அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 8

வடிவேலு
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவேலு

வெதவெதமா, தினுசுதினுசா ஒவ்வொருத்தனும் ஒரு டைப்பால்ல திரியறாய்ங்க.

வ்வொரு மனுஷனும் ஒரு பள்ளிக்கூடம்! அதுவும் மண்ணு மக்ககிட்ட படிச்ச படிப்புலதேன் என் வண்டியே ஓடுது. இந்த காமெடி, கூத்து, ரவுசெல்லாம் அங்க பாத்ததுலேயிருந்து எடுத்துவிடற சரக்குதேன்!

வெதவெதமா, தினுசுதினுசா ஒவ்வொருத்தனும் ஒரு டைப்பால்ல திரியறாய்ங்க. ' டர்ரு புர்ரு'னு வண்டிக பறந்துக்கிருக்கிற மவுண்ட் ரோட்ல காலையில பத்து மணிக்கு ஓரமா படுத்து ஒய்யாரமாத் தூங்கறாண்ணே ஓர்த்தன். ' ஏண்ணே, இம்புட்டுச் சத்தத்துக்கு நடுவுல எதுக்குண்ணே இங்கனக்குள்ள தூங்குறே? ' னு கேட்டா, ' அதுவா, நெலநடுக்கம் வந்துச்சுன்னா, இப்பிடித் தெறந்த வெளியில படுத்தா தப்பிச்சிரலாம்னு சொன்னாங்க... அதேன்ங்கறான் அந்த விஞ்ஞானி.

வடிவேலு
வடிவேலு

அட! இவரு பரவாயில்ல...அன்னிக்கு ஒர்த்தன் நடுரோட்ல மயங்கிக் கெடந்தாண்ணே... கார்லயிருந்து பதறிப் போயி எறங்கி, ஆளும்பேருமா சோடா வாங்கி அவன் மொகரையில அடிச்சோம். படீர்னு எந்திரிச்சி என் சட்டயக் கோத்துப் புடிச்சுப்புட்டான்... ' நானே கெரகம் வுட்டு கெரகம் போயிக்கிருக்கேன். ஏண்டா பாதி வழியில் எழுப்புன? ' னு புடிச்சு உலுக்கறான். ' கெரகம் வுட்டு கெரகம் போறியா... என்னடா சொல்ற? ' னு கேட்டா, ' மூக்குத்திய அடகு வெச்சி, மொத்தமா மூணு குவாட்டரக் குடிச்சிப்பிட்டு, வேற கெரகத்துக்குப் போய்க்கிருக்கேன். ஏண்டா என்ன எழுப்புன? ' னு பாஞ்சி மூக்கக் கடிக்க வந்துட்டான். அமெரிக்காக்காரய்ங்க, வேத்துக் கெரகத்தப் பத்தி ஆராச்சி பண்ணவே பல கோடிங்கள கொட்டி பாய பொறண்டிக்கிட்டுக் கெடக்காய்ங்க. நம்மாளு மூணு குவாட்டர்ல அசால்ட்டா கெரகம் விட்டு கெரகம் ட்ரிப் அடிக்கறானேய்யா!

கால் டவுசர தூக்கிப் பிடிச்சிட்டு, மூக்கு ஒழுகிட்டு, நா சில்லுண்டியா அலஞ்ச காலத்துல, எங்கூருக்கு ஒரு பஞ்சுமுட்டாய்க்காரன் வருவான். அப்ப அவந்தேன் எங்க ஹீரோ. செங்காமட்ட கலர்ல ஒரு முக்கா பேண்ட்டு, ரோஸு, பச்சனு மாடு முட்ற கலர்ல சட்ட. பாக்கவே பபூனு கெணக்காதேன் இருப்பான். ' டொய்ங் டொய்ங்னு அவன் மணிச்சத்தம் கேட்டாலே நாங்க தெறிச்சி ஓடி வருவோம். எங்களப் பாத்தவாக்குல அவன் ஒரு பாட்டுப் பாடுவான் பாருங்கண்ணே... ' அழுவாயோ பிள்ளாய் அழுவாயோ... நீ பஞ்சுமுட்டாய் வேண்டுமென்றே அழுவாயோ'னு பாடுவான்ல, நாங்கள்லாம் அதக் கேட்டு கிக்கிக்கிக்கிகீனு சிரிப்போம். அவன் அப்பிடியே நைஸா, சைஸா கிட்ட வந்து நறுக்குனு கிள்ளிவுட்ருவான். அடுத்து அழுவாயோ'னு ஆரம்பிச்சா, நாங்க வீல்னு அழுது உருண்டு பொரளுவோம். பஞ்சுமுட்டாய் கேட்டுத்தேன் அழுறோம்னு ஆத்தா அப்பய்ங்க ஓடி வந்து, அவிங்க பங்குக்கு நம்ம முதுவுல ரெண்டு சேத்து வைப்பாய்ங்க. நாங்க சவுண்டு கூட்டி அழுது தெருவே போர்க்களமாகிப் போகும்யா. கடேசியா பயகள சமாதானப்படுத்த ஆளுக்குப் பவ்வத்துக் காசுக்கு பஞ்சு முட்டாய வாங்கித் தருவாக. இன்னிப் பொழுது விடிஞ்சுது, வந்த சோலி முடிஞ்சுது'னு பஞ்சு முட்டாய் பபூனு கெக்கேனு இளிச்சுட்டே கௌம்பிருவான். ஒரு நா நம்ம பபூனு போடறநாடகக் கூத்த தெருக்காரய்ங்க கண்டுபிடிச் சிட்டாய்ங்க. புள்ளைகள அழவுட்டு வெத்தல பீடிக்கு வெச்சிருக்கற சில்லறையையும் பிச்சி பீராய்ஞ்சிட்டு கௌம்பிர்றானேனு கொல வெறி கொண்டுட்டாய்ங்க.

மறு நா ' அழுவாயோ'னு ராகம் போட்டுக்கிட்டு பஞ்சுமுட்டாய் பாடகரு வந்தாருல்ல. அப்பிடியே பொறங்கையால அவன் பொடனியில ரெண்டு போட்டு, கோத்துப் புடிச்சி கோயில் திண்டுல ஏத்திட்டாய்ங்க. ' அது என்னாடா பாட்டு அழுவாயோனு... கிள்ளிவுட்டா யாவாரம் பாக்குறனு ' மாப்ளைக்கு மண்டகப்படிய ஆரம்பிச்சிட்டாய்ங்க. அப்ப அலறியடிச்சு ஓடுனவன், அப்பிடியே சிலோனுக்கு கப்பலேறியிருப்பான்னு நெனைக்கிறேன். ஆனா, நெனவு தெரிஞ்சு நான் பாத்த மொத வித்தியாசமான ஆளு அவந்தேன். ஒரு படத்துல அவன வெச்சி ஒரு காரெக்டர் பண்ணலாம்னு இருக்கேண்ணே.

'வின்னர்' படத்துல வர்ற கைப்புள்ள காரெக்டர் இருக்குல்ல. ஊருக்கு ஊர் அப்பிடி ஒருத்தன் இருப்பான். எங்க செட்லயும் ஒரு கைப்புள்ள இருந்தான். வாயிலயே வாழத் தோப்புக்குத் தீ வெப்பான். ஆனா, நெசத்துல நெருப்புப் பொட்டியக் கொளுத்தக்கூட கை ஒதறும் பயபுள்ளைக்கு.

' நாங்கள்லாம் வண்டி கட்டிக்கிட்டுப் போயி அடி வாங்கிட்டு வருவோம்ல'ங்கறதுதேன் அவன் பொழப்பே. சும்மா போற பஸ்ஸ மறிச்சி ' என்னா நீ பாட்டுக்கு போற... கொளுத்திப்புடுவோம்டா'னு காட்டுப்பய கெணக்கா கத்துவான். ' ஆளு உள்ளூர் சண்டியரு போலயிருக்கு கண்டக்டரு பயந்துபோயி, ' கோச்சுக்காதண்ணே, ஏறிக்க'ம்பான். ' அதான பாத்தேன். சும்மா நிறுத்தறியானு டெஸ்ட் பண்ணேன். போ போ.... போலாம் ரைட்ஸ்'னு பஸ்ல சைடுல தடதடனு தட்டி விசிலடிப்பான். இப்பிடி நாலு பயகள மெரட்டிக்கிட்டே ஒரு உதாரா அலையறதுல அவனுக்கு ஒரு சொகம்.

ஒரு தடவ பைக்ல போய்க்கிருந்த ஒரு ஆளுகிட்ட லிஃப்டு கேட்டிருக்கான். பாட்டுக்கு நிக்காமப் போயிருக்காரு. நம்மாளு ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லிக் கத்த, படக்குடை பைக்காரன் நின்னுட் டான். இவன் போயி ' எலேய் நாங்கள்லாம் யாரு தெரியும்ல. பல கொலைகளப் பண்ணிட்டு சந்தடி இல்லாமத் திரிய றோம். சாராயம், கஞ்சா, பஞ்சாயத்துனு ஊருக்குள்ள அம்புட்டும் எங்க கைக்குள்ள தேன். கையக் காட்டுனா, மவனே நிக்காமப் போறியா? அம்புட்டு ஏத்தமா ஒனக்கு?

வடிவேலு
வடிவேலு

சங்கறுத்துருவோம்டி'னு சலம்ப, பைக்காரரு பயந்தமாதிரி இவன ஏத்திக்கிட்டு நேரா போன எடம் போலீஸ் ஸ்டேசனு. அவருதேன் புதுசா வந்திருக்கற சப் - இன்ஸ்பெக்டருனு மச்சானுக்குத் தெரியல. உள்ளவுட்டு உரிச்சிட்டாய்ங்க. ஒடம்பெல்லாம் ஊமக்காயமா வந்தான். ' என்னடா மேலெல்லாம் வீங்கிக்கெடக்கு? ' னு கேட்டா, ' பைக்ல ஸ்லிப்பாயிருச்சு'ங் கறான். விஷயம் ஊரு பூரா பரவி, அன்னிலேயிருந்து அவனுக்கு ' லிஃப்டு பாண்டி'னுதேன் பேரு.

அதுலயிருந்து போலீஸுகிட்ட மட்டும் வெச்சுக்கமாட்டான் பாண்டி. அழகர் கோயிலு, சோழவந்தான், வண்டியூருனு சுத்துப்பட்டுல திருவிழானு ஒண்ணு நடந்தா இவன் கூத்தே தனி. சரக்க ஏத்திக்கிட்டு,, ' எம்.எல்.ஏ. மச்சாண்டா நானு! ' னு எல்லாக் கடக்காரய்ங்களயும் மெரட்டிட்டுத் திரிவான்.ராட்டினக்காரங் கிட்ட ' லைசென்ஸு வெச்சிருக்கியா? ' னு கேட்டு அலப்பற பண்ணுவான். ' டேய்! வந்து பார்றா! ' னு பூராப்பேத்தையும் வெறுப்பேத்தி, திருவிழா முடியற துக்குள்ள ஒடம்பே பஞ்சர் ஆகித்தேன் நிப்பான்.

ஒரு தடவ செம மப்புல சொரண்டல் லாட்டரியில போயி கிழிச்சித் தள்ளி இருக்கான். அம்பது, நூறுனு ஆரம்பத்துல விழுந்திருக்கு. அப்பறம் ஒண்ணும் விழல... ஆனாலும் ஆயிரம் ரூவாய்க்கு மேல கிழிச்சிட்டான். கட்டத்துல கடக்காரன் கடுப்பாயி, ' கணக்கு ஆயிரத்துச் சொச்சமாயிப்போச்சு. அத எடுத்து வெச்சிட்டு அப்பறம் கிழி'னுருக்கான். இவன் முழிக்கவும், புடிச்சு சோதன போட்டா நாதாரிகிட்ட ஒத்தப் பைசா இல்ல. கேட்டா ' கிழிச்சி கிழிச்சி விழற காசக் குடுத்துருவோம்ல'னுருக்கான். வெச்சி வெளுவெளுனு வெளுத் திருக்காய்ங்க. அதுக்கப்புறம் லிஃப்டு பாண்டி, சொரண்டல்யாயிட்டான்.

ஆள இப்பப் பாக்கணுமே... மூணு புள்ளைகளப் பெத்து, நெத்தியில திரு நீறு மணக்க சாதுவா அலையறாண்ணே அந்த பாண்டி!

நாங்க மட்டும் என்னா? இப்ப சினிமாவுல வாங்குற அடியெல்லாம் அப்பவே வாங்கியாச்சுண்ணே. பூன மீச எளவட்டமா இருந்தப்ப எந்நேரமும் ஒரு வாடக சைக்கிள்லதேன் திரிவேன். அந்த ஓட்ட சைக்கிளுதேன் அப்ப நமக்கு ஏரோபிளேனு!

ஒரு தடவ கைய வுட்டுக்கிட்டு சைக்கிள்ல சர்க்கஸ் காட்டிகிட்டே வந்தம்ல... முன்னாடி போயிக்கிருந்த ஒரு கீரக்காரி மேல மோதிட்டேன். கூடையோட குப்புற விழுந்திருச்சு சின்னம்மா. அம்புட்டுதேன். மகமாயி கெணக்கா வெகுண்டு எந்திரிச்சி, விழுந்தவாக்குலயே என்னயப் போட்டு மொத்தி எடுத்துருச்சு. ' யம்மே'னு நான் கத்துனா பாஞ்சு வாய பொத்துது. ' எடுபட்ட பயலே, இன்னிக்குப் பூரா என்னிய சைக்கிள்ல வெச்சி யாவாரத்துக்கு கொண்டுபோற. இல்லன்னா ஒன் முழியத் தோண்டி பல்லாங்குழி ஆடிப்புடு வேன் அப்பிடியே சைக்கிள் பின்னாடி உக்காந்துருச்சு. அத வெச்சிகிட்டு ' கீர கீர'னு கத்திக் கிட்டே ஊர் ஊரா சுத்தறேண்ணே. வாடக சைக்கிளு நேரம் வேற முடிஞ்சி போச்சு. கையில காசும் இல்ல. ' யாத்தா விடுத்தா'னா, ஏங் கொமட்டுலயே குத்துது. ஆத்தி... அன்னிக்கு அந்தி சாயற வரைக்கும் அதோட சுத்தித் திரிஞ்சேண்ணே. சாயங்காலமா வந்தா சைக்கிளு கடக்காரன் ' வா பங்காளி'னு புடிச்சி, ' காசா இல்லங்கற'னு ஒடம்பெல்லாம் உறுமியடிச்சிவுட்டான். ' அங்கிட்டும் இங்கிட்டுமா அடிக்கிறாய்ங்களே, நான் என்னடா பண்ணேன்? ' னு வெக்ஸாகிப்போயி, கோயில் திண்டுல துண்ட ஒதறிப் படுத்துட்டேன்.

ரவைக்கு எங்கப்பா வந்து ' வாடா ராசா'னு வீட்டுக்கு இழுத்துட்டுப் போனாரு. வாசல்லயே நின்ருந்துச்சு எங்கம்மா. ' நேரம் என்னாவுது? கோயில்லயா படுத்துருக்க'னு அது பங்குக்கு ரெண்டு அடியப் போட்டுச்சு. அப்படி ஒரே நாள்ல மூணு ஷோ அடி வாங்கி வளந்தவய்ங்கண்ணே நாங்க!

அப்பிடி இப்பிடினு நாம பாத்தது பட்டதுகளத்தான் படத்துல நடிச்சி இன்னிக்கு காரு பங்களானு காலத்த ஓட்டிட்டிருக்கோம்.

ஒவ்வொரு மனுஷனும் ஒரு பள்ளிக்கூடந்தேன். கத்துக்கறத வெச்சி, கெட்டுக் குட்டிச்சுவராப் போறவனும் இருக்கான். மச்சுவீடு கட்டி வாழறவனும் இருக்கான். நாம ரெண்டாவது வகையா இருக்கணும்ணே!

- வருவேன்

(26.12.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)