அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 40

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. இது ஊரறிந்த உண்மை. நான் செல்லுகின்ற பாதை. என்றும் நகைச் சுவையின் பாதை!'

' சந்திரமுகியப் பாத்துப்புட்டேன்

தேவர்மகனப் பாத்துப்புட்டேன்

சச்சினைப் பாத்துப்புட்டேன்

சத்யராஜப் பாத்துப்புட்டேன்

வெற்றிக்கொடி கட்டிப்புட்டேன்

வின்னர்ல கலக்கிப்புட்டேன்

வில்லங்கமே இல்லாத ஆளு

ரசிகர்களக் கும்பிடுறேன் நானு... '

என்னண்ணே சிரிக்கிறீக, பார்த்திபண்ணே ஹீரோ, பரத்வாஜண்ணன் மீசிக்கு, ' குண்டக்க மண்டக்கன்னு படம் என்னய கூப்புட்டு ஒரு பாட்டு பாடவெச்சுப் புட்டாகள்ல!

ஆத்தி... பத்துப் பன்னெண்டு வருஷத்துக்கு முன்னாடி கம்புக்கு வேட்டியச் சுத்திவுட்ட மாதிரி கெச்சலா ' போடா போடா புண்ணாக்கு'ன்னு பாடி ஆடுன கிறுக்குப் பய வேலுவாண்ணே இது?

இன்னிக்கு உங்கத் திங்கக்கூட நேரமில்லாம ஓடிக்கிருக்கேன். எதிர்காத்துல சிக்குன ஓலக் காத்தாடி மாதிரி காலந்தேன் எம்புட்டு வேகமா சுத்துது!

போன வாரம் ஷூட்டிங் முடிச்சுட்டு ரவைக்கு பொள்ளாச்சியிலேர்ந்து கார்ல மதுரைக்குப் போயிக்கிருக்கேன். நடுச்சாமம்.... எங்கிட்டோ வழியில ஒரு ஊரு. ஒரே ஒரு பொட்டிக்கடையில மினுக்மினுக்குண்டு அரிக்கேன் வௌக்கு ஆடிக்கிருக்கு. குடிக்கத் தண்ணி கேக்கலாம்னு எறங்குறேன். அந்த கடக்காரரு என்னயப் பாத்ததும் ' யெய்யா வடிவேலு'ன்னு விசுக்குன்னு எந்திருச்சு ஓடி வர்றாரு. ' ஏடி தங்கம்'னு உள்ள ஓடிப்போயி தூங்கிக்கிருக்க அவரு புள்ளைய எழுப்புறாரு. ' வடிவேலு மாமா வந்துருக்கார்டி'னு அந்த ரெட்ட சட குட்டிப் பொண்ண எழுப்பிக் கூட்டி வர்றாரு. வீடே முழிச்சிருச்சு, தூக்கத்தையெல்லாம் மறந்து, அந்தப் புள்ள என்னையக் கண்டுட்டு ரோசாப்பூ கெணக்கா ' கேகே'ன்னு சிரிக்குது. ' எங்கடி, மாமா மாதிரி நடிச்சுக் காட்டு'ன்னு அவுக அம்மா கேக்கவும், ' வந்துட்டான்யா வந்துட்டான்யா'னு கையக் கொட்டி நடிச்சுக் காட்டுது. ' ப்ப்ப்ப்ப்பூம்'னு என்னைய மாதிரியே அழுது காட்டுது.

vadivelu
vadivelu

கடையிலயிருந்து ஒரு மேரி பிஸ்கெட் பாக்கெட்ட எடுத்து எங் கையில திணிக்கிறாரு. கார்ல வந்து ஏறி உக்காந்தா தூக்கங் காங்கலைண்ணே. என்னென் னமோ நெனப்புங்க வருது. காரணமே இல்லாம கண்ணுல தண்ணி முட்டுது. கண்ண மூடுனா கிர்ர்ர்ருனு சினிமா கெணக்கா என் வாழ்க்கையே எனக்குள்ள ஓடுது.

கண்ணாடி வெட்டுற தெனக் கூலி நடராஜ பிள்ளையோட மவன் மதுர மங்குடிச ஒண்ணுதேன் சொத்து. மக்குப் பய படிச்சது அஞ்சாப்பு தேன் கன்னங்கரேல்னு காத்தா கருப்பா ஒரு உருவம். எங்கிட்டுப் போனாலும் ' அப்பிடி தள்ளி நில்லுப்பானு ஒடனே ஓரங்கட்டி வைக்கிறதுக்கான அத்தனைத் தகுதிகளோடயும் அலைஞ்சுக்கிருந்தவன்.

பசிச்சர் பாதி வயித்துக்குச் சாப்பாடு, மீதி வயித்துக்கு பீடிப் பொகனு வாழ்ந்த பய. அப்பாரு தொழில அப்பிடியே பிக்கப் பண்ணி, காலேஜு போக வேண்டிய வயசுல கண்ணாடி வெட்டப் போனவன். ஆனா, அறியாத புரியாத வயசுலேயே வெள்ள வேட்டியத் தெரையாக் கட்டி, பிலிம் சுருள்ல நெழலு காட்டி படம் ஓட்டுன விஞ்ஞானிக்குப் பொறந்த விஞ்ஞானியும் அவந்தேன்.

தங்கம், சிந்தாமணி, சென்ட்ரலு, தங்க ரீகல்னு மதுர சினிமாக் கொட்டாயிங்கதான் அவம் பள்ளிக்கொடம். வாத்தியார்னா அது எம்.ஜி.ஆருதேன். அவரு பாட்டுகளக் கேட்டு கனா கண்டு, காதலிச்சு, நரம்ப முறுக்கி கோவப்பட்டு, அழுது சிரிச்சு வளந்த பய. டப்பாக்கட்டு கட்டிட்டு கவுண்டர்ல அடிச்சுப் பிடிச்சு தொம்சம் பண்ணி டிக்கெட்டு வாங்குறதையே பெரிய சாதனையா நெனச்சுக் கொண்டாடுனவன். சினிமாவா பாத்துத் திரியத் திரிய... புரஜெக்டரு மெசினுலயிருந்து குபீர்னு பொகையா வெளிச்சங் கெளம்புற மாதிரி, அவன் மனசுலயும் நடிப்பாச வந்துருச்சு.

எப்பமும் பாட்டுப் பாட்டிட்டு டான்ஸப் போட்டுட்டு கனாலயே சுத்திக்கிருந்தப்ப, ' இந்த நடராஜன் புள்ள வெளங்காது. உருப்படாம போறதுக்கான அம்புட்டையும் பண்ணுது'ன்னு தெறிச்சவய்ங்கதேன் அதிகம். இன்னிக்கு அவுக அம்புட்டு வீடுகள்லயும் எங் காமெடிய டி.வி - ல பாத்து ரசிக்கிறாக.

பொசுக்குனு அப்பா போயிச் சேந்த பொறவு.... அம்மா, தம்பி - தங்கச்சிகளோட தனியா நிக்கேன். ஒரு நா பே மழண்ணே. எங்க வீடு மங்குடிச. சுத்துக்கட்டு சொவரு அப்பிடியே ஒடஞ்சு விழுந்திருச்சு. அம்புட்டு பேரும் நடுத்தெருவுல நிக்கிறோம். எங்கிட்டுப் போறதுன்னு தெரியல. மழையோட மழையா எங்காத்தா சந்தடியில்லாம அழறது எங் காதுக்கு மட்டுங் கேக்குது. அக்கம் பக்கம் போயி தங்க வெக்கப்பட்டுக்கிட்டு, ஒரு நா முச்சூடும் ரோட்ல கெடக்குறோம். மக்கா நா வேற ஏரியால வீடு பாத்துப் புடிச்சு அவுகள் கொண்டுபோயிவிட்டேன். அந்த மழதேன் எனக்குள்ள திகீர்னு ஒரு தீய பத்தவெச்சுச்சுண்ணே!

அப்பதேன் மனசுல வைராக்கியம் வந்துச்சு! பொசுக்குனு ஒரு மழையில தெருவுக்கு வந்துருச்சே எங்க குடும்பம்! எங்க ஆத்தாவுக்குப் பெரிய பங்களா கட்டி உக்காரவெச்சு அழகுபாக்கணும். சினிமாதேன் ஒனக்குன்னா எங்கிட்டாவது ஓடு, சுத்திச்சுத்தி தேடு, உங்காம கொள்ளாம அல, பேத்தனமா ஒழ! ' னு வைராக்கியம் வந்து போச்சு. அப்பறந்தேன் மதுரையில ராஜ்கிரண்ணணப் பாத்ததும் அவரு காட்டுன வழியப் புடிச்சு சினிமாவுக்கு வந்ததும்...! அதான், அந்தக் கதை அம்புட்டையும் நம்ம ஆனந்த விகடன் மூலமா உங்ககிட்ட சொல்லிப் புட்டேன்ல. உழைப்பும் தொழில் மேல அக்கறையும் இருந்தா எந்தப் பயலும் முன்னுக்கு வந்துரலாம்ணே, என் வாழ்க்க அதுக்கு இன்னொரு உதாரணம்ணே!

காசு பணம் வேணாம், அழகு வேணாம். ஆன்னு வாயப் பொளக்கிற தெறமயும் வேணாம். எது இருக்கோ, இல்லையோ... உள்ளுக்குள்ள ஒரு வெறி வேணும்ணே. ரயிலு எஞ்சினுல அள்ளிப்போட்ட கரி கெணக்கா கங்கா உள்ள ஒரு நெருப்பு எரிஞ்சுக்கே இருக்கணும். அம்புட்டுதேன்!

vadivelu
vadivelu

எண்ணே, என்னைய மாதிரி வேலுப்பயலே ஜெயிக்கிற ஒலகம்ணே இது, விட்றாத, வெரட்டிப் புடிச்சிரு, ஆமா, சொல்லிப்புட்டேன்!

ஆத்தா மீனாச்சியம்மா, ந்தா ஓம் புள்ள ஆனந்த விகடன்ல கதை எழுதிப்புட்டான். ஆத்தா! ஓம் பாதத்தத் தொட்டு கண்ணுல ஒத்திக்கிறேம்மா. அப்பறம் என் நண்பன் முருகேசன். நா பட்டினி கெடந்தப்பயும் பணங்காசு வந்தப்பயும் ' நீ என் நண்பன்டா'ன்னு நின்ன பாசக்காரப் பய... எல்லாத்தையும் நெனச்சுக்குறேன்.

இன்னிக்கு நானும் எம் பொஞ்சாதி புள்ள குட்டிகளும் சாப்புடற சோறு நீங்க போடுறது! என்னையும் ஒரு மனுசனா மதிச்சு, ரசிச்சுச் சிரிச்சு என்ன வாழவெக்கிற ரசிகருங்கதேன் எஞ்சாமீ. அப்பறம் என் ஆத்தா பாப்பா சரோசினி. எங்களுக்காக அது தன் வாழ்க்க பூராம் பட்ட தும்பமும் தொயரமும் பெருசுண்ணே. ' இவுகதேன் வடிவேலு அம்மா'னு நாலு பேர் சொல்லும்போது எங்காத்தா சந்தோஷப்படுதே, அதேன் அதுக்கு நா குடுத்த சொத்து. மனசு இப்ப நெறஞ்சி இருக்குண்ணே. எங் கதயப் படிச்ச எல்லாரையும் கும்புட்டுக்கிறேன். திரும்பவும் விகடன் மூலமா சந்திப்போம்ணே! சும்மா சந்தோஷமா சிரிச்சிக்கே இருப்போம்!

இப்பமும் வாத்தியார் பாட்டு நினைப்புல வருது. 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. இது ஊரறிந்த உண்மை. நான் செல்லுகின்ற பாதை. என்றும் நகைச் சுவையின் பாதை! '

- தொகுப்பு - ரா.கண்ணன்

ராஜுமுருகன்

பொன்.காசிராஜன்

(14.08.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)