
தொழில்நுட்பரீதியாகப் படம் நல்ல அனுபவத்தைத் தந்தாலும் அதைத் தாண்டி கதையில் எந்தப் புதுமையும் இல்லை.
நாடே லாக்டௌனில் இருக்க, வீட்டுக்குள் பேய் வந்தால் என்னவாகும் என்பதுதான் இந்த ‘கனெக்ட்.'
கொரோனாவால் லாக்டௌன் அறிவிக்கப்பட, நயன்தாராவின் குடும்பம் பல இன்னல்களைச் சந்திக்கிறது. ஒரு கட்டத்தில், தந்தையை இழந்து வாடும் நயன்தாராவின் மகள் எடுக்கும் ஒரு விபரீத முயற்சியால் வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக வருகிறது பேய். வெளியுலக உதவியைப் பெற முடியா சூழலில், நயன்தாரா தன் மகளை எப்படிக் காப்பாற்றினார் என்பதே கதை.

மீண்டும் சிங்கிள் மதராக நயன்தாரா. அவரது பாத்திரத்திலும் சரி, நடிப்பிலும் சரி புதிதாகக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை. சிறப்புத் தோற்றத்தில் வரும் வினய் ராய், முன்களப் பணியாளர்களின் வலியைப் பதிவு செய்கிறார். தீவிர மத நம்பிக்கையுள்ள கிறிஸ்தவராக, பொறுப்புள்ள தந்தையாக/தாத்தாவாக சத்யராஜ் ஈர்க்கிறார். முக்கியமான பாதிரியார் வேடத்துக்கு பாலிவுட் அனுபம் கேரை இறக்குமதி செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் தாண்டி ஈர்ப்பது நயன்தாராவின் மகளாக வரும் ஹான்யா நஃபீஸ். ஒரு கட்டத்தில் அவரின் பாத்திரம் வேறொரு பரிமாணத்துக்குச் செல்லும்போது அதன் தன்மை உணர்ந்து நடித்து மிரட்டியிருக்கிறார். மனநல ஆலோசகரிடம் மலையாளத்தில் உரையாடுவது, திடுக்கிடல் காட்சிகளில் மிரளச் செய்வது என ‘கனெக்ட்'டுக்கான மொத்த பவர் சப்ளையும் அவர்தான்.
99 நிமிடங்கள் ஓடும் படத்தில் எனது பணி பயமுறுத்துவது மட்டுமே என்பதாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் அஸ்வின் சரவணன். லாக்டௌன் என்பதால் அனைத்துப் பாத்திரங்களும் வீடியோ கால் வழியே மட்டுமே வந்து செல்கின்றன. அதில் அவ்வப்போது நிகழும் ‘Buffering'-கை வைத்தே திகில் உணர்வையும் பரபரப்பையும் கூட்டியிருப்பது சிறப்பு. நான்கு சுவர்களுக்குள்தான் படம் என்றாலும் அதைச் சலிப்பு தட்டாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் கேமரா. திடுக்கிடல் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகளில் மிரள வைக்கின்றன சச்சின் சுதாகரன், ஹரிஹரனின் ஒலியமைப்பு மற்றும் பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை.

தொழில்நுட்பரீதியாகப் படம் நல்ல அனுபவத்தைத் தந்தாலும் அதைத் தாண்டி கதையில் எந்தப் புதுமையும் இல்லை. பேய் பிடிக்கிறது, ஓட்டுகிறார்கள் என்ற ஒற்றை வரியைத் தவிர ஆழமான கதையமைப்போ, ட்விஸ்ட்களோ இல்லாதது சறுக்கல். பேயின் பெயரைத் தெரிந்தால் ஓட்டிவிடலாம் என்பது, கட்டில் ஆடுவது, உடல் அந்தரத்தில் மிதப்பது, புனித நீர் தெளிப்பது என ‘தி எக்ஸார்சிஸ்ட்' காலத்திலிருந்து பேய்ப் படங்களில் என்னவெல்லாம் வருமோ அவை அனைத்துமே இதிலும் இருக்கின்றன.
தொழில்நுட்பத்தில் மட்டும் மிரட்டிவிட்டு, கனமான உள்ளடக்கம் இல்லாததால் நம்மை ‘கனெக்ட்' செய்யாமல் கடந்துபோகிறது இந்தப் பேய்.