அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 4

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

நம்பிக்கைத் துரோகம் செஞ்ச நண்பர்கள் தேன் அதிகம்.

தென்னமோ தெரியலை!

சின்னப்புள்ளயிலிருந்தே ரெண்டு நாள்கூட சேந்தமாதிரி நான் வீட்ல தங்குனது கெடையாது. எந்நேரமும் சுத்துதேன்! ' இந்தப் பயலை, எல்லாருஞ் சேந்து எங்க கொண்டு போய்ச் சேக்கப் போறாய்ங்களோ? ' னு எங்கம்மா மட்டும் அப்பப்போ பெருஞ்சத்தம் போடும். இன்னிக்கு ஓரமா ஒக்காந்து யோசிச்சா, என்னைய எங் கூட்டாளிகதேன் சுண்டி விட்ருக்காய்ங்க! நா அடிச்ச அத்தன கூத்துக்கும் சிரிச்சு ரசிச்சு, இன்னிக்கு இந்த நிலைமைல நா வந்து நிக்கிறேன்னா, அதுக்குக் காரணமே அவிங்கதேன். நல்லதப் பத்தி நாலு வார்த்தை பேசலீன்னா, நாக்கு வெந்து போகும்!

ஆளுக்கொரு வண்டி அந்தக் காலத்துலயே வெச்சிருந்தோம். ஆத்தி.... வண்டின்னா புல்லட்டுனு நெனச்சிரப்போறீக... நம்மது அதவிட ஒசத்தி! பழைய சைக்கிள் டயருதேன் நமக்கு வாகனம். கையில தவில் வித்வான் மாதிரி ஒரு குச்சி. விடிஞ்சு எந்திரிச்சதும் வண்டி கௌம்பிரும். லொடக்கு லொடக்குனு அத உருட்டிட்டுப் போகும்போதே ஒவ்வொரு வண்டியா வந்து சேரும். மூணாவது தெரு தாண்டுறப்ப.... அடேங்கப்பா, சுபாஷ் சந்திரபோஸ் ஆர்மி கெணக்கா, பத்துப் பதினஞ்சு டயர் வண்டிக சும்மா புயலு வேகத்துல பறக்கும். அத்தன பேரும் அம்புட்டு அவசரமா கெளம்பிப் போயி நிக்கிறது மெயின் ரோட்ல. விஷயம் என்னன்னா... அப்பத்தேன் புது சினிமா போஸ்டருங்க ஒட்டிருப் பங்க. என்னா படம் வருதுனு தெரிஞ்சுக்கிரணும்ல. எம்.ஜி.ஆர், சிவாஜி படம்னா நிச்சயம் போஸ்டரக் கிழிச்சுக் கொண்டாந்து, சோத்துப் பருக்கைய அள்ளி வீட்ல, வீதியில அத மறுபடியும் ஒட்டி அழகு பாக்குறது.... ஒரு கௌரவம்!

Vadivelu
Vadivelu

அர டவுசர் காலத்துல நாங்க ஒரு செட்டு, வைகையாத்துக்குள்ளயே திரிவோம். தெனம் ஆத்துலதேன் குளிப்போம். எங்ககூட ஒரு அய்யரு வூட்டுப் பையனும் படிச்சான்.

நெத்தில திருநீறும், கையில அலுமினியப் பெட்டியுமா பேங்கு ஆபீசரு மாதிரிதேன் பள்ளிக்கூடத்துக்கே வருவான். ஒரு நா ஏதோ பேச்சுவாக்குல, ' நாங்கள்லாம் ஆத்துல குளிப்போம்'னேன். அவனும் அப்பாவியா ' நானும் ஆத்துலதான் குளிப்பேன்'னான். '

அப்பிடியா, ஒன்னைய ஒரு நாகூட குளிக்கிறப்போ பாத்ததில்லையேடா'னு வெவரம் புரியாமக் கேக்குறேன். ' இல்ல... எங்க ஆத்துல பாத்ரூம் இருக்கு'ன்னான். 'ஆத்துல ஏதுடா பாத்ரூமு? 'னு எனக்கு அப்பவும் வௌங்கல. அதுக்கப்புறந்தேன் சொன்னாய்ங்க, அய்யரு பாஷையில 'வீட்டுல'ங்கறதை' ஆத்துல'ம் பாங்களாமே. நாம என்னத்தைக் கண்டோம். அதுக்கப்புறம் கொஞ்ச நாளு அவன, ' என்ன மாமா, ஆத்துல குளிச்சேளா? ' னு லந்து விட்டுக்கிட்டிருந்தேன். இப்ப மாமா, நெசமாவே திருச்சியில பேங்கு ஆபீசரா இருக்காரு! மதுரையில பாதிப்பேருகூட மல்லுக் கட்டியாச்சு. இதுதேன்னு இல்ல, சும்மா பொழுதுபோகலீன்னாக்கூட சண்டைக்குப் போயிருவோம்.

அவன்பாட்டுக்கு போய்க்கிட்டு இருப்பான். என்னடா மொறைக்கிறே? ' னு நிப்பாட்டுவோம். இப்பிடியே ' வாடா... வாடா... வாடா... ' னு வலுக் கட்டாயமா வம்பிழுத்துச் சண்டை போடுவோம். அதும் சட்டைக்காலரை இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு, ' போடா... போ! இன்னொரு நிமிஷம் நின்னே நாளைக்குப் பேப்பர்ல நியூஸா வந்துருவே'னு பஞ்ச் டயலாக் வேற.

அதுலயே பாதிப்பேர் பயந்துருவான். நாலு நாய்க் குட்டி சேந்து நின்னுச்சுன்னா சிங்கத்துக்கே லேசா ஒதறும்ல.. அந்தத் தைரியந்தேன்! சினிமா தியேட்டர்ல சண்டை போடறதுன்னா திருவிழாதேன். உள்ள போறப்பயே சட்டையில பாதிப் பட்டன் போட்ருக்க மாட்டோம். வேட்டி, இடுப்புல துண்டு மாதிரி நிக்கும். புது டவுசர் போட்ருந்தா கேக்கவே வேணாம். கூட்டமா உள்ள போனா, ஸீட்ல எவனையும் தள்ளி ஒக்காரச் சொல்றதில்லை.

பொட்டீர்னு பின்னந்தலையில் ஒரு சாத்து சாத்தி, நாக்கைத் துருத்துறதிலேயே, அவனவன் எந்திருச்சி ஓடிப் போயிருவான்.

சமயத்துல அவன் பெருங்கையா இருந்துட்டான்னா, நம்ம சோலி முடிஞ்சுது. இறுக்கிப் பிடிச்சு கும்முகும் முன்னு கும்மிருவாய்ங்க. அழுதமானிக்கு அங்கியே கெடக்க வேண்டியதுதேன். படம் முடியறவரைக்கும் விடாம துவைச்சு தொங்கவிட்ருவாய்ங்க.

சமயத்துல, சைக்கிள் ஸ்டேண்டு வரைக்கும் இழுத்துட்டுப்போய், அதுக்கப்புறமும் நாலு மிதி மிதிச்சுட்டுத்தேன் விடுவாய்ங்க. அதுசரி, போர்க்களத்துல வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்தானப்பு! வயசுக்கு வந்த டைம்ல, நம்ம ரவுசுகளைக் கேட்டா அது தனிக்கதை. ஓசிக்கோ, வாடகைக்கோ ஒரு சைக்கிள் எடுத்துக்கிட்டு, புள்ளைகளை சைட் அடிக்கக் கெளம்புவோம்.

தொவைச்ச சட்டை. காலர்ல ஒரு கலர் கர்ச்சீப்பு சொருகிக்குவோம். பவுடர் கொஞ்சம் ஜாஸ்திதேன். லேசா கண் மையில மீசைய ஓவியமாத் தீட்டிப்புட்டு, மூஞ்சியை ரெண்டு இஞ்ச் தூக்கிவெச் சிக்கிட்டு அப்பிடியே சைக்கிள் மிதிக் கிறது.

ரோட்ல எவளாச்சும் அங்க சங்கமா இருந்துட்டா, பிடிச்சு பிக்கப் பண்ணி பின்னாலயே போய்க்கிட் டிருப்போம். போற வழியில அவளக் காட்டிலும் இன்னும் அம்சமா ஒரு டிக்கெட்டு எதிர்ல வந்துருச்சுன்னா, அப்பிடியே வண்டி திரும்பிரும். நாலு அழுத்து வேகமா மிதிச்சுப்புட்டு, ட்ரிங் ட்ரிங்குனு பெல் அடிப்போம்.

அவளுக ஒரு மரியாதைக்கு நம்ம மூஞ்சியைக்கூடப் பாக்க மாட்டாளுக. ஒருவேளை பாத்துப்புட்டா, நிச்சயம் சிரிச்சுரு வாளுக. ஏன்னா, நம்ம கெட்டப்பு அப்பிடி! ஒரு புருவம் நெளிச்சு, ஒரு சைடு ஒதடு தூக்கி, அப்பிடி கண்லயே கதை பேசுவோம்.

மயங்கிட்டாளேனு மனசு சிலுக்கும். ஆனா, கதை வேற! வேகாத வெயில்ல வேர்த்து ஒழுகி, மூஞ்சியில எண்ணெய் வழியும். ஒரு பக்கம் மீசை மை கரைஞ்சு கரேல்னு ஒழுகிட்டிருக்கும். அது தெரியாம நாம போஸ் குடுப்போம். ஆகா, சிக்கிட்டாளேனு நெனைச்சு, திருப்பி நாலஞ்சு நாளு அந்தப்பக்கமாவே திரிவோம்.

காலக் கொடுமை, நம்மை அழுக்குத் துணிமணியில ஒரு நாளு பாத்துப்புடுவா. இதத்தேன் ' சோலி முடிஞ்சிருச்சுடா சுந்தர பாண்டியா! ' னு சொல்வாய்ங்க! எனக்கு சினிமா பாக்குறதுக்குனே ஒரு நண்பன் இருந்தான். சொந்த சைக்கிள் வெச்சிருப்பான். சினிமாவுக்கு டிக்கெட் காசு அவன் போட்ருவான்.

ஆனா, அந்தக் காசுக்கு என்னய சைக்கிள் மிதிக்க விட்டுக் கொல்லுவான். தியேட்டர்ல இன்டர்வெல் விடுவாய்ங்கள்ல, அப்ப ' இர்றா, சைக்கிள் நிக்குதானு பாத்துட்டு வந்துர்றேன்னு அவன் மட்டும் வெளியே போவான். என்னடா போனவனை ஆளையே காணோமேனு எட்டிப் பாத்தா, மூணு முட்டை போண்டாவை மொச்சு மொச்சுனு மொத்தமாத் தின்னுட்டிருப்பான். எச்சிய முழுங்கிப்புட்டு, எதையும் பாக்காத மாதிரி ஸீட்ல வந்து ஒக்காந்துருவேன். நான் மெட்ராஸ் வந்து நாலுகாசு பாத்ததும், அவனைத்தேன் கூட்டியாந்து என் பக்கத்துல வெச்சுக்கிட்டேன்.

நண்பன் வளர்ச்சியைத் தாங்காதவனா அவன், கொஞ்சநாள் இருந்துட்டுப் போயிட்டான். முருகேசன்னு எனக்கு இன்னொரு கூட்டாளி. வசதியான குடும்பம். ஆந்திராவிலேர்ந்து பலசரக்குச் சாமான் வாங்கி விக்கிற வியாபாரம். வடிவேலுனா உசுரை விடுவான். எப்பக் கேட்டாலும் அஞ்சு, பத்துனு அள்ளி விடுவான். அவன் கிட்ட சொல்லிட்டுத்தேன் மெட்ராஸுக்கு கௌம்புனேன். '

மெட்ராஸுக்கு போய் கஷ்டப்படாதடா... ' னு என்னைய அக்கறையாத் தடுத்துக்கூடப் பார்த்தான். நாந்தேன் பொறப்பட்டு வந்தேன். வந்த புதுசுல தொணைக்கு யாரும் இல்லாமத் தவிச்சேன். அந்த நேரம் பாத்து முருகேசனோட வியாபாரம் படுத்துப்போக, எங்கிட்டே வந்தான். பளிச்சுனு எனக்குப் பட்டுச்சு. ' முருகேசு, நீ எங்கூடயே இருந்திரு'னு சொன்னேன்.

Vadivelu
Vadivelu

அன்னியிலேர்ந்து இன்னிக்குவரைக்கும் முருகேசனு புக்கு நானும் எனக்கு அவனுந்தேன் எல்லாம்! என் வீட்லயும், ஆபீஸ்லயும் ஒரு தடவை இன்கம்டாக்ஸ் ரெய்டு! அன்னிக் குத்தேன் எனக்கு உலகமே தெரிஞ்சுது. என்னைய அண்டியிருந்த பலபேரு என்னமோ ஏதோனு பயந்துபோய் செதறி ஓடிட்டாய்ங்க. அப்பவும் என்கூட இருந்தது முருகேசன் மட்டுந்தேன். இன்கம்டாக்ஸ் ஆபீசருங்ககிட்ட, ' அய்யா... எனக்கு ரொம்ப உதவி பண்ணியிருக்கீங்க. எம் பக்கத்தில் இருந்தவய்ங்க பாதிப் பேரை பதறியடிச்சு ஓட வெச்சுட்டீங்களே! ' னு சிரிச்சேன். '

எல்லாத்தையும் காமெடி பண்ணி ரசிக்கிறீங்களே'னு அவுகளே ஆச்சரியப்பட்டாக! ' தன்னைத்தானே திருத்திக்கிறவன் தான் தலைவன்'னு புரட்சித் தலைவர் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு. எனக்கு அம்புட்டு வல்லமை கெடயாது. அது வேற விஷயம்னு வெச்சிக்கிடுங்களேன். எனக்கு ஒரு நண்பர் இருக்கார். பேரு வேலுச்சாமி. என்கிட்டே சம்பளம் வாங்குறார். ஆனா அவர்தேன் எனக்கு மொதலாளி மாதிரி இருப்பார். ' ஏன் ஷூட்டிங்குக்கு அரைமணி நேரம் லேட்? ' னு என்னயவே எகிறுவார். வாழ்க்கை ஒரு உயிரோட்டமான விஷயமா இருக்குன்னா, அது சத்தியமா இப்பிடியான நண்பர்களாலதேன்!

ஆனா, அப்பிடி ஒரு நண்பனைக் கண்டுபிடிக்கிறது இருக்கே, பெரும்பாடு! சரித்திரத்தை எடுத்துப் பாத்தா, எங்க அண்ணன் ஒருத்தரு அழகாச் சொன் னாரு..... ' எடுபட்ட பயலே... நம்புனாத் தானேடா துரோகமே பண்ண முடியும்னு! பாத்து சூதானமா இருந்துக்குங்க சாமி!

- வருவேன்

படங்கள் - கே.ராஜசேகரன்

(25.04.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)