Published:Updated:

மீனாட்சி அம்மன் கோயிலில் ‘தங்கலான்’ கேரக்டர்கள்!

ஏகன் ஏகாம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏகன் ஏகாம்பரம்

வீட்டுல நான் கடைசிப் பையன். சின்ன வயசில இருந்தே ஓவியங்கள் வரைவேன். வரலாறு படிச்சேன். கோயில்கள், புராதனச் சின்னங்கள், அரண்மனைகள்னு சுத்திப் பார்க்கப் போறப்ப அங்கே உள்ள கலைகள்மீது ஈர்ப்பாச்சு.

பா.இரஞ்சித்தின் பிரியமான தொழில்நுட்பக் கலைஞர்கள் டீமில் ஏகன் ஏகாம்பரத்திற்குத் தனி இடமுண்டு. ‘சார்பட்டா பரம்பரை'யில் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர். இப்போது விக்ரமின் ‘தங்கலான்' தவிர ‘பொம்மை நாயகி', ‘ஜே.பேபி' என்று பல படங்களில் பணிபுரிந்துவருகிறார்.

விக்ரமனின் ‘புது வசந்தம்' படத்தில் வரும் வீட்டைப்போல இருக்கிறது ஏகனின் மொட்டைமாடி வீடு. கம்பிக் கொடிகளில் டல் வண்ணமேற்றப்பட்ட துணிகள் வரிசைகட்டிக் காய்ந்து கொண்டிருக்கின்றன. உள்ளே அறை ஒன்றில் பதினெட்டாம் நூற்றாண்டைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்பட்ட திரைச்சீலைகள் மூலிகை வாசனையுடன் வரவேற்கின்றன. தையல் மெஷின் மீது கேரக்டர் ஸ்கெட்ச்கள் சிதறிக் கிடக்கின்றன. காற்றில் கலைந்தாடும் தலைமுடியைக் கோதியபடி வந்தமர்கிறார் ஏகன்.

`` ‘சார்பட்டா பரம்பரை'யில் உங்களோட ஆடை வடிவமைப்பு, வண்ணத்தேர்வு, ஆடைக்கேற்ற ஆபரணங்கள் எல்லாம் பேசப்பட்டன. ‘தங்கலான்' படத்தில் என்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கு?’’

‘‘இது பதினெட்டாம் நூற்றாண்டுக் கதை என்பதால், இது எனக்கான களம்னு தோணுச்சு. இரஞ்சித் அண்ணா முழு ஸ்கிரிப்ட்டையும் படிக்கக் கொடுத்தார். நான் வரலாறு படிச்சிருந்ததால அந்தக் காலகட்டத்தை எளிதா என்னால கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பழைய புகைப்படங்கள் சிலவற்றில் உள்ள மக்கள் அப்போது எப்படி ஆடை அணிந்திருந்தார்களோ அப்படித்தான், ‘தங்கலான்' கேரக்டர்களும் இருந்தன. அந்த ஆடை, அணிகலன்கள்தான் இந்தக் கதைமாந்தர்களுக்குத் தேவைப்பட்டுச்சு. ஒவ்வொரு ஷாட்டையும் செதுக்கி எடுக்கிறாங்க. விக்ரம் சார் உட்பட அத்தனை பேரின் உழைப்பையும் நேர்ல பார்க்கறப்ப பிரமிப்பா இருக்கு. கதாநாயகிகள் பார்வதி, மாளவிகாவிற்கு அனிதா அக்கா வடிவமைக்கிறாங்க.''

``கவின்கலைக் கல்லூரியில் நீங்கள் பா. இரஞ்சித்தின் ஜூனியர் இல்லையா?’’

‘‘ஆமா. திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் உள்ள அம்மையார்குப்பம் சொந்த ஊர். அப்பாவும் அம்மாவும் நெசவாளர்கள். எங்க ஊருல எல்லார் வீடுகளிலும் அதிகாலை மூணு மணிக்கெல்லாம் தறிச் சத்தம் கேட்க ஆரம்பிச்சிடும். ராத்திரி 12 மணி வரைக்குமே துணி நெய்வாங்க. எந்த நேரமும் தறிச் சத்தம் கேட்டபடி இருக்கும்.

வீட்டுல நான் கடைசிப் பையன். சின்ன வயசில இருந்தே ஓவியங்கள் வரைவேன். வரலாறு படிச்சேன். கோயில்கள், புராதனச் சின்னங்கள், அரண்மனைகள்னு சுத்திப் பார்க்கப் போறப்ப அங்கே உள்ள கலைகள்மீது ஈர்ப்பாச்சு. வீட்டுல நெசவு வேலைகளும் செய்துகிட்டே, கல்லூரிப் படிப்பையும் தொடந்தேன். நான் வரையறதையெல்லாம் என் நண்பர்கள் பலரும் என்கரேஜ் பண்ணுவாங்க. அதனால்தான் கவின்கலைக் கல்லூரியில் டெக்ஸ்டைல்ஸ்ல சேர்ந்தேன். நான் காலேஜ் படிக்கறப்ப ரஞ்சித் அண்ணா காலேஜ் சீனியர். அப்பவே அண்ணன் எனக்கு நட்பானார்.

எனக்கு டிசைனிங் மீது பிடிப்பு ஏற்படக் காரணமே, வண்ணக்கலைத் துறையில் உள்ள ராதா சிவகுமார் மேம்தான். டிசைனிங் நுட்பங்களை எனக்குக் கத்துக் குடுத்ததனால் தான் இன்னிக்கு இந்தத் துறைக்கு வரமுடிஞ்சிருக்கு. பொதுவா ஃபேப்ரிக்ஸை வண்ணமாக்க நான் கெமிக்கல் பிளீச் பயன்படுத்ததுறதில்ல. இயற்கையான விஷயங்களைப் பயன்படுத்துவேன். அதேபோல மூங்கில் குச்சிகளைத்தான் பிரெஷ்ஷாவும், பேனாவாகவும் பயன்படுத்துறேன். துணிகளுக்கு வண்ணங்கள்கூட கடுக்காய், ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள், மாதுளம் பழத்தோல், நுனா இலை, ஆடுதொடா இலைன்னு மூலிகைகள் கொண்டு உருவாக்குறேன். இதைப் பயன்படுத்துறவங்களுக்கு தோல் பாதிப்பு எதுவும் வராது. ‘சார்பட்டா'வில் இருந்து ‘தங்கலான்' வரைக்குமே அதைத்தான் பயன்படுத்திட்டு வர்றேன். பாரம்பரிய பட்டுப்புடவைகளின் டிசைன்கள் தெரியும் என்பதால துணிக்கடைகளில் டிசைனரா இருந்திருக்கேன். என்னோட பாஸ் பிரெஞ்சுக்காரர். என் வேலைகளை எப்பவும் என்கரேஜ் பண்ணுவார். என் ஒர்க்கை வெளிநாடுகளுக்குக் கொண்டு சேர்த்திருக்கார். பிரான்ஸில் எனக்கு வேலைவாய்ப்புகள் வந்தும் நான் போகல.

மீனாட்சி அம்மன் கோயிலில் ‘தங்கலான்’ கேரக்டர்கள்!

அதன் பிறகு ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன் மேம் அறிமுகம் கிடைச்சது. ‘காஷ்மோரா' உட்பட சில படங்களில் சின்னச் சின்ன வேலைகள் பண்ணிக்கொடுத்தேன். ஆடை வடிவமைப்பாளரா என் முதல் படம் ‘சார்பட்டா பரம்பரை'தான். அதன்பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது', ‘தங்கலான்' தவிர குருசோமசுந்தரம் நடிக்கும் ‘பாட்டில் ராதா', ‘பொம்மை நாயகி', ‘ஜே.பேபி', விதார்த்தின் ‘இறுகப்பற்று'ன்னு இப்ப பிஸியா இருக்கேன். இடையிடையே ‘இந்திய ஆடைகள் மற்றும் இயற்கை வண்ணங்கள்' என்ற தலைப்பில் ஆராய்ச்சியும் பண்ணிட்டிருக்கேன்.''

`` ‘சார்பட்டா பரம்பரை'க்காக விகடன் விருது உங்களுக்குக் கிடைச்சிருக்கு...’’

‘‘என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணமா பார்க்கறேன். கார்த்தி சாரின் ‘காஷ்மோரா' படத்தில் அவருக்கு டாட்டூ வரைந்ததுடன் சில விஷயங்கள் ஒர்க் பண்ணிக் கொடுத்திருந்தேன். அந்த வகையில் 2016 விகடன் விருது விழாவிற்கு வந்திருந்தேன். தொகுப்பாளர் ஆர்.ஜே.பாலாஜி, மேடையில் இருந்த ஆடை வடிவமைப்பாளரான ரோஷனைப் பார்த்து, ‘கார்த்தி சாரின் டாட்டூ எல்லாம் எப்படி வரைஞ்சிருந்தீங்க?’ன்னு ஆச்சரியமா கேட்டார். அப்போது ரோஷன் மேடைக்குக் கீழே உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்தபடி, ‘அதோ அங்கே உட்கார்ந்திருக்கிற ஏகன்தான் அந்த டாட்டூக்களை வரைந்தார்'னு சொன்னார். அந்த ஒரு தருணம்தான் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது. ‘சினிமாவில் இருக்கலாமா, வேணாமா’ன்னு ரெண்டு மனசா இருந்த என்னை சினிமாவில் வலுவா காலூன்றிப் பெயரெடுக்கணும்னு தோண வச்சது. சினிமாவின் பவர் பெரிது. இதுல பெயரெடுத்தால் நெசவாளர்களின் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும்னு நம்புறேன். அந்த நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கு விகடன் விருது.''