அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காமெடி வடிவேலு - 9

Vadivelu
பிரீமியம் ஸ்டோரி
News
Vadivelu

எம்.ஜி.ஆர்னா ஏனோ மனசுல ஒரு வீரம் பொங்கும்...

ஞ்சாப்போட படிப்புக்கு கும்புடு போட்ட மக்குப்பய நானு!

அதென்னமோ இந்த பாடப் பொஸ்தகத்தப் பாத்தாலே பயம் வந்துரும். திருக்கொறள மனப்பாடம் பண்ணச் சொல்லி போட்டு மிதிப்பாய்ங்க. ஒண்ணாம் வாய்ப்பாட்டத் தாண்டி ஒரு மண்ணுந் தெரியாது. ' முன்னாங்கு என்னாடா? ' னு வாத்திச்சி கேட்டா, டபக்குனு டவுசர் பாக்கெட்டுல கைய வுட்டு வெரசா எண்ணி ' பதிமூணு... இல்ல பதினாலு டீச்சர்'னு சும்மா ஜஸ்ட்ல எஸ்கேப்பாகிற கேங்கு. ஆத்தி.... தமிழு, கணக்குக்கே இப்படின்னா இங்கிலீசு?

கிறுகிறுனு ஆகிரும் எனக்கு. அதேன் சொதந்தரம் வாங்கியாச்சுல்ல, அப்புறம் என்னாத்துக்கு வெள்ளக்காரப் பாச? காந்தித் தாத்தா கோச்சுக் குவார்ல'னு இங்கிலீசுப் பொஸ்தகத்த கண்கொண்டே பாக்கறதில்ல. வாத்திமாருங்க ' வாட் இஸ் யுவர் நேம்? ' னு கேப்பாங்க. கண்ணுல கரகரனு தண்ணி ஊத்த கல்லுளிமங்கனாட்டம் அப்பிடியே நிப்பேன். ' என்னா அழுத்தம்டா ஒனக்கு? ' னு ரெண்டு சேத்து போடுவாய்ங்க. ' உசுரே போனாலும் அசலான் மொழியச் சொல்ல மாட்டாம்யா இந்த வடிவேலு'னு, சும்மா கொடி காத்த கொமரங் கெணக்கா கொள்கச் சிங்கமா நின்னவய்ங்கண்ணே நாங்க!

Vadivelu
Vadivelu

படிப்புலதேன் இப்பிடி. கிட்டி, பம்பரம், குண்டுனு அம்பூட்டு வெளையாட்டுலயும் கோப்ப நமக்குத்தேன். கிட்டில கீந்துனோம்னா, ஊரையே அளக்கணும். சும்மாத் தூக்கிவிட்டுத் துள்ளத்துடிக்க அடிச்சோம்னா, செக்கானூரணிச் செவ போய் விழும். பம்பரம்லாம் ஆட ஆரம்பிச்சோம்னா, ஆக்கர்ல ஒண்ணு... அவன் பம்பரம் பொளக்கணும். இல்லேன்னா... மல்லுக்கட்டி பயபுள்ள மண்ட தொறக்கணும். ரத்தம் பாக்காம ஒரு வெளாட்டும் முடிஞ்சதில்ல. மாங்கா அடிக்கறது, புளியங்கொட்ட பொறுக்கறதுனு கெளம்பிட்டோம்னா ஊரு ரெண்டு படும். சமயத்துல மதுரயில சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படற அளவுக்கெல்லாம் போயிரும். நாங்கெல்லாம் கிரைம் ரிக்கார்டு நோட்டையே தீர்த்தவய்ங்கண்ணே அம்புட்டு அக்கிரமம் அப்பயே பண்ணியாச்சு!

ஓணான் எனத்துக்கே நாமதானே எமதர்ம ராசா! ' சாமி தாகத்துக்குத் தண்ணி கேட்டுச்சு. அப்ப அணிலு எளனி குடுத்துச்சு. இந்த ஓணான் ஒண்ணுக்கு இருந்து குடுத்துருச்சுடா. அதனால அதக் கொல்றது பாவமில்லடா'னு இவிங்களா ஒரு கதையச் சொல்லி, உசுப்பேத்தி விடுவாய்ங்க.

நரம்புல சுருக்கு செஞ்சு, வெரட்டி ஓடுவோம். ஆத்தாங்கரைப் பக்கம் புல்லு, பொதருனு ஒதுங்குனா நிச்சயம் ஓணான் சிக்கும். அப்பிடியே ஓரமாப் போற ஓணான் மேல சுருக்கை வீசி விசுக்குனு இழுத்துருவோம். சிக்கிருச்சுன்னா, செம ஆட்டந்தேன். அது வால்ல நூலக் கட்டி புடிச்சுக்கிட்டு, அவருக்கு லேசா மூக்குப்பொடிய தூவிவிட்ருவோம். அப்பிடியே கெறக்கமாயி ' டண்டணக்கு டணக்கு டண்டணக்கு'னு அவுக ஆட ஆரம்பிப்பாக. கொஞ்சநேரம் குத்து டான்ஸ போட்டுட்டு, டாடா பாய் பாய்னு போயிச் சேர்ற வர விடமாட்டோம். அதுகள்லாம் பழிவாங்கணும்னு கௌம்பியிருந்துச்சுகன்னா நாங்கள்லாம் கூண்டோட கைலாசமாயிருப்போம்ணே!

வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள விட்ட கதையானு சொல்வாக, அப்பிடி வாத்தியாருக்கே பாடம் எடுத்த பயக நாங்க! பளபளனு பாலீஷ் போட்ட சைக்கிள்ல ஸ்கூலுக்கு வருவாரு. அவரு அங்கிட்டு நகந்ததும், டயர பஞ்சராக்கிர்றது, அவரு ஒக்கார்ற சேர்ல சைஸா அடுப்புக்கரியத் தேய்ச்சி வெச்சிர்றது, அவுகளுக்கு பட்டப் பேர் வெச்சு, அவுக வார போற வழியில கத்திட்டு ஓடிப் போயிர்றதுனு சேட்டை பண்ண ஆரம்பிச்சா விட்ருவாகளா. ஒவ்வொரு பரீச்ச பேப்பர் குடுக்கிறப்பயும் இருக்கிற கடுப்பெல்லாம் காமிச்சு, டங்குவாரைக் கழட்டி விட்டுத்தேன் வீட்டுக்கு அனுப்புவாக. ஆத்தி... சன்ன அடியா வாங்கியிருக்கோம்? பெரம்பெடுத்தா ஒண்ணு... அது ஒடியணும். இல்லேன்னா, நமக்குக் கிழியணும். அதான் கணக்கு! ஒரு வாரத்துக்காவது ஒழுங்கா ஒக்கார முடியாது. அப்பிடி டிக்கி பழுத்துரும்!

ஒரு நா வாத்தியாரு பாடம் எடுத்துக்கிருக்கும்போது இங்கிலீஷ்ல மொத்தம் எத்தன எழுத்துரா? ' னு கேட்டாரு. எவனுக்குத் தெரியும். ஒருத்தன் இருபத்தொண்ணுனான். இன்னொருத்தன் இருபத்து நாலு'ன்னான். திடீர்னு என்னமோ உற்சாகமாகி அத்தன பேரும் ஆளுக்கு ஒரு நம்பரச் சொல்ல ஆரம்பிச்சிட்டாய்ங்க. நான் திடீர்னு ' நாலு சார்'னு கத்துனேன். ' எப்பிடிரா? ' னாரு. ' அதேன். இங்கு, லீ, இஸ்ஸு, மொத்தம் நாலு'ன்னேன். எல்லாரும் சிரிச்சிட்டாய்ங்க. வாத்தியாரு என்ன அமைதியாப் பாத்துட்டு, பக்கத்துக் கிளாஸ்ல போய் குச்சி வாங்கிட்டு வரச் சொன்னாரு. ' சரி, நாமதான் சரியாச் சொல்லிட்டமே, மத்தவங்கள அடிப்பார் போல'னு ஸ்கூல்லயே நல்ல பெரம்பு வெச்சிருக்கிற வாத்தியார் யாருனு பாத்து, ஓசி பெரம்பு வாங்கிட்டு வந்து, வாத்தியார்ட்ட ' சார்! இந்தாங்க சார்'னு பெருமையா நின்னேன். அவரு என்னைய ஒதுங்கச் சொல்லிட்டு, ஒவ்வொருத்தனையா கூப்பிட்டு பூச போட ஆரம்பிச்சார். ' அய்யோ... அம்மா.... அய்யய்யோ'னு ஒருத்தன் ஒருத்தனும் வலி தாங்காம துடிக்கிறதப் பாத்து எனக்குன்னா சிரிப்பு.

Vadivelu
Vadivelu

கிக்கிக்கிக்கீனு சிரிப்போட, என் டவுசர் பையிலயிருந்து பொரியரிசி எடுத்து மொக்கு மொக்குனு மொக்க ஆரம்பிச்சிட்டேன். அதையும் அந்த வாத்தி பாத்துக்கிருந்துருக்காரு. எல்லா மண்டகப்படியும் முடிஞ்சதும் என்னக் கூப்பிட்டாரு. ' சரி, ஓசி வாங்குன பெரம்ப திரும்பக் குடுத்துட்டு வரச் சொல்றதுக்காகக் கூப்புடுறார்'னு நெனச்சு, அவர் பக்கம் போனேன்.

இந்த கோவை சரளால்லாம் சும்மா. என் தலைமயிரப் பிடிச்சு சும்மா விறுவிறுனு சுத்தியடிச்சு, அடி பின்ன ஆரம்பிச்சார் பாருங்க. பயந்து ஓட ஆரம்பிச்சேன். வெரட்டி வெரட்டி அடிச்சாரு. என்னவோ, ஏதோனு பக்கத்து கிளாஸ் வாத்தி வந்து வெசாரிக்க, ' இவனுக்குப் படிப்பு ஏறலன்னாக்கூட விட்ருப்பேன் சார். ஆனா, உடம்பெல்லாம் கொழுப்பேறிக் கெடக்கு. இங்கிலீஸ்ல மொத்தம் நாலெழுத்தாம் சார். அதுக்கு பய புள்ள வௌக்கம் வேறச் சொல்றான்'னாரு. அம்புட்டுதேன்..... போலீஸ் ஸ்டேஷன்ல சிக்குன சந்தேகக் கேஸு ஆள போற வர்ற போலீஸெல்லாம் போட்டு வெளுக்கற மாதிரி, என்ன ஏகப்பட்ட வாத்திக கூடிக் கும்மியடிச்சுப் பொங்க வெச்சிட்டாக!

' போங்கடா... நீங்களும் உங்க படிப் பும்'னு அன்னிக்கு ஓடியாந்தவந்தேன். அத்தோட அந்த தெசையில தலாணி வெச்சுக்கூட இன்னிக்கு வரைக்கும் படுக்கறதில்ல. படிப்பும் ஏறல. பொறுப்பும் சேரல. கோயில் மாடாட்டம் கோக்குமாக்குனு ஊர சுத்த ஆரம்பிச்சேன். ' கொலக் கொழுந்து ஒண்ணு கோடாரிக்காம்பா மாறுதேடா'னு வீடே கலவரமாயிருச்சு. அப்பிடி தற்குறியா திரிஞ்ச இந்த வேலுப்பயல மனுஷனா மாத்துனது எம்.ஜி.ஆரு பாட்டுங்கதாண்ணே!

நமக்கு வாத்தியாருன்னா அது தலைவருதேன்! ' உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராட லாம்'னு அவரு பாடறத இப்பக் கேட்டாலும் கை கால் முடி அம்புட்டும் சிலுத்துக்கும் எனக்கு.

' புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது'னு சவுண்டு கொடுத்துப் பாடிக்கிட்டே வாடக சைக்கிள்ல ரெண்டு கையையும் விட்டுட்டு விர்ர்ர்ருனு பறப்பேன். எங்கியாவது கொழா ரேடியோல தலைவர் பாட்டு போட்டா அங்கன பட்றயப் போட்ருவேன்.

நானெல்லாம் தலைவர் படம் பாக்க காசு தேத்தறதுக்குன்னே வேலைக்கு போனவம்யா. பகலெல்லாம் கண்ணாடி வெட்டற வேல பாத்துப்புட்டு, பொடிசாய சைக்கிள எடுத்துக்கிட்டு குரூப்பா கொட்டாயப் பாக்க கெளம்பிருவோம். வாத்தியார் படமெல்லாம் ரிலீஸான மொத நாளு மொத ஷோவே பாக்கலன்னா சாமிக் குத்தமாயிரும்னு வெறியெடுத்து திரிஞ்சவய்ங்க நாங்க. கூட்டத்துல சட்ட கிழியும். போர்க்களத்துல விழுப்புண்ணு மாதிரி, கிழிஞ்ச சட்டைகள வெச்சே படம் பேர் சொல்ற ஆளு நானு. அப்பிடி ஒரு பக்தி வாத்தியாரு மேல!

படம் பாக்கறது, பாட்டு கேக்கறதோட விடலையே தலைவர் கிறுக்கு! வெள்ள பேண்ட்டு, கலர் சட்ட போட்டு இன் பண்ணி, கண்மையால் ஒல்லி மீச வரஞ்சி, கூலிங்கிளாஸ் போட்டு, கோயில் திருவிழாவுல மேடையேறி ' என்னைத் தெரியுமா? நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் நல்ல ரசிகன் என்னைத் தெரியுமா? ' னு தலைவர் கெணக்கா நா ஆட, தெருவே பீதியாகிடுச்சு. மைக்செட்காரன் அடுத்த பாட்டும் போட்டான். ' நல்ல ' பேரை வாங்க வேண்டும் பிள்ளை களே'னு அங்கனயிருந்த பிள்ளகள வாத்தியார் ஸ்டைல்ல தூக்கியாட, அதுக கதறி அழ, சத்தம் போட்டு எறக்கி விட்டுட்டாய்ங்க. ' புலியப் பாத்து ஒரு எலி சூடு போட்டுக்கலாமா? ' னு திட்டிக் குமிச்சிட்டாய்ங்க. ஒரு சூரியன், ஒரு நெலா, ஒரு எம்.ஜி.ஆருதேன்னு அன்னியோட அந்த யாவாரத்த மூட்டகட்டி வெச்சுட்டேண்ணே.

மொத மொத தலைவர நேர்ல பாத்தத மறக்க முடியாது. வாத்தியாரு மதுரைக்கு வாராருனு தெரிஞ்சவுடனே மொத நாளெல்லாம் ஒறக்கமேயில்ல. யானைக்கல்லுல இருக்க அண்ணா செலைக்கு மால போட வந்தாரு. வெள்ள சட்ட மல்லு வேட்டியக் கட்டிக்கிட்டு ஓடினா, பாலத்தை அடச்சி பேக்கூட்டம் நிக்குது. ' தள்றா தள்றா'னு நெட்டிக்கிட்டுப் போயி, அங்கனயிருந்த மரத்துல ஏறி அப்பிடியே வௌவாலாட்டம் தொங் கறேண்ணே. தலைவர் வந்துட்டாரு. ' ஆத்தீ... தகதகனு தங்கச் செல ஒண்ணு தரையில நடந்து வருதேய்யா'னு புல்லரிச்சி போச்சு. மால போட்டுட்டு அவரு கீழ எறங்குனாருல்ல. நான் அப்பிடியே தாவிக் குதிச்சிப் பூந்து பொறப்பட்டுப் போயி, அத்தன கூட்டத்துலேயும் அவரு தோள்பட்டை யைத் தொட்டுப்பிட்டேன். விசுக்குனு திரும்பினவரு, பயந்த மொகத்தோட இருந்த என்னப் பாத்ததும் ஒரு சிரிப்பு சிரிச்சுட்டுப் போயிட்டாரு. அத ஒண்ணச் சொல்லி ரெண்டு வருசம் ஓட்டினேன் நானு!

'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை படப் பாட்டுல ஒரு வரி வரும்ணே.... 'கோயில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே. உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே'னு. அதுதாண்ணே என்னைப் போட்டு பொரட்டுனது.

எம்.ஜி.ஆர்னா ஏனோ மனசுல ஒரு வீரம் பொங்கும்ணே. அதேன் அவரு வாத்தியாரு!

- வருவேன்

(02.01.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)