
பட்டணத்துல செத்தா பாவப்பட்ட சாவுண்ணே அது.
இப்ப திண்ண வெச்சி யாராச்சும் வீடு கட்றாங்களா?
எட்டுகட்டு வீடும்பாய்ங்க எங்கூர்ல. திண்ண மட்டும் அத்தாம் பெருசாருக்கும். எதுத்தாப்ல ஒரு வேப்பமரமும் அமைஞ்சி போச்சுன்னா சொர்க்கந்தேன். தெருப்பக்கமா வாறவன், அவன் எந்தக் காட்டுப்பயலா இருந்தாலுஞ் சரி, ' யாத்தா குடிக்கக் கொஞ்சந் தண்ணி குடு'னு கேட்டாப்போதும், வௌக்கி வெச்ச பித்தளச் சொம்புல குளுகுளுனு குடுப்பாக. மொடக்கு மொடக்குனு குடிச்சிட்டு திண்ண யில துண்ட ஒதறி விரிச்சி, எளப்பாறி களப்பாறிட்டுப்போன காலம் எல்லாம் உண்டு.
இப்பத்தேன், திண்ண கட்ற எடத்துல நாலஞ்சு ரூமுகளக் கட்டி அதயும் வகுந்து வாடகைக்கு விட்றாய்ங் களேய்யா. அவிங்களச் சொல்லியும் குத்தமில்ல.
திண்ண கட்டி படுக்க வெச்சோம்னா, அசந்த நேரத்துல ஓட்டப் பிரிச்சி உள்ள குதிச்சி, உள்ளதையும் சுருட்டி வழிச்சிட்டு ஓடிட்டாய்ங்கன்னா? ஊரு அம்புட்டுக் கெட்டுப்போயிக் கெடக்கே!

அதுலயும் பட்டணத்துல களவாணிப்பயக ரொம்ப நூதனமா இருக்காய்ங்கண்ணே. முன்னாடி நா தங்கியிருந்த ரூமுல ரவைக்கு கழட்டி மாட்டுன சட்டய களவாண்ட்டு ஓடிருவாய்ங்க. இப்பிடியே ரெண்டு, மூணு சட்டயக் கொண்டுபோயிட்டாய்ங்க. எவன் எடுக்கறான்னே தெரியல. எப்பிடியாச்சும் அவனக் கோழி அமுக்குற மாதிரி அமுக்கிப்பிடணும்னு ஒரு நா ரா முச்சூடும் கொட்டக் கொட்ட முழிச்சிட்டுக் கெடந்தேன். கோழி நேரம்ணே.... சன்னலு வழியா இத்தாந்தண்டி கம்பி ஒண்ணு பய்ய உள்ள வருது. ஆத்தாடினு கலவரமாயிப் பாத்தா... அப்பிடியே சட்டயில கோத்து மாட்டி இழுக்கறாய்ங்க. நான் தாவி எந்திரிச்சி கம்பியப் புடிச்சி இழுத்தா பய புள்ள கம்பிய விட்டுப்புட்டு காத்தா கருப்பா தெறிச்சி ஓடி மறஞ் சுட்டான். ஊரே ஒறங்குற நேரத்துல கம்பிய வுட்டு களவாண்றாய்ங் களேண்ணே சண்டாளய்ங்க. அப்பறம் வெசாரிச்சுப் பாத்தா, அவிங்க கம்பிய விட்டு பீரோலயே நெம் பித் தெறந்துருவாய்ங்களாமே!
யாரும் யாரையும் நம்ப முடிய மாட்டேங்குதுண்ணே. அண்டி ஒண்டி பந்தமா வாழணும்னு நெனைக்க மாட்டேங்கறாய்ங்க. விஞ் ஞானம் ஒலகத்த ஒலகத்த மட்டுமில்ல, மனுசப்பய மனசையுமில்ல சுருக்கிப் புடுச்சு. பயக செல்போன்லயே குடும்பம் நடத்திக்கிறாய்ங்கண்ணே. கல்யாணம், காச்சி, காரியம், கருமாதின்னாக்கூட விடுவிடுனு ஒரு எட்டு வந்துட்டு, அதே வேகத்துல ஓடறாய்ங்க. இந்த பைக்குக்கு சைடு ஸ்டாண்டு எவன் கண்டுபிடிச்சானோ, அத்தனை பேரும் மெயின் ஸ்டாண்டு போடக்கூட நேரமில்லாமத் திரியறாய்ங்க.
அப்பவெல்லாம் எங்கூர்ல ஒரு எழவு விழுந்தா, ஊரே திமுதிமுனு தெரண்டு நிப்பாய்ங்க. சுத்துப்பட்டு ஊருகளுக்குச் சேதி சொல்ல ஒரு குருப்பு கௌம்பி ஓடும். ஒரு பக்கம் நெருப்பக் கொளுத்தி வாட்டம் காட்டி ' ரண்டக்கு ரண்டக்கு'னு தப்படிக்க ஆரம்பிச்சிருவாய்ங்க வர்றவய்ங்களுக்கு காபித்தண்ணி வெச்சுத்தர, மாத்துத் துணி குடுக்கனு பக்கத்து வீடுக பரபரப்பாயிரும். செக்கானூரணி சின்னம்மா எல்லயில வர்றப்பவே இங்கனக்குள்ள தெரிஞ்சுபோகும். ' ஏ ராசா, என்னப் பெத்த ராசா போயிட்டியே'னு அது மார்ல அடிச்சிக்கிட்டு வந்துச்சுன்னா மாடு கன்னுக அத்தனையும் மெரண்டுபோகும். சமயத்துல அந்த சத்தத்துல செத்தவனே எந்திரிச்சி ஒக்காந்திருவான். மைக் செட்டு கட்டி ஒப்பாரி வைப்பாய்ங்க பாருங்க.... ஆத்தாடி அது பெருங்கூத்து!
' தாய்வழி அப்பத்தா ஒப்பாரி பாடும்' பாய்ங்க. 'சீனி சக்கரயே, மண்டக் கருப்பட்டியே.... ' னு முந்தானயில சிந்திக்கிட்டு ஒப்பாரி பாட ஆரம்பிச்சா, மொத்த பொம்பளையாளுகளும் அழுது தொம்சம் பண்ணிருவாளுக. இடையில அப்பப்ப காப்பித்தண்ணி குடுனு சொல்லாமச் சொல்லிப் பாடும் அது. அப்பப்ப சுதி எறங்கும். சரியா அந்த நேரம் பாத்து இன்னொரு பெரியாத்தா வந்து சேரும். அப்புறமென்ன, எம்.எஸ். சுப்புலச்சுமி, எல்.ஆர்.ஈசுவரி எல்லாரையும் மொத்தமா முழுங்கிப்புடுவாக எங்க பொம்பளயாளுக.
பாடய எடுக்குறப்போ பட்ட சரக்கப் போட்டுக்கிட்டு ஒரு கெடா மீச பங்காளி வந்து நிப்பாரு. ' பாவிப்பயகளா ஒதுக்கிப்புட்டீங்களேடா. பங்காளிக்கு கோடித் துணி போத்தறதுக்குக்கூட கூப்பிடலயேடா. விடமாட்டேண்டா...

தூக்க விடமாட்டேண்டா'னு வேட்டி அவுந்து வுழச் சலம்புவாரு பங்காளி. ஆளும் பேருமா அவரப் புடிச்சி இழுத்து பஞ்சாயத்துப் பேசி பாடயத் தூக்குவாய்ங்க. வேட்டு போட்டு, வழியெல்லாம் பூத்தூவி, ஒரு கூட்டமே மப்புல ஆடிக்கிட்டே வர, ஊரே ஊர்வலமாப் போயி செக சோதியா சுடுகாடு போயிச் சேந்தா, போயி சேந்தவன் ஆவி குளுந்து போகும்ணே. காரியம்லாம் முடிஞ்சு வந்து பாத்தா நம்ம பட்ட சரக்கு பங்காளி பப்பரப்பானு வைக்கப் போருல கெடப்பாரு. பாசக்கார பயகண்ணே!
பட்டணத்துல செத்தா பாவப்பட்ட சாவுண்ணே அது. கலர்துணியில பந்த போட்டு கொஞ்சநேரம் கண்ணாடி ஐஸு பொட்டியில வெச்சிருப்பாய்ங்க. சத்தம் போட்டு அழுதா அசிங்கம்னு சாதி சனங்ககூட மொனகிக்கிட்டே மொகம் பாக்கும்ங்க. பக்கத்து வூட்டுக்காரன் லேசா சன்னலத் தொறந்து பாத்துட்டு ' சட்டு புட்டுனு எடுக்காம என்ன பண்றாங்க'னு அலுத்துக்கிட்டு, சத்தம் கம்மியா வெச்சு, ' மெட்டி ஒலி ', ' கோலங்கள் ' பாக்க ஆரம்பிச்சிருவான். ஒரு கார்ல வெச்சி நாலஞ்சி பேரு சைலண்டா கொண்டுபோயி கரண்டு சுடுகாட்ல உட்டு ஒரு வாளி சாம்பல வாங்கிட்டு வந்துருவாக. அன்னிக்கு பாத்தேன்.... ஒரு வீட்டு வாசல்ல பாடியச் சுத்தி ஒக்காந்திருந்தானுங்க. திடீர்னு தெருவுக்குள்ள ஒரு தண்ணி லாரி வந்துச்சு. கூட்டத்துல பாதிப் பயக எந்திரிச்சு கொடத்தோட ஓடறாய்ங்க. மனுஷப்பய உசுருக்கு இங்க மரியாத அம்புட்டுதேன்!
அத வுடுங்கண்ணே. ஒரு கல்யாணம் காச்சினு நல்ல காரியத்துலயாவது ஒண்ணா மண்ணா ஒழுங்கா கூடிக் கொண்டாடறாய்ங்களா? கல்யாணத்தை முடிச்சோமா, ஒரு வாய் சோத்தைத் தின்னோமானு அவனவன் ஆபீசுக்குப் போயிட்டேயிருக்காய்ங்க. கல்யாணத்த எதாவது கோவில்ல பண்ணிப்புட்டு, வந்ததுகளுக்கு எதாவது ஓட்டல்ல டோக்கன் போட்டுச் சாப்புட விட்டுர்றாய்ங்க. என்னா கொடும சாமீ இது!
பெரிய வீட்டுக் கல்யாணம்னா, பஃபேனு சொல்லிப்புட்டு, அவிங்களே அள்ளிப்போட்டு திங்கறாய்ங்க. இப்பிடியே போனா கம்பியூட்டருங்கறாய்ங்களே, அதுலயே ' படையப்பா ' படம் காட்டற மாதிரி கல்யாணத்தையும் காட்டிருவாய்ங்க. அவனவன் வீட்லயிருந்துக்கிட்டே வேடிக்கை பாக்க வேண்டியதுதேன்.
கல்யாணமோ, கருமாதியோ கறிச்சோறு விருந்துனு ஒண்ணு வைப்பாக எங்கூர்ல. கையில புடிக்க முடியாது. ஆளாளுக்கு நாட்டுச் சரக்க போட்டுக்கிட்டு கொஞ் சிக் கொலவி ஊரை அளப்பாய்ங்க. அவிங்க சாப்புடுற அழகப் பாத்தாலே நமக்கு பசியாறிப்போகும்ணே. நல்லி எலும்ப நறுநறுனு கடிச்சி அப்பிடியே உறிவாய்ங்க. குண்டாஞ் சோத்தக் கொட்டி குழி பறிச்சி கொழம்பூத்தி வெளுப்பாய்ங்க. சரக்கு, சாப்பாடோட குடும்பத் தகராறு, வெட்டுக் குத்து வில்லங்கமுனு இருந்த அத்தனையும் பேசி முடிச்சி கழுவித் தொடச்சிட்டு ராசியாகிருவாய்ங்க.
இப்ப காலம் மாறிப்போச்சு. வேற என்னத்தச் சொல்ல?
காலம் மாறிப் போச்சுன்னதும்தான் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது.
காலமும் வயசும் மனுசன எப்பிடியெல் லாம் மாத்திப்புடுது. எளவட்டமா இருந்த காலத்துல பாத்து ரசிச்சிக் கெனா கண்ட, ஒரு அக்காவ இப்ப கண்கொண்டு பாக்க முடியல. போன வாரம்.... நான் அந்தக் காலத்துல அம்புட்டு ரசிச்ச நடிகை ஒருத்தங்களப் பாத்தேன். கருப்பு - வெள்ள படத்துலயே கலர் தக்காளி மாதிரி இருந்த அக்கா. இப்பப் பாத்தா ரத்தினம் கக்குன பாம்பு கெணக்கா சுருங்கிப் போயி நிக்கறாக. சிரிப்புல மட்டுந்தேன் அந்த அழகு இருந்த அடையாளம் தெரியுது. மத்தபடி தாடை கூட நிக்காம ஆடுது. நெத்தியில கைய வெச்சி ஆரு? ' னு கேட்டாக. ஆத்தி... என்னா ஆட்டம் போட்ட அக்கா தெரியுமா?
காலந்தேன் எல்லாத்தையும் எப்படிப் பொரட்டி போட்டுட்டுப் போயிட்டேயிருக்கு. அப்பத்தாங்க நெனச்சேன்... அழகு, பணம், பதவி, பவுசெல்லாம் அழிஞ்சி போயிரும். மனுஷன் மட்டுந்தேன் நிக்கும்.
குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு சொல்வாக. அது ரெண்டுமே மனசுதேன்.
நெஞ்சுல அன்பு இருந்தா நீ குழந்தை. நாக்குல சுத்தம் இருந்தா நீ சாமி!
- வருவேன்
(19.12.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)