அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு -6

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

அடிபட்டுக் கெடந்தா தூக்கி சோடா குடுக்கிறதுக்கும் இன்னமும் செல பேரு இருக்காங்க.. அதனாலதேன் மெட்ராஸ்லயும் மழை பெய்யுதுண்ணே!

'நாய்க்கு வேலை இல்ல..... நிக்க நேரமில்ல'ம்பாங்க!

அதுக்கு மெட்ராஸ் சரியான உதாரணம்ணே! ' பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்.... ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா - னு ' பெரிய இடத்து பெண் ' பாட்டு மாதிரியே தேன் இருக்கு இந்தச் சென்னைப் பட்டணமும்!

இது என்னய்யா ஊரு மெட்ராசு... எவனப் பாத்தாலும், கால்ல வெந்நித் தண்ணியைக் கொட்டிக்கிட்ட மாதிரி, வெரசா போறாய்ங்க. வெரசா வாராய்ங்க. எவன் எங்கிட்டு எதுக்குப் போறான் வாரான்னே தெரிய லியே'ன்னு எங்க அம்மா சொல்லும்.

மவுண்ட் ரோட்ல போற டவுன் பஸ்ஸைப் பாருங்க... எல்லா பஸ்ஸும் லேசாக் கழுத்தைச் சாய்ச்சுக்கிட்டுத்தேன் போகும். முட்டுக் கூனு படிக்கட்டுல இருவது முப்பது புள்ளைக தொங்கறதப் பாத்தா, ஆத்தி எனக்கெல்லாம் ஈரக்கொல நடுங்கிரும். லேசா நழுவுச்சுன்னா செதறு தேங்கா கெணக்காச் செதறிப் போவாய்ங்க. ஆனாலும் ஸ்டைலாப் போய்க்கிட்டிருக்காய்ங்க. ஸ்கூட்டரு, பைக்குனு அத்தனை பேரும் ' டர்ரு புர்ருனு ' பறக்கறாய்ங்க.

ஆட்டோக்காரனெல்லாம் ரோட்லயே ஏரோபிளைன் தேன் ஓட்றான். இம்புட்டு அவசரமா எங்கிட்டுப் போறாய்ங்கன்னு யோசிப்பேன்!

காமெடி வடிவேலு -6

மதுரயில டவுசர் தெரியத் தூக்கி கட்டுன வேட்டியோட சண்டியராத் திரிஞ்ச பய நானு. ஆனா, மெட்ராசப் பாத்துப் பயந்து போயிட்டேனப்பு. ' மதுர'னு போர்டு போட்டு ஏதாவது பஸ் போறதப் பாத்தாலே கண்ணுல தண்ணி முட்டிக்கும். எந்நேரமும் ஊருக்கு ஓடிப்போயிரலாமான்னு மனசுக்குள்ள பாப்பையா இல்லாமலே பட்டிமன்றம் நடத்திக்கிருப்பேன். ஒருநா ரோட்டோரமா நடந்திட்டிருக் கும்போது எதுத்தாப்புல எங்க ஊரு பய ஒருத்தனைப் பாத்தேன். ஓடிப் போயி ' ஏலேய் முத்துப் பாண்டி'ன்னு அவன் கையப் புடிச்சேன். பயபுள்ள ஏதோ பின்லேடனப் பாத்த மாதிரி மெரண்டு முழிச்சுப் பாத்தான். ஓரமாப் போயி ஒரு காபி டீ வாங்கிக் குடிக்கலாம்னு கூப்பிட்டா, ' இல்லல்ல அந்தக் கடையில அக்கவுண்ட் இருக்கு, போனா புடிச்சுக்கு வான். கொஞ்சம் சோலியிருக்கு வேலு. அப்பறம் பாக்கலாம்... வாரேன்'னு ' மின்னலு ' கெணக்கா ஓடிட்டான். இன்னொருநா பாத்தப்பயும் இதே கததேன்! அங்கிட்டும் இங்கிட்டுமா ஓடறானே..... பெரிய வேலைக்கார னுக்குப் பொறந்த வேலைக்காரனா இருப் பானோனு நெனைச்சா, ஒரு நா வடபழனியில விசயா ஆசுபத்திரிக்கு எதுத்தாப்புல பொட்டிக் கடையில பீடி புடிச்சு கிட்டு நிக்குறான் நம்ம பாஞ்சு அமுக்கி புட்டேன். ' என்னெல்லாம் மறந் துட்டே முத்துப் பாண்டி! ' ன்னு நான் பாஷை பேசினா ' எனக்கே ஒண்ணும் செட்டாகல, நானே இன்னும் ட்ரை பண் ணிட்டிருக்கேன்'னான். எதும் லவ்ஸ் மேட்ட ரோன்னு வெசாரிச்சா, வேலை தேடுறதத்தான் ' டிரை பண்ணிட்டிருக் கேன்'ன்னு சொல்றானுக. பட்டணத்துல அங்கிட்டும் இங்கிட்டுமா சக்கரத்தக் கட்டிக்கிட்டு திரியறவய்ங்க பாதி பேரப் புடிச்சிக் கேட்டா இந்தக் கதையத்தேன் சொல்வாங்கற உண்மையை அன்னிக்கு முத்துப்பாண்டி சொல்லித்தான்யா தெரிஞ்சுகிட்டேன்.

லவ்ஸுன்னதும் ஞாபகம் வருது... எங்கூர்ல ஒரு பொம்பளப் புள்ளை கிட்ட பேசுறதுன்னா, அது எம்புட்டு கஷ்டம் தெரியுமுங்களா?

வீட்ல கோழிக கூட வெளிய வரும். கொமரிப் பொண்ணுக வாசலைத் தாண்ட மாட்டாக. கோயிலு, கூட்டம்னு வந்தாக்கூட ஆத்தாக்காரி சேலைக்குள்ளயே ஒளிஞ்சு வருவாக போவாக. அழகர் கோயில் திருவிழாவுல புடிச்ச புள்ளைக்கு ஒரு ரிப்பனு வாங்கித்தர என்னென்ன திட்டங்களத் தீட்டு வாய்ங்க தெரியுமா? அந்த புள்ள பாக்கணும்னு அலகு குத்திக்கிட்டு ஆடறவன் இருக்கான். அக்கினிச் சட்டி தூக்கறவன் இருக்கான். மார்கழி மாசம் பொறந்துட்டா, குளிரெடுத்து கெளம்பிருவாய்ங்க. தெருவெல்லாம் அடைச்சு மாக்கோலம் பூக்கோலம் போடுற புள்ளைகளப் பாக்க, ஆளுக்கு ஒரு சைக்கிள எடுத்துகிட்டு போய் இருட்டுல நின்னு இளிப்பாய்ங்க. நாலஞ்சு நாளுதேன். அதுக்குள்ள அந்த புள்ளையோட சாதி சனம் எவனாச்சும் மோப்பம் புடிச்சிரு வாய்ங்க. ஒருநா முகூர்த்தம் குறிச்சு, தெருமுக்குல கோத்துப் புடிச்சு மொத்திருவாய்ங்க. மெட்ராஸ்ல எனக்கு ஒண்ணு மட்டும் புரியலீங்க. பைக்ல ஒரு மம்முதராசா ஒக்காந்திருப்பாரு. பின்னால எதுனாச்சும் பொம்பளப்புள்ள.... அதும் தலையில ஹெல்மெட்டோ, இல்லேன்னா சுடிதாரு துப்பட்டாவோ போட்டு மூஞ்சி தெரியாமப் பொத்திக்கிட்டு, முன்னாடி ஒக்காந்தி ருக்கவனை இறுக்கிக் கட்டிக்கிட்டுப் பறக்குதுங்க. அட சட்டை துணிமணியைப் பாத்து அடையாளம் கண்டுபிடிச்சிர மாட்டாங்களான்னு நெனைப்பேன். அதுசரி, நமக்குத்தேன் நாலு சட்டை பேண்ட்டை விட்டா வேற நாதி கெடையாது. இங்ஙனதேன் ஒவ் வொருத்தனும் சம்பாதிக்கிறதுல பாதிக் காசை சட்டை துணிமணியெடுக்கத்தானே செலவழிக்கிறாய்ங்க.

மெரீனா பீச்சு பக்கம் போனதைச் சொன்னா வெக்கக் கேடு. மொத தடவை அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி பாக்கணும்னு ஆசைஆசையாப் போனேங்க ' எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது'ன்னு அண்ணா சமாதி மேல எழுதியிருந்துச்சு. ஆனா பீச்சுப் பக்கம் போனப்போ, என் இதயம் தாங்கலைங்க. எம்புட்டுக் கூட்டம். எல்லாம் ரெவ்வெண்டு பேரு... ஆணு ஒண்ணு, பொண்ணு ஒண்ணுன்னு அங்கங்க சோடி சோடியா ஒக்காந்திருக்காங்க. தீப்பிடிக்கிற வெயிலு, அதுவும் பொசுக்குற சூட்டுல மண்ணு... அடப்பாவிகளா சூடு பிடிச்சுக்குமேடா என் சுந்தர பாண்டிகளான்னு நா யோசிக்கிறேன். ஒலகமே மறந்து அத்தனையும் படுத்துக் கெடக்குதுங்க. யாரு பெத்துப் போட்டதுகளோ இப்பிடி எவன் மடியிலயோ சாஞ்சு கெடக்குதுங்க.... எங்கூர்ல இந்தக் கொடுமையெல்லாம் பாத்தா, அங்ஙனயே வெட்டிக் கொன்னு போட்ருவாய்ங்க. இல்லேன்னா மருந்தை ஊத்திக் ' கொலைகொலையா முந்திரிக்கா ' பாடிருவாய்ங்க.

' பட்டணத்து காதலது பாதிலே மறையுமப்பா, பட்டிக்காட்டுக் காதலுக்கு கெட்டியான உருவமப்பானு பாட்டுத்தேன் அப்பவும் ஞாபகம் வருது.

அட, ஆள மடக்கி ஆட்டைய போடறதுக்குண்ணே ஒரு குரூப்பா திரியறாய்ங்க இந்த பட்டணத்துல! மேஸ்திரி வேல பாத்து மீட்டர் போடுறதுக்குண்ணே சில பேரு இருக்காய்ங்கண்ணே. சான்ஸ் தேடி காஞ்சி போயி அலையறவனாப் பாத்து, ' உன் முகத்துல ஒரு ஒளி இருக்கப்பா! ரெண்டு மூணு. புராஜக்ட்டு இருக்கு. சொல்லி விடறேன்'னு சொல்லிட்டுப் போயிருவான். மறுநா அவசரமா வந்து ' பர்ஸ மறந்துட்டு வந்துட்டேன் ஒரு டூ ஹண்ட்ரட்குடு. சாயங்காலமா வாங்கிக்கனு கேப்பான். நாம அடிச்சிப் புடிச்சி துடைச்சித் தூக்கித்தர்ற பைசாவை வாங்கிட்டு ', ஜூட்டு விட்ருவாய்ங்க.

காமெடி வடிவேலு -6

இன்னைக்கு வைகை யாறும் வத்திப்போச்சு... அது வேற கதை. ஆனா மெட்ராஸ் மாதிரி ஊருக்கு நடுவுல கன்னங்கரேல்னு இம்புட்டுப் பெரிய! சாக்கடை ஓடற ஊரை ஒலகத்துல வேறெங்கி யும் பாத்ததில்லீங்க. ' அடப் பாவிப் பயலுகளா... ஆத்தையே இப்பிடிச் சாக்கடை ஆக்கிப் புட்டீங்களேடா.. ஒங்களை எப்பிடிராப் பொண்ணு குடுக்குறது? ன்னு மெட்ராஸ்காரன் எவனுக் கும் பொண்ணு குடுக்கக் கூடாதுங்க.

காலு கையை நீட்டிப் படுத்து எந்திரிக்கத் தானேங்க வீடு! ஆனா இந்த ஊர்ல பொறாக் கூண்டுங்க கெணக்காத்தேன் வீடு கட்டி விட்ருக்காய்ங்க. வீட்டுக்குள்ள படுத்தா காலு ரெண்டும் வாசப்படியைத் தாண்ட படி வெளிய கெடக்கும். வந்த புதுசுல அப்பிடி வீட்ல தங்கியிருந்தேன். ஒரே ஒரு குண்டு பல்பு. அதும் ராத்திரி ஒம்பது மணிக்கு கரண்ட்டைப் புடுங்கிருவாய்ங்க. குளிக்கும்போது சோப்பு போட்டுக் கிருக்கும் போதே கொழாயில தண்ணியே நிறுத்திடுவாய்ங்க. ஒருநா கடுப்பாகி அப்படியே ஒடம்பெல்லாம் சோப்போட, பேயி கணக்கா போயி வீட்டுக்காரரு முன்னாடி நின்னேன். அலறியடிச்சு தண்ணியத் தொறந்துவுட்டாரு. சத்திய சோதனை வைக்கிறாங்கண்ணே.

இவிங்க தமிழா பேசறாய்ங்க. எதுக்கெடுத்தாலும் ஒரு கெட்ட வார்த்தை சொல்லித்தேன் பேச ஆரம்பிப்பாய்ங்க. அந்த வார்த்தையெல்லாம் மதுரப் பக்கம் கேட்டாய்ங்கன்னா, கொரல் வளையை மென்னு துப்பிப்புடுவாய்ங்க. கொஞ் சம் மரியாதை கம்மியான எதுனாச்சும் அட்ரஸ் வெசாரிச்சுப் பாருங்க. ' அப்டிக்கா லெஃப்ட்ல போய்க்கினே இர்ந்தா, தேர்ட் ரைட், சைட்ல லெஃப்ட். அங்க போய் வெசாரி'ன்னுட்டுப் போயிருவான் எனக்கெல்லாம் கிறு கிறுன்னுதலை சுத்திரும்.

நா அஞ்சாப்பு தேன் படிச்சிருக்கேன். அப்புறம் எல்லாம் இது மாதிரி பட்டுத் தெரிஞ்சது பாதி. கெட்டுத் தெரிஞ்சது மீதி!

மெட்ராசு நல்ல ஊருதாண்ணே. இங்கே இருக்கறதுல பாதிப் பேரு நம்மள மாதிரி பொழைக்க வந்த ஊர் நாட்டாய்ங்கதான. இப்பவும் தெனமும் பத்து இருபது பேரு வந்து எறங்கிட்டுதானய்யா இருக்காய்ங்க. ஊர்ல வெள்ளந்தியாத் திரிஞ்ச பயலுகளும் இங்க வந்து சூது தெரிஞ் சுக்கிறாய்ங்க. யாரைக் கவுக்கலாம் யாரை ஏமாத்தலாம்னு புத்தி கெட்டுப் போய்த் திரியறாய்ங்க. அட மண்ணுல ஈரம் காயலாம்.

இதே ஊர்ல நல்லவங்களும் இருக்காங்கய்யா. தெரு முக்குல ஒரு சட்டி வைச்சு ரிக்ஷாக்காரன், சினிமாக்காரன்னு பாகுபாடு பாக்காம அம்புட்டுப் பயகளுக்கும் கடனுக்கே சோறு பொங்கிப் போடுற ஆயாகிட்டே நானும் வாங்கித் தின்னுருக்கேன். அடிபட்டுக் கெடந்தா தூக்கி சோடா குடுக்கிறதுக்கும் இன்னமும் செல பேரு இருக்காங்க..

அதனாலதேன் மெட்ராஸ்லயும் மழை பெய்யுதுண்ணே!

- வருவேன்

(12.12.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)