ராம் கோபால் வர்மா (RGV)... இந்தப் பெயருக்கு ஒரு காலத்தில் இந்திய திரையுலகில் செம மார்க்கெட்; செம டிமாண்ட். தெலுங்கு, இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் உச்ச நட்சத்திரங்களை இயக்கி மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். `சர்கார்', `சர்கார் ராஜ்', `சர்கார் 3' என பொலிடிக்கல் ட்ரையாலஜி, `சத்யா', `கம்பெனி', `டி' என கேங்ஸ்டர் ட்ரையாலஜி படங்களை இந்தியில் இயக்கி மாஸ் காட்டியவர். ஹாரர், க்ரைம் த்ரில்லர், கேங்ஸ்டர் கதைகள், சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் என இவரது படங்கள் அனைத்துமே டார்க் மோடில்தான் இருக்கும். ஏழு நந்தி விருதுகள், ஒரு தேசிய விருது என அந்தக் காலகட்டத்தில் ராம் கோபால் வர்மாவின் படங்கள் இல்லாமல் எந்த விருது நிகழ்ச்சியும் இருக்காது. இவரிடம் உதவி இயக்குநராக இருந்த பலர் இன்று டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக இருக்கிறார்கள்.
மணிரத்னம் - ராம் கோபால் வர்மா கூட்டணியில் உருவான படம்தான் `திருடா திருடா'. ஏ.ஆர்.ரஹ்மானை தன்னுடைய `ரங்கீலா' படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தியதும் இவர்தான். இவருடைய முதல் படமான `ஷிவா'வுக்கு இளையராஜாதான் இசை. தவிர, சூர்யா நடித்த `ரத்த சரித்திரம்' படத்தின் இயக்குநரும் இவரே. இப்படி இவருக்கும் கோலிவுட்டுக்கும் சில தொடர்புகள் இருக்கின்றன. கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் தனக்கென்று தனி இடத்தை இந்தியத் திரையுலகில் பிடித்திருந்த ராம் கோபால் வர்மாவுக்கு சமீப காலமாக என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. சமீபமாகத் தெலுங்கு சினிமாவில் அவர் பல அட்ராசிட்டிகளைச் செய்து வருகிறார்.

2017-ல் `God Truth Sex' என்ற ஆவணப் படத்தை பார்ன் நடிகை மியா மல்கோவாவை வைத்து இயக்கினார். இந்தப் படம் வெளியாகி பயங்கர சர்ச்சையானது. என்.டி.ராமாராவின் பயோபிக்கை பாலகிருஷ்ணாவை வைத்து க்ரிஷ் இயக்கினார். இது அவருடைய சினிமா பயணம் (கதாநாயகடு) அரசியல் பயணம் (மகாநாயகடு) என இரண்டு பாகங்களாக வெளிவந்தது. இதைத் தொடர்ந்து, ராமா ராவின் இரண்டாவது மனைவி லக்ஷ்மியின் பார்வையில் என்.டி.ஆரின் வாழ்க்கை எனக்கூறி `Lakshmi's NTR' என்ற படத்தை இயக்கினார்.
அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கேலி செய்யும் விதமாக `அம்மா ராஜ்யம்லோ கடப்பா பிடாலு' என்ற பொலிடிக்கல் சட்டையர் படத்தை இயக்கினார். தவிர, சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றையும் எடுக்கும் பணிகளில் இருக்கிறார். இப்படி தியேட்டர்களில் தன்னுடைய சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு வந்த இவர், தியேட்டர்கள் இல்லாத இந்த இக்கட்டான சூழலிலும் அடுத்தடுத்து அவருடைய படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்காகவே `RGV World Theatre' என்ற தனி ஆன்லைன் தளத்தை உருவாக்கி இருக்கிறார்.

கொரோனா காலத்தில் அனைத்து இயக்குநர்களும் தங்களுடைய அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை எழுதி வருகின்றனர். ஆனால், இவரோ மூன்று படங்களை இயக்கி முடித்து கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். முதலில் வெளியான படம் `க்ளைமாக்ஸ்'. பார்ன் நடிகை மியா மல்கோவா நடித்திருப்பார். இரண்டாவது படம் `நேக்கட்'. இந்த இரண்டு படமும் ஆபாசத்தின் உச்சம். மூன்றாவதாக நடிகர் பவன் கல்யாண் தேர்தலில் தோற்றதை முதன்மைப்படுத்தி `பவர் ஸ்டார்' என்ற படத்தை இயக்கினார்.
அதில் பவன் கல்யாண் போலவே இருக்கும் ஒருவரை நடிக்க வைத்திருப்பார். ஆனால், அந்தக் கதாபாத்திரத்துக்கு `ப்ரவன் கல்யாண்' எனப் பெயரை மட்டும் மாற்றியிருப்பார். இதனால் கடுப்பான பவன் கல்யாண் ரசிகர்கள், ராம் கோபால் வர்மாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்கினர். இந்தச் சூழலில் அப்சரா ராணி என்பவரை வைத்து எடுக்கப்பட்ட `த்ரில்லர்' என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. டிரெய்லரே படு கவர்ச்சியாக இருக்கிறது. `த்ரில்லர்' படம் வெளியான பிறகு, `மர்டர்', `கொரோனா வைரஸ்' என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படி கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார்.

இது போக, இவர் இயக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய தகவலும் வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று, 2014-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட தெலுங்கு நடிகர் உதய் கிரணின் பயோபிக். பாலிவுட் நடிகர் சுஷாந்த் இறந்த பிறகு, `நெப்போட்டிஸம்' என்ற விஷயம் அனைவருக்கும் பரிட்சயமானது. உதய் கிரணின் சினிமா வாழ்க்கையின் வீழ்ச்சிக்கு நெப்போட்டிஸமும் முக்கிய காரணமாக இருப்பதால் டோலிவுட்டின் முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் அடிபடும் எனத் தெரிகிறது. மற்றொரு படம், `அல்லு'. இதில் சிரஞ்சீவிக்கும் அவர் மனைவியின் அண்ணன் அல்லு அரவிந்துக்குமான உறவு பற்றி பேசவிருக்கிறாராம்.
குறிப்பாக, சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தது, அதற்கு அல்லு அரவிந்தின் உறுதுணை எனப் பல விஷயங்கள் இருக்கிறதாம். இந்தக் கதையில் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம் சரண் என அவர் குடும்ப கதாபாத்திரங்கள் அனைத்தும் இருக்கின்றனவாம். `பவர்ஸ்டார்' படத்தில் பவன் கல்யாணை தாக்கி எடுத்த ராம் கோபால் வர்மா, தற்போது சிரஞ்சீவியின் குடும்பத்தையே வைத்து `இது ஒரு ஃபிக்ஷன் கதை' எனக் கூறி இயக்கவிருப்பது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ரிபப்ளிக் மீடியாவின் இயக்குநரும் பத்திரிகையாளருமான அர்னாப் கோஸ்வாமியைத் தாக்கி ட்வீட் செய்திருக்கிறார், ராம் கோபால் வர்மா. ``பாலிவுட் நிறைய குற்றங்கள் நிறைந்த மாசடைந்த சினிமாத்துறை என்று அர்னாப் கோஸ்வாமி பேசியது அதிர்ச்சி அளிக்கிறது. திவ்யபாரதி, ஜியா கான், ஶ்ரீதேவி, சுஷாந்த் ஆகியோரின் இறப்புக்கு பாலிவுட்தான் காரணம் என்கிறார். ஆனால், இந்த நால்வரின் இறப்பும் அவர்களது சூழலும் வெவ்வேறானவை. அர்னாபை பார்த்து ஏன் பயந்து மேஜைக்கு அடியில் மறைந்துகொள்கிறீர்கள்?" என்று கூறி ஆதித்யா சோப்ரா, ஷாருக் கான், சல்மான் கான், மகேஷ் பட், கரண் ஜோஹர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.
மேலும் தனது அடுத்தடுத்த ட்வீட்டில், ``சில நல்ல மனிதர்கள் அமைதியாக இருந்தால் தீமை வென்றுவிடும். அர்னாப் ஒரு தீமைவாதி. தொழில்துறையைப் பற்றி இதுபோன்ற தீங்கிழைக்கும் பொய்களைக் கூறுகிறார். நீங்கள் அவருக்கு எதிராகப் பேசினால், அது தற்போதைய பொது உணர்வுக்கு எதிராக மாறிவிடும் என்று நினைக்காதீர்கள். அந்த உணர்வைத் தூண்டியதே அவர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் மெளனம் உங்கள் அனைவரையும் குற்றவாளிகளாகப் பார்க்க வைக்கிறது. குறைந்தபட்சம் இப்போது அனைத்து திரையுலக மக்களும் வெளியே வந்து அர்னாப் கோஸ்வாமியின் பொய்யைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். சினிமாவில் ஹீரோவாக இருந்தால் போதாது. அர்னாப் மாதிரி வில்லன்களுக்கு எதிராக நிற்க வேண்டும். அர்னாபை வைத்து ஒரு படம் இயக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்கு பெயர், `Arnab - The News Prostitute'. அதில் உங்கள் சேனலுடைய மறுபக்கத்தைக் காட்டுவேன். இந்தப் படத்துக்கு நீங்கள் (அர்னாப்) ஏதாவது எதிர்கருத்து தெரிவித்தால், அதை இதன் புரொமோஷனாக எடுத்துக்கொள்வேன்" என்று ட்வீட் செய்திருந்தார், இயக்குநர் ராம் கோபால் வர்மா.

இவர் மீது ஏற்கெனவே பல சர்ச்சைகள் சூழ்ந்திருக்க, தற்போது இவரது இந்த அடுத்தடுத்த ட்வீட்டுகளும் அந்த சர்ச்சைகளுக்கு வலு சேர்த்துள்ளது. இந்தியத் திரையுலகில் கேங்ஸ்டர் படங்களுக்கு காட்ஃபாதராக இருந்த ராம் கோபால் வர்மா, இப்போது இப்படி இறங்கியிருப்பது ஏன், அவருக்கு என்னதான் பிரச்னை என்கிற பல கேள்விகள் எழுகின்றன. கேள்விகளுக்கெல்லாம் பதில் ராம் கோபால் வர்மாவுக்கே தெரியும்.