அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 5

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

அந்த நக்கலு, நையாண்டி, எடக்குமடக்கு, குண்டக்க மண்டக்கப் பேச்சுத்தேன் இன்னிக்கும் சோறு போடுது..!

ழைய வேலு பரம ஏழை!

இன்னிக்குக் கையில காசு பணம் பாத்துட்டான். ஆனா, மனசுக்குள்ள அதே மதுரப்பய தேன் இருக்கான்.

பழைய சோறு... தொட்டுக்க முட்டூனு ஊறுகா, இல்லன்னா பச்ச மொளகா இருந்தாப் போதும். அள்ளித் தின்னுப்புட்டு, அக்கடானு திண்ணையில படுத்துக்கிட்டு, காலாட்டிக்கிட்டே கனவு காண்ற

இப்ப வாய்க்கு ருசியா என்னென்னவோ வாங்கித் திங்கலாம். ஆனாலும், பொழப்புக்கு வழியில்லாமக் காய்ஞ்சு கெடந் தப்போ, குளுகுளுன்னு வயித்துக் குள்ள எறங்குன பழையதுக்குப் போட்டியா வேற எதுவும் கிட்டத்துலயே வர முடியாதுண்ணே!

மண் குடிசை வாசலென்றல் தென்றல் வர வெறுத் திடுமா? மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத் திடுமா? ' னு ' படகோட்டி ' படத்துல தலைவர் பாடுவார்ல... அதான் கரெக்ட்டு.

Vadivelu
Vadivelu

காசு பணத்துலயா இருக்கு சந்தோஷம். அது மனுசப் பய மனசுலதாண்ணே இருக்கு! எங்கதயைச் சொல்றேன் கேளுங்க!

'தென்னகத்துத் திரையுலகக் கலா ரசிகப் பெருமக்களே...!' னு எங்கூர்ல குருத வண்டியில கொழாய் ரேடியோ கட்டி, ஒருத்தன் பேச ஆரம்பிப்பான். அத்தனை அர டிக்கெட்டும் அவன் வண்டி பின்னாடியே ஓடுவோம். ஏதோ எம்.ஜி.யாரே குருதயில வர்றது மாதிரி இருக்கும், அவனப் பாக்க! ரோஸ் கலர் நோட்டீசுகள வழியெல்லாம் வீசியெறி வான். அதைப் பொறுக்குறதுக்கு அடிச்சு விழுந்து ஓடுவோம். அவன் போனப்புறம் நானும் அதே மாதிரி, திண்ணையில நின்னுக்கிட்டு, நியூஸ் பேப்பர சுருட்டி மைக் கெணக்காப் புடிச்சுக்கிட்டு, ' தென்னகத்து திரையுலக'ன்னு சவுண்டு விட்டுச் சலம்புவேன். எனக்கெல்லாம் சினிமா ஆசை ஆரம்பிச்சதே அந்தக் குருதக்கார மருத வீரனாலதேன்!

கோயிலு திருவிழான்னா.... எங்கூர்ல வீதிக்கு வீதி மேடை போட்ருவாய்ங்க. கரகாட்டம், வள்ளித் திருமணம், பாட்டுக் கச்சேரி, பட்டிமன்றம்னு விடிய விடிய கூத்து நடக்கும். பாட்டுக் கச்சேரின்னா மைக் செட்டுக்காரன் பக்கத்துல நின்னுருவேன். ' ஹலோவ்... மைக் டெஸ்ட்டிங்.... ஒன் ட்டூ த்ரீ, த்ரீ டூ ஒன்! தேனினும் இனிய தெள்ளு தமிழ்க் கானங்களை... ' ன்னு அவன் பேசப்பேச, அப்பிடியே வாயப் பொளந்து பாப்பேன். அவன் இங்கிட்டு

அங்கிட்டு அசந்து திரும்புறப்போ, டக்குன்னு மைக்கை எடுத்து, ' கல்ல்ல்லோ மைக் டெஸ்ட்டிங்னு கத்திட்டு, சிட்டாப் பறந்துருவேன். பின்ன, சிக்குனா பிரிச்சுப் பேன் பாத்துருவான்ல. கொஞ்சம் நல்ல மனுஷனா இருந்தா அவனுக்குக் காப்பித் தண்ணி, பீடி சீரெட்டுன்னு வாங்கித் தர்ற எடுபிடியா எப்பிடியாவது பக்கத்துலயே செட்டிலாயிரு வேன். பாட்டு ரெக்கார்டையெல்லாம் ஆசையாத் தொட்டுப் பாத்துப்பேன்.

எல்லா மியூஸிக் ட்ரூப்லயும் ஒரு டி.எம்.எஸ். இருப்பாய்ங்க! நெத்தி நிறைய திருநீறு, வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட்டு, ஒல்லி பெல்ட்டு போட்டு இல் பண்ணிட்டு ' பச்சைக்கிளி..... முத்துச்சரம்'னு பாடுவாய்ங்க. பக்கத்துல பாடற லோக்கல் பி.சுசீலாவை அப்பிடியே ஓரக்கண்ணால பாத்துக்கிட்டு, ஃபுல் ரொமான்ஸைக் குடுப்பாய்ங்க. எனக்கெல்லாம் மூஞ்சி மொத்தத் துக்கும் ரோஸ் பவுடரு அப்பிக் கிட்டு வந்து நிக்க, சும்மா ' ரண்டக்க.... ரண்டக்க'ன்னு அடி வாய்ங்க.

'ஆங்... வந்தன முங்க வந்தனம்! வந்த சனங்க குந்தணும்னு ஆட்டம் ஆரம்பிக்கும். ஒரு கட்டத்துல வெத்தலைக்குச் சுண்ணாம்பு நாந்தரவா? ' னு கிறுகிறுனு பம்பரமாச் சுத்துவாய்ங்க. அம்புட்டுத்தேன், கூட்டத்துல இருக்கற பொண்டு புள்ளைங்களெல்லாம் ஓடிரும். அப்புறம் பாக்கணுமே, திருவிழாவை!

'ஆரப்பாளையம் முத்துச்சாமி அவர்கள்... நாட்டிய சுந்தரி நடன மயில் கமலாவுக்கு ரூ.51 அன்பளிப்புனு மைக்ல அலறுவாய்ங்க. ஒரு பெருசு கை நடுங்கிக்கிட்டே அம்பது ரூபா நோட்டை கமலா தோள்பட்டையில ஊக்குல குத்திப்புட்டு, பெருமையாப் பாக்கும். அவுக கன்னத்துல கமலா செல்லமாக் கிள்ளி ஒரு சிரிப்பு சிரிச்சா, மனுஷன் அப்படியே சொக்கிப் போயிருவாக. ' ஏய் பெருசு... நாளைக்கு அக்காகிட்டே சொல்லி அம்மியில ஒன்னய வெச்சு அரைக்கச் சொல் றோம்டி'னு நாங்க சவுண்டு விடுவோம். இன்னிக்கு சினிமால பண்ற அலப்பறையெல்லாம் அன்னிக்கே மதுரயிலயே ஆரம்பிச்சாச்சு!

பேச்சுக் கேட்டே வளந்த ஊருங்க மதுர! அதும் சாலமன் பாப்பையா பட்டிமன்றம்னா, ரெண்டு நாளைக்குச் சோறு வேணாம். அவரு ஆளும் நெறமும் வேற அப்பிடியே என்ன மாதிரி. ' ஹே.. ஹெஹே... ' ன்னு சிரிச்சு உசுப்பேத்திவிடுவார் பாருங்க. அத்தன சனமும் வயித்தப் புடிச்சிக்கிட்டுச் சிரிக்கும். ஊரு உலகமே அன்னிக்கு ராத்திரி ரோட்ல கெடக்கும். நானெல்லாம் அம்மா சேல, அப்பா வேட்டினு எதயாச்சும் கொண்டாந்து ரோட்ல பப்பரப்பானு விரிச்சுப் படுத்துருவேன். அந்த நக்கலு, நையாண்டி, எடக்குமடக்கு, குண்டக்க மண்டக்கப் பேச்சுத்தேன் நம்ம ரத்தத்துல கலந்து போச்சு. அதான இன்னிக்கும் சோறு போடுது!

கையில காசு பணம் இல்லேன் னாலும், வாய்ப்பு வசதி இல்லேன் னாலும் வாழ்க்கை சந்தோஷமா இருந்துச்சுண்ணே!

தெருவுல புழுதியில வெளாடற துல ஒரு சொகம். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளையும் தம் பிள்ளை களாப் பாக்குற மனுசங்க. வீட்டுல வெள்ளைச் சோத்தை வாங்கிட்டுப் போய், பக்கத்து வீட்ல கொழம்பு ஊத்திக்கலாம். மக்க மனுசங்கனு அத்தனை பேரும் அன்பா இருந்தப்போ, ஊரு நல்லா இருந்துச்சுண்ணே!

தெருவுக்குள்ள புதுசா ஒரு பய நுழைஞ்சிர முடியாது. வழியிலயே விசாரணையைப் போட்ருவாய்ங்க. ஒரு வீட்டுக்குள்ள எதுனாச்சும் வம்பு தும்புன்னா, அம்புட்டு ஆளுகளும் உள்ள புகுந்து பஞ்சாயத்துப் பேசி சமரசம் பண்ணிப்புட்டுத்தேன் வெலகு வாய்ங்க. எங்கேயாச்சும் சிக்குனா, ' டேய் நீ இன்னாரு மகன்தானடா, இந்த வீட்டுப் பயதானேடா'ன்னு நம்ம சரித்திரத்தையே வாசிப்பாய்ங்க. இப்ப, எதுத்த வீட்ல எவன் இருக்கான்னே தெரியலியே!

ஒருத்தனுக்கொருத்தன் எதிர பாத்தாக்கூட, மூஞ்சியில ஒரு சிரிப்பைக் காணலியே. பூராம் ஏழெட்டுக் கப்பலை வாங்கிட்டு, எல்லாம் கவுந்தது மாதிரியில்ல அலையறாய்ங்க. நாளு, கிழமை, பொழுது அத்தனை யும் டிவி பொட்டிக் குள்ளயே முடிஞ்சு போயிருதே!

Vadivelu
Vadivelu

இருபது வருஷத்துக்கு முன்னாடி இம்புட்டு டி.வி. பொட்டிங்க இருந்துச்சா?

ரங்காராவ், சாய்மானமா ஒக்காந்துக் கிட்டு வெத்தலையில மை தடவிப் பாப்பார். அந்த வெத்தலை டப்புனு படப் பொட்டியாயிரும். அதுல பாத்தா ஜெமினிகணேசன் காட்டுக்குள்ள போய்க்கிட்டிருப்பார். பக்கத்துல அஞ் சலி தேவியம்மா! ' ஆஹா என்னவொரு அழகி! கொண்டு வா அவளை! ' னு ரங்காராவ் கட்டளை போடுவார். அப்ப ஆச்சரியமா இருந்துச்சு. இப்ப அந்த வெத்தலைப் பொட்டி, வீடுவீடா வந்து ஒக்காந்துக்கிட்டு, சன்ன அட்டகாசமா பண்ணுது?

யாருக்கும் யாரைப் பத்தியும் கவலையில்லை. எல்லாம் நல்லாப் பொழைக்கிறாங்க. ஆனா, எவனுக்கும் வாழத் தெரியலியே!

அத்தனை சனமும் டி.வி பொட்டிக் குள்ளயே விழுந்து கெடக்குது. இந்தப் பிள்ளைகளுக்கு கூத்தும் தெரியல, திருவிழாவும் தெரியல! அரை வாளித் தண்ணியில குளிச்சிப்புட்டு, ஆட்டோ வுல அடைஞ்சுக்கிட்டுப் பள்ளிக் கூடத்துக்குப் போறதப் பாத்தா பாவமா இருக்குய்யா! ஆத்துல வெளாடி, ஈரத் துணிமணியோட வீடு வந்து ஆத்தா கையால அடிவாங்குன சொகமெல்லாம் இந்தப் பிள்ளைகளுக்குக் கெடைக்காமப் போயிருச்சேய்யா! குடும்பம், புள்ள குட்டினு ஒண்ணுக்கொண்ணு அண்டி ஒண்டி கதை பேசி, சிரிச்சு அழுது கூடிக் கெடந்தோம்னாதாம்யா அது நல்ல பொழப்பு. வீட்ல உள்ளவய்ங்க கிட்டயே மூஞ்சியக் காட்டாம டி.வி. பாத்துக்கிட்டு கெடந்தா வௌங்குமா சாமி!

- வருவேன்

படங்கள் - கே.ராஜசேகரன்

(05.12.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)