
“அண்ணே நம்மாளுகளுக்கு கூடிக் கொண்டாடணும். அம்புட்டுதேன். அதுக்குதேன் மாசா மாசம் இந்த பெருநா திருநா வேனும்ல....”
ஆகா... இது ஆடி மாசம்ணே!
‘ஆடிப் பட்டம் தேடி விதை!‘னு ஊர்ப்பக்கம் சொல்வாய்ங்க. அப்புறம் ‘ஆடிக் காத்துல அம்மியே பறக்கும் ‘பாய்ங்க. புதுசா கல்யாணம் பண்ண புருஷன் பொண்டாட்டிகளச் சேரவிடாம கொஞ்சம் பிரிச்சுவெப்பாய்ங்க. அம்புட்டுத்தேன் தெரியும் ஆடியப் பத்தி!
ஆனா இப்ப என்னாகிப்போச்சுன்னா, ஆடின்னா அது ஜவுளிக் கடைகளுக்கும் நகைக் கடகளுக்கும்ல கொண்டாட்டமா இருக்கு. ஆத்தீ... ஆடித் தள்ளுபடினு கடைக்குக் கடை மண்டகப்படி நடத்துறாய்ங்க. சனக்காடும் குண்டக்க மண்டக்க கூட்டம் கும்மறாக!
வெதவெதமா வௌம்பரங்க போட்டுப் பூரா வீடுகள்லயும் பூகம்பத்தக் கௌப்பிடுறாய்ங்களே... தீவாளி, பொங்க மாதிரி ஜவுளி எடுக்கக் கௌம்பிர்றாக. என்னமோ கள்ளழகர் ஆத்துல எறங்கற மாதிரி ஜவுளிக் கட நகக் கடப்பக்கம் பேய்க் கூட்டம் பெருங்கூட்டம். இந்த மாதிரி நேரங்கள்ல வீட்ல பொம்பளையாளுக பேசற தினுசே தனிதாம்ணே! ‘ஏங்க... ஆபீஸ்ல புது மேனேஜரு ரொம்ப டார்ச்சர் பண்றார்னீங்களே... நொம்பக் கஷ்டமா...?‘னு ஏகத்துக்கும் அக்கறைய அனுசரணையா ஆரம்பிப்பாக. மாங்குமாங்கனு மசால் அரைச்ச “இன்னும் கொஞ்சம் ஊத்திக்குங்க”னு கோழி மீனுன்னு சாப்பாடு பின்னுவாக.‘

ஏன் எப்பப் பாத்தாலும் இந்த செவப்புச் சட்டையே போட்டுக்கிருக்கீக? கஷ்டப்பட்டு ஒழைக்கிறீக, நாலு எடத்துக்குப் போய் வர்ற ஆளு, பளிச்சுனு புதுச்சட்டை ரெண்டு எடுத்தாத்தேன் என்ன?’னு நமக்கு ஒபசாரம் பண்ணுவாக. அப்பிடியே மெள்ள ஆரம்பிக்கும் ஆட்டம்... ரவைக்கு வீட்டுக்கு வந்து சாப்புட ஒக்காந்தோம்னா, எதுத்தாப்ல டி.வி-ல ‘கோலங்கள்’, ‘செல்வி’னு ஓடிக்கிருக்கும்ல... அப்பத்தேன் வௌம்பரம் போட்டுத்தள்றாய்ங்களே... ‘ஏங்க, ஏங்க... ஒங்களத்தேன்‘னு ஒரு கொண்டு, ஒரு இழுப்பு. ‘என்னா?’னு ஒரு கேள்வியப்போட்டோம்... சோலி முடிஞ்சிரும்டா சாமி!
‘பட்டுக்கெல்லாம் அம்பது சதவீத தள்ளுபடியாம்ல. அப்படியே பாதி விலைங்க. அடுத்த மாசம்லாம் நாமளே நினைச்சாலும் வாங்க முடியாது.... ம்... இல்ல... பாத்தீங்கள்ல‘ன்னு ஒரு பெருமூச்சு விட்டு நிறுத்திருவாக. அப்பறம் என்ன இருக்கு பேச? ‘சரிசரி நாளக்கி போலாம்‘னு இவரு ஒரு வாக்குறுதியக் குடுத்துட்டு டெபாஸிட் போன வேட்பாளர் மாதிரி யோசனையாவே படுத்துக்கெடப்பாரு.
பணங்காசு செலவாகுங்கிற கவலை ஒரு பக்கம்னா, வீட்டுப் பொம்பளையாளுகூட கடைக்குப் போயி சேல எடுக்கற ரணகளத்த நெனச்சாலே பாதி ராத்திரியில தூக்கம் போயிரும்ணே. சாயங்காலம் சாரு வீடு திரும்பறப்பவே வீட்ல தாய்க்குலம் ரெயாகிக்கிருப்பாக. குளிச்சு சீவிச் சிங்காரிச்சு ஜம்முன்னு சேல கட்டி கும்முன்னு நிப்பாக. அப்படியே மல்லிப்பூ மணக்க பைக்கு பின்னால ஏறி ஒக்காந்து கடவீதி போய் எறங்குவாக! அம்புட்டுதேன்.
ஓயின்ஷாப்புல கடைய மூடுன பொறவும் உள்ள ஒக்காந்துட்டு, ‘இன்னும் ஒரே ஒரு நைன்ட்டி மட்டும்‘னு அழும்பு பண்ணுவாய்ங்கள்ல... கிட்டத்தட்டட அந்த ரேஞ்சுல ஒவ்வொரு கடையா ஏறி எல்லாச் சேலைகளையும் இழுத்து ஒதறி அலசி அதுல ரெண்ட ஒதுக்கி ஓரமா வெச்சுக்கச் சொல்லிட்டு, ‘வெச்சிருங்க, வந்துர்றோம்‘னு அடுத்த கட தேடி, கட வீதியெல்லாம் மூடுற வரைக்கும் தேடித் தீத்துருவாக. நம்மாளு நெலம ரொம்பப் பாவம். போறப்ப ‘ஓஹோ எந்தன் பேபி‘-ன்னு ‘தேனிலவு’ ஜெமினி கணேசன் கெணக்கா துள்ளிட்டு போயிருப்பாரு.
வர்றப்ப ‘ஆறு மனமே ஆறு‘ன்னு ‘ஆண்டவன் கட்டளை’ சிவாஜி கெணக்கா நொந்து நொர தள்ள வருவாரு. அங்கிட்டும் இங்கிட்டும் அலைஞ்சிக்கிருக்கப்ப அப்பப்ப ஜூசு, ஐஸ்க்ரீமு, பப்ஸுன்னு வாங்க இவருதேன் ஓடியாடுவாரு. ரோட்ல போயிக்கிருக்கும்போதே ‘நிறுத்துங்க நிறுத்துங்க... ஹேர்பின் போட்டு விக்கறான் பாப்போம்‘ம்பாக, ‘மறந்தே போயிட்டேன்.
சின்னக் குட்டிக்கு மை டப்பா வாங்கவேயில்ல.... பாத்தீங்களா‘ன்னு ஒரு கடையில நிப்பாக. சேல வாங்கக் கூட்டிட்டு வந்துட்டு, தோசக் கரண்டில ஆரம்பிச்சு தொடப்பக்கட்ட வரைக்கும்னு ஒரு பெரிய லிஸ்ட்டே வாங்கிக் குமிச்சிருவாக. நம்மாளு சொல்லவும் முடியாம தாடையச் சொறிஞ்சமானிக்கு பராக்கு பாத்துக்கிருப்பாரு.
அட, நம்ம பொம்பளையாளுக மாதிரி பேரம் பேச ஒலகத்துல ஆளு கெடையாதுண்ணே. ஒரு கிண்ணி அம்பது ரூவா சொன்னான்னா சத்தம் போடாம அத வாங்கி பைக்குள்ள வெச்சிட்டு பன்னண்டு ரூவாய எடுத்துக் குடுப்பாக. ஆனா, அதுலயும் கடக்காரனுக்கு மூணு ரூவா லாபமாத்தேன் இருக்கும். ஆனாலும், பேரம் பேசாம ஒரு பொருளு வாங்குனா அது நம்மாளுகளுக்கு செரிக்காது. அப்பிடி பூந்து பொறப்பட்டு பேரம் பேசி அலசி அடுக்கி ஆடித் தள்ளுபடிய அவுக கொண்டாட்டிடு வர்றதுக்குள்ள அவுக கொண்டாடிட்டு வர்றதுக்குள்ள நம்ம பீசு போன பல்ப்பா, பஞ்சரான டயரா ஆகிருவோம்ணே!

இன்னொரு பக்கம் ஆடி அழைப்புன பூரா புதுப் பொண்ணுகளையும் ஒரு மாசத்துக்கு பொறந்த வீட்டுக்கு பார்சல் பண்ணிருவாய்ங்க. புது மாப்ளைக பேயடிச்ச மாதிரித் திரிவாய்ங்க. நம்ம மாப்ளைக்கு இருப்புக்கொள்ளாது. இங்கிட்டு வீட்ல ஆரு என்னா பேசுனாலும் பயபுள்ள முசுமுசுன்னு எரிஞ்சு விழுவான். வேல பாக்குற எடத்துல வேல ஓடாம சாஞ்சு சரிஞ்சு ஒக்காந்து விட்டத்த வெறிச்சவாக்குலயே இருப்பாய்ங்க. நண்பய்ங்களோட சேந்து பீரப் போட்டுட்டு ‘ஆடி ஆவணின்னு என்னடா இது ஃபார்மாலிட்டிஸ்.... நான்சென்ஸ்‘னு மீச துடிக்க குமுறிக்கிருப்பாய்ங்க. அப்பப்ப நைஸா மாமனாரு வீட்டுக்குப் போனு போட்டு கம்முன குரல்ல பேசுவாய்ங்க.
அதுலயும் என்னன்னா.... இவரு போனு போடுற நேரமாப் பாத்து அங்கிட்டு மாமன் எடுப்பாரு. ‘ஹ... ஹலோ! அது வந்து சும்மாத்தே... அத்தைக்கு மூட்டு வலியெல்லாம் எப்பிடி இருக்கு மாமா? உங்களுக்கு சுகரு கொறஞ்சிருக்கா? வைதேகி காலேஜு எப்பிடிப் போகுது?‘னு கண்டமேனிக்கு வெசாரணையப் போட ஆரம்பிச்சிருவாய்ங்க. செல நேரத்துல அப்பத்தால்லாம் போன எடுத்து, ‘மாப்ள ஆடியில பேசாமக் கொள்ளாம இருந்தாத்தேன் நல்லது. எதாவது குத்தங் கொற வந்துருச்சுன்னா கொலசாமி கோச்சக்கும்‘னு அறிவுரைகள எடுத்து விட ஆரம்பிச்சிரும். நம்ம பய வெறுப்பாகிப்போயி ஆடி பூரா சவரங் கிவரம் பண்ணாம ‘என்னடா ஆடி, பாவம்டா புதுமண ஜோடி!‘ன்னு ‘பீர்’பாலா அலைவான்.
ஆடியில மட்டுமா... நம்மாளுகதேன் மாசங்கள் வெச்சே பல திருநா பெருநா நடத்துறவய்ங்கண்ணே. மார்கழி வந்துருச்சுன்னா அம்புட்டு கோயில்லயும் காலையிலயே மணியடிச்சு சுடச் சுட பூவரசம் எலையில பொங்கல் சுண்டல் வெச்சுக் குடுப்பாங்க. கோழி கூவறதுக்கு முன்னாடி பொண்டு புள்ளைகள்லாம் எந்திரிச்ச வெச வெதமா கோலம் போட்டுக்கிருப்பாக. ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஒரு கோல நோட்டு போட்ருவாக. நாலு புள்ளிக் கோலத்துல ஆரம்பிச்சு பத்தாயிரம் புள்ளிக் கோலம் வரைக்கும் தெனம் தெனம் புதுசு புதுசு கோலம் போட்டுப் பாக்குறது... அது ஒரு போட்டியாவே நடக்கும்ணே. காலையில நாலஞ்சு மணிக்கே அம்புட்டுப் பேரும் குறிச்சு முடிச்ச தெருவடைச்சு கோலம் போட்டுக்கிருக்க காச்சியே அம்புட்டு எதமா இருக்கும்ணே.
இங்கிட்டு பட்டணத்துல நைட்டே நைட்டியோட எதாவது பொம்மக் கோலத்தப் போட்டுட்டு பொசுக்குன்னே சீரியல் பாக்கப்போயிர்றாக. அந்தக் கோலத்தையும் கொஞ்ச நேரத்துல எதாவது ஆட்டோவோ பைக்கோ சரக்கு புருக்குனு அழிச்சிட்டுப் போயிரும். அவுகளச் சொல்லியும் குத்தமில்ல. இருக்க எடம் அப்பிடி!
பொரட்டாசி மாசம் வந்தருச்சன்னா அம்புட்டுப் பேரும் அவசரமா சைவத்துக்க மாறிருவாய்ங்க. கோவக்கா எலைக பறிச்சிட்டு வந்து சாமி ரூமுல பெரிய நாமம் வரைஞ்சு ‘கோவிந்தா கோவிந்தா‘னு கும்புட ஆரம்பிச்சிருவாய்ங்க. கூட்டமா கூடி ‘கோவிந்தா‘னு கத்திட்டே ஊரெல்லாம் சுத்துவாய்ங்க. வீட்டுக்க வீடு வர்றவய்ங்களுக்கு அரிசி போடணும். அப்பிடியே போயி ஆளுக்க மூணு நாலு கிலோ அரிசி புடிச்சிட்டு வந்துருவாங்க. அதனாலேயே அந்த மாசமெல்லாம் ஏழ பாளைக பசி பட்டினி இல்லாம இருப்பாக!
அப்பறம் கார்த்திக் மாசம். தெனம் தெனம் வீட்டுல மூணு நாலு அகல்வௌக்கு கொளுத்திவெப்பாக. தீவாளிக்கு வெடிச்ச வெடிய மிச்சம் புடிச்சு வெச்சிருப்பாய்ங்கள்ல். அத அப்பப்ப போட்டு வெடிச்சு அக்கம் பக்கத்துக்காரய்ங்கள தூங்கவிடாம டார்ச்சர் பண்ணுவாய்ங்க. பெரிய கார்த்திக் அன்னிக்கு மொத்தக் கூத்தையும் அரங்கேத்துவாய்ங்க. வீடெல்லாம் அகல் வௌக்கு கொளுத்திவெச்சு ஜகஜகன்னு ஆக்கிருவாய்ங்க. பின்னாடி குப்ப மேட்டுல ஒரே ஒரு வௌக்கு கொளுத்திவெச்சு அதேன் காத்துக் கருப்ப அண்டவிடாத சாமி வௌக்கும்பாய்ங்க. பூராப் பொண்ணுகளும் வௌக்கக் கொளுத்திட்டு தேவத கெணக்கா திரியும்ங்க.
அண்ணே நம்மாளுகளுக்கு கூடிக் கொண்டாடணும். அம்புட்டுதேன். அதுக்குதேன் மாசா மாசம் இந்த பெருநா திருநா எல்லாம். இப்ப ஆடி வந்தாச்சு... வயல்ல வெதவிடப் போறவுகளும், கடக்கண்ணிகளுக்கு தள்ளுபடியில அள்ளப் போறவுகளும் ‘கௌம்புங்கய்ய கௌம்புங்கய்ய’!
- வருவேன்
படங்கள் - ம.அமுதன்
(07.08.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)