
”என்னால அந்த மனுஷன மறக்கவே முடியாது அவரு...!”
திருநாளு, கல்யாணம், காதுகுத்து, சாமி கும்பிடறதுனு நாளு, கெழமை, விசேசம்னு வந்துட்டா, நம்மூர்ல எல்லா எடத்துலயும் எடுத்துச் செய்றதுக்கு'ன்னே ஒரு பெரியாம்பள இருப்பாரு.
ஊர்ல... அது ஆரு வீட்டு வேலையா இருந்தாலுஞ் சரி வேட்டிய மடிச்சுக் கட்டிட்டு விருதாவா வந்து நிப்பாரு. ' எலே! வாழ எல வந்துருச்சா, அய்யரக் கூப்புட எவன் போயிருக்கான்? தண்ணி டிரம்மு பத்தாதுன்னு சொல்றேன்ல, பாண்டிய விட்டு இன்னும் ரெண்ட வண்டியில் தூக்கிக் கொண்டாரச் சொல்லு, திண்ணைக்கு வெத்தலத் தட்ட மொதல்ல கொண்டு போயி வெய்டா! ' ன்னு கத்திக்கிட்டே இங்கிட்டும் அங்கிட்டுமா பரபரப்பாத் திரிவாய்ங்க.
மத்த நாள்ல அவர மனுசன் ஓர்த்தன் மதிக்க மாட்டான். ஆனா, அன்னிக்கு ஒரு நா அவருதேன் ஆல் இன் ஆல்! அவரு என்னா சொல்றாரோ அதேன் தீர்ப்பு. பூரா பேரையும் சும்மா சுண்டு வெரல்லயே சொழட்டிச் சொழட்டி அடிப்பாரு. வாய்ல பச்சத் தண்ணி படாது. ஆனா, பின்னால சந்துப் பக்கமா அப்பப்போ ஒரு கட்டிங்கை மட்டும் கொடக்கொடக்குண்டு குடிச்சுப்புட்டு, துண்டுல வாயத் தொடச்சுக்கிட்டே திரிவாரு!

அப்பிடி எங்கூர்லயும் ஒர்த்தர் இருந்தாரு. ஆம்பளைக்கு வயசு அம்பது இருக்கும். ஊருக்குள்ள ஒரு தேவை காரியம்னா அங்கிட்டு ஆஜராகி கொரலு குடுக்க ஆரம் பிச்சிருவாரு. இப்ப ஒரு எழவு விழுந்துருச் சுன்னா, மொத ஆளா ஓடி வந்து நிப்பாரு. முள்ளுக்காட்டுப் பக்கம் ஆரையாச்சும் வெரட்டி, பட்டச் சரக்க வாங்கி பத்திரமா ஸ்டாக் பண்ணிருவாரு. அப்புறம் ஆரம்பிக்கும் மச்சான் கச்சேரி!
'கோடித் துணி போத்தற ஆளு யாரு வாப்பா... நெய்ப்பந்தம் புடிக்க பேரப்புள் ளைக வாங்கப்பா'ன்னு சேப்பு டவுசர் தெரியற மாதிரி வேட்டிய டப்பாக் கட்டு கட்டிக்கிட்டு ரண்டக்க ரண்டக்கன்னு கண்ணு செவக்கத் திரிவாரு. ' எங்கடா போய்த் தொலஞ்ச... ஒனக்கெல்லாம் வேல இல்லன்னாலும் வெட்டி பந்தாவுக்கு கொறயில்ல. என்னாவாம் மொறக்கிறே? போ... போயி கோவிந்தராசு வீட்ல போயி காபித்தண்ணி போடச் சொல்லு'னு வெரட்டுவாரு. சுத்துப் பட்டு சாதி சனத்துக்கு எழவு சொல்லிவிட ஆளு அனுப்புறதுல ஆரம்பிச்சு, மயானக் கரையில பிரிச்சுக் குடுக்கறது வரைக்கும் அம்புட்டு வேலைகளையும் செஞ்சு முடிச்சு, ஆத்துல முங்கி எந்திரிச்சு எங்கிட்டாவது வைக்கப்போருல படுத்து உருண்டாத்தேன் அவருக்கு ஒறக்கம் வரும். கொட்டாயிப் பக்கம் பதுங்கி ஒரு கல்ப்ப விட்டுக்குவாரு.
கல்யாண வீடுன்னா மொத நா ராத்திரியே மண்டபத்துக்குப் போயி வர்றவய்ங்களத் தங்கவெக்கிறது, சமையல மேப்பார்வை பாக்குறதுன்னு ஆரம்பிச் சிருவாரு. அவரு செறப்பு என்னன்னா..... பெரிய மனுஷய்ங்க இருந்தா அங்கிட்டு பெரிய மனுஷனா மாறி அவுக சப்ஜெக்ட்டயும் பேசிக் கிருப்பாரு. எளந்தாரிக இருந்தாகன்னா அங்கிட்டு அவரும் எளந்தாரியா மாறி ஃபுல் ரவுசக் குடுப்பாரு.
இந்த கல்யாணம் காச்சின்னு வந்துட்டா, மொத நா ஒரு செட்டு சேரும்ல. பக்கத்து லாஜ்ஜுல ஒரு ரூம் போட்டு தண்ணியப் போட ஆரம்பிப்பாய்ங்கள்ல, இவருதேன் பூரா சப்ளையும். பெருசுக இருக்க ரூமுக்குப் போயி தண்ணிய போட்டுட்டு ' அட... நாந்தேன் சொல்றேன்லப்பு... நம்ம பெல்ட்டப் பொறுத்தவரைக்கும் அவிங்க கச்சிக்கு செல்வாக்கே கெடயாதுங்குறேன்'னு ஆரம்பிச்சு அடி பின்னுவாரு. அப்பிடியே கிளாசக் கையிலப் புடிச்சமேனிக்கு எளந்தாரிக ரூமுக்கு எண்ட்ரியக் குடுப்பாரு. ' என்னாப்பா இன்னும் ஃபுல்லுதேன் ஓடிக்கிருக்கு. என்னா போங்க, நாங்கெல்லாம் ஓடுற கெடாயப் பிடிச்சு தொடையக் கடிக்கிற பயக, நீங்க என்னான்னா பிச்சுப் போட்ட கோழியவே கொஞ்ருக்கீகளேப்பா.... வயசுப் புள்ளைக நல்லா உங்கத் திய்ங்க வேணாமா? ' னு அம்பப் பொழிவாரு.
' ஆமா! வர்றப்ப அதென்னமோ காதலு கீதலுன்னு பேசிக் கிருந்தீக..... என்னா வெவரம்? ” னு கௌம்பி, ' அட! நானெல்லாம் பாக்காததா... பம்ப்பு செட்டு, கம்மா, காடு கர, வாய்க்கா வரப்புன்னு கணக்கு வழக்கில்லாம அது ஆகிப்போச்சு கத... இப்ப அவளுக கொமரியா இருந்தது போயி, அவளுக பெத்தது எல்லாம் கொமரியாகி, அப்பிடியே ஆத்தாக்காரிய பத்திருபது வருசத்துக்கு முன்னாடி பாத்த மாதிரியே நிக்குதுகப்பா... வீரபாண்டிக்காரி ஒருத்தி இருந்தா... ' னு ஃபுல்லா காதல் கதைகள எடுத்துவிட ஆரம்பிச்சிருவாரு. ரவைக்கு வரைக்கும் அங்கிட்டும் இங்கிட்டுமா அலைஞ்சு குடிச்சு அம்புட்டுப் பேரையும் தூங்கவெச்சு, பக்கிப் பயலுக எவனாச்சும் கக்கித் தொலைச்சிருந் தான்னா அதயும் கழுவிச் சுத்தம் பண்ணிப்புட்டுத்தேன் அவரு ஒறங்கப் போவாரு. அப்பிடி ஒரு ஆளு! )
இப்பிடி மத்தவுக தேவைன்னா ஆடி ஓடுற ஆளோட பொஞ்சாதி, ஒரு நா பொசுக்குனு போயிச் சேந்துட் டாக. அன்னிக்கும் அவரு, மத்த வீடுகள்ல எப்பிடி இருப்பாரோ அப்பிடியே தேன் அவரு வீட்லயும் நின்னுக்கிருந்தாரு. அதே கொரலு, அதே ஓட்டம், அதே சரக்கு... சொட்டுக் கண்ணீரு விடல யேண்ணே மனுஷன்!
வந்தவய்ங்கள்லாம் ஆருகிட்ட வசாரிக்கிறதுன்னு தெரியாம அங்கங்க நிக்கிறாக. கடைசி வரைக்கும் அப்பிடியே இருந்தாரு. கொள்ளி போட்டுட்டுத் திரும்பி வந்து வீட்டுத் திண்ணையில துண்ட விரிச்சு ஒக்காந்தவரு, சடார்னு பெருங் கொரலெடுத்து அழுதாரு பாருங்கண்ணே. ஆத்தீ.... பூராப் பேருக்கும் ஈரக் கொல ஆடிருச்சு. இப்பமும் என்னால மறக்கவே முடியாத மனுஷண்ணே அவரு!

இப்பிடி ஆளுக இப்பமும் இருக்காக. எதாச்சும் பஸ்ல ஏறிப் பாருங்க, சும்மாவே இருக்க மாட்டாய்ங்க. ' மெதுவா ஏறுப்பா... நவுந்து உள்ள போ. படிக்கட்டுல விழுந்து தொலைஞ்சீன்னா ங்கொப்பனாத்தாவுக்கு எவன் பதில் சொல்றது? ' ன்னு கண்டக்டரு சொல்ல வேண்டியதெல்லாம் இவரு சொல்லிக்கிருப்பாக.
சொந்த பந்தத்துக்கு நோவு தாவுனு ஆஸ்பத்திரியில சேத்தாய்ங் கன்னா அங்கிட்டு மருந்து மாத்திர, டீ காபி வாங்கித் தர்றதுன்னு அங்கனயே ரெண்டு நாளைக்கு செட்டிலாயிருவாரு. கொஞ்ச நேரத்துல பக்கத்து படுக்கையில இருக்கற நோயாளி குடும்பத் தோட ஐக்கியமாயி, அவுக ஆரு...என்னா பூரா ஜாதகத்தையும் படிச்சிருவாரு. வீட்லே யிருந்து கோழி சூப்பு கொண்டாந்தா, அதுல அவுகளுக்கும் ஒரு கிளாசு ஊத்திக் குடுக்கறதுன்னு இருந்து ரெண்டு நாள்ல ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிருவாய்ங்க.
அப்பறம் பாத்தா அறிஞ்ச தெரிஞ்ச அம்புட்டுப் பேருக்கும் பொண்ணு பாக்கறது, மாப்ள பாக்கறதுனு கௌம்புவாய்ங்க.' ஆண்டிபட்டில ஒரு பொண்ன இருக்கு. நெலபுலம்னு வசதி யெல்லாம் பெருசுதேன்'னு கொஞ்ச நாளைக்கு அதே வேலையா அலைஞ்சு திரிஞ்சு கல்யாணத்த முடிச்சிட்டு, ' நம்ம பாத்து வெச்சதுதேன்'னு சொல்றதுல அவிய்ங்களுக்கு ஒரு ஆனந்தம்.
இத்தனைக்கும் எதுக்கும் காசு பணம்னெல்லாம் ஒண்ணும் பெருசா வாங்க மாட்டாய்ங்க. சும்மா வெத்தல பாக்கு, காபி டீக்கு மட்டும் சில்லற வாங்கிட்டு கௌம்பிருவாய்ங்க. ' நான் உங்கள் வீட்டுப் பிள்ளை! ' ன்னு வாத்தியார் பாடுவார்ல.... அதை இப்பமும் மனசுல வெச்சிருக்கவய்ங் கண்ணே அவிங்க!
ரோட்ல ஆராச்சும் அடி பட்டு ரத்தஞ் சொட்டக் கெடந்தாக்கூட என்னான்னு நிப்பாட்டிப் பாக்காம, தொட்டுத் தூக்கி விடாம புர்ர்ருன்னு போய்க்கிருக் காய்ங்க பல பேரு. ஆருக்கு என்ன நடந்தா என்னன்னு வாழ்றவய்ங்க பெருத்துட்டாய்ங்கண்ணே.
அந்தக் கூட்டத்துல நீயும் சேந்துராத.... ஆமா, அதேன் சொல்லிப்புட்டேன்!
( வருவேன் )
(24.07.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)