு பார்ட்டிய டவுசரோட நிக்க வெச்சிருப்பாய்ங்க. ' ஏம்ப்பா பழனிச்சாமி எங்கேப்பா? ' ன்னு ஆளாளுக்குத் தேடிக்கிருப்பாய்ங்க. பழனிச்சாமி யாரு... நாந்தேன். இந்த மாதிரி ஊர் வம்புல போய் நின்னு குட்டையைக் கொழப்புறதுல நானெல்லாம் ஒண்ணாம் நம்பர் ஆளு!

அதும் பஞ்சாயத்து வில்லங்கம் வெவகாரம் வெட்டுக்குத்துன்னா ஓடிப்போய் நின்னு உதார் காட்டி, விசாரணையப் போட்றதுதேன் நம்ம வேல. அப்பிடி புதுசா ஒரு பஞ்சாயத்துன்னு தாக்கல் வந்ததும், ' என்னாப்பா... என்னா வெவகாரம்? ' னு ஜபர்தஸ்தா நிப்பேன். ' ஏ பழனிச்சாமி வந்துட்டாரப்பா'ன்னு கூட்டமே கும்பிடும். ' ம்ம்ம்... இருக்கட்டும், இப்ப என்னர் வெவகாரம்? ' னு ரொம்ப பவுசா கேப்பேன்.

வடிவேலு, பார்த்திபன்
வடிவேலு, பார்த்திபன்

ஒருத்தரு அந்த டவுசர் பார்ட்டியக் காட்டி, ' இவந்தாங்க குத்தவாளி! ' ம் பாருல்ல. என்னா, ஏது, எப்பிடி, எப்பன்னு எதையும் கேக்காம, நா அவனை மானாவாரியாத் திட்டிக் குமிக்க ஆரம்பிச்சிருவேன். திட்டிக் கேயிருக்கப்ப, டபால்னு பார்த்திபன் என்ட்ரிய குடுப்பாரு. ' ஆஹா! வந்துட் டாம்யா... வந்துட்டான்! ' னு நா ஜெர்க்காயி வாய பொத்திக்குவேன். ஒடனே குத்தவாளி பார்ட்டி "திட்டுங்கண்ணே திட்டுங்க... நீங்கள்லாம் திட்டுனாத்தேன் நானெல்லாம் திருந்துவேம்'பான். ' டேய்... கம்முனு இர்றா! அப்புறம் வெச்சுக்கலாம்'னு ஒதுங்கப் பாப்பேன். பய கேக்க மாட் டான். ' திட்டுங்கண்ணே திட்டுங்கன்னு அழுது உருளப் பொரள ஆரம்பிச் சிருவான். ' விட்றா, எலேய் விட்றா? ' ன்னு நான் கதறிக்கிருக்கும்போதே பார்த்திபன் சட்டுனு சிரிச்சுட்டே முதுகுலேயிருந்து ஒரு கொடய எடுத்து ஒதறி விரிப்பாரு.

' ஆஹா! மழையே பெய்யல இவரு எதுக்கு கொடய விரிக்கிறாரு? ' ன்னு நா கொழம்பிப் பாத்தா, இந்தக் குத்தவாளி பயலும் பட்டுனு ஒரு கொடய எடுத்து விரிப்பான். ' ஆஹா ஒரு குரூப்பாத் தான்யா கௌம்பியிருக்காய்ங்க! ' ன்னு நா பக்குபக்குன்னு முழிக்கிறப்ப, ஆளாளுக்கு டபக்கு டபக்குன்னு கொடய விரிச்சிட்டு நிப்பாய்ங்க. என்னா ஏதுன்னு புரியாம, நா பதறிப் பாப்பேன்ல, அங்கிட்டு ஒரு பாப்பா ஒரு கொடயோட ஓடி வந்து நின்னு, ' ரெயின் ரெயின் கோ அவே! ' ன்னு பாடும். இன்னொரு பொண்ணு, ' மழை வருது மழை வருது குடை கொண்டு வா'ன்னு பாடும். ஒரு அப்பத்தா வந்து என்ன பொடனியில சாத்தி, ' ஏண்டா எடுபட்ட பயலே, நா காயவெச்ச வத்தலெல்லாம் மழையில நனஞ்சு வீணாப் போகுதே. பாத்துக்கிட்டு நிக்கிறியேடா பாவிப் பயலே'ன்னு திட்டும். ' மழையே பெய்யல, இப்பிடி ஆளாளுக்கு கொழப்புறாய்ங்களே'ன்னு பார்த்திபனத் திரும்பிப் பாப்பேன். அவரு கொடய ஸ்டைலா சுத்திக்கிட்டே செம நக்கல்ல சிரிப்பாரு. ' எல்லாம் உன் வேலதானா? கொஞ்சம் ஓவராத்தேன் போய்க்கிருக்கு! ' ன்னு நெனைச்சிட்டே நானும் ஒரு கொடய எடுத்து விரிச்சிட்டு, ' கெகே, கெக் கெக்கே'ன்னு சிரிப்பேன்.

அங்கிட்டு ஒரு ஆளு வந்து ' இப்ப என்னாத்துக்குடா கொட புடிச்சிருக்கே? ” ம்பான். ' ஏண்டா... இங்கே பே மழ அடிச்சு ஊத்திக்கிருக்கு. கொட புடிக்காம இருந்தா சொரம் வந்துடும்டா கேள்விக்குப் பொறந்தவனே! ' ன்னு அவன பளார்னு ஒரு அற விட்டுச் சிரிப்பேன். அதே வேகத்துல பொளார்னு னு அவன் என்னய ஒரு சாத்து சாத்தி, ' எங்கடா மழ பெய்யுது? தன்னால வெய்யிலு மண்டயப் பொளக் குது. அவனவனும் மழ வராதான்னு வானத்தப் பாத்துக்கிருக்கான். நீ நக்கலா பண்றே? ' ன்னுட்டுப் போவான்.

நா அடிய வாங்கிட்டு நிமிந்து பாத்தா, சுத்தி நின்ன அம்புட்டு பேர் கையிலயும் கொட இருக்காது. ஆளாளுக்கு ஒரு விசிறியோட நிப்பாய்ங்க. ' வெயில் தாங்கலைப்பா... உஷ்ஷ் உஷ்ஷ்'னு விசிறிக்கிருப்பாய்ங்க. பார்த்திபன் மறுபடியும் துண்டால விசிறிட்டே சிரிப்பாரு. ' ஆஹா! நேரஞ் சரியில்ல.... எஸ்கேப் ஆயிருவோம்! ' னு நா தெறிச்சு ஓடுவேன். இப்பிடி நாங்க ஸீனுக்கு ஸீன் அடிச்ச கூத்துக்கு, அம்புட்டுச் சனமும் வயித்தப் புடிச்சிட்டு சிரிச்சது.

பார்த்திபன்னாலே நக்கல்தேண்ணே! நாக்கால கன்னத்துக்குள்ள பார்ட்டி கபடி ஆட ஆரம்பிச்சார்னா, பெருசா வில்லங்கம் ஒண்ணு வரப்போகுதுன்னு அர்த்தம். சும்மா பேசிக்கிருக்கும் போதே குறுக்க குறுக்க லந்தக் குடுத்துக்கே இருப்பாரு. எல்லாத்தையும் பண்ணிப்புட்டு பச்சப்புள்ள கெணக்கா மூஞ்சியையும் வெச்சுக்குவாரு. அப்பிடி நாங்க ரெண்டு பேரும் அடிக்கிற காமெடியப் பாத்துட்டுதேன் டைரக்டர் சேரன், எங்கள பாரதி கண்ணம்மால சேத்து காமெடி பண்ண வெச்சாரு. அது தன்னால பின்னிப் பிரிச்சிருச்சுல. ' கையக் காலா நெனச்சா, கால எதாடா நெனப்பே? ' ன்னு என்னைய மொக்குமொக்குன்னு குத்தி எடுப்பார்ல. அதுல ஆரம்பிச்சு, இதுவரைக்கும் பத்து படத்துக்கு மேல சேந்து காமெடி பண்ணிட்டோம். ' வெற்றிக் கொடி கட்டு ' படத்துல வர்ற காமெடிய இன்னி வரைக்கும் நம்ம சனங்க மறக்கலியே... அந்தப் படத்துலதேன், ' வந்துட்டான்யா... வந்துட்டான்! ' னு அவரப் பாத்து சொல்லுவேன். இப்ப வரைக்கும் நாங்க சேந்து வந்தா சனம் ரசிக்குது... சிரிக்குது. அது எப்படின்னா...

எழவு வூட்டுக்குப் போயி என்ன பேசறதுன்னு தெரியாது. மூஞ்சிய மூஞ்சூறு கெணக்கா வெச்சுட்டு எம்புட்டு நேரம் நிக்கிறது? ' எப்ப போச்சு? ' ன்னு ஆரம்பிப்பாய்ங்க. ' ஏன்... எப்ப போச்சுன்னு தெரிஞ்சா போனத மறுக்காகொண்டு வந்துருவியா? ' ன்னு கேக்கத் தோணும். ' நேத்துக்கூட கடத்தெருவுல பாத்தேன், சிரிச்சிக்கிருந்தாரப்பு! ' ன்னு அடுத்த கட்ட பிட்டப் போடுவாய்ங்க. ' அதுக்கு..? ' ன்னு உள்ள பொகையும். ' ஆளுகளுக்கெல்லாம் சொல்லி விட்டாச்சா? ' ம்பாய்ங்க. ' எப்ப எடுக் கிறாங்க? ' ன்னு கேப்பாய்ங்க. பத்து நிமிஷந்தேன்... பக்கத்துப் பொட்டிக் கடைக்குப் போய் நின்னு தம்மப் போட ஆரம்பிச்சிருவாய்ங்க. இன்னிங் கொஞ்சம் நேரமாச்சுன்னா, அங்க கெடக்குற நியூஸ் பேப்பர் எடுத்துப் பொரட்ட ஆரம்பிச்சிருவாய்ங்க. அவிங்க பக்கத்துல போய் ஒக்காந்து, பிளேட்டத் திருப்பிப் போட்டு, ' எப்ப போச்சு? ' ன்னு நாம கேக்க ஆரம்பிச்சா, தெறிச்சு ஓடுவான்ல, அந்தக் கூத்துதேன் எங்க காமெடியும்!

வடிவேலு, பார்த்திபன்
வடிவேலு, பார்த்திபன்

யாருக்கு போனப் போட்டாலும், ' யார் பேசறது'னு தொடங்குவாய்ங்க. ' போன நீ போட்டுட்டு யார் பேசறதுனு கேட்டா என்னடா அர்த்தம் வெளங் காதவனே'ன்னு கோவம் பொங்கும். பஸ்ல போயிக்கிருப்போம். நாம அப்பிடியே சாஞ்சு தூங்க ஆரம்பிச்சிரு

வோம். பக்கத்துல உள்ள ஆளுக்கு தூக்கம் புடிக்காது. பொழுது போவாம தவிக்கிற அவிங்க, நம்மள எப்பிடியாவது எழுப்பி பேச்ச வளக்கத் துடிப்பாய்ங்க. வண்டி ஜெர்க்குல நாம லேசா கண்ணு முழிச்சம்னா படக்குனு ' டைம் என்னா பிரதர்? ' னு ஆரம்பிச்சிருவாய்ங்க. ' வாச்சு கட்டல'னு கையக் காட்டுனா, வண்டிய ரொம்ப ஸ்லோவா ஓட்றான்யா... ' னு டிரைவர்கிட்டே நம்மளை மாட்டிவிடற மாதிரி ஒரு கொக்கியப் போடுவாய்ங்க. கொஞ்சம் அப்படி இப்படிப் பார்த்துப்புட்டு, சிக்க மாட்றானேன்னு ' மழ வருமோ? ' னு சாஃப்ட்டா ஒரு சந்தேகங் கேப்பாய்ங்க. ' நா மட்டும் என்ன வானிலை அறிக்கைலயா வேல பாக்குறேன்'னு கேட்டா சண்டையாகிப் போய்ரும்.

பழமொழி சொல்லியே டார்ச்சரைக் குடுக்குற குரூப்பு இருக்கு. ' எள்ளுன்னா எண்ணெயா வந்து நிக்கணும்டா'ம் பாய்ங்க. ' எள்ளுன்னா எதுக்குடா

எண்ணெயா நிக்கணும். ஏன்... காது அவுட்டா? ' ன்னு கேக்கத் தோணும். ' கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை! ' ம்பாய்ங்க. ' அது தெரிஞ்சு கழுதை என்னடா பண்ணப்போவுது? அத ஏண்டா வம்புக்கிழுக்கிறீங்க? ' னு கடுப்பாயிரும்ல. இப்பிடி ஊருக்குள்ள கொள்ளப்பேரு திரியறாய்ங்க. அதத்தேன் அப்பிடியே நானும் பார்த்திபனும் பண்றோம்.

நெசத்துல நானும் பார்த்திபனும் நல்ல நண்பர்கள்ணே. அவரு எதயும் வித்தியாசமா பண்ற ஆளு. ஒரு பொறந்த நாளு, புத்தாண்டுன்னா அவரு அனுப்புற பரிசே அம்புட்டு வித்தியாசமா இருக்கும். அட்டையிலயே கடியாரம் செஞ்சி அனுப்புவாரு. மண் சட்டியில் படம் வரைஞ்சி அனுப்புவாரு. திடீர்னு குருவிக்கூட்டுக்குள்ள முட்ட வெச்சி முட்டையில வாழ்த்தெழுதி அனுப்புவாரு. நீளமான அட்டையில கவித, ஒத்த ரூபாயோட உண்டியலுன்னு வெதவெதமா பரிசு குடுக்கறதுல பார்த்திபன அடிச்சுக்க ஆராலயும் முடியாதுண்ணே.

பார்த்திபன்னா வித்தியாசம்னு சொல்ற அளவுக்கு ஆகிப் போச்சுல்ல. ' குண்டக்க மண்டக்கல படம் முழுக்க நாங்க சேந்து காமெடி பண்றோம். படம் வந்தா தமிழ் நாட்டுக்கே வயித்து வலி வந்துரும்ணே. என்னாது... அப்பிடின்னா அதுக்கு மாத்திர வாங்கித் தரணுமா? இல்லேன்னா குண்டக்க மண்டக்க போயிருமா?

ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாய்ங்க!

( வருவேன் )

(10.07.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)